பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!

சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா
சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா
Published on

சவுக்கு மீடியா

சவுக்கு சங்கர்

யூடியூப் வலைக்காட்சியில் தனக்கென தனியான பார்வையாளர்களைக் கொண்ட சங்கர், அதை அழுத்தமாக நம்பியே தனி ஆவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்.

வித்தியாசமான திரைப்பட இயக்குநராக அறியப்படும் வெற்றிமாறனை வைத்து, கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னையில் சவுக்கு மீடியா தொடங்கப்பட்டது.

‘பன்னிரண்டு ஆண்டுகள் வலைப்பூவில் எழுதிவந்தேன். என்னளவில், தனி நபராக முடிந்தவரை செய்துபார்த்து விட்டேன். கடந்த சில ஆண்டுகளாக காட்சி ஊடகத்தில் பேசியதற்கு புதிய வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் எழுதுவதைப் படிக்க குறிப்பிட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், காட்சிரீதியானவற்றுக்கு பரவல் அதிகமாகக் கிடைத்ததைப் பார்க்கமுடிந்தது. மற்ற பல ஊடகங்களில் என்னதான் பேசினாலும், நாம் நினைப்பதை அங்கு பேசிவிட முடியாது என்பதால், சக்திவாய்ந்த ஒரு காட்சி ஊடகத்தை தனியாக தொடங்கும் முடிவுக்கு வந்தேன்,' என்கிறார், சவுக்கு சங்கர்.

மேலும், அரசுப் பணியிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்காமல் இருந்ததும் ஒரு தடையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே இடை நீக்கத்தில் இருந்துவந்த சங்கர், அரசுப் பணியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே!

பணிநீக்கம் செய்யப்பட்டதால், ஓய்வூதியம், கணிசமான நிலுவைப் பணப்பயன்  போன்றவை என தனக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்கிறார். மேல்முறையீடு செய்வீர்களா என்றால், ‘இந்த அரசுதானே என்னை நீக்குகிறது. நீதிமன்றத்தை நாடினால் மட்டும் அரசு அங்கு என்ன சொல்லும்? எதுக்கு காலத்தை வீணடித்து... உலகம் மிகவும் பெரியது. ஆகிற வேலையைப் பார்க்கலாமென இறங்கிவிட்டேன்,' என உற்சாகமாகப் பேசுகிறார் சங்கர்.

‘ பிரபல கட்டுமான நிறுவனத்துக்காக நூறடி சாலை போடுகிறார்கள் என்கிற ஒரு தகவல் கிடைக்கிறது. பெரிய ஊடகங்களிடம் அணுகினால், அவர்களுக்கு முழுப் பக்க விளம்பரத்தை அந்த நிறுவனம் தரும். எனவே செய்தி அவற்றில் வராது. இதை நான் கொண்டுவர முடியும். எழுதுவதுடன் காட்சிரீதியாக ஒரு குழுவின் மூலம் விரிவாக செய்தியைக் கொண்டுவர முடியும். பெரிய இலாபம் எதிர்பார்க்காமல் இப்படி ஓர் ஊடக நிறுவனத்தை நடத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வணிக விளம்பரங்கள் மூலமாகவும் நன்கொடைகள் மூலமாகவும் இப்போது டிஜிட்டல் ஊடகம் நடத்தமுடியும். ஒரு தொலைக்காட்சி நடத்துவதென்றால் மாதம் 70 இலட்சம்வரை வந்துவிடும். அச்சு ஊடகமும் மாதம் 40 இலட்சம் ரூபாய்வரை ஆகும். அது எனக்கு சாத்தியமில்லை,' எனும் சங்கர், விளம்பரச் சந்தையின் மாற்றம் டிஜிட்டல் ஊடகத்துக்கு சாதகம் என அழுத்தமாக நம்புகிறார்.

தன்னுடைய வெளிப்பாடுகளில் பெரிய சாதனையாக, ஈஷா மையம் தொடர்பான செய்தியைக் குறிப்பிடுகிறார். ‘2015 - 16இல் ஈசாவைப் பற்றி எழுதினேன். அப்போது எந்த பெரிய ஊடகமும் இதை எழுதவே இல்லை; எழுத முன்வரவும் இல்லை. நான் எழுதிய பிறகு நிறைய பேர் பேசுகிறார்கள். இன்னுமொன்று, மெயின்ஸ்ட்ரீம் ஊடகத்துக்கு நிகராக இணை ஊடகங்களில் வரும் செய்தி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்திருப்பதாகவும் நம்புகிறேன். வலைப்பூவில்தானே எழுதுகிறான், பிடித்ததைப் பேசுவான் என்றில்லாமல், இதிலும் சீரியஸ் செய்திகளை வெளியிடமுடியும். பல ஊடகங்களிடம் முயற்சி செய்தும், அவர்கள் வெளியிடாத செய்திகளை இங்கே வெளியிடுகிறேன். இதுபோன்றவற்றுக்கு இந்தத் தளம் நன்றாகப் பயன்படும் என நம்புகிறேன்.' என சாதகங்களை அடுக்குகிறார், சங்கர்.

தன்னுடைய இடித்துரைப்பாளர் பயணத்தில் வருத்தப்படும்படியான ஒன்றாக, ஜாபர் சேட் விவகாரத்தைக் குறிப்பிடுகிறார்.

‘ தகவல் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவல்களை வைத்து, 2010இல் முதல் முறையாக, அப்போதைய காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்டின் வீட்டு மனை விவகாரம் குறித்து செய்தியைக் கொண்டுவர எல்லா ஊடகங்களையும் அணுகினேன். யாரும் வெளியிடவில்லை. பிறகு நானே அதை வெளியிட்டேன். மறு நாள் கைதுசெய்துவிட்டார்கள். சமூகத்துக்கு நல்ல செய்தியைக் கொடுத்ததற்காக, கைதுசெய்யப்படுவது விரும்பத்தகாததுதானே?' என்கிறார் சங்கர்.தன் அதிரடியான தகவல்களுக்காக மிகக் கடுமையாக அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவு ஆட்களாலும் தனி நபர்களுக்காகவும் அவர் விமர்சிக்கப்படுவதும் வழக்கம்.

‘நாம் சரியாகச் செய்கிறோம் எனும் நம்பிக்கை இருக்கவேண்டும். நாம் தவறு செய்யவில்லை என்றால் சிக்கல் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி எவ்வளவோ விமர்சித்தேன். நான் செய்ததில் நியாயம் இருக்கிறது என இன்றைக்கு நட்பாகப் பழகுகிறார்கள். இதைப்போலத்தான் நாளை தி.மு.க. ஆட்சி போனாலும் அவர்களும் நடந்துகொள்வார்கள். 2011 முதல் 2021வரை அவர்களுடன் இணைந்தும் செயல்பட்டிருக்கிறேனே!?' என்றவரிடம், “ இப்போது ஆளும் கட்சி எதிர்ப்பு எனும் நிலைப்பாடாகச் சொல்கிறீர்கள். ஆனால், முன்னர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்க்காமல், கருத்தியலாக நிலை எடுத்து எழுதிவந்தீர்கள். அதற்கு மாறாக, பா.ஜ.க. போன்ற தரப்புகளுடன் ஓர் இணக்கத்தைக் காட்டுகிறீர்கள். இது எப்படி?' எனக் கேட்டோம்.

‘ஜனநாயகத்தில் ஒரு பத்திரிகையாளன் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றிய பார்வை எனக்கு பக்குவம் ஆகிக்கொண்டிருக்கிறது, மாறியிருக்கிறது. ஒரே நூல் பிடித்தாற்போல இதுதான் என்னுடைய நிலையென செயல்பட முடியாது எனப் புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு பிரச்னை வருகிறதென்றால், அதில் மக்களுக்குப் பலன் அளிக்கவேண்டும்; அதுதான் என்னுடைய நிலைப்பாடு. உளவுத்துறை அதிகாரி ஒருவர் பாஸ்போர்ட் மோசடி. நான் பேசியதை அதிமுக, திமுக பேசவில்லை. அண்ணாமலை பேசினால் கவனம் பெறும் என அவரைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதமாட்டேன். எனக்கு பிரச்னையின் தீர்வுதான் முக்கியம். போகும் வழிமுறைகள் முக்கியம் இல்லை,' என விரிவாக விளக்கம் தருகிறார், சவுக்கு சங்கர்.

முடக்கப்பட்ட சானல்!

டிரைப்ஸ்

கரிகாலன்

சீமான் செய்தியாளர் சந்திப்பொன்றில், 'கரிகாலா நீ வேணும்னே கேள்வி கேட்கிறே...' என்று கடும் தொனியில் குறிப்பிடப்பட்டு பரவலான கவனத்தை ஈர்த்தவர் கரிகாலன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பு முடித்து, ஒரு யூடியூப் செய்திச் சேனலில் நெறியாளராக சிறிது காலம் பணியாற்றிவிட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறி ‘ரூட்ஸ் தமிழ்'என்ற யூ டியூப் சேனலை தனியாக தொடங்கினார், சமூகநீதி, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, மாநில உரிமை தொடர்பான அரசியல் வீடியோக்களைத் தான் வலையேற்றுவார். இந்த அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த சேனலைப் பார்க்கத் தொடங்கினர்.

அதேபோல் கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், விவகாரத்தில் அந்த பகுதிக்கே நேரில் சென்று உண்மை நிலையைப் பற்றி வீடியோக்கள் வெளியிட்டார். சீமான், காயத்ரி ரகுராம், அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்களின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்காகவே அவர்கள் இந்த சேனலை புறக்கணித்தனர். இப்படி சர்ச்சைக்குள்ளான நிலையில் ரூட்ஸ் தமிழ் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் சேனல் முடக்கப்பட்டது.

ரூட்ஸ் தமிழ் சேனலில் பதிவேற்றப்பட்டிருந்த 8 வீடியோக்களை சுட்டிக்காட்டி, சேனலை முடக்க, யூ டியூப் நிர்வாகத்துக்கு தெரிவித்தது ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம். அதனால், ரூட்ஸ் தமிழ் இந்தியாவில் முடக்கப்பட்டது.

‘சுமார் 11 மாதங்களுக்கு மேலாக உழைத்து உருவாக்கப்பட்ட ரூட்ஸ் தமிழ், தொடர்ந்து செயல்படமுடியாமல் போனாலும், எனது செயல்பாட்டை வலதுசாரிகளால் முடக்க முடியாது,' என்று அப்போது தெரிவித்த கரிகாலன் அதனைத் தொடர்ந்து ரூட்ஸ் தமிழ் 24*7 சேனலை தொடங்க, அதுவும் முடக்கப்பட்டது. தொடர்ந்து டிரைப்ஸ் (Tribes) என்ற புதிய யூ டியூப் சேனைலை கடந்த ஜூலை மாதம் தொடங்கி, இதுவரை 148 வீடியோக்கள் பதிவேற்றியுள்ளார். 47 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள்.

திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய வி.எச்.பி. முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுக்கு முக்கிய காரணம் இந்த சானலில் வெளியான வீடியோதான் என்பது குறிப்பிடவேண்டியது.

உரையாடல் வித்தகர்

ஜென்ராம் மீடியா

ஜென்ராம்

அடிப்படையில் பொதுத்துறை வங்கிப் பணியாளரான ஜென்ராம், 1990 - களின் கடைசியில் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளில் பணியாற்றத் தொடங்கினார். மறைந்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘தமிழா தமிழா 'உரையாடலில் பின்னரங்கப் பணிகளில் இவரின் பங்கு முக்கியமானது. அடுத்து, விஜய் தொலைக்காட்சியில் ‘முதல் பிரதி' எனும் அன்றாட காலைச் செய்தி விவாதத்தில் பின்னரங்கில் பணியாற்றினாலும், ‘மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சி மூலம் காட்சியிலும் வரத் தொடங்கினார், ஜென்ராம். பின்னர், அரசியல் பத்திரிகைகளில் பத்திகளை எழுதியவர், புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது அதன் உரையாடல், நடப்பு ஆய்வு நிகழ்ச்சிகளில் கேமராவுக்கு முன்னாலும் பின்னாலுமாகப் பணியாற்றினார்.

“2014க்குப் பின்னால்  சில அரசியல் காரணங்களால் என்னுடைய ஊடக வெளி குறைக்கப்பட்டது. 2016இல் நியூஸ்18 தொலைக்காட்சியிலும் பிறகு காவேரி தொலைக்காட்சியின் அந்திமக் காலத்தில் 6 மாதங்கள்வரையுமே தொலைக்காட்சி ஊடகத்தில் பணிவாய்ப்பு அமைந்தது. 2019 தேர்தலுக்குப் பிறகு மக்களுடன் தொடர்புகொள்ள ஏதாவது ஒரு முயற்சி செய்துகொண்டே இருந்தேன். உரையாடலுக்கான ஒரு வெளியை நாம் உருவாக்க வேண்டும் என முயன்றதில், 2021 ஜனவரி மாதத்தில் தனி யூடியூப் சேனலை ஆரம்பித்தேன்.' என ஜென்ராம் மீடியா வந்த கதையைச் சொல்கிறார், ஜென்ராம்.

