எனக்கு இரண்டு குருநாதர்கள். இருவருமே பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். புகைப்படக் கலையில் சுபா சுந்தரம். திரைப்படத்துறை ஒளிப்பதிவில் பிசி ஸ்ரீராம். இக்கட்டுரையானது பிசி ஸ்ரீராம் அவர்களைப் பற்றியது என்பதால் அவரைப் பற்றிச் சொல்கிறேன்.
ஆரம்பத்தில் நாயகன், அக்னிநட்சத்திரம் போன்ற படங்களில் அவருடைய ஒளிப்பதிவைப் பார்த்து நான் அசந்துபோயிருந்தேன். ஆனால் பத்திரிகைப் புகைப்படத்துறையில் நான் ‘வைட் ஆங்கிள்’ ரவிஷங்கராக எனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்திருந்த நிலையில் இருந்ததால் எனக்கு ஆரம்பத்தில் திரைப்பட ஒளிப்பதிவுத் துறைக்குச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் இல்லை. ஒளிப்பதிவுத்துறையில் கே.என்.பிரசாத், டபிள்யூ ஆர் சுப்பாராவ், வி.ராமமுர்த்தி, ரஹ்மான், பி.எம்.சுந்தரம், கர்ணன், வின்செண்ட் மாஸ்டர் போன்ற ஜாம்பவான்களை பார்த்து வியந்துகொண்டிருந்த நேரத்தில்தான் பிசி சார் உள்ளே வருகிறார். ஒளியைப் பயன்படுத்தி அவர் செய்த ஜாலங்களால் நான் நிறையவே கவரப்பட்டேன். மெல்ல நாமும் திரைத்துறைக்குச் செல்லலாமே என்று தோன்ற ஆரம்பித்தது. அவரை முதல்முதலில் நான் பார்த்தது ஒரு திருமணநிகழ்ச்சியில். என்னை அறிமுகம் செய்துவைத்தபோது ஓ தெரியுமே என்றார். அவருடன் கைகுலுக்கியதை சக புகைப்படக் கலைஞர் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் நான் கண்களை மூடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு திசையை நோக்கி கைநீட்டிக்கொண்டிருப்பார். அப்படத்தின் பின்னால் எழுதினேன்: “இவ்வளவு நாள் கண்மூடித்தனமாக இருந்ததுபோதும்; அதோ பார் உனக்காகப் புதிய உலகம் காத்திருக்கிறது.” அந்தப் புகைப்படம் எனக்கு திரைத்துறைக்கு வரவேண்டும் என்று உந்துதலை ஏற்படுத்தியது.
கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளுக்காக நான் எடுத்த புகைப்படங்களை காட்சிப்படுத்தியபோது அந்த காட்சியை திறந்து வைக்க பிசி சார் வந்திருந்தார். படங்களைப் பார்த்தார். “இரண்டு படம்தான் நல்லா இருக்கு.. நான் ரவிசங்கரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..” என்று சொன்னார். மற்றவர்களின் பார்வையை விட மாறுபட்ட பார்வை அவருடையது என்று புரிந்துகொண்டேன். அடுத்த கண்காட்சி நிச்சயம் அவரைக் கவரக்கூடியதாக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். இசை, நடனம் பற்றியதாக என்னுடைய அடுத்த கண்காட்சி அமைந்தது. ஒரு நாள் கூட்டமில்லாத நேரத்தில் வந்தவர் அனைத்துப் படங்களையும் பொறுமையாகப் பார்த்து திருப்தியாகப் பாராட்டினார். அங்கேயே வைத்துக் கேட்டேன். உங்களிடம் உதவியாளராக வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ தயங்கியவாறு, “நீ ஏற்கெனவே ஒரு உயரத்தை எட்டிவிட்டாய். மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய துறையில் தொடங்குவது சரிவருமா?” என்றவர் இரண்டு நாள் கழித்து அலுவலகம் வரச்சொன்னார். அங்கும் அதையே சொன்னார். அவருடைய அக்கறை அதில் பிரதிபலித்தது. மீண்டும் இரண்டுநாள் கழித்துவரச் சொன்னார். இதற்கிடையில் என் காமிராக்களை விற்று வேறு சில ஏற்பாடுகளையும் செய்து குடும்பத்துக்கான செலவுகளுக்கு ஒரு ஏற்பாட்டை செய்துமுடித்தேன். மறுமுறை சந்தித்தபோது இந்த விவரங்களைச் சொன்னேன். அனேகமாக இந்த விஷயத்துக்காகத்தான் அவர் யோசித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு சகமனிதர்கள் மீதான அக்கறை அதிகம். இந்த விவரங்களைக் கேட்டவுடன் நாளைக்கே வந்து சேர்ந்துகொள். நீ வீட்டில் இரு நான் அழைக்கிறேன் என்றார். மறுநாள் மதியம் போன் செய்தார். கடற்கரையில் புதிய டிஜிட்டல் காமிராவுக்கான டெஸ்ட் ஷூட் நடந்தது. அதுதான் அவருடனான பணியில் எனக்கு ஆரம்பம். நிறைய விளம்பரப் படங்கள் செய்வார். “ரவி நீ மிகவும் தாமதமாக இந்த துறைக்கு வந்திருக்கிறாய். ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்” என்று மட்டும் சொன்னார்.
