ஒரு அழகான பெண்ணும், ஒரு பாழடைந்த பங்களாவும் இருந்தால் போதும். ஆண்டுகள் பல ஓடும்படியான ஒரு சிறந்த திகில் படத்தை உருவாக்கிட முடியும் -என்றார், பாலிவுட் திகில் திரைப்படங்களில் ஜாம்பவான் துளசி ராம்சே.
இவரது குடும்பம் தயாரித்த முதல் படம் பாக்ஸ் ஆஃபிசில் பெரிதாய்ப் பணம் ஈட்டாத நிலையில், அந்தக் குடும்பத்தினரால் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ‘‘தோ கஜ் ஜமீன் கே நீச்சே''
(Do gaz Zameen Ke Neeche, 1972) திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஒரு விஞ்ஞானியின் மனைவி, தன் முன்னால் காதலனுடன் சேர்ந்து தன் கணவனின் சொத்து மற்றும் செல்வங்களை அபகரிக்க அவரைக் கொன்று ஒரு இரும்பு சவப்பெட்டியில் வைத்து ஆறு அடிக்கு கீழ் புதைத்து விடுகிறார்கள். ஆனால் நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருக்கும் அலமாரியின் சாவி கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மேல் கோட் பாக்கெட்டில் உள்ளது என்பது நினைவுக்கு வர, மீண்டும் தோண்டுகிறார்கள். கொல்லப்பட்ட விஞ்ஞானி ஒரு டிராகுலாவாக மாறி, பழிவாங்குவதே மீதிக் கதை.
இதற்கு முன்னதாக நல்ல ஆத்மா கதைகள், புனர்ஜென்மக் கதைகள் என்ற எல்லைகளைத் தாண்டி பாலிவுட்டில் மற்றும் இந்திய அளவிலும் கூட திரைப்படங்கள் உருவாக்கப்படவில்லை. இப்படங்களில் பேய் என்ற அப்பட்டமான திகிலூட்டும் உருவங்கள்/வடிவங்கள் கிடையாது. மேலும் அச்சமூட்டும் காட்சியமைப்புகளும் இல்லாது இருந்தன. ஆனால் இறந்தவர்களின் ஆத்மா தங்கள் ஆத்ம சாந்திக்காக வந்து போவது போன்ற கதைகளே உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்நிலையில் திகிலூட்டும் பேய்ப்படங்களுக்காக ராம்சே பிலிம்ஸ் நினைவுகூரப்பட ஆரம்பித்தது. இவர்கள் தயாரித்த படங்களுக்கு இணையாக இன்றளவும் கூட படங்களே இல்லை எனலாம். அன்றையக் காலகட்டத்தில் டப்பிங்குகள் பெரிதாய் செய்யப்படாத நிலையில் இந்தி மொழியிலேயே இந்தியா முழுவதும் திரையிடப்பட்டிருக்கிறது.
சிங்கிள் தியேட்டர்களில் இன்றளவும் புதுப்படங்கள் இருந்தாலும் இல்லையென்றால் காலைக் காட்சிகள் பெரும்பாலும் இப்படியான திகில் படங்களே. காரணம் திகில் படங்களில் குளியலறை, நீச்சல் குளம் போன்ற இடங்களில் அரைநிர்வானக் காட்சிகள், கற்பழிப்புக் காட்சிகள் என்று டெம்ப்லேட்கள் தவறாமல் இடம் பெறுவதுதான். நகரத்திலிருந்து விலகி இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இப்படியான திரைப்படங்களே பெரிய பொழுது போக்கு. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற சாஃப்ட் போர்னோ சந்தையில் பெரும் பணம் ஈட்டும் ஒரு புராடக்ட் இப்படியான திகில் திரைப்படங்கள் தான். அடுத்ததாக குதிரைகளில் வரும் கொள்ளையர்கள் பற்றியத் திரைப்படங்கள் இப்படங்களுக்கு மாற்றாக இருக்க முயற்சித்து தோற்றது.