தொலைக்காட்சிகளில் இவருடைய அன்றாட அலசல், உரையாடல்களைப் பார்த்து ரசிகரானவர்கள் கொடுத்த ஊக்கம்தான் இதற்குக் காரணம் என்கிறார்.

வேறு ஊடகம் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டு அல்ல. தொலைக்காட்சியில் எடுத்துக் கொண்டபடியே, அன்றாடசெய்திக்குப் பின்னால் உள்ள விசயங்களை அலசுவது என்பதையே தன் பணியாக வரித்துக்கொண்டு, அந்தப் பாதையில் பயணித்துவருகிறார்.

எத்தனையோ பேரிடம் எத்தனையோ கேள்விகள் கேட்டவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

தொடக்க கால இலக்கு என்ன? நிறைவேறி இருக்கிறதா?

முதலில், நூறு பூக்கள் மலரட்டும் என்பதற்கேற்ப, அனைவருக்குமான ஜனநாயகத் தளமாக ஒரு ஊடகத்தில் அரசியல் கருத்தியல் ஆய்வாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்ற பல துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமாக, புதிய எண்ணங்கள், உண்மைகளை வெளிக்கொண்டுவருவது எனத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் இதில் இணைக்க நான் விரும்பியவர்களை இணையத்தின் மூலம் இணைப்பதற்கான வசதி வாய்ப்புகள் அமையாததால், வாய்ப்புள்ள அளவில் மட்டுமே செய்துவருகிறேன்.

வலைக்காட்சி ஊடகம் என்றாலே பார்வையாளர் எண்ணிக்கைதான் என்கிறபடி இருக்கிறது... உங்கள் எதிர்பார்ப்பும் யதார்த்தமும் எப்படி?

 பத்தாயிரம் பதிவுப் பார்வையாளர்கள், தினமும் 2 ஆயிரம் பேர் பார்த்தால் போதும் என்றுதான் தொடங்கினேன். ஆனால், இதுவரை 37 ஆயிரம் பேர் பதிவுப் பார்வையாளர்களாகவும், அன்றாடம் 10 ஆயிரம் பேர் பார்ப்பதாகவும் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் பரந்த அளவில் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுபோனதாக நினைத்தேன். ஆனால், அப்படி இல்லையென இப்போது தோன்றுகிறது.

ஏன், எப்படி?

ஏனென்றால், அவ்வளவு பரவலாகச் சேர்ந்திருந்தது என்றால், இந்த யூடியூபுக்கு இலட்சக்கணக்கில் பதிவுப் பார்வையாளர்கள் வந்திருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சிகள் மக்களுக்கும் ஊடகத்துக்கும் இடையிலான கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், செயற்பாட்டாளர்கள் போன்ற தரப்பினருக்கு கருத்துக்கருவியாக இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. அந்த அளவில் மிகவும் மகிழ்ச்சியே. இன்னுமொன்று, என்னுடைய கோணம், சற்றே இடதுநோக்கிய ஒரு மைய நிலைப்பாடாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.‘ என்கிறார்.

ஆனாலும், அண்மையில் நெல்லைக்குப் போயிருந்த ஜென்ராமை, காலைப் பொழுதொன்றில் பால் விற்கும் ஒருவர், அன்றாடம் இவரின் நிகழ்ச்சியைப் பார்ப்பதாகச் சொல்லி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதும் நடந்திருக்கிறது.

மற்ற யூடியூபர்களைப் போல மிக மோசமான கருத்துகளை இவர் அதிகம் எதிர்கொண்டதில்லை. அதிகபட்சமாகப் போனால் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும், “200 ரூபாய்', “திமுக கொத்தடிமை' என்கிறபடியான விமர்சனங்கள்தான் வரும் என்கிறார், ஜென்ராம். அரிதான சமயங்களில், கடந்த  சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் ஆ.இராசா - எடப்பாடி பழனிசாமிக்கு இடையிலான சர்ச்சையைத் தொடர்ந்து, படுமோசமா தனிப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறுகிறார்.

 ‘விமர்சனங்களை பொதுவாக அப்படியே அனுமதிப்பது என்பதில் உரையாடல் வலுப்பெறும்,' என உறுதியாக நம்புகிறார், ஜென்ராம். ஆனால், ‘இதற்காக விஷம் போல வரும் விமர்சனங்களை நான் அனுமதிக்க மாட்டேன்' என கறாராகச் சொல்கிறார்.  

தொலைக்காட்சியோ வலைக்காட்சியோ தன்னுடைய ஒரே நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படையான ஜனநாயகம் என்பதே என்கிறார் இவர்.

இருபத்தைந்து ஆண்டு கால உரையாடல், கருத்தாடல் பயணத்தில் இருந்துவரும் ஜென்ராமுக்கு, இன்னும் இளம் தலைமுறையிடம் அதிகம் சென்று சேரவில்லை என்கிற ஆதங்கமும் இருக்கிறது.

 ‘என்னுடைய பேச்சு மொழியும் நான் எடுத்துக் கொள்ளும் விசயங்களும் காரணமாக இருக்கலாம்.

1970 - களில் எமர்ஜென்சிக்குப் பிறகான அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மட்டும் மையமாக வைத்துப் பேசுவதும் இன்றைய இளைஞர்கள் நெருங்கிவர விடாமல் வைக்கிறதோ தெரியவில்லை,' என்று தன்னுடைய வேலையை சுயமதிப்பீடாகவும் பேசுகிறார்.

தான் செய்துவரும் வேலையில் நல்ல திருப்தி கிடைப்பதாகச் சொல்லும் ஜென்ராமுக்கு, இந்த யூடியூப் வலைக்காட்சி உலகில், இது இல்லாவிட்டால் அது என்கிற இருமைத் தன்மை பரவலாக இருக்கிறது என்கிற வருத்தமும் இருக்கிறது.

 “அரசியல், சமூகப் பிரச்னைகள் ஒற்றைத் தன்மையாக இல்லாதபோது, அவற்றுக்கான தீர்வுகளும் அப்படி இருக்கமுடியாதுதானே? பலவிதமான கருத்தியல் கொள்கைக்காரர்களுக்கு இடையில், ஆங்கிலத்தில் shades of difference என்று சொல்வார்கள். அப்படி இல்லாமல் எதிரெதிராகப் பார்க்கிற தன்மை நிலவுகிறது. முன்னரெல்லாம், அரசியல் அலசல்களில் இருந்த சின்னக்குத்தூசி, பரிக்‌ஷா ஞாநி, சோலை போன்றவர்கள் அவரவர்க்கு ஒரு கருத்துச்சாய்வு இருந்தாலும், பொதுவான விசயங்கள் பலவற்றையும் சமூகத்துக்கு கவனப்படுத்துவார்கள். அந்தப் போக்கு இங்கு குறைவாக இருக்கிறது எனப் படுகிறது. பெரும்பான்மை மக்களுக்குத் தகுந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும்,' என்று சொல்கிறார், கால் நூற்றாண்டு கால ஊடக உரையாடல் வித்தகர் ஜென்ராம்!

