பிரம்பெடுத்து ரெண்டு அடி போட்டார்!

பிரம்பெடுத்து ரெண்டு அடி போட்டார்!
Published on

சின்னவயதில் அப்பா நடிகர் திலகம் அவர்களின் மடியில், தோளில் உட்கார்ந்து விளையாடும், சிரித்து மகிழும் வாய்ப்பு, பாக்கியம் அதிகமாக அமையவில்லை என்பது தவிர, குறையொன்றுமில்லை.

நான் பெங்களூர் பிஷப் கார்டன் கான்வென்ட்டில் படித்தவன். மூன்றாம் வகுப்பு வரை அங்கே வேணுகோபால் மாமா வீட்டில் தங்கி படித்தேன். மாமா, ராணுவ அதிகாரியாக இருந்தார். என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் மாமா தான் கையெழுத்துப் போடுவார். ஒரு சமயம் மாமா போலவே ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டு அப்பாவிடம் வசமாக மாட்டிக் கொண்டேன்.

‘‘ஏண்டா மூணாங்கிளாசிலேயே திருட்டுத்தனமா?'' அப்பா பிரம்பெடுத்து ரெண்டு அடி போட்டார். அதுதான் அவர் முதலும் கடைசியுமாக என்னை அடித்தது.

பிஷப் காட்டன் கான்வென்ட்டில் ஒரு ஆங்கிலேயத் தம்பதிகளின் பராமரிப்பில் இருந்ததால் ஆங்கிலத்தில் பேச, எழுதக் கற்றுக் கொண்டோம். அப்போதெல்லாம் எங்களுக்கு பாக்கெட் மணி ஒரு ரூபாய் தான் கொடுப்பார்கள். பணத்தின் மதிப்பு தெரியவேண்டும் என்பதற்காக. ஆனால் நாங்கள் ஒரே நாளில் அதை செலவு செய்து விடுவோம்.

விடுமுறை நாட்களில் மட்டும் சென்னைக்கு வந்து குடும்பத்துடன் குதுகலமாக பொழுதை செலவிடுவோம். பெங்களூரில் படித்து கொண்டிருந்த காலத்தில் அப்பா ஒரு தடவை (1969ல்) வந்தார், வசதிகள் எப்படி இருக்கு, நாங்க எப்படி படிக்கிறோம் என்று பார்த்து விட்டு போனார்.

அப்போதெல்லாம் எனக்கு ஸ்போர்ட்சில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. நான் ஃபுட்பால் டீமில் கேப்டன், கிரிக்கெட் டீமில் பௌலர், ஹாக்கியில் பெஸ்ட் பிளேயர். பாக்சிங் கிளாஸ் கூடபோனேன். ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் பரிசு பெற்றதுண்டு.

ஒரு சமயம் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவதாக வந்தேன், லாங் ஜம்பில் முதலிடம் பிடித்தேன் அந்த நிகழுக்கு மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்திருந்தார்கள், அந்த நிகழ்வுக்கு அப்பா வந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக மாணவர்களுக்கு மெடல்களை அப்பாவைக் கொடுக்கும்படி கேட்டுகொண்டனர். எனக்கு மெடல் குத்தியப் போது ‘‘என்ன முந்தைய ரெக்கார்ட் எல்லாம் உடைச்சிட்டியா?'' என்று சிரித்தார்.

எங்களுக்கு லீவு விட்டால் அப்பாவின் படப்பிடிப்புக்குப் போய் விடுவோம். ஒரு தடவை ஊட்டிக்குப் போயிருந்தோம். அந்த ஷூட்டிங்கில் நாகேஷ் அங்கிள், முத்துராமன் அங்கிள் அவங்க மகன் ஆனந்த்பாபு, கார்த்திக் வந்திருந்தாங்க கொண்டாட்டமாக இருந்தது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் அப்பா ரொம்ப ஜாலியாக எங்களுடன் சிரித்து மகிழ்வார். தேவிகா ஆன்ட்டி, பத்மினி ஆன்டி, என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கும்.

