புதிய கனவுகளைப் படைப்பவர்!

வெற்றிப்படங்கள்-கமல்
புதிய கனவுகளைப் படைப்பவர்!
Published on

கமல் ஹாசனின் வணிக வெற்றி-தோல்விகள் என்பது அவரது தமிழ் திரை மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளோடும் தமிழ் சினிமா ரசிகர்களின் நட்சத்திர வழிபாட்டுணர்வு சார்ந்த தேர்வுகளோடும் சேர்த்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

2000 வரை தமிழ் சினிமாவை பிரதானமாக மூன்றுவிதமான போக்குகள்தான் ஆட்கொண்டிருந்தன. ஒன்று சிவாஜி கணேசன் உருவாக்கிய மிகை எதார்த்த பாணி கொண்ட குணச்சித்திரப் படங்கள். இன்னொன்று எம்.ஜி.ஆர் உருவாக்கிய தனிநபர் கதாநாயக பிம்பத்தை அடிப்படையாகக் கொண்ட படங்கள். மற்றொன்று கே.பாலசந்தர் உருவாக்கிய திரைக்கதையை புதிய பேசுபொருள்களை நோக்கி நகர்த்திய படங்கள். இந்த மூவருக்குமே ஒட்டியும் விலகியும் தனித்தனி தொடர்ச்சிகள் உண்டு. சிவாஜி கணேசன் உருவாக்கிய இந்த மரபில் சூர்யா, விஜய் சேதுபதி வரைக்கும் பல நட்சத்திரங்கள் தொடர்ந்து உருவாகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரினுடைய தனிமனித சாகச பிம்பத்தை மையமாகக் கொண்ட படங்களுக்கு ரஜினி, அஜித், விஜய், வரைக்கும் ஒரு நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. உள்ளடக்கத்திலும் திரைமொழியிலும் புதிய உரையாடல்களை நிகழ்த்தும் இயக்குநரின் படங்கள் என்று சொல்லக்கூடிய வரிசையில் கே.பாலசந்தருக்குப் பின் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் தொடங்கி இன்றுள்ள பல இளம் இயக்குநர்கள் வரைக்கும் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். கமல்ஹாசனிடம் பெரும் வியப்பிற்குரிய ஒரு விஷயம் இந்த மூன்று விதமான திரைப்போக்குகளோடும் அவர் ஆழமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதுதான்.

 கமல் 50ஆம் ஆண்டு விழாவில் ரஜினி சொன்ன ஒரு பிரபலமான வாசகத்தை இங்கு நினைவுகூரலாம். “அவர் தொட்டதை நான் தொடலை. ஆனால் நான் தொட்டதை அவர் தொட்டிருக்கிறார். அவர் தொட்டதை நான் தொடலை. அவர் தொட்டதை நான் தொட்டிருந்தால் அவ்வளவுதான்.“ அந்த வகையில் கமலஹாசனின் வணிகரீதியான பெரு வெற்றி அடைந்த படங்களை பிற நடிகர்களின் பெரும் வணிக வெற்றிகளோடு நாம் கொஞ்சம் வேறுபடுத்தியே காண வேண்டும் என்று நினைக்கிறேன். ரஜினி படத்தின் வியாபார வெற்றிகளுக்கென்று மீறப்பட முடியாத சில இலக்கணங்கள் இருக்கின்றன. விஜய், அஜித் படங்களுக்கும் அதுதான் நிலை. ஆனால் கமல்ஹாசனுடைய வணிக வெற்றிகளை நாம் அப்படிப் பார்க்க முடியுமா?

சகலகலாவல்லவன் கமலஹாசனின் மிகப்பெரிய திருப்பு முனை என்று சொல்லலாம். அதுவரைக்கும் கமலுக்கு இல்லாத ஒரு மாஸ் ஹீரோ என்கிற அந்தஸ்தை அந்தப் படம் வழங்கியது. அதுவரைக்கும் கமலின் பிம்பம் என்பது எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடிய குணச்சித்திர நடிகர் என்பதாகவோ சினிமா மொழியில் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு அமைதியற்ற கலைஞன் என்பதாகவோ மட்டும்தான் இருந்தது. ஆனால் முரட்டுக் காளையின் மூலமாக வெகுசன தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த ரஜினியின் பிம்பத்திற்கு சவாலான ஒரு வணிக பிம்பத்தை கமல் சகலகலாவல்லவனில் உருவாக்கினார். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றி எந்தவொரு கதாநாயகனையும் தனது எதிர்காலம் குறித்த ஒரு பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுக்கத் தூண்டக்கூடியது. எம்.ஜி.ஆர்., ரஜினி மட்டுமல்ல, இன்றுள்ள பல மாஸ் ஹீரோக்களும்கூட இந்த பிம்பச்

சிறைக்குள் சிக்கிக்கொண்டார்கள்.  ஒருவர்கூட அதிலிருந்து வெளியே வந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் அந்தப் போக்கின் ஒரே புறநடையாளர் கமல்ஹாசன் மட்டுமே.