இது ஃபேக்ட் செக் யுகம்!

யூ டர்ன்

ஐயன் கார்த்திகேயன்

மீம்ஸ் பக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி, இன்றைக்கு போலிச்செய்தி கண்டறியும் ஊடகமாக - யூ டர்ன் எனும் பெயரில் ஓர் அடையாளமாகி இருக்கிறது. பெரும்பாலும் அரசியல் நடப்புச் செய்திகளை அலசினாலும், இதன் தனித்தன்மையும் பெயருமே ஃபேக்ட் செக்கிங் ஊடகம்என்பதுதான்.

தன் கல்லூரி நண்பர் விக்னேஷ் காளிதாஸ் முன்னெடுக்க, அவருடன் இணைந்து ஐயன் கார்த்திகேயன் யூ டர்ன் ஊடகத்தை தலைமையேற்று நடத்திவருகிறார். இந்தியாவில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு செயல்படக்கூடிய கூகுள் அங்கீகாரம் பெற்ற ஒரே ஃபேக்ட் செக்கிங் ஊடகம், இது.

முதலில் ஐயன் கார்த்திகேயன் ஒருவர் மட்டுமே முழுமையாகப் பணியாற்றிய காலம் மாறி, இன்றைக்கு ஒரு குழுவாக இயங்குகிறது, யூ டர்ன் ஊடகம்.

அரசியல் யூடியூபர்களைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு தரப்புக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ செயல்படுவதாக எளிதாக குற்றம்சாட்டப்படுவார்கள். இவருக்கோ பல தரப்பிலிருந்தும் துரோகிப் பட்டம் குவிவது தொடர்கிறது. காரணம், பல கட்சியினர், தரப்பினர் தொடர்பான தகவல்கள், செய்திகளையும் உண்மை கண்டறிதலுக்கு உட்படுத்துவதால் வரும் சிக்கல் இது.

உள்ளூரில் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் யூ டர்னுக்கு, சர்வதேச ஃபேக்ட் செக்கிங் நெட்வொர்க் - ஐ.எஃப்.சி.என். அங்கீகாரம் 2020 இல் கிடைத்தது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தகவல் நுட்பப் பொறியியல் முடித்த ஐயனுக்கு பத்திரிகைத் துறை மீதுதான் ஆர்வம்! ஆனால் அவர் பத்திரிகை உலகில் எழுத முயன்றபோது, சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளும் புரளிச் செய்திகளுமாகப் பரவ, அதன் மீது ஈர்ப்பாகி, களம் இறங்கிவிட்டிருக்கிறார். இவர் படித்த பொறியியல் படிப்பு வீண்போகாமல் இதற்குக் கைகொடுக்கிறது.

“தமிழ்ச் சூழலில் இணையத்தில் வருவதெல்லாம் உண்மையென நம்பும் நிலையில், போலிச் செய்தியென ஒன்று இருக்கிறது; அதைத் திட்டமிட்டு பணம் செலவழித்து பரப்புவார்கள்; அதற்கு அரசியல் நோக்கம் இருக்கும். வியாபார நோக்கம் இருக்கும். சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்கும் அஞ்சுவதில்லை என்பதையெல்லாம் விழிப்புணர்வாகக் கொண்டுசெல் வதில் மகிழ்ச்சி,' என்கிறார், ஐயன் கார்த்திகேயன்.

அரசியல் கட்சிகள் தொடர்பான செய்திகளில் பல முறை இவர் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளார்.

“அரசியல் கட்சிகள் பற்றிய உண்மைகள் அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும்போது, அவர்கள் தரப்பில் வீண் அவதூறுகளை, பொய்யைப் பரப்புவார்கள். இணையத்தில் அச்சுறுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்; ஒருமாதிரியாக மனரீதியாக அழுத்தத்தை உண்டாக்குவார்கள்,' என்று சொல்லும் கார்த்தி, இதற்காக நம் வேலையை விட்டுவிட முடியுமா என்ன என பிடிப்போடு பேசுகிறார்.

பலமுறை மனச்சோர்வு அடையவைக்கும் தாக்குதல்கள் ஒரு பக்கம் இருந்தன என்றாலும், அதிலிருந்தே சில உறுதியான முடிவுகளுக்கும் வரமுடிந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“ஒரு முறை என்னை தமிழனா என்று கேட்டுவிட்டார்கள். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. உண்மையைச் சொன்னதற்காக இப்படியும் எதிர்க்கருத்து வரும் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயம், நாம் யார் என்பதையெல்லாம் நிரூபிக்க வேண்டியது, நம் மீதான அழுத்தமாக அமைகிறது, அல்லவா? இது கசப்பானதுதானே! பிறகு ஒரு தெளிவு வந்தது. நம்மை அவர்கள் வேறு ஒரு மொழிக்காரராக நினைத்துக்கொண்டால், ஒருவேளை அப்படி இருந்தாலும் அது என்ன பாவப்பட்டதா என்ன? எனவே, அப்படியானவர்களுக்கு விளக்கம் சொல்லப் போவதில்லை என முடிவுக்கு வந்தேன். அது முக்கியமான விசயமாக எனக்குப் படுகிறது,' என்கிறார் கார்த்தி.

இவர்களின் உண்மை கண்டறிதலில் வரவேற்பையும் பாராட்டுகளையும் தவிர்த்து வேறு என்ன மாதிரி எதிர்வினைகள் வருகின்றன? அதை இவர் எப்படி அணுகுகிறார்?

“தினமும் விமர்சனங்கள் மோசமாகவும் வரும். பலவிதமான கேள்விகள் வரும். விமர்சனங்கள் நியாயமானதாக இருந்தால் அதைத் திருத்திக்கொள்ளவும் சரிசெய்யவும் இடமிருந்தால் செய்வோம். அப்படி இல்லையென்றால் இடது கையால் அவற்றைப் புறந்தள்ளி, பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இதேசமயம், விமர்சனங்கள் சரியானவையாக இருந்தால், அதற்கேற்ப சரிசெய்வதே எனக்கு பலம். அப்படி இல்லாமல் என்னைத் தாக்குவதாக இருந்தால், அதிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்வேன். இதைத்தான் நான் இதுவரை கடைப்பிடித்து வருகிறேன்.' என தற்காப்பு ஃபார்முலாவாகவும் முன்வைக்கிறார், ஐயன் கார்த்திகேயன்.

