பிரிவோம் சேர்வோம் - அதிமுக பிளவு

பிரிவோம் சேர்வோம்  - அதிமுக பிளவு
Published on

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் 1987-ல் காலமானதைத் தொடர்ந்து அதிமுகவில் இரண்டு ஆண்டுகள் பெரும் குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்தில் கட்சி உடைந்து சிதறியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவால் பல்லாண்டுகள் ஓரங்கட்டப்பட்டு இருந்த திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத திருப்பமாக அதிமுகவின் உடைந்த அணிகள் இணைந்தன. அசைக்கமுடியாத தலைவராக மாறினார் ஜெயலலிதா.

இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களும் அதைத் தொடர்ந்த ஜெயலலிதாவின் எழுச்சியும் தமிழக அரசியல்வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பு நிறைந்தவை. இந்த விஷயத்தை ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தில் இருந்து தொடங்கலாம்.

1982-ல் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார் ஜெயலலிதா. கடலூரில் அதே ஆண்டில் நடந்த மாநாட்டில் அவரை அறிமுகப்படுத்தி கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தினார் எம்ஜிஆர். இந்த காலகட்டத்தில்  அரசியலில் முன் அனுபவம் இல்லாத ஜெயலலிதா தமிழக அரசியல்வரலாறு தொடர்பான நூல்களைப் படித்து குறுகிய காலத்தில் கரைத்துக் குடித்துவிட்டார் என்பார்கள். தன் அரசியல் வாரிசாக  அறிவிக்க எம்ஜிஆர் இந்நேரத்தில்  விரும்பியதாகவும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பின்னர் 1984-ல் அவரை ராஜ்யசபாவுக்கும் உறுப்பினராக அனுப்பினார். அங்கு அவரது ஆங்கிலப்பேச்சு நன்றாக எடுபட்டது. புதுடெல்லியில் தொடர்புகள் கிடைத்தன. இதற்கிடையில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தபோது அவருக்கும் ஆர்.எம்.வீரப்பன் போன்ற மூத்த தலைவர்களுக்கும் இடையே தீவிரமான கருத்துவேறுபாடு மூண்டது.

1984-ஆம் ஆண்டில் எம்ஜிஆரின் உடல்நலம் மோசமடைந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதான் சமயம் என்று அவரை சந்திக்க ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னர் எம்ஜிஆர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவர் களத்தில் இல்லாமலேயே அந்த சமயத்தில் அதிமுக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தது. ஜெயலலிதாவை தேர்தல் பணிகளில் இருந்து ஒதுக்கி வைக்க சில மூத்த அதிமுக தலைவர்கள் விரும்பினாலும் காங்கிரசின் வற்புறுத்தலின் பேரில் ஜெயலலிதா தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்வதைத் தடுக்க இயலவில்லை. அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. நாடு திரும்பிய எம்.ஜி.ஆர். மீண்டும் முதல்வரானார்.  இருந்தும் ஜெயலலிதாவை எம்ஜிஆரை சந்திக்கவிடாமல் பல சக்திகள் தடுத்தன. அரசியலில் சரியான முறையில் இயங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஜெயலலிதா தன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அப்போது மாநிலங்களைத் தலைவராகவும் துணை குடியரசுத் தலைவராகவும் இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு அனுப்பியதாகவும் அதை அவர் ஏற்காமல் திருப்பி எம்ஜிஆருக்கு அனுப்பியதாகவும் சொல்லப்படுவதுண்டு. தமிழக அரசியலின் முக்கியமான கட்டங்களில், குடியரசுத் தலைவர் ஆன வெங்கட்ராமனின் தலையீடும் வழிகாட்டுதலும் இருந்ததை, இங்கே குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் 1987-ல் எம்ஜிஆர் மரணம் அடைந்தார். இறுதி ஊர்வலத்தில் எம்ஜிஆரின் உடலருகே ஜெயலலிதா பல இடையூறுகளுக்கிடையிலும் நின்றிருந்தது அவரது போராடும் மனஉறுதியைக் காட்டியது. அவர் கவசவண்டியில் ஏறவிடாமல் இழுத்துத் தள்ளப்பட்டார்.

எம்ஜிஆர் மரணத்துக்குப் பிறகு யார் முதல்வர் என்பதில் அதிமுக பிளவு பட்டது. தற்காலிக முதல்வராக இருந்த நெடுஞ்செழியன் தான் முதல்வராகப் போட்டியிட விரும்பினாலும் பின்னர் ஜெயலலிதாவை ஆதரித்தார். கவர்னராக இருந்த குரானாவை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சந்தித்து ஜானகி அம்மாளுக்குத்தான் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். ஜானகியும் தான் முதல் அமைச்சர் பதவி ஏற்க சம்மதிப்பதாகவும் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவரை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்ததாக அறிவித்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் 97 பேர் ஜானகியை ஆதரித்தனர். 29 பேர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். டெல்லியிலிருந்து வந்த வழிகாட்டுதல்படி ஆட்சி கலைக்கப்படவில்லை. ஜானகிக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது.

