பிரியமானவர்களுக்கு

Published on

வணக்கம் .

ஒரு முறை வேலைப்பளுவை சாக்காக வைத்துக் கொண்டு அம்மாவிற்கு வழக்கமாக வாரம் ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நான் சில வாரங்கள் பேசவில்லை. இடைவெளிக்குப் பின் பேசும் போது எதிர்முனையிலிருந்து வார்த்தைகளுக்குப் பதில் விசும்பல் ஒலி கேட்டது.

அம்மாவின் வருத்தம் பற்றி மற்றொரு நாள் பேசுகையில் முன்பு பத்து நாட்களுக்கு ஒரு முறை கடிதம் எழுதும் நான் சில தடவைகள் இரண்டு மாதம் வரை இடைவெளி விட்டும் இப்படி வருத்தப்பட்டதாக நினைவில்லை என்று கேட்க, முன்பெல்லாம் குறிப்பிட்ட தேதியில் உன் கடிதம் வராவிட்டால் பழைய கடிதத்தை வாசித்து சமாதானப்பட்டுக்கொள்வேன் என்று பதில் வந்தது. இந்த பதில் தான் கடிதச் சிறப்பிதழின் தொடக்கப்புள்ளி.

குழந்தைகளிடம் கடிதம் எழுதும் பழக்கம் இல்லாவிட்டால் அவர்கள் முக்கியமான ஒரு திறனை இழப்பதாக மானுடவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரசிகமணி டி.கே.சி , மு.வ., அறிஞர் அண்ணா , கி.ரா., கு. அழகிரிசாமி , புதுமைப்பித்தன் , மு.கருணாநிதி , சுந்தரராமசாமி , வண்ணதாசன் ஆகியோரது கடிதங்களில் பலவற்றை ரசித்து மீண்டும் மீண்டும் படித்துள்ளேன்.

வேறு யாருக்கோ எழுதப்பட்ட போதிலும் கி.ரா. மற்றும் வண்ணதாசன் கடிதங்களில் பெருக்கெடுத்து ஓடும் அன்பு  என்னை நெகிழவைத்துள்ளது.

கடிதங்கள் எழுதுவதை குறைத்துக் கொண்ட மேற்கு உலகு பழைய அரிய கடிதங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதில் போட்டி போடுகிறார்கள். மாவீரன் நெப்போலியன் ஜேசப்பைனுக்கு எழுதிய கடிதங்கள் இந்திய மதிப்பில் 2 கோடியே 81 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

1860 ல் பிரஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியுகோ  பதிப்பாளருக்கு தனது புத்தகமான  'Les Miserables'ன் விற்பனை பற்றி கேட்டு எழுதிய கடிதம் தான் மிக சுருக்கமானது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது..

‘?’

இந்த கடிதத்திற்கு பதிப்பாளர் எழுதிய பதில் கடிதத்தில்

 ‘!’

என்று மட்டுமே குறிப்பிட்டிருந்ததாம்.

வரும் பக்கங்களில் உள்ள கடிதங்களும் அது தொடர்பான கட்டுரைகளும் வாசிப்பவர்களை

கடிதங்கள் எழுதத் தூண்டும் .

அப்படித் தூண்டும் போது அந்திமழையின் முயற்சி வெற்றிபெறும்.

தொடர்ந்து கடிதங்கள் செய்வோம் , அதன்மூலம் அன்பைப் பரப்புவோம்.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன் .

(பின் வரும் பக்கங்களில் உள்ள கடிதங்கள் சுவாரஸ்யம் மற்றும் இடம் கருதி சுருக்கப்பட்டுள்ளது. அவற்றின் முக்கியத்துவம் கருதி நன்றியுடன் எடுத்தாண்டுள்ளோம்.)

மே, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com