‘தரவுகளுடன் கேட்கிறேன்!’

தமிழ் கேள்வி

செந்தில்வேல்

சாத்தான்குளம் நிகழ்வு தொடர்பாக ஒரேயொரு ட்வீட். அதை ஒன்றிய அரசோடு தொடர்புப்படுத்தி, போலி செய்தி பரப்பி, நான் பணி செய்த தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு வலதுசாரிகள் அழுத்தம் கொடுத்தனர். நிர்வாகம், என் நிகழ்ச்சியை நிறுத்தியது. பிறகு எப்படி அங்கு இருக்க முடியும்? அதனால், வெளியேறிவிட்டேன்.

அப்போது தேர்தல் சமயம். என்னுடைய கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்து ‘தமிழ் கேள்வி' யூ டியூப் சேனல் தொடங்கினேன். யூ டியூப் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. ஒரேயொரு முகநூல் நேரலை பேசினேன். ஒரு வீடியோவையும் பதிவேற்றாத சேனலுக்கு பன்னிரண்டு மணிநேரத்தில் ஐம்பதாயிரம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தார்கள். இது என் தோழர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. அவர்கள் யூ டியூப் தொடங்கினார்கள். தமிழ் கேள்வி -  க்கு பிறகு சமூகநீதி பேசும் யூ டியூபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

என்னுடைய வீடியோக்களைப் பார்த்து அரசியல் புரிதல் ஏற்பட்டவர்களும், அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டவர்களும் நிறைய. அப்படியொருவர், என் குடும்ப உறவினராக மாறியிருக்கிறார். முன்னர், அவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே தமிழ் கேள்வி சேனலுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். இப்படி நிறைய பேர் உள்ளனர்.

இன்றுவரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவதூறு பேசி வீடியோ வெளியிட்டது கிடையாது. தரவுகளுடன்தான் கேள்விகளை முன்வைப்பேன். அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடனும் முரண்பாடு இருந்தாலும், அதை நாகரீகமாகத்தான் எதிர்கொள்வேன்.

2022 இல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர், பேராசிரியர் ஹாஜா கனி புத்தக வெளியீட்டு விழாவில் ‘தென்னிந்தியாவில் உள்ள தலைவர்கள் வட இந்தியாவுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை வீழ்த்த முடியும்' என்று பேசியிருந்தேன்.

நான் பேசியதை அப்படியே திரித்து, ‘உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று ஒருசெய்தியைப் பரப்பினார்கள். தேர்தல் முடிவு வந்தபோது ‘ஏன் இன்னும் செந்தில்வேல் உயிரோடு இருக்கிறாய்' என்று கேள்வி எழுப்பினார்கள். அந்த செய்தி உண்மையென பலர் நம்பினார்கள். அதில் எனக்கு வருத்தம் இருந்தது.

தொலைக்காட்சியில் இருந்தவனை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை வலதுசாரிகளைத்தான் சேரும். இன்று சமூகநீதி பேசும் மேடையில் சுதந்திரமாக பேசிக் கொண்டிருக்கிறேன்.

‘அஞ்சவே மாட்டேன்’

செம்புலம்

சுந்தரவள்ளி

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், என்னயும் திருமுருகன் காந்தியையும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க அழைக்கக் கூடாது என்று என்று ஊடகங்களுக்கு வலதுசாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அப்போதுதான், யூ டியூப்பிற்காக நிறைய வீடியோக்கள் பேசத்தொடங்கினேன். எனக்கான வலுவான ஆயுதமாக யூடியூபை பார்த்தேன்.

செம்புலம் என்பது சிவப்பு நிலம். சிவப்பு கம்யூனிசத்தைக் குறிக்கும் நிறம் என்பதால், அதை மனதில் வைத்துத்தான் இந்த பெயரை தேர்வு செய்தேன்.

செம்புலத்தில் வெளியாகும் வீடியோக்களை 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வீடியோவும் பேசுவதற்கு முன், அது தொடர்பான அரசியல் மற்றும் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டுவேன். 19 வயதில் மாணவர் சங்க தலைவராக அரசியலுக்கு வந்தேன். இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருக்கிறேன்.

எதிர்ப்புகள் ஏராளமாக உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஆபாச வீடியோக்களை அனுப்புவது, கொலை மிரட்டல் விடுவது, என் தொலைபேசி எண்ணை பொதுவெளியில் பகிர்வது என ஒரு கும்பல் செயல்பட்டு வந்தனர்.

எப்படி இருந்தாலும், அவர்களால் என்னை முடக்க முடியாது. நான் இவர்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன், ஓடி ஒளியமாட்டேன். அவர்களை ஓடி ஒளியவைப்பதுதான் என் வேலை. யூ டியூப் போன்ற சுதந்திர ஊடகத்தை சரியாகப் பயன்படுத்தினால், ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான கருவியாக இதை பயன்படுத்த முடியும்.

அவர்களால் பேசமுடியாததை நான் பேசுகிறேன்!

திராவிட நட்புக் கழகம்

ஸ்ரீவித்யா

 பெரியார் இருந்திருந்தால் உங்களைப் பாராட்டி இருப்பார்' என்று பலபேர் என்னிடம் சொல்லியதுண்டு. அதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும்.

நான் பொதுவெளியில் அரசியல் பேசவந்தது வீட்டில் உள்ள ஆண்களுக்கு கொஞ்சம் பயம்தான். என் கணவரும் அப்படியே. ஆனால், வீட்டில் உள்ள பெண்கள் சந்தோஷப்படுகின்றனர். அவர்களால் பேச முடியாததை நான் பேசுகிறேன் என்பதால்.

நான் பேசும் வீடியோக்களைப் பார்க்கும் நிறைய ஆண்கள், அவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க வைப்பதாக சொல்கின்றனர். என் வீடியோக்களை பலபேர் பாராட்டினாலும் சிலர் மிக மோசமான பின்னூட்டம் இடுகின்றனர். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இங்கு பெண்களுக்கும் அரசியலுக்குமான இடைவெளி மிக அதிகம். ஆண்கள் தீர்மானிப்பதுதான் பெண்களின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது. அரசியலை பெண்கள் மிக இலகுவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் யூடியூபில் பேசவந்தேன்.