சில மாதங்களில் அவருடைய உதவியாளராக இருந்த திரு, லேசா லேசா என்ற படம் பண்ணப்போனார். அவரிடம் போய் வேலை செய்துவிட்டுவா என்றார். பின்னர் ஜீவாவுடன் உள்ளம் கேட்குமே படத்தில் பணிபுரிந்துவிட்டுவந்தேன். அடுத்து பிசி சார் வானம் வசப்படும் படம் பணிபுரிய ஆரம்பித்தார். நான் அவரிடம் சேர்ந்தபோது எனக்கு முன்பு ஏழு உதவியாளர்கள் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளில் எல்லோரும் படம் பண்ணப்போய்விட்டார்கள். நானும் மகேஷ்முத்துசாமியும் இருந்தோம்.
மொத்தத்தில் பி.சி. சாருடன் வேலை பார்த்தது வானம் வசப்படும், கண்டநாள் முதல் ஆகிய இரண்டு படங்கள்தான். மற்றவை நான் அவருடைய உதவியாளர்கள் செய்த படங்களில் பணிசெய்தேன். இந்நிலையில் சுசிகணேசன் ஒரு படத்துக்காக பி.சி. சாரை அணுகினார். அப்போது சீனி கம் படத்துக்கு அவர் ஒப்புக்கொண்டிருந்தார். நான் தான் அவருடைய முதல் உதவியாளராக இருந்தேன். அதனால் எனக்குப் பதிலா ரவிஷங்கரை வைத்துப் பண்ணுங்க என்று சுசி கணேசனிடம் சொன்னார். என்னை வைத்து டெஸ்ட் ஷூட் பண்ணிப்பார்த்தார் சுசி. அவருக்குப் பிடித்திருந்தது. அதன்படிதான் எனக்கு திருட்டுப் பயலே பட வாய்ப்பு வந்தது.
அப்படிப்பண்ணு, இப்படிப்பண்ணு என்றெல்லாம் சொல்லமாட்டார். அவர்கூட இருந்தால் நமக்கு ஒரு நம்பிக்கை வளரும். ஒவ்வொரு உதவியளாரையும் அவர் கவனிப்பார். அவன் தயாராகிவிட்டான் என்பதை அவர்தான் முடிவுசெய்வார். கடைசியில் மீட்டர் பார்க்கும் வேலை கொடுப்பார். அப்போதுதான் ரெடி ஆகிட்டோம் என்ற உணர்வு வரும். ‘நீ ரெடி ஆகிட்டே.. உனக்கு படம் பணியாற்ற வாய்ப்பு வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். ரொம்ப நாளாக என்னுடன் இருக்கிறாய்.. முகத்தைப் பார்த்துப் பார்த்துப் போரடிக்குது’ என்று சொல்ல ஆரம்பிப்பார். எனக்கு மட்டுமல்ல அவரிடம் பணிபுரிந்த எல்லா உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பு அவர்தான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். அந்தப்பெரிய மனது இந்திய சரித்திரத்திலேயே யாருக்கும் கிடையாது. அவரிடமிருந்து வெளியேறிய காமிரா மேன்கள் 30-35 பேர் இருப்பார்கள். ஜீவா, கேவி ஆனந்த், ராம்ஜி, திரு, நீரவ் ஷா, கே.வி. குகன், பாலசுப்ரமணியன், மகேஷ் முத்துசாமி, சஞ்சய், த்வாரக், பௌசியா, ப்ரீத்தா, வின்செண்ட் என்று பல பேரைச் சொல்லமுடியும்.
எனக்கு முதல் படம் பண்ணிய பிறகு நடுவில் சரியான படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதனால் நான் தளர்ந்துவிடவில்லை. அவரைப் பார்த்தால் உற்சாகம் வரும் நம்பிக்கை வரும் என்பதற்காக அவரைப் பார்ப்பேன். ‘காத்திருத்தல் என்பது ஒரு நல்ல படம் கிடைக்கப்போகிறது என்பதற்கானது. இந்த நிலை எனக்கே இருந்தது’ என்பார்.
பின்னர் பிசாசு படம் கிடைத்தது. இதற்காக பாலாவிடமும் மிஷ்னிடமும் எனக்காகப் பரிந்துரைத்திருக்கிறார். தயாரிப்பாளர் பாலாவே, என்னிடம் இதைச் சொல்லி,‘நீங்களே பண்ணுங்க, பிசி சார் உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்கிறார்’ என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிசாசு படம் பார்த்துவிட்டு மிக நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லி கைகொடுத்தார்.
திடீரென பைக் எடு என்பார். எங்கேயாவது சுற்றுவோம். புத்தகக் கடைக்குச் சென்று நூல்கள் வாங்கித்தருவார். படங்கள் வாங்கித்தருவார். திரைப்படங்கள் பற்றி, இலக்கியம் பற்றிப் பேசுவார். எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் மனிதருக்கு அருகில் இருந்த உதவியாளன் என்பது எனக்குப் பெருமைதான்.
(சந்திப்பு: மதிமலர்)
மார்ச், 2015.