அப்பாவுடன் நாங்கள் நெருக்கமாக இருந்த தருணங்கள் மிகவும் குறைவு தான். காரணம் அப்பா ரொம்ப பிசியாக இருந்த நேரம் அது. என்னைவிட என் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் அப்பாவுடன் சந்தோஷமாக கொஞ்சி விளையாட முடிந்தது. அப்பாவுக்கு பெரும் ஆனந்தம்.

நாங்கள் சின்னவயதில் குடும்பத்துடன் கொண்டாடிய ஒரே பண்டிகை தீபாவளி தான். எங்க அத்தை பொன்னம்மா விடியகாலை மூணு மணிக்கே எழுப்பி விட்டு எல்லோருக்கும் உச்சந்தலையிலே எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பாட்டி, புது டிரஸ் போட்டு கிட்டு முதல்ல தாத்தா, பாட்டி ( சின்னையா மன்றாயர், ராஜா மணி அம்மாள்) காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்குவோம், பத்து ரூபாய் கிடைக்கும்.

அப்புறம் பெரியப்பா, அப்பா, சித்தப்பா, எல்லார்கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு பட்டாசு கொளுத்த ஓடுவோம். முதல்ல பெரியப்பா, அப்பா, சித்தப்பா மூணுபேரும் ஆளுக்கொரு சரவெடி கொளுத்தி ஆரம்பிச்சு வைப்பாங்க, அதுக்கப்பறம் நாங்க கோதாவுல இறங்கிவிடுவோம். எங்க வீட்டுக்கு எதிரில் ஒரு மார்வாடி வீடு பட்டாசு கொளுத்தறதில் அவங்களுக்கும் எங்களுக்கும் தான் போட்டி அமர்க்களப்படும். நாங்க சின்ன பசங்களா இருந்தப்ப ஒவ்வொரு தீபாவளி அன்னைக்கும் அப்பாவோட படம் ரிலீசாகும் எல்லோரும் குடும்பத்தோடு சாந்தி தியேட்டருக்குப் போய் மேட்னிஷோ பார்ப்போம். இன்னொரு முறை எங்கள் பள்ளியின் ஸ்போர்ட் டேக்கு அப்பா வந்திருந்தார். ‘ஜாவலின் த்ரோ' போட்டியில் எனக்கு முதலிடம் கிடைத்தது. நான் ஒரு நல்ல அத்லெட் என்பதை அப்பா நேராகவே பார்த்து தெரிந்து கொண்டார். அப்போது இவன ஒலிம்பிக்லே ஜாவலின் போடணும்...'' என்று மற்றவர்களிடம் சொன்னதை நான் கேட்டேன். ஆனாலும் மாநில அளவிலேயே எனது விளையாட்டு ஈடுபாட்டை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

சின்னவயதில் இரண்டு முறை அப்பா கூட வேட்டைக்குப் போயிருக்கிறேன். இரு மலர் படப்பிடிப்பின் போது ஒரு முறை, புண்ணியபூமி ஷூட்டிங் சமயத்தில் இன்னொரு முறை கூட போனேன். அப்போது சிங்கம், புலி, கரடி,யானை என்று பல மிருங்களை பார்த்து ரசித்தேன்.

பசங்கன்னா அப்பாவுக்கு உயிர், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மத்தியானம் எல்லோரும் ஒரே டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும்போது. வீடே கலகலப்பாக இருக்கும். எல்லா பேரன் பேத்திகளுடன் அப்பா பேசி மகிழ்வார். எங்களது கூட்டு குடும்பம் , எங்கப்பா, பெரியப்பா, சித்தப்பா காலத்துல அவர்களால அமைந்தது. அவங்க கட்டிக் காத்த பாரம்ரியமும் பாசமும் இப்பவும் எங்க வீட்ல இருக்கு, நானும் என் சகோதர சகோதரிகள் என எல்லாருமே ஒண்ணா இருக்கோம். இப்படியே இந்த தலைமுறையிலும் நாங்க பாசத்தோட இருக்கிறோம். எங்களுக்கு அடுத்த தலைமுறையில் பசங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால் அவங்களும் இப்படி ஒண்ணா இருக்கணும்னு தான் நான் கடவுளை வேண்டுகிறேன்''

சந்திப்பு : சபீதாஜோசப்

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com