சகலகலாவல்லவன் வெளிவந்த அதே காலகட்டத்தில் தான் மூன்றாம் பிறையும் வெளிவந்தது. சகலகலாவல்லவனின் தமிழ் சினிமாவுக்கே உரிய அனைத்து மசாலாக்களுக்கு முற்றிலும் மாறாக மூன்றாம் பிறை அடைந்த வணிக வெற்றி என்பது தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்றுத் திருப்பு முனை எனலாம். மாஸ் ஹீரோக்களுக்குரிய ஃபார்முலாக்களை உடைத்தும்கூட ஒரு படம் வணிகரீதியாக பெரும் வெற்றியடைய முடியும் என்பதை நிரூபித்தப் படம். கமல்ஹாசன் தன்னைத் தக்கவைத்துக்கொண்ட இடமும் இதுதான். அவர் தொடர்ந்து ஒரே நேரத்தில் ஒரு வெகுசன கதாநாயகன் என்ற அந்தஸ்துடனேயே ஆனால் அதற்குரிய மரபான இலக்கணங்கள் எதுவும் இல்லாமல் பல்வேறு பாணியிலான படங்களில் தொடர்ந்து நடித்தது மட்டுமல்ல, பல படங்களை அவர் தயாரிக்கவும் செய்தார். கமல்ஹாசனுடைய பெரும்பாலான படங்களில் அதன் இயக்குநர்களுக்குப் பின்னால் கமல் என்கிற ஒரு நிழல் இயக்குநரும் ஒளிந்திருப்பார்.

கமல்ஹாசனின் திரைப்பட பங்களிப்புகளைப் பற்றி யோசிக்கும்போது அவரை ஒரு தொழில்முறை நடிகராக மட்டும் யாரும் சுருக்கிவிட இயலாது. சினிமா தொடர்பான அனைத்து துறைகளிலும் அவருக்கு அக்கறையும் ஆசையும் பயிற்சியும் இருந்தது. நடிப்பார். நடனமாடுவார். பாடுவார். திரைக்கதை அமைப்பார். காட்சிகளின்மீது துல்லியமான செல்வாக்கைச் செலுத்துவார். இதை கமல் நடித்த ஒவ்வொரு படங்களிலும் நாம் துல்லியமாகக் காணலாம்.

16 வயதினிலே திரைப்படம் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்ததுபோலவே கமல்ஹாசனையும் ஒரு மிகச்சிறந்த நடிகராக ஒரு புதிய பரிமாணத்தில் காட்டியது. எளிய மனிதர்-களை கதாபாத்-திரங்களாகக் கொண்ட ஒரு கிராமத்துப் பின்புலத்தில் கதை சொல்லும் பாணியை பாரதிராஜா இந்தப் படத்தில் வெற்றிகரமாகக் கையாண்டார்.

முதன்மைப்படுத்தப்பட்ட நாயகர்களோ நாயகிகளோ இன்றி ஒரு யதார்த்தவாத கதைசொல்லும் போக்கில் உருவான இப்படம் அடைந்த வணிகவெற்றி என்பது அப்போது பெரும் வியப்புக்குரியதாகப் பார்க்கப்பட்டது. இந்தப் படத்திற்குள் வெகுசன உளவியலைக் கையாளும் பல அம்சங்கள் பின்னிப்பிணைந்திருந்தன. ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணை ஏமாற்றும் நகரத்திலிருந்து வந்த ஒரு அந்நியன். அந்தப் பெண்ணை பலாத்காரமாக அடைய முற்படும் ஒரு கிராமத்து பொறுக்கியின் பாத்திரம். இவர்களுக்கு நடுவே அந்தப் பெண்ணை அடைய முற்படும் உடற்குறைபாடுடைய எல்லா விதத்திலும் சமூகத்தால் பொருட்படுத்தப்படாத ஒரு மனிதன். எல்லா விதத்திலும் அவனைவிட வலிமையான டாக்டரையும் பரட்டையையும் கடந்து சப்பாணி மயிலின் காதலை பெற்று விடுகிறான். இந்தக் கதை கடந்த 40 ஆண்டுகளாக திரும்பத் திரும்ப வேறுவேறுவிதங்களாக தமிழில் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்குள் இருக்கும் மையச் சரடு ஒன்றே ஒன்றுதான். ஒரு பெண் சமூகத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் தீமைகளின் முன்னால் தனக்குப் பொருத்தமற்ற ஒருவனைக்கூட வெறும் அன்பின் பொருட்டு தேர்வு செய்வாள் என்பது. இந்தப் படிம்ம் தமிழ் ஆண்களின் ஏதோ ஒரு பலவீனமான பகுதியைத் தொடர்ந்து இட்டு நிரப்புகிறது. இதே படிமம்தான் ஊதாரியாக இருக்கக்கூடிய ஒருவனைக்கூட ஒரு பெண் மனம் மாறி நேசிப்பாள் என்ற கதையாடலை உருவாக்கச் செய்கிறது. அந்த விதத்தில் 16 வயதினிலே தமிழ் ஆண் ரசிகர்களின் பலவீனமான ஒரு பகுதியையும் பெண்களுடைய மனதில் காலங்காலமாக இருக்கக்கூடிய பாதுகாப்பின்மையையும் வெகு தந்திரமாகக் கையாண்டது என்று சொல்லலாம். சப்பாணியின் பாத்திரத்தை ஏற்று நடித்த கமல் எந்தவொரு பலவீனமான நிலையிலும் தன்னுடைய நல்லுணர்ச்சிகளின் வழியாக ஒருவன் தன் கனவுகளை அடைய முடியும் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தினார். எத்தகைய ஒரு பாத்திரத்தையும் அவர் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை உரத்துச் சொன்ன படம் 16 வயதினிலே.

சகலகலாவல்லவனுக்குப் பிறகு சலங்கை ஒலி, தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி, காக்கிச் சட்டை, ஜப்பானில் கல்யாணராமன், சிப்பிக்குள் முத்து, புன்னகை மன்னன் போன்ற பல வெற்றிகரமான படங்களை கமல் நடித்தார். ஆனால் 1987ல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சக்கட்ட பரிமாணங்களை வெளிப்படுத்திய படம் என்று சொல்லலாம். ஒரு காட் பாதர் வகைப் படமான நாயகன், நீதிக்கும் அறத்திற்குமான போராட்டத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய சிக்கல்களை வெகு நேர்த்தியாகப் பேசியது. ஒரு இளைஞனாகவும் பிறகு வயது முதிர்ந்த தாதாவாகவும் இரண்டு தோற்றங்களில் கமல்ஹாசன் மும்பை நிழல் உலகத்தின் இருண்டவெளிகளில் தன்னுடைய நடிப்பின் பல புதிய சாத்தியங்களை நிகழ்த்தினார். ஒரு தலைசிறந்த இயக்குநரின் கையில் கமல் எப்படி ஒரு நடிகனாக முழுமையாக மிளிர்வார் என்பதற்கு நாயகனே சிறந்த உதாரணம். நாயகன் படத்தை டைம் வார இதழ் உலகின் 100 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்ததோ அந்தப் படத்திற்காக கமல் தேசிய விருது  பெற்றதோ முக்கியமல்ல. அந்தப் படத்தைத் தாண்டிய ஒரு படத்தை மணிரத்னம், கமல் இருவருமே பிறகு உருவாக்க முடியவில்லை என்பதுதான் காலத்தின் விசித்திரம். தமிழ் சினிமாவில் காட் ஃபாதர்களுக்கும் டான்களுக்கும் பஞ்சம் இல்லை. ஆனால் அவற்றில் ரத்தக்களறியையும் வன்முறையையும் குற்றத்தையும் தவிர வேறெதுவுமே இல்லை. ஆனால் நாயகன் குற்றத்தின் நிழலில் மனித உணர்வுகளின் எண்ணற்ற உணர்ச்சிப் பிரவாகங்களை வெளிப்படுத்தியது. இன்றளவும் அந்தப் படம் எவரும் நெருங்கவியலாத ஒரு தனித்தீவாக தமிழ் சினிமாவில் இருக்கிறது.

1989இல் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் கமல்ஹாசன் அவரது நடிப்பு வாழ்க்கையில் ஏற்ற மிகச் சவாலான பாத்திரப் படைப்பை வெளிப்படுத்தியது. பொதுவாக தமிழ் சினிமாவில் குள்ளமான தோற்றம் உடையவர்களை நகைச்சுவை கதாபாத்திரமாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஒரு பிரபல நடிகர் தனது தோற்றத்தையே குறுகத் தரித்துக்கொண்டு குள்ளமான தோற்றத்தில் நடித்த சம்பவமும் இதற்குமுன் எங்காவது சினிமா வரலாற்றில் இருக்கிறதா என்று தெரியவில்லை. கமல்  அந்தத் தோற்றத்தை எப்படிப் பெற்றார் என்று ஏராளமான யூகங்கள் விவாதிக்கப்பட்டன. உண்மையில் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்திய படம் அது. கமல் தன்னுடைய உடலை சினிமாவில் எல்லா விதத்திலும் ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடியவர் என்பதை ரசிகர்கள் நீண்டகாலமாக அறிவார்கள். ஆனால் அவர் எந்தளவிற்குப் போவார் என்பதைக் காட்டிய படம் அது. அந்தக் குள்ளமான மனிதரின் பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய மிக அழுத்தமான உணர்ச்சிகள் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை கமலுக்குத் தேடித் தந்தது.

