அண்ணாமலை படம் வந்த பிறகுதான் மக்கள் பால்காரர்களை நினைக்கிறார்கள் என்றில்லை! அதற்கு முன்பாகவே நம் மக்களின் வாழ்வில் பால்காரர்களுக்கு பிரிக்க முடியாத இடமும் உறவும் உண்டு. எனக்கும் அப்படித்தான்!
ஒருவகையில் பால்காரர்களை சிறந்த பகுத்தறிவாளர் என்பேன். பால் ஊற்றுவது என்றால் பொது வழக்கில் மரணம் என்று பொருள். ஆனால், பால் ஊற்றுவது என்றால் ஆரோக்கியமாய் வாழவைப்பது என்று மாற்றி புரிய வைப்பவர்கள் அவர்கள் தான்!
எங்கள் வீட்டு பால்காரரை நினைக்கும்போது அவர் ஒருவரல்ல, பலர் என்று புரிகிறது. ஒருவரே பல உருவங்களில் வந்ததாகவும் நினைக்கிறேன். ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஒரே குணம் தான். அது நல்ல குணமானாலும் சரி.கொஞ்சம் தண்ணீர் கலந்த குணமானாலும் சரி!
மகளும் மகனும் பிறந்தபோது ஒருவர் வீட்டிற்கு பாலூற்றிக் கொண்டிருந்தார். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இன்னொரு தாய் பால்க்காரர்கள் என்பதை அப்போது உணர்ந்தேன். ஒருவேளை பால் இல்லாமல் போனாலும் குழந்தை தவித்துவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு மற்ற வீடுகளுக்கு ஊற்றுவதை தவிர்த்து கூட எங்கள் வீட்டிற்கு ஊற்றிவிட்டுப் போவார்கள். அதுமட்டுமில்லை. குழந்தைகளுக்குத் தரும் பாலில் பல உள்விவரங்கள் உண்டு. நல்ல பசும்பாலைத்தான் தரவேண்டும். கரந்து நீண்ட நேரமான பாலோ, அசுத்தமான கேனில் பிடித்து வரும் பாலோ கெட்டுவிடும். எருமைப்பால் மந்தம் போடும். ஈரம் கொடுக்கும். இளம் பால் எனும் புதிதாக கன்று ஈன்ற பசுவின் பால் கவிச்சையைப் பெருக்கி குழந்தைக்கு குமட்டலை ஏற்படுத்தும். குழந்தை இருக்கும் வீட்டுக்கு பால் கொடுப்பவர் இவ்வளவையும் மனதில் கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் அவர் இன்னொரு தாய் போன்றவர்!
குழந்தைகள் வளர்ந்த பிறகு பால் வாங்குவதை நிறுத்திவிட்டோம். ஆனாலும் தேநீர் குடிக்கும் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே! நிரந்தர வேலையின்றி இருந்த சமயங்களில் கையில் காசிருந்தால் பிள்ளைகளை காலை நேரங்களில் அழைத்துச் சென்று பிஸ்கெட் வங்கித்தந்து தேநீர்க் குடிக்க வைப்பேன். வீட்டில் கருப்புக் காபியோ, கருப்புத் தேநீரோ போடுவார்கள். அம்மா, கையளவு அரிசியையும் வெல்லத்தையும் போட்டு கொதிக்க வைத்துத் தருவார். அது ஒரு வகையான அரிசித் தேநீர்!
நிலைமை சீரானதும் காலையில் தேநீர் குடிப்பது கட்டாயம் என்பது போல ஆகிவிட்டது. அவ்வாறு ஒரு நாள் அதிகாலையில் பால் பொட்டலம் வாங்க டவுனுக்கு போகும்போது தான் கரீமை பார்த்தேன். மிதிவண்டி கேரியரில் நீலப்பிளாஸ்டிக் கூடையில் பால் பொட்டலங்களை வைத்து கூவி விற்றபடி என்னைக் கடந்தான். அவனை நிறுத்தி வாங்கிக் கொண்ட மறு நாளிலிருந்து எங்கள் தெருவையும் சேர்த்து சுற்றினான் கரீம். காலையில் அவன் குரல்தான் என்னை எழுப்பும். மழை நாட்களில் வரமாட்டான் என்ற எண்ணத்தை பொய்யாக்குவான். குளிருக்கு போர்த்திக் கொண்டு. மழை ஒழுகாத வீட்டில் அமர்ந்து கரீமுக்காக இரங்கியபடி நான் தேநீர் குடிப்பேன். அவனிடம் பால் பொட்டலங்களை வாங்குவது ஒன்று தான் நாம் செய்யும் உதவி என்று மனம் அப்போது சொல்லிக்கொள்ளும்.