திகில் படங்களை இயக்கவே சில இயக்குநர்களும் இருந்தார்கள். அவர்களைத் தாண்டி இவ்வகைப் படங்களை இயக்க யாரும் பெரிதாய் விருப்பம் காட்டவில்லை. மேலும் இப்படியான திரைப்படங்களில் நடிக்கவும் சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் அவ்வப்போது சில பெரிய கம்பெனிகள் தயாரிப்பில் பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர். குறிப்பாக ராஜ்குமார் கோலி இயக்கத்தில் உருவான ‘‘ஜானி துஷ்மன்''(1979) திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை
குவித்தது. இப்படத்தில் சுனில் தத், சஞ்ஜீவ் குமார், ஜீத்தேந்திரா, ஷத்ருஹன் சின்ஹா, வினோத் மெஹரா, சசி கபூர், ராஜா முராத், ரீனா ராய், ரேகா, நீது சிங் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
சிவப்பு வண்ண ஆடை அணிந்த மணப்பெண் கடத்தப்பட்டுக் கொல்லப்படும் ஒரு மர்ம சம்பவத்தில் துவங்குகிறது. இப்படியான கொலைகளைச் செய்வது யாராயிருக்குமென ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் எழுந்தாலும் ஒரு பழிவாங்கும் ஆத்மாவின் வேலை என்று கதை விரியும். பாலிவுட் திகில் திரைப்படங்களில் மிகச்
சிறந்த படங்களில் ஒன்றாகும்.
1981ல் ஈவில் டெட் (Evil dead) திரைப்படம் உலக அளவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் மேக்கப் மற்றும் இன்னும் சில விஷுவல் எஃபக்ட்களில் கவனம் செலுத்தப்பட்டது. 1984ல் மீண்டும் ராம்சே சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ‘‘புரானா மந்திர்'' திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாகும். 200 ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கதை. இளம்பெண்களை வசியம் செய்து கற்பழித்து கொலை செய்யும் ஒரு
சாத்தானின் தலையைத் துண்டித்து ஒரு பெட்டியில் அடைத்து அரச மாளிகையிலும் முண்டத்தை கோயிலில் ஒரு திரிசூலத்தால் காபந்து செய்து மூடியும் வைக்க அரசர் உத்தரவிடுகிறார் அப்படியே செய்யவும் படுகிறது, ஆனால் அரச குடும்பத்தில் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் தாய் செத்துப்போகும் படியாக சாபம் விடுகிறான் அந்த
சாத்தான். அப்படியே தொடர்கிறது. அரச வம்சத்தில் இப்பொழுது நவீன யுகத்தில் இருக்கும் பெண்ணும் அவளுடைய காதலனும் திருமணம் செய்து கொள்ளும் முன் 200 ஆண்டுகள் பழைய இந்த சாபத்திலிருந்து விடுபட அந்த சாத்தானை அழிப்பதே கதை.
தொடர்ந்து ஆண்டுக்கு ஐந்து திகில் திரைப்படங்களாவது வெளியாயின. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ரகம். இதில் பெரும்பான்மைத் திரைப்படங்களை இயக்கி தயாரித்தது ராம்சே ஃபிலிம் கம்பெனி மற்றும் ராம்சே குடும்பத்தினர்.
தெஹக்கான் (1986), டாக் பங்களா (1987), பயானக் மெஹல் (1988), புரானி ஹவேலி (1989), பந்த் தர்வாஜா (1990), கஃபன் (1990) ஆகியத் திரைப்படங்கள் வரிசையாக வந்து
சக்கைப்போடு போட்டன.
அதிலும் வீரானா (1988) திரைப்படம் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டது என்றே சொல்லலாம். வீட்டுக்கு வீடு, வீரானா திரைப்படத்தின் வி.எச்.எஸ் வீடியோ கேஸட்கள் வாங்கி வைக்கப்பட்டன. வீரானா திரைப்படத்தில் "நிகிதா'' என்ற முக்கியப் பார்த்திரத்தில் நடித்த ஜாஸ்மின் இந்தத் திரைப்படத்தின் மூலமாக அப்படத்தைக் கண்ட ஒவ்வொருவரின் கனவுக்கன்னியாக ஆனார்.
