பார்க்க வேண்டிய 10 இணையத் தொடர்கள்

பார்க்க வேண்டிய 10 இணையத் தொடர்கள்
Published on

பொதுவாக ஆங்கில  இணையத் தொடர்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து நுனிசீட்டில் வைத்திருப்பவை. உலகெங்கும் ஆர்வமுடன் பார்க்கப்படுபவை.  சுவாரசியத்தின் உச்சத்தில் இருப்பவை.  இந்த பட்டியலில் பல இருப்பினும்  சுவையான பத்து தொடர்களைப் பற்றி மட்டும் இங்கு.  வயது முதிர்ந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே இவற்றில் சில பொருத்தமானவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேம் ஆப் த்ரோன்ஸ்

ஏழு தேசங்களின் கதை

தன்னிடம் இருந்த டிராகன் குட்டிகளில் ஒன்றை அந்த நகர்த் தலைவனிடம் அளித்துவிட்டு அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் களங்கமில்லாதவர்கள் என அழைக்கப்படும் அடிமைகள் ராணுவத்தைப் பெறுகிறாள் டேனரிஸ் டார்காரியன். நகர்த்தலைவன் அவளுக்கு வாலேரிய மொழி தெரியாது என நினைத்துக் கொண்டு அவளை கண்டபடி ஏசிக்கொண்டே இந்த ஒப்பந்தத்தை நிகழ்த்துகிறான். சங்கிலியால் கட்டப்பட்ட டிராகன் மேலே பறக்கிறது, அதை இழுத்துப் பிடிக்கிறான் நகர்த்தலைவன்.

ராணுவத்தைப் பெற்றதும் உரத்த குரலில் ‘களங்கமில்லாதவர்களே...' என வாலரிய மொழியில் கர்ஜிக்கும் டேனரிஸ் டார்காரியன், ‘ சாட்டைகளை கையில் வைத்திருக்கும் உங்கள் முதலாளியின் ஆட்களைக் கொல்லுங்கள். குழந்தைகளை மட்டும் விட்டுவிடுங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு அடிமையின் சங்கிலிகளையும் உடையுங்கள்' எனக் கட்டளையிடுகிறாள். வாலரிய மொழியில்.

இம்மொழியில் பேசுவதைக் கண்டு அதிர்ந்து ‘உனக்கு வாலரிய மொழி தெரியுமா?' எனக்கேட்கும் நகர்த்தலைவனிடம் “ அது என் தாய்மொழி' என்கிற டேனரிஸ் பறந்தகொண்டிருக்கும் ட்ராகனைப் பார்த்து ‘ரகாரிஸ்' என்கிறாள். மறுநொடி அது தீயைக் கக்கி நகர்த்தலைவனை எரிக்கிறது. கேம் ஆப் த்ரோன் தொடரில் முக்கிய பாத்திரங்களில் டேனரிஸும் ஒருத்தி. எஸ்ஸோஸ் என்ற கண்டத்தில் உள்ள வெஸ்டெரோஸ் என்ற நிலப்பரப்பின் தலைமைப் பதