பாலிவுட் மாஃபியா!

பாலிவுட் மாஃபியா!
Published on

‘எனக்கு ரெண்டு வகையான பெண்களை பிடிக்காது, ஒண்ணு, எங்கிட்ட வர்றதுக்கு நேரம் எடுத்துகிறவங்க, இன்னொண்ணு சீக்கிரமா எங்கிட்ட வந்திடுறவங்க' என்று ஒரு ‘டான்' அவனை மயக்கி போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணிடம் சொல்லும் வசனம். பதினோரு நாடுகள் தேடும் ‘டான்' பாத்திரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் மிரட்டியிருப்பார். இன்றைக்கும் இளம் நடிகர்கள் ஏற்க நினைக்கும் கனவுக் கதாபாத்திரங்களில் ஒன்று.

திரைக்கதை, வசனம் எழுதி வந்த பிரல திரை ஜோடி சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர் (சலீம்-ஜாவேத்) அவர்கள் எழுத்தில் 1978இல் வெளியான திரைப்படம் தான் ‘டான்‘. ஆனால் இத்திரைப்படம் இந்தியாவின் எந்த தாதாவின் அல்லது கொள்ளைக் கூட்டத் தலைவனின் வாழ்க்கையை அல்லது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் இந்திய திரைவரலாற்றில் கோல்டன் ஜூப்ளி கொண்டாடிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கதைகளை பலப்பல கோணங்களில் எடுத்து சலித்துக் கொண்டிருந்த பாலிவுட்டில் ‘ஷோலே‘(1976) போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் கொள்ளையர்கள் என்றால் வடநாட்டின் சம்பல் பகுதி கொள்ளையர்களே. குதிரைகளில் ஏறி வந்து பலப்பல சாகஸங்களைச் செய்து போயிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் ரவுடிகளின் ராஜ்யம் என்று வைத்துக் கொண்டு பிரபல ரவுடிகள் செய்த சம்பவங்களின் அடிப்படையில் பல திரைப்படங்கள் உருவாகி வெற்றி கண்டதையும் அறிவோம். ஆனால் தாதாக்கள், மாஃபியாக்கள் என புதுப்பெயர்களுடன் நகரத்தையும் அரசியலையும் இன்னும் பலதுறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்கள், வைத்திருப்பவர்கள் குறித்த கதைகளை மிக நேர்த்தியாகவும் அப்பட்டமாகவும் எடுக்கும் துணிச்சலும் தொழில்நுட்பங்களும் 1980களுக்குப் பின்னரே முழுமையாக சாத்தியப்பட்டிருக்கின்றன என்பதை திரைப்பட பட்டியல்களின் மூலம் அறிய முடிகிறது.

1983இல் விஜய் டெண்டுல்கர் எழுத்தில் கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் வெளியான ‘அர்த சத்யா‘ திரைப்படம் ஒரு சிறுகதையை மையமாகக் கொண்டது.  நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் தன் தலைமைகளுடன் போராடும் பெரும் போராட்டமே மையக் கதையாக இருப்பினும் அதில் ‘ராமா ஷெட்டி‘ என்ற பாத்திரம் நிஜ நிழலுலக மாஃபியாவான வரதராஜ முதலியார் அவர்களது வாழ்வின் சில நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருந்தது. தேசிய விருது பெற்ற இத்திரைப்படத்தின் அப்பட்டமான உருவாக்கமும் போலீஸ் அதிகாரியாக ஓம் பூரி மற்றும் ராமா ஷெட்டியாக சதாஷிவ் அம்ராபூர்கர் ஆகியோரின் நடிப்பு என்றென்றைக்கும் மெச்சக்கூடியதே.

இந்திய நகரங்களில் மும்பை மிகவும் முக்கியமானது. உலகின் அனைத்து நாட்டு நாகரிகமும் மிக வேகமாக இறக்குமதியாவது மும்பையில் தான். 1950 முதல் 1980 வரைக்கும் மும்பையில் தனிநபர்களாக, குழுக்களாக என்று தாதாக்களும், மாஃபியாக்களும் உருவாகி வந்திருக்கின்றனர். மும்பையை மட்டுமல்ல இந்தியா முழுவதையும் பிரித்துக் கொண்டு குற்றங்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செய்தும் வந்திருக்கின்றனர். மாஃபியாக்கள் குறித்து பலப்பல செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தாலும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் தைரியம் யாருக்கும் இல்லாமல் இருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் மாஃபியாக்கள் திரையுலகில் முதலீடு செய்யத் துவங்கியதும் அவர்கள் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் தங்களின் துப்பாக்கி நுனியில் ஆட வைக்கத் தொடங்கியதும் தங்களைப் பற்றிய கதைகளை திரைப்படங்களில் காண விருப்பம் தெரிவித்ததோடு அல்லாமல் தயாரிப்புச் செலவுக்கான பணமும் கொடுத்துள்ளனர்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘சத்யா' (1998) திரைப்படம், மும்பையில் மிகப் பிரபலமான மாஃபியாக்கள் மற்றும் அவர்களின் அடிப்பொடிகள், தங்களை குற்ற உலகின் ராஜாக்களாக அறிவித்துக் கொள்ள யாரையெல்லாம் கொல்லவும் தன் பக்கத்தில் யாரையெல்லாம் காவு கொடுக்கவும் வேண்டியதாக இருக்கிறதென்று மிக அப்பட்டமாக செலுலாயிடில் பதிவு செய்திருந்தது. இந்திய சினிமாவில் மிக முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத திரைப்படமாக ‘சத்யா' திரைப்படம் இன்றளவும் கொண்டாடப் படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா மாஃபியாக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத் தொடர்ந்து இயக்கவும் தயாரிக்கவும் செய்தார். இதற்கு மாஃபியாக்கள் ஆதரவாக இருந்ததும் தயாரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொண்டதும் திரையுலகைத் தாண்டியும் கசிந்து ஊறிப் போன கதை.

பத்திரிகையாளராக இருந்து பின் மாஃபியா உலகினர் குறித்து அதிகம் எழுதிக் குவித்த ஹுஸைன் ஜைதி, மும்பையில் 1992இல் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருந்த மாஃபியாக்கள் பற்றிய விசா ரணைக் குறிப்புகளை ‘பிளாக் ஃபிரைடே'என்று தொகுப்பாக்க, அத்தொகுப்பின் அடிப்படையில் அதே பெயரில் 2004இல் திரைப்படமாக உருவானது. இத்திரைப்படத்தை ‘சத்யா' படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் இயக்கினார். ஹுஸைன் ஜைதி எழுதிய மாஃபியா ராணிகள் மற்றும் இன்னும் மும்பையின் பலப்பல பிரபல மாஃபியாக்கள் குறித்த தகவல்கள் கொண்ட புத்தகங்கள் எல்லாம் ஆவணங்களாக பயன்படுகின்றன. மேலும் இந்த நூல்களின் அடிப்படையில் பல திரைப்படங்களும் உருவாகி உள்ளன. ஹுஸைன் ஜைதியைப் போலவே மாஃபியாக்களின் ராஜ்யங்கள் குறித்து இன்னும் பலரும் பலப்பல கோணங்களில் அவரவருக்கு கிடைத்த தகவல்களின்படி எழுதியுள்ளனர்.

மும்பை நகரம் மேற்கத்திய, மத்திய மற்றும் துறைமுக என மூன்று ரயில்பாதை பிரிவுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் துறைமுகப் பகுதிதான் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வியாபாரிகளின் கோட்டை ஆகும்.  துறைமுகப் பகுதியில் மிரட்டல், கொள்ளை, சாராயம் என்று துவங்கி கொலைகளும் செய்து தனது ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர் கரீம் லாலா (அப்துல் கரீம் ஷேர் கான்).

1960 முதல் 1980வரை அவரைத் தாண்டிப்போக யாருமில்லை. ஆனால் அவர் கொடுக்கும் வேலைகளைத் திறம்படச் செய்து தங்களுக்கான பகுதியில் தனிராஜ்யம் செய்து வந்த ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜ முதலியார் ஆகிய இருவரையும் சரியாக பயன்படுத்திக் கொண்டதும் அவர்களுக்கு இடையில் விரோதத்தை வளரவிடாமல் இருந்ததும் கரீம் லாலாவின் திறமைதான்.

கரீம் லாலாவுக்கும் பாலிவுட்டுக்கும் நல்ல தொடர்புண்டு. அவருடைய தர்பாரில் நடக்கும் பார்ட்டிகளுக்கும் ஈத் போன்ற விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாத நட்சத்திரங்களும் பிரமுகர்களும் இல்லை எனலாம். 1973இல் சலீம் - ஜாவேத் எழுத்தில் உருவான ‘ஜஞ்ஜீர்' திரைப்படத்தில் ‘ஷேர் கான்' என்ற கதாபாத்திரம் கரீம் லாலாவை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான். அதற்குப் பிறகு பலர் கரீம் லாலாவின் குணாம்சங்கள் கொண்ட பாத்திரங்கள் எழுதினாலும் பெரிதாய் எடுபடவில்லை. சமீபமாக சஞ்ஜய் லீலா பஞ்சாலி இயக்கிய ‘கங்குபாய் காத்தியாவாடி' (2022) திரைப்படத்தில் கரீம் லாலாவாக அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை (2010) திரைப்படம் ரஜத் அரோரா எழுத்தில் உருவானது. மிலன் லுத்ரியா இயக்கி இருந்தார். இத்திரைப்படம் ஹாஜி மஸ்தான் மற்றும் தாவுத் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஹாஜி மஸ்தானாக அஜய் தேவ்கன் அவர்களின் நடிப்பும் நடந்த சம்பவங்களை காட்சிகளாக மறு உருவாக்கம் செய்த விதமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

மேற்குறிப்பிட்ட திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின், அதன் அடுத்த பாகமும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை தொபாரா (2013) என்ற பெயரில் வெளியானது. இதில் தாவுத் பாய்க்கு பாலிவுட்டில் இருந்த தொடர்பும் பிரபல நடிகை மந்தாகினி தாவுத்தின் காதலியாகி அவரோடு வாழப் போய் விட்ட கதையும் இணைக்கப் பட்டது கூடுதல் சுவராஸ்யம்.

பாலிவுட்டில் மிகுந்த பொருட்செலவில் ஒரு படம் உருவாகிறது என்றால் ‘பாய் கா பைசா' என்று பொதுமக்களே சொல்லும் அளவுக்கு மாஃபியா பாய்களின் பாலிவுட் ஆதிக்கம் உள்ளது. ஒரு நடிகர் எந்தத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது வரைக்கும் பாய்களின் விருப்பமாகவே இருந்து வருகிறது.  ஒரு தொலைபேசி அழைப்பு போதும் எல்லாம் பாய்கள் நினைத்தபடி நடந்து விடும்.

2008ஆம் ஆண்டில் நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நீடித்த இந்த தாக்குதலை நடத்தியது லஷ்கர்  ஏ- தொய்பா அமைப்பு. தாக்குதல் நடந்த இடங்களைப் பார்க்க அமைச்சகமும் ஆய்வாளர்களும் மட்டுமே போக அனுமதிக்கப்பட்டிருக்கையில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மாவுக்கும் அனுமதி கிடைத்தது. இந்த அனுமதியின் மூலம் பாலிவுட் திரைத்துறையின் பலமும் அவர்களுக்கு போலீசாருடன் மட்டுமல்ல அதைத் தாண்டிய வலிமையான அமைப்புகளுடனும் உள்ள தொடர்பு தானாகவே வெளிப்படும்.

சத்யா திரைப்படத்தில் மும்பையின் மாஃபியா உலகைப் பற்றி முழுமையாக சொல்லிவிட முடியாது என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா நம்பினார். மேலும் சில விஷயங்களைச்  சொல்ல சில கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. இதைப் பற்றிச் சொல்லும்போது அதைப் பற்றிச் சொல்லாதே என்ற தெளிவையும் தக்கவைத்துக் கொள்ள படக்குழுவும் விரும்பியிருக்கிறது. அதனால்  சத்யா படத்தின் இரண்டாம் பாகமாக அல்லது தொடர்ச்சியாக ‘கம்பெனி' (2002) திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

மும்பையில் 1992இல் நடந்த குண்டு வெடிப்பு வழக்கின் கைதான முக்கியக் குற்றவாளி ஹனீஃப் சொன்ன பல தகவல்களின் அடிப்படையில் தான் கம்பெனி திரைப்படம் உருவாகி இருக்கிறது. கம்பெனி திரைப்படத்தின் மிச்ச சொச்ச கதையின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டதுதான் அடுத்தப் படமான ஈ (2005). ஆங்கில எழுத்து ‘ஈ' தாவுத் இப்ராஹிமை குறிப்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

‘ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' (1993) என்ற திரைப்படம் சதிஷ் கவுஷிக் இயக்கத்தில் இந்திய திரைத்துறையில் (அப்போதைக்கு) மிகுந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆகும். போனி கபூர் இதன் தயாரிப்பாளர், ஆனால் இத்திரைப்படத்துக்கான நிதி சப்ளை குறித்து டீக்கடை வரைக்கும் பேசப் பட்டது. மேலும் இதன் கதை மற்றும் காட்சியமைப்புகள் அனைத்தும் மாஃபியாக்களின் கனவு போலவே சித்தரிக்கப் பட்டிருந்தது.

இப்படி ஒரு நூறு திரைப்படங்களின் பட்டியலும் அப்படங்களின் பின்னணியில் அவை உருவான புள்ளிகள் குறித்தும் திடுக்கிடும் மற்றும் வியக்கும்படியான பல சம்பவங்கள் உண்டு.

‘அப் தக் சப்பன்' (2004) திரைப்படத்தை ராம் கோபால் வர்மா தயாரிக்க ஷிமித் அமிம் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் அவர்களின் என்கவுண்டர் சாகஸங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டது.  இப்படம் மும்பை மக்கள் தாங்கள் கண்டு கடந்த பல பொதுஇட என்கவுண்டர்களை திரையில் பார்க்கும் அனுபவத்தைப் பெற்றனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது, மேலும் இணையத் தொடராகவும் வெளியானது குறிப்பிடத் தக்கது.

சாந்தாராம், மேக்ஸிம் சிட்டி மற்றும் சேக்ரட் கேம்ஸ் ஆகிய நாவல்களின் பகுதிகள் பல திரைப்படங்களில் காட்சியாக்கப் பட்டுள்ளன. இதில் விக்ரம் சந்திரா எழுதிய ‘சேக்ரட் கேம்ஸ்' நாவல் முழுமையான இணையத் தொடராக நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் அனுராக் காஷ்யப், விக்ரம் மோட்வானே மற்றும் நீரஜ் கைவான் ஆகியோர் இயக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இன்றளவும்  சிறந்த இணையத் தொடர்களின் வரிசையில் இந்திய அளவில் முன்னிலையில் உள்ளது.

மும்பையில் மாஃபியாக்களின் வாழ்க்கை குறித்த பக்கங்களைப் புரட்டினால் எவ்வளவு பக்கங்களைப் புரட்டுகிறோமோ அவ்வளவு கூடுதல் பக்கங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்று ஆய்வாளர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.

அவை, திரைப்படங்கள் போன்ற கேளிக்கை கலைகளுக்கு மிகச் சிறந்த  கருக்களை ஆயுள் முழுக்க கொடுக்கத் தவறுவதில்லை.

மும்பை நகரம் சம்பவங்களின் நகரம், ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. திரைப்படங்களில் பதிவாக இன்னும் எக்கச்சக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com