என்னுடைய பேச்சு, குறிப்பிட்ட ஒரு சமூக பேச்சு வழக்கில் இருப்பதால், நான் பேசும் வீடியோக்கள் அதிக மக்களைச் சென்றடைகிறது. அந்த பேச்சு வழக்கு நகைச்சுவை உணர்வை தரக்கூடியதாக இருக்கிறது. அது குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்துவதாக உள்ளது என்பதை உடைக்க நினைக்கிறேன். குறிப்பிட்ட அந்த பேச்சு வழக்கில் பேசுவதற்காக எந்த விமர்சனத்தையும் எதிர்கொண்டதில்லை. பாராட்டவே படுகிறேன்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். ஒரு இயக்கத்திலும் இருக்கிறேன். அதனால், இயக்க கருத்தை பரப்புவது என்னுடைய முக்கியப் பணி. நான் நம்பும் கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் யூடியூப் சேனலில் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறேன்.

போக்குவரத்து செலவு தவிர்த்து, பேசும் கருத்துக்காகப் பணம் வாங்குவதில்லை. அது கூட வியாபாரத்திற்காக நடத்தப்படும் சேனல்களிடம் மட்டும்தான் பெறுகிறேன். எனக்கு பெரிய அரசியல் அனுபவம் இல்லை என்பதால், நான் தயாராவதற்கே கொஞ்சம் நேரம் ஆகும். தகவல் சேகரிப்பது, ஆதாரங்களைத் திரட்டுவது என மூன்று நான்கு மணி நேரம் செலவிடுகிறேன். சில நேர்காணல்கள் உடனடியாக பேச வேண்டி இருக்கும். அதற்கெல்லாம் பெரிய மெனக்கெடல் செய்ய மாட்டேன், உடனே பேசிவிடுவேன். ‘மை சென்னை' யூடியூப் சேனலை நடத்துபவர் எங்கள் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் என்பதால், அவர் சேனலுக்கு நிறைய பேசுகிறேன்.

எந்த நோக்கத்திற்காகப் பொதுவெளியில் அரசியல் கருத்துகளைப் பேசவந்தேனோ, அது நிறைவேறியிருக்கிறது.

ஒரு ரூபாய்கூட இல்லாமல் தொடங்கினேன்!

யூ2 ப்ரூட்டஸ்

‘மைனர்' வீரமணி

 ஐ . டி. படித்துவிட்டு சென்னைக்கு ஹார்டுவேர் படிக்கவந்தேன். ஆர்வம் சினிமா பக்கம் சென்றது. நடிகனாக முயற்சி செய்து, உதவி இயக்குநர், இணை இயக்குநர் என காலம் நகர்ந்தது.

முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்கி யூ டியூப் பார்க்கத் தொடங்கியபோது, வலதுசாரிகளுக்கு ஆதரவான வீடியோக்கள்தான் நிறைய இருந்தன. எனக்கு வாசிப்பு பழக்கம் இருந்ததால், பெரியார், திராவிடம், கம்யூனிசத்துக்கு எதிராக இணையத்தில் பேசுவதெல்லாம் சுத்தப் பொய் என்று தெரியும்.

இவர்களுக்கு எதிர்வினையாற்ற அப்போது யாரும் இல்லை என்றே சொல்லலாம். யூ டர்ன் ஐயன் கார்த்திகேயன் மட்டும் Fact Checking செய்து கொண்டிருந்தார்.  அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைத்தேன்.

முதலீடு இல்லாமல் யூ டியூப் சேனல் தொடங்க, யூ டியூப் பார்த்தே தெரிந்து கொண்டேன். ஒத்த ரூபாய் முதலீடு இல்லாமல் தொடங்கப்பட்டதுதான்‘யூ2 ப்ரூடஸ்' சேனல். காலர் மைக் கூட இல்லாமல், வெறும் மொபைல் போனில் பேசி, அதை யூ டியூபில் பதிவேற்றினேன். தெரிந்தவர்களின் மொபைலை வாங்கி நானே சப்ஸ்கிரைப் பண்ணிவிடுவேன்.

என் கஷ்டத்தைப் பார்த்து, நண்பன் ஒருவன் எழு நூற்று ஐம்பது ரூபாய்க்கு ஒரு காலர் மைக் வாங்கிக் கொடுத்தான். சேனல் தொடங்கி ஐந்து வருடம் ஆகிறது. மூன்று வருடம் எம்.ஐ. மொபைல் போனில்தான் வீடியோ பதிவு செய்தேன். அதன் பிறகு தான் காமிரா வாங்கினேன்.

ஒரே ஒரு வீடியோதான் என் சேனலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது. திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக வீடியோ அது. இரவு போட்டிருந்த வீடியோவை காலையில் எழுந்து பார்க்கிறேன், லட்சக்கணக்கானோர் பார்த்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆண்ட பரம்பரை பேசும் இளைஞர்களைக் குறிவைத்து வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கினேன். இடைநிலை சாதி இந்துக்களை, சாதி மனநிலையிலிருந்து வெளிகொண்ட வரவேண்டும் என்று நினைக்கிறேன். சமூக நீதிக்காக பாடுபட்ட தி.மு.க . வை தள்ளிவைத்து பார்க்கும் மனநிலைக்குப் பிற்படுத்தப்பட்டவர்கள் வந்துள்ளனர். அரசியல் தளத்தில் என்ன நடக்கிறது என்ற புரிதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லை. அவர்களுக்கும் அரசியல் புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல், யூ டியூப் சட்ட விதிகளின் அடிப்படையில்தான் இதுவரை வீடியோக்களை பதிவேற்றி வருகிறேன். ஒரு முறை என்னுடைய சேனலை ஹேக் செய்துவிட்டார்கள். பிட் காயின் தொடர்பான வீடியோ நேரலையில் ஓட விட்டு சேனல் டெர்மினேட் ஆகிவிட்டது. இது நடக்கும்போதே, எல்லாவற்றையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து யூடியூப் நிறுவனத்துக்கு மெயில் அனுப்பினேன். அவர்கள், சரிசெய்வதற்குள் சேனல் நிறுத்தப்பட்டது. ஒருவாரம் ஆனது மீட்பதற்கு.

யார் ஹேக் செய்தார்கள் என்று தேடிப் பார்த்தபோது, எதிர் அணியில் இருப்பவர்கள் என்று தெரியவந்தது. ஆனால், ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் அதை எங்கேயும் சொல்லவில்லை.

அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘இந்தியா' கூட்டணியை ஆதரித்து என் பங்களிப்பை செலுத்துவேன்.  இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் தேவை என நினைக்கிறேன்.

திராவிட மறு ஆய்வில் மகிழ்ச்சி!

