காந்தியடிகள் வினோபாபா, காமராசர், அண்ணாதுரை, ஜே.சி.குமாரப்பா, கக்கன், நல்லக்கண்ணு போன்றவர்களின் எளிமையை சிலாகித்து பல சம்பவங்களைக் கேட்டதுண்டு. எளிமையானவர்களின் பட்டியலை விவரமறிந்த யாரிடம் கேட்டாலும் இந்த பெயர்கள் தவறாமல் இடம்பெறும். நேரு உட்பட வேறு சில பிரபலங்களின் பெயர்கள் அனேகமாக எளிமையானவர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை.
கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பாக பாட்ஷா பட வெற்றிக்கு பின் ரஜினிகாந்தை எளிமையானவர் என்று பலரும் மீண்டும் மீண்டும் கூறுவதை எல்லோரும் கேட்டிருக்கலாம்.
ரஜினி எளிமையானவர் என்ற Myth நன்றாக செட் ஆன பின் 2.0 பட ப்ரமோஷன் சம்பந்தப்பட்ட ஒரு பேட்டி. அதில் அவரிடம் இவ்வாறு கேட்கப்பட்டது.
''உங்களுக்கு எல்லாமே மாயைதான் இல்லீங்களா... அதனால் தான் இந்த சிம்ப்ளிசிட்டியா?, நீங்க எல்லா விஷயத்திலும் சிம்பிளா இருப்பது இதனாலதானா?'' கேட்டவர் தொகுப்பாளர் அர்ச்சனா.
''சிம்ப்ளிசிட்டினா... எனக்கு தெரியமாட்டங்கிறது, நான் போறது பிஎம்டபிள்யூ கார்ல, இருக்கிறது போயஸ் கார்டன் வீட்ல... ஓகே(ரஜினியின் வழக்கமான சிரிப்பு) சாப்பிடப்போறதெல்லாம் பைவ் ஸ்டார், செவென் ஸ்டார் ஓட்டல்ல... இதுல சிம்ப்ளிசிட்டி எப்படின்னு புரியல... '' இது ரஜினியின் பதில்.
தன்னைப்பற்றிய ‘மித்'தை தானே உடைத்தார் ரஜினி. உலகின் தோற்றம் பற்றிய டார்வினின் பரிணாமக் கொள்கைதான் உலகெங்கும் பள்ளிகளில் அறிவியல் பாடத்தின் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது, 2005&இல் அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள பாட சாலைகளில் அறிவியல் பாடதிட்டத்தில் ‘‘Intelligent design'' என்ற தலைப்பில் உலகம் உருவானது பற்றி ஒரு பாடம் புதிதாக சேர்க்கப்பட்டது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கைகள் இந்த பாடத்தின் மூலம் திணிக்கபடுவதாக பதினோரு பெற்றோர்கள் இணைந்து வழக்கு தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், ‘‘அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய முன்னோர்கள் மதத்தையும் நாட்டு நிர்வாகத்தையும் பிரித்து வைத்துள்ளனர்'' என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த பாடத்தை நீக்க உத்தரவிட்டது.
மாணவர்கள் மீது புனைவுகளை திணிக்காமல் அவர்களை சிந்திக்க விட வேண்டுமென்ற நோக்கில் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் எழுதின.
உலகில் பலருக்கு தங்களை சுற்றி நடந்து / நடக்கும் சில நிகழ்வுகள் அமானுட தன்மை கொண்டதோ/ புரியாத புதிரோ என்று குழம்பும் போது பற்றிக்கொள்ள ஏதோ ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது.
இந்த சூழலில் தான் புனைவுகளும் (Myth) உருவாகத் தொடங்கியிருக்கலாம் ,
நம்பிக்கைகள் மற்றும் பயம் சார்ந்த விஷயங்களில் தொடங்கிய இந்த புனைவுகளின் பலத்தை, வணிக நிறுவனங்கள் தங்கள் விற்கும் பொருள்கள்
சார்ந்த புனைவுகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்கி மெய்ப்பித்தன. வணிக நிறுவங்களின் உத்தியை பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், அரசாங்கங்கள் என எல்லோரும் பயன்படுத்த தொடங்க எங்கும் வியாபித்திருக்கும் புனைவுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடி கொண்டிருக்கிறோம்.
சமூக ஊடகங்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் இந்த காலம் புனைவுகளை எளிதாக உருவாக்க உறுதுணையாகிறது.
நல்லவனுக்கு நல்லதே நடக்கும் என்பது போன்ற நம்மை சுற்றியுள்ள பல புனைவுகளில் சிலவற்றை இந்த இதழில் அடுத்தடுத்த பக்கங்களில் சந்திக்கலாம்.
சில புனைவுகளின் விளக்கங்களில் கூட புனைவுகள் ஒளிந்திருக்கலாம்.
அப்படியெனில் எதைத் தான் நம்புவது என்ற கேள்வி எனக்கு கேட்கிறது.
புனைவின் முகமூடியை கழற்றி உணமையை தரிசிக்க இரு வழிகள் உண்டு, முதலாவது அறிவியலின் துணை. உலகம் தட்டையானது என்ற புனைவை உடைத்து உருண்டையானது என்று நிரூபித்தது அறிவியல்.
தெரியாத விஷயத்தில் இருந்து அதைத் தெரிய வைப்பதை நோக்கி அறிவியல் பயணப்படும்.
இன்றைய unknown நாளைய known.
‘‘அதிகாரத்தைக் கேள்வி கேட்காமல் மதித்து ஏற்றுக்கொள்வது உண்மையின் மிகப்பெரிய எதிரியாக அமையும். கேள்வி கேட்பதை நிறுத்தக் கூடாது என்பது முக்கியமானது''என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரது வார்த்தைகளைப் பின்பற்றி கேள்வி கேட்பது, எதையும் எல்லாவற்றையும். இது இரண்டாவது வழி.
புனைவுகளை உடைப்பதோ, அல்லது உடன் வாழ்வதோ அவரவர் விருப்பம், ஆனால் அவற்றை உடைப்பவரின் மீது கல்லெறியாதீர்கள்.
அந்திமழை இளங்கோவன்
பின்குறிப்பு: இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளின் கருத்துகள் அந்தந்த ஆசிரியர்களுடையதே. அவற்றுடன் அந்திமழைக்கு உடன்பாடு உண்டு என்று அர்த்தமில்லை.
(இந்த வரிகள் புனைவு இல்லை.)
ஜூலை, 2020.