கமல் நடித்து வெற்றி பெற்ற படங்களில் நாயகனுக்குப் பிறகு மிக அற்புதமான, நேர்த்தியான திரைக்கதையோடு உருவாக்கப்பட்ட படம் தேவர்மகன். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் அதனுடைய திரைக்கதை மொழியின் நுட்பம் அவ்வளவு துல்லியமாக இருக்கிறது. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு, மரபுரீதியான குடும்ப அமைப்பில் எவ்வளவு மன அழுத்தங்களுடன் வெளிப்படக்கூடியது என்பதை தேவர்மகன் வெகுசிறப்பாக சித்தரித்தது. ஒரு குடும்பத்தினுடைய தேவைகளுக்காக தனது கனவுகள், அந்தரங்க ஆசாபாசங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சமரசம் செய்துகொள்ளும் பழமைக்கும் நவீனத்துவத்துக்குமிடையில் சிக்கிக்கொண்ட ஒரு இளைஞனின் பாத்திரத்தை கமல் வெகு அற்புதமாக ஏற்று நடித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு விசித்திரமான விளைவு ஏற்பட்டது. அந்தப் படம் மேலோட்டமாக சாதி உணர்வுக்கு எதிரான மனிதநேய பிரகடனத்தை உச்சரித்தது. ஆனால் தென்தமிழகத்தில் தேவர் சாதி அரசியலுக்கு ஒரு கலாபூர்வமான நியாயத்தை தேவர்மகன் வழங்கியது. பின்னால் தமிழில் தொடர்ச்சியாக சாதி அரசியலை நியாயப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளிவந்ததற்கு தேவர் மகனே காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றும் இருக்கிறது.

பொதுவாக, கமல்ஹாசனின் திரைப்படங்களில் மனித வாழ்க்கை சார்ந்த, தமிழ் வாழ்க்கை சார்ந்த ஒரு உணர்ச்சிகரமான அம்சம் இருக்கும். அந்த உணர்ச்சிகரமான அம்சத்தை கமல் எப்படி நுட்பமாகவும் தனித்துவமாகவும் வெளிப்படுத்துகிறார் என்பதுதான் அவருடைய வெற்றிபெற்ற படங்களின் பின்புலமாக இருந்திருக்கிறது. ஆனால் கமல்ஹாசனின் பிற்காலப் படங்கள் அந்த உணர்ச்சிகரமான கதையம்சத்தை இழந்து கமலினுடைய திறமைகளை பல்வேறு விதங்களில் சோதித்துப் பார்த்துக்கொள்கிற படங்களாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது. தசாவதாரம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். வணிகரீதியாக அந்தப் படம் வெற்றி பெற்றது. ஆனால் கமல்ஹாசனுடைய தோல்வியடைந்த பல படங்களின் முக்கியத்துவத்தைக்கூட அந்தப் படம் பெறவில்லை. இதனுடைய இன்னொரு துயரமான முயற்சிதான் விஸ்வரூபம். இது படத்திற்குள்ளேயும் வெளியேயும் தவறான அரசியலுக்குள் சிக்கிக்கொண்டது. ஒரு மோசமான திரைக்கதையை கொண்ட திரைப்படம் அரசியல் காரணங்களுக்காக மிகப் பெரிய பிரபலத்தையும் வணிக வெற்றியையும் பெற்றது என்று சொன்னால் அது விஸ்வரூபம்தான்.

கமல்ஹாசனின் சினிமா கனவுகள் வணிக வெற்றிகளாலும் தோல்விகளாலும் உருவானவையல்ல. அவர் இரண்டையுமே வெகு எளிதில் கடந்து சென்று பல புதிய கனவுகளை எப்போதும் படைப்பவராக இருந்திருக்கிறார். கமல்ஹாசன் போன்ற கலைஞர்கள் ஒரு தேசத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு ஓரிருவரே தோன்றுவார்கள். கமல் ஒரு நூற்றாண்டின் கலைஞன்.

நவம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com