ராவணா

பா. ஏகலைவன்

முதுநிலை பத்திரிகையாளரான பா. ஏகலைவன், 1993இல் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். ஊடகங்களில் பல பொறுப்பு நிலைகளில் பணியாற்றியவர்.

பின்னர், யாழ் பதிப்பகம் தொடங்கி, நான்கு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

இப்போது, ராவணா யூடியூபின் நாயகர்!

‘ரசிய வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கை, உலகம் முழுக்க நாட்டுக்கு நாடு மறு ஆய்வு வந்தது; பிராந்திய அரசுகள், இனம், மொழி பிரச்னைகளை உள்வாங்கி எடுத்துக்கொண்டார்கள்; புதுப்பித்தார்கள். திராவிடம் என்பவர்கள், சொன்னது சொன்னபடி வைத்துக்கொண்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. நூற்றாண்டு காலக் கட்சி எனச் சொல்லிக்கொண்டு, இன்னும் சாதியை ஒழிக்க முடியவில்லை; சமத்துவத்தைக் கொண்டுவர முடியவில்லை. சமூகநீதி இல்லை. பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்பது இல்லை; வசனம்தானே தவிர, களத்தில் அது சுத்தமாக இல்லை. பெரியார்- சமூக நீதி பேசாத ஆந்திரா உட்பட்ட ஆறு மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக இருந்து போயிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரியார் கொள்கையைப் பேசுகிற இந்த மண்ணில், பெரியார் கொள்கையை இவர்கள் இருட்டடிப்பு செய்துகொண்டு இருக்கிறார்களா? சனாதனத்தின் கருப்பு உருவமா இது எனும் விவாதத்தை ஏற்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி,' என்கிறார், ஏகலைவன்.

நம்முடைய மற்ற கேள்விகளுக்கும் நச்சென பதில் அளித்தார்.

‘இந்த கருத்தியல் போரால் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிராக இருக்கிறார்கள். ஒருவிதத்தில் அது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், எல்லாருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்னு தத்துவப் பாடல் இருக்கிறது. ஒரு கருத்தியலை முன்வைக்கும்போது நல்லது கெட்டது என விவாதிக்கும்போது சிலருக்கு ஏற்பும் சிலருக்கு மறுப்புமாக இருக்கலாம். மறுப்பவர்கள் நம்மை எதிரியாகப் பார்ப்பது நடக்கிறது. காலப்போக்கில் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என கடந்துபோகிறேன். அவர்களை நான் எதிராகப் பார்ப்பதில்லை.  எல்லாரும் இங்கு சகோதரர்கள்தான்; கருத்து முரண்பாடுகள் இருக்கட்டும். நூறு பூக்கள் மலரட்டும்னு மாவோ சொன்னதைப்போல, கருத்துப்போர் சரிதான் என எல்லாரும் ஏற்றுக்கொள்கிறோம். அதைச் சொல்லும்போது கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

அதைப் புரிந்துகொண்டு நான் நடக்கிறேன். மறுபக்கம், நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றும் நெகிழ்ச்சியாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே களத்தில் ஊடகத் துறையிலும் அரசியல் துறையிலும் நண்பர்களாக இருந்தவர்கள், நம் கருத்தை அழுத்தமாகப் பேசும்போது வருத்தப்படுகிறார்கள்.

என் தரப்பில் வார்த்தைகள், கருத்துகள் ஏதும் தவறாக இருந்தால், அடுத்த பதிவுகளில் வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அதைச் சரிசெய்து விளக்கம் அளித்திருக்கிறேன். உண்மை இதுதான் என சொல்லியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, சரியான விவாதத்தை உருவாக்கவேண்டும்; நேர்மையான கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்; இளைய தலைமுறைக்கு சரியான அரசியல் வழியைத் திறக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். சரியான கருத்தியல் விவாதம், தெளிவான அரசியல் களம்-இதை இளையோருக்குக் கடத்திசெல்லவே பார்க்கிறேன். ஆனாலும் சில சமயங்கள் சிக்கல்கள் வருவது உண்டு.

ஒரு முறை, கட்டபொம்மன் தொடர்பாக, பிரிட்டன் ஆவணங்களை வைத்து, பேசியதைப் பதிவுசெய்தோம். எல்லாம் பிரிட்டன் ஆவணங்களின் அடிப்படையிலான வாதங்கள்தான்.

ஆனாலும் புரிந்துகொள்ளாமல் அவரின் உறவினர்கள் வருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அதையெல்லாம் விளக்கினோம்.

சமூக ஆர்வலர் ஒருவர் பாதிக்கப்பட்டதைப் பற்றி செய்தியை வெளியிட்டோம். அதையொட்டி தணிக்கைத் துறை அதிகாரி ஒருவர், நான் அவரை மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். ஆனால் அவரிடம் பேசவே இல்லை. சான்று எதுவும் இல்லை. காவல்துறை அதில் சரியாக நடந்துகொண்டு, வழக்கைப் பதியாமல் விட்டுவிட்டது.' என்று தன் யூடியூப் அனுபவங்கள் பகிர்கிறார் ஏகலைவன்.

ஊடக சாணக்யர்!

ரங்கராஜ் பாண்டே

சாணக்யா என்ற யூடியூப் செய்திசானலை நடத்திவரும் ரங்கராஜ் பாண்டே தமிழ் சமூக ஊடகப் பரப்பில் முக்கியமான அரசியல் கருத்தாளர். செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து, அவற்றில் இருந்து விலகிய பின்னர் முழுக்க முழுக்க 2019 - இல் சாணக்யா செய்திச்சானலைத் தொடங்கி நடத்திவருகிறார். தற்சமயம் 1.34 மில்லியன் சந்தாதாரர்கள் அவரது சானலுக்கு இருக்கிறார்கள். முழுக்க முழுக்க எதிர்த் தரப்பையே ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்வுக்கு தமிழக முதல்வரே போய் அஞ்சலி செய்யும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொலைக்காட்சித் துறை ஊடக வளர்ச்சி அபாரமானது. அதில் பல ஊடகத்தவர்கள் தனி ஆளுமைகளாக வளர்ச்சி பெற்றனர். இவர்களில் முதன்மையானவர் ரங்கராஜ் பாண்டே. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். பிசிறின்றி அழகான தமிழில் அவர் பேசியதும் அவர் பணிபுரிந்த சானலை நிர்வகித்ததும் சில ஆண்டுகளிலேயே அவருக்குப் பெரும் புகழைச் சேர்த்தன.