அத்திரைப்படத்திற்குப் பின் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதுநாள் அவரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஜாஸ்மீனை அதற்கு முன் இரண்டொரு திரைப்படங்களில் கண்டாலும் வீரானா தான் சிறப்பு.
பின்னர் இத்தாலிய திரைப்பட மேதை மரியோ பவாவின் திகில் பட பாணிகள் பாலிவுட்டில் பின்பற்றப்படத் துவங்கின. திகில் படங்களுக்கு அச்சமூட்டும் வண்ணங்களையும், விஷுவல் எஃபெக்ட்களையும் உருவாக்கி அறிமுகப்படுத்தியவர். இவர் பாணியைப் பின்பற்றி இந்திய திகில் கதைகள் சொல்லப்பட்டன.
90களின் துவக்கத்தில் பெரிய அளவில் திகில் திரைப்படங்கள் இல்லை. அப்படியே வெளியான திரைப்படங்களும் பெரிதாய் கவனிக்கப்படவில்லை. ஹவுஸ் நம்பர் 13 (1991), கூனி ராத், கூனி பஞ்சா(1991) போன்ற படங்கள் அரைத்த மாவையே அரைத்து அலுப்பூட்டின. பின் ரேவதி நடிப்பில் ராத் (1992) திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தழுவியது. அதன் பின்னர் பழைய திகில் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடி விட்டனர். புதிய நடிகர்களின் வருகையும் மீண்டும் மசாலா திரைப்படங்களின் ஆதிக்கமும் அதிகமானது.
child's play என்னும் ஆங்கிலப் படத்தின் கதையையும் காட்சிகளையும் அப்படியே வைத்து உருவாக்கப்பட்ட படம் "பாப்பி குடியா'' இத்திரைப்படம் ஓரளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் கொடுத்தப் படம். பின் பாலிவுட் திரையுலகம் ஹாலிவுட் மற்றும் உலகப்படங்களைத் தழுவி படங்களை உருவாக்கியது.
இதன் பின்னர், திகில் படங்களில் புதுமைகள் செய்யப்பட்டன. ராம் கோபால் வர்மா திரைப்படங்களை சிறப்பான பொழுதுபோக்கு அம்சமாக பதிவு செய்தார். அவர் இயக்கிய 'கோன்' (1999) திரைப்படம் ஒரு மர்ம நாவலைப் போல் திகைப்பூட்டக் கூடியதாக இருந்தது. ஊர்மிளா மதோண்ட்கர் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகிய இருவரின் நடிப்பில் ( படத்தில் மொத்தமே மூன்று பாத்திரங்கள் தான்) பெரிய வெற்றிப்படமாக இருந்தது ஆனால் இது பேய்ப்பட வரிசையில் சேராது. இதைத் தொடர்ந்து அதே மாதிரியாக ஒரு மர்மத் திரைப்படமாக ராம் கோபால் இயக்கத்தில் வெற்றி கண்டது 'ரோட்'(2002)'' படம்.
மகேஷ் பட் தயாரிப்பில் விக்ரம் பட் இயக்கத்தில் 'ராஸ்(Raaz)' (2002) ஹாலிவுட் திரைப்படம் What Lies Beneath (2000) தழுவல் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படம் நடிகர் ஷாருக் கானின் 'தேவதாஸ்' திரைப்படத்தின் வசூலையே மந்தமடையச் செய்துவிட்டது. பழைய ஃபார்முலா திகில் திரைப்படங்களிலிருந்து விலகி காட்சியாகவும் தொழில்நுட்பம் நவீன முறையில் கதை
சொல்லலிலும் கவனம் செலுத்தப்பட்டது.