திடீரென்று எங்கள் பகுதியில் சுற்றிய வெறிநாய் ஒன்று கரீமின் அதிகாலை குரலை நிறுத்தியது. அந்த நாய் அவனை கடித்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். கரீமின் குரல் கேட்காத காலைகளில் அவன் என்ன ஆகியிருப்பான் என்ற கேள்வி என்னை நெருடும். அலுவலகம் போகும்போது ஒரு நாள் நடுப்பகலில் திடீரென என்னைக் கடந்த கரீம் புன்னகையுடன் வணக்கம் சொன்னான். அவன் மிதிவண்டியில் அதே நீல நிற பிளாஸ்டிக் பெட்டியில் தொழிற் சாலையில் வேலை பார்க்கும் ஆட்களுக்கு சாப்பாட்டுத் தூக்குகள் இருந்தன. அவனை விசாரித்தேன்.
‘‘நல்லாயிட்டேன் சார். ஆனா இப்ப பால்பாக்கெட் போடறதில்ல. வர்றேன் சார். டைமாகுது''
இப்போது ஒரே குடும்பத்து சகோதரர்களே எங்களுக்கு பால் ஊற்றிவருகிறார்கள். முதலில் அண்ணன். தற்சமயம் தம்பி. மழையோ வெய்யிலோ, மாலை ஆறு ஏழுக்குள் ‘பால்' என்று சத்தம் கேட்டுவிடும். கொரோனா காலத்திலும் அதே நேர ஒழுங்கு. இவரை பார்க்கும் போதெல்லாம், அன்பு சகோதரர்கள் படத்தில் ரங்கா ராவ் பாடும் முத்துக்கு முத்தாக பாடலே மனதில் ஓடும். இவர்கள் அவ்வளவு பாசக்காரர்கள். தாம் வசிக்கும் கிராமத்தில் ஒரே இடத்தில் மனைகளை வாங்கி நான்கு சகோதரர்களும் அடுத்தடுத்து வீடு காட்டி வாழ்கிறார்கள்.
முதலில் பால் ஊற்றிக்கொண்டிருந்த பெரியண்ணன் வீட்டுத் திறப்பு விழாவுக்கு நாங்கள் குடும்பத்தோடு போய் வந்தோம். அண்ணன் பேச்சுக்கு தம்பிகளிடம் மதிப்பு அதிகம். தற்செயலாய் ஒருநாள் ‘‘பெரியண்ணனை பஜாரில் பார்த்தேன். ஓரளவுக்கு செட்டில் ஆயிட்டார்னு நெனைக்கிறேன்..ம்
சொல்லணும்னு நெனச்சேன். ரெண்டு நாளா பால் கொஞ்சம் தண்ணியா தெரியுது'' என்றேன். பதறிப்போன அவர், ‘‘அப்படியெல்லாம் இல்ல சார். நமக்கு எப்பவுமே கொடுக்கிறது நல்ல பால் தான். சார், அண்ணன் கிட்ட பால் தண்ணின்னு சொல்லிடாதீங்க சார்'' என்றார். இயல்பாகச் சொன்னதை அவர் வேறுமாதிரியாக எடுத்துக் கொண்டாரோ என்று தோன்றியது. ‘‘இல்ல. நான் அந்த அர்த்தத்துல சொல்லல'' என்றேன். அவர் சமாதானமடைந்தவராய் போய்விட்டார். ரத்தம் தானே பாலாக மாறுகிறது! அந்த வகையில் அண்ணன் மீதிருக்கும் பாசமதிப்பு என்பது ரத்த சம்பந்தமானது என்பதை அழுத்தமாக உணர்த்திச் சென்று விட்டார். ஆமாம். பால் என்பது வெண்ணிற அன்பு தானே.
ஆகஸ்ட், 2020.