6-1-1988-ல் ஜானகி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இதை அடுத்து ஜனவரி  மாதம் 28-ந்தேதி சட்டசபையில் ஜானகி தன் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். ஜெ ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29பேரும் எதிர்த்தரப்புக்குத் தாவாமல் தடுக்க ரகசியமாக பல இடங்களுக்கு அழைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இந்த காலம் தமிழக அரசியலில் கொந்தளிப்பான காலம்!

ராஜிவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்து ஆதரவு கேட்டார். அவரோ ஒன்றுபட்ட அதிமுகவுக்கே ஆதரவு என்று சொல்லிவிட்டார்.

சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடந்த 28-ஆம் தேதி அன்று பெரும் மோதல் மூண்டது. செருப்புகளும் சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. காவல்துறை அதிகாரி தேவாரம் தடியடி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று வானளாவிய அதிகாரம் படைத்தவரான சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஜானகி கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டதாக அறிவித்தார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் ஜானகி அமைச்சரவை கலைக்கப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இதன்பின்னர் ஓராண்டு கழித்து சட்டமன்றத் தேர்தல் நடந்தது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா விரும்பினாலும் காங்கிரஸ் தனியே நின்றது. அதிமுக ஜா அணி, ஜெ அணி என்று இரண்டாகப் போட்டியிட்டன. இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் இல்லை. ஜானகிக்கு இரட்டைப் புறா, ஜெவுக்கு சேவல்.

தேர்தல் முடிவுகள் வந்தன. திமுக அபார வெற்றி. 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது. அது சேரன்மாதேவியில் பி.எச்.பாண்டியன். ஆண்டிப்பட்டியில் நின்ற ஜானகியே தோற்றார்.  மாறாக ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. கூட்டணியுடன் சேர்த்து 32 இடங்களைப் பிடித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்றார். இந்த களேபரத்தில், ஆரம்பத்தில் ஜெயலலிதாவை ஆதரித்திருந்த நெடுஞ்செழியன், பிற அதிமுக தலைவர்களான க.ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நால்வர் அணியாக மாறி இந்த தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியதும் குறிப்பிடத்தக்கது.

ஜானகி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். பிறகு அதிமுக முழுமையாக ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் வந்தது. அதிமுகவில் தொண்டர்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது என்பது அவர் 27 இடங்களில் வென்றதில் நிரூபணம் ஆகியிருந்தது. பிரிந்து எதிர்த்தரப்பில் நின்ற பல தலைவர்களையும் அவர் அரவணைத்து அதிமுக மீண்டும் பலமான கட்சியாக ஆனது. இரட்டை இலை சின்னம் அதற்குத் திரும்பிய பின்னர் பழைய பலம் வந்துவிட்டது. “அதிமுக ஒன்றாக இணைந்தபிறகு வந்த சில சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் ஒருங்கிணைந்த அதிமுக வெற்றி பெற்று தன் பலத்தை நிரூபித்தது” என்று குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராவ்.

ஜெயலலிதாவுக்கு இறுதியாக விடப்பட்ட சவால் என்பது 1990-ல் தனக்கு முக்கிய ஆதரவாளர்களாக இருந்த திருநாவுக்கரசையும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனையும் கட்சியை விட்டு நீக்கியபோது எழுந்தது. அப்போது இருவரும் அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்ற நேரில் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர்.

“இந்த சம்பவத்தை அப்போதைய எங்கள் புகைப்படக் கலைஞர் ஒருவர்தான் படம் எடுத்தார். 21 படங்கள் எடுத்தார். அந்த புகைப்படச் சுருளை போலீஸ் கைப்பற்றிக் கொண்டது. பின் போலீஸ்காரர்களிடமிருந்து மீண்டும் அந்த சுருளை நாங்கள் கைப்பற்றி படங்களை வெளியிட்டோம்” என்று நினைவுக்கூர்கிறார் அந்த காலகட்டத்தில் நக்கீரன் பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை. இந்த சம்பவத்தைத்தான் எழுத்தாளர் பாலகுமாரன் உயிர்ச்சுருள் என்ற பெயரில் கதையாக எழுதினார். 

எம்ஜிஆருக்குப் பின்னர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்களை வழிநடத்தும் தலைவராக ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டனர்.

செப்டெம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com