பின் 2003ம் ஆண்டில் அஜய் தேவ்கன் நடிக்க "பூத்'' படத்தையும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான ஆறு திகில் குறும்படங்களின் தொகுப்பாக "டர்னா மனா ஹை'' படத்தையும் ராம் கோபால் தயாரித்து இயக்கினார். பாலிவுட் ரசிகர்களுக்கு இன்றளவும் மிகவும் பிடித்த திகில் பட வரிசையில் இப்படங்கள் நீங்கா இடம் பெறுகின்றன. மேலும் இதே ஆண்டில் மகேஷ் பட் குடும்பமும் "சாயா'' என்ற வெற்றிப்படத்தையும் தயாரித்தது. அதனைத் தொடர்ந்து நடிகை தபுவின் நடிப்பில் "ஹவா'' திரைப்படம் அச்சமூட்டி நல்ல வசூலையும் வாரிக் கொடுத்தது. ஹவா திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
பெரிய நட்சத்திரங்களுக்கும் திகில் மற்றும் ஆவிகளின் கதையை அடிப்படையாக் கொண்ட படங்களில் நடிக்க ஆசை, ஆனால் நல்ல கதைகளுக்காக காத்திருந்தார்கள். நடிகர் இயக்குநர் அமோல் பாலேகர் (கோல் மால் என்ற தில்லு முல்லு படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் நடிகர்) பஹேலி (2005) என்ற படத்தை ஷாருக் கான் நடிப்பில் இயக்கினார். இத்திரைப்படத்தில் அமிதாப்பச்சன் உட்பல சில முக்கிய நடிகர்களும் நடித்தனர்.
ராஜஸ்தானின் நாட்டுப்புறக்கதையாக பொம்மலாட்டக் கலைஞர்கள் சொல்லத் துவங்கும் கதை. பஹேலி (விடுகதை) என்ற பொருளில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் விஜய்தன் தேதாவின் சிறுகதையையும் மையமாகக் கொண்டது. இயக்குனர் மணி கவுல் இயக்கிய துவிதா (1973) படத்தின் கதையும் மேற்கண்ட கதையையே மையமாக் கொண்டது.
மேலும் கிரிஷ் கர்நாட் இயக்கிய ''நாக&மண்டலா'' நாடகமும் இதே மாதிரியான கதையைக் கொண்டதாக இருந்த காரணத்தால் இயக்குநர் மீது கதைத் திருட்டு என பேசப்பட்டது ஆனால் நாக&மண்டலா நாடகம் ஏ.கே ராமானுஜம் எழுதிய The serpent lover கதையிலிருந்து உருவாக்கப் பட்டதெனவும் ராஜஸ்தானிய கதை வேறு என்றும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் பூத்நாத் (2008) படத்தில் நடிகர் ஷாருக் கான் நடித்தார். இதில் ஒரு பள்ளிச்சிறுவனின் தோழனாக பின்னர் அவன் பெற்றோருக்கு உதவும் நல்ல ஆத்மாவாக நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். திரைப்படம் பெறும் வெற்றியைப் பெற்றது. பூத்நாத் வெற்றியைத் தொடர்ந்து பூத்நாத் ரிடர்ன்ஸ்(2014) என்ற திரைப்படமும் உருவாக்கப்பட்டது. இதிலும் அமிதாப் பச்சன் உதவும் ஆவியாக நடித்தார். இப்படமும் மும்மடங்கு இலாபத்தை ஈட்டிக்
கொடுத்தது.
திகில் படங்களுக்கான கதைகளில் மிகப் புதுமையான காட்சிகள் மற்றும் கதைகளுக்கான அவசியம் உண்டான போது ராம் கோபால் தான் ஏற்கனவே இயக்கிய திகில் படங்களில் பெயர்களில் அதன்
நீட்சியாக சில முயற்சிகளை செய்து பார்த்தார். "வாஸ்த்துசாஸ்த்ர'' திரைப்படத்தைத் தொடர்ந்து சில படங்களை தயாரித்தார். பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டவில்லை.
பின் "டர்னா ஜரூரி ஹை'' திரைப்படத்தை அமிதாப் பச்சன், சுனில் ஷெட்டி போன்ற முன்னணி நாயகப் பட்டாளத்தை வைத்து இயக்கினார். படம் பெரும் வெற்றி ஆனால் அதன் பின்னர் அவருடைய தயாரிப்பிலிருந்து வெளிவந்த படங்கள்
சோபிக்கவில்லை.
"பூங்க்''(2008) படத்தை ராம் கோபால் இயக்கினார். படம் மாபெரும் வெற்றி. இன்னொரு பக்கம் பாலிவுட்டின் சில சிறிய பட நிறுவனங்கள் திகில் படங்களை தயாரித்துப் பார்த்தன. கொஞ்சம் பணமும் ஈட்டியது. படத்தில் பெரிய அளவுக்கு திகில் காட்சிகள் இல்லாத நிலையில் மக்கள் இன்னும் சிறப்பான படங்களை எதிர்பார்த்தார்கள்.
13 B (2009)ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் தெலுங்கிலும் கூட இதே பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் புதிய இயக்குநர்கள் திகில் படங்களின் நவீன வடிவங்களை உருவாக்கி வெளியிட்டார்கள். 2010ம் ஆண்டில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆனாலும் பெரிய வெற்றி என்று இல்லை. ஏற்கெனவே வந்த திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகம் என்பது போல் செய்து பார்த்தார்கள் ஆனாலும் பலனில்லை.
Paranormal Activity (2007) திரைப்படத்தை தழுவி ராகினி எம்.எம்.எஸ் (2011) சக்கைப் போடு போட்டது. பின் ஹாலிவுட், கொரியன், ஜப்பானியத் திகில் படங்களின் ரிமேக்குகள் செய்து பார்க்கப் பட்டன. ராகினி எம்.எம்.எஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.
மகேஷ்பட்டின் குடும்பம் ஆண்டுக்கொரு திகில் படத்தை தயாரித்து வெளியிடுவதை ஒரு பாலிசியாகக் இன்னமும் கடைப்பிடித்து வருகிறது. காரணம் ராம்சே குடும்பத்தினர் இடையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து அது தோல்வியை தழுவியதும் தாங்கள் டிரெண்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டு விலகி விட்டார்கள்.
ஜாம்பி வகைப் படங்கள் இந்திய திகில் சினிமா வரலாற்றில் பெரிதாய் இல்லை. நடிகர் ஷைஃப் அலிகான் நடிக்க ராஜ் &டிகே இயக்குனர்கள் "கோ கோவா கான் (2013) படத்தை உருவாக்கினார்கள், இந்தப் படம் சராசரி கலெக்ஷனை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 2014 ஆண்டில் நிறையத் திகில் படங்கள் வந்தாலும்
சொல்லும்படியாக எந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெறவில்லை ஆனால் முதலுக்கு மோசமில்லை என்றபடி இருந்ததும். பின் திகில் படங்களை விட்டு பாலிவுட் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்த நிலையில் ''ஃபரி'' (2018) திரைப்படம் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் பெரும் வெற்றியைக் கொடுத்தது. புதிய பாணியில் கதை சொல்லப் பட்டிருந்தது மட்டுமல்லாமல் முன்னணி நடிகையின் நடிப்பில் வந்தது மக்களுக்குப் பிடித்துப் போனது.
'ஸ்திரி' (2018) படம் ஒரு கிராமத்தில் நடக்கும் மிக எளிமையான கதை. இப்படத்தின் எளிமையும் நம்பகத்தன்மையும் மிகச் சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்தது. எல்லாவற்றையும் விட இப்படத்தின் இறுதி காட்சியில் ஆண்களை தேடித்தேடி கொலை செய்யும் ஒரு பெண் ஆத்மாவுக்கு அந்த ஊரே சிலை வைத்து கும்பிட்டு பெண்ணியத்துக்கு பெருமை
சேர்க்கும் ஒரு சமூக நற்கருத்து முடிவை
கொடுத்தது நல்ல விமர்சனங்களை மட்டுமல்ல நல்ல வசூலையும் வாரிக் கொடுத்தது.
இறுதியாக வந்த ‘‘தும்பாட்'' (2018) திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மும்மடங்கு வசூலைப் பெற்றது. இந்திய
சிற்றரசுகள் அழிக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் புதையலைக் காத்து வரும் ஹஸ்தர் என்ற பூதத்தின் கோவணத்திலிருந்து தங்க நாணயங்களை பிடுங்கிக் கொண்டு வந்து வசதியாக வாழும் ஒருவன், தன் பேராசையின் விளைவை இறுதியாகக் காண்பதே கதைச்சுருக்கம்.
இப்பொழுது பாலிவுட் புதிய கதைக்களங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.
பிப்ரவரி, 2019.