இடதுசாரி சிந்தனையாளர்களும் திராவிடச் சிந்தனையாளர்களுமே தமிழக ஊடகப்பரப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயம், இவற்றுக்கு மாறாக வெளிப்படையாக பாஜக, வலதுசாரி ஆதரவு என்ற நிலைப்பாட்டை முன் வைத்து அதை வெற்றிகரமாக மக்கள் முன் நடத்திக் காட்டி வருகிறார். ‘வடநாட்டில் ரிபப்ளிக் என்ற சானலை நடத்திவருகிறார் அர்ணாப் கோஸ்வாமி. அவருக்கு இணையாக தமிழ்நாட்டில் முன் வைக்கப்பட்டவர் பாண்டேதான். அவர் ஏன் தொலைக்காட்சி சானல் ஆரம்பிக்காமல் யூடியூப் சானல் தொடங்கினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் இந்த சானலையே தொலைக்காட்சி சானலாக மாற்றும் வாய்ப்பிருக்கிறது' என்கிறார் ஓர் ஊடக விமர்சகர்.

2020 - இல் சாணக்கியா விருதுவிழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ தந்தி டிவியில் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில், மக்கள் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் ரசிகன். தவறாமல் பார்ப்பேன். என்கிட்டயும் பேட்டிக்குக்  கேட்டாங்க. நான் மாட்டவே மாட்டேன்னு

சொல்லிட்டேன். அவர் கிட்ட மாட்டிக்க நான் விரும்பல' என்று புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்துதேசியவாதக் குரல்

மாரிதாஸ் ஆன்சர்ஸ்

மாரிதாஸ்

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பாக எடிட்டிங் ஸ்டூடியோ ஒன்றில் இளைஞர் ஒருவருடன் பணியில் இருந்தபோது,'அண்ணே, இந்த சானலைப் பார்த்தீர்களா? திமுக பற்றி அக்குவேறு ஆணிவேறு ஆக அலசுகிறார்... இவர் பெயர் மாரிதாஸ்' என்று வியந்து சொன்னார். அந்த காலகட்டம் வரை மாரிதாஸ் என்ற பெயரை யாருமே கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சிகளை எதிர்த்துத்தான் ஊடகங்கள் செயல்படும் என்கிற பொதுப்புத்தியை உடைத்து முதல் வலதுசாரியாக அகில இந்திய ரீதியில் இந்து தேசியவாதிகள் செயல்படும் உத்திகளைக் கடைப்பிடித்து தமிழில் குதித்தவர் மாரிதாஸ். தன்னை அவர் ஆரம்பத்தில் இருந்த ஒரு தீவிர மோடி ஆதரவாளராகவே முன் வைத்தவர். நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்பது இவர் எழுதிய நூல்.

 ஒரு டிஜிட்டல் போர்டு வைத்துக்கொண்டு புள்ளிவிவரங்களை, பின்னணித் தகவல்களைக்கொண்டு ஆழமாகப் பேசுவது மாரிதாஸின் பாணி. அவற்றில் ஏராளமான தகவல் பிழைகள் என்று குற்றச்சாட்டுகள் குவிந்தன. நியூஸ் 18 நிறுவன ஊழியர்களை திமுக ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று இவர் வெளியிட்ட வீடியோ பெரும் புயலைக் கிளப்பியது. அது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. திமுக கட்சி சார்பிலும் இவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பறிக்கைகள் வெளியாயின.

கொரோனா சமயத்தில் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளுக்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. 2021- இல் அவர் பிபின் ராவத் விபத்து பற்றி போட்ட ட்வீட்களுக்காகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான வழக்குகளை கருத்துரிமையை முன் வைத்து நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மாரிதாஸுடன் பேசுவதற்காக அந்திமழை சார்பில் தொடர்பு கொண்டோம். ‘ஊடகங்களுடன் தற்போது பேசுவதில்லை என முடிவெடுத்துள்ளேன். பேசும் நிலை வரும்போது பேசுகிறேனே...' என்று மட்டும் பதில் தந்தார்.

பெரியார் கொடுத்த அரசியல் உணர்வு!

ஜீவா டுடே

ஜீவ சகாப்தன்

எனது ஊடகப் பயணம்  தொலைக்காட்சியில் தொடங்கியது. அகில இந்திய சானல் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என்னையும் சேர்த்து பல ஊடகத்தினரையும் ஒரு சார்பாகச் செயல்படுவதாக மாரிதாஸ் போன்றவர்கள் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த சமயத்தில், நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘லிபர்டி' என்ற யூ டியூப் சேனலை தொடங்கினார்கள். அதன் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். பிறகு அதிலிருந்து விலகி 'ஜீவா டுடே' என்ற சேனலை தொடங்கினேன்.

சமூகநீதி, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, தமிழர் உரிமை போன்ற விஷயங்களை மையப்படுத்தி இதுவரை வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன். கருத்தியல் தெளிவுடன் நடத்தப்படும் யூ டியூப் சேனலுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்றாலும், என்னுடைய சேனலுக்கு மிக குறைந்த காலத்தில் ஐந்தரை லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தார்கள்.

தமிழ்நாட்டில் எங்கு தீண்டாமை வன்கொடுமை நடந்தாலும், அதை முதலில் பதிவு செய்ய வேண்டு என்று ஜீவா டுடே நினைக்கும். நான் யாரையும் தூண்டிவிடாமல், கேலி செய்யாமல் அறிவுத்தளத்திலிருந்து பேசுவதாக சொல்வார்கள். இன்னொரு தரப்பு, நான் பேசும் அரசியலையே புரிந்து கொள்ளாமல், ‘திராவிட கைக்கூலியா?', 'கிறிஸ்துவ பாவாடையா?', 'உ.பி.யா?' என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் வரும். பெரியார் கொடுத்த அரசியல் உணர்வுதான் இந்த ஊடகத்தைத் தொடர்ந்து நடத்த வைக்கிறது. யூ டியூப் நடத்துவதால் பெரிய அளவுக்குப் பொருளாதார பலமும், பலனும் அடைந்தது கிடையாது.

வீட்டிலேயே ஸ்டுடியோ இருக்கிறது. அடுத்தகட்ட நகர்வாக ‘ஜீவா சினிமா' தொடங்கிஉள்ளேன்.

சினிமா பற்றி வித்தியாசமான கோணத்தில் பேசலாம் என்று இருக்கிறோம்.

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. பெரியார் மீதும் அவரின் இயக்கத்தின் மீதும் கல்லெறியும் போது நான் பதிலடி தருவேன். தனிநபர்கள் எனக்கு எதிரி கிடையாது. தத்துவம் தான் எதிரி.

சமூக நீதி, சாதி ஒழிப்பிற்காகத்தான் நான் ஊடகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அதுதான் ஜீவாவின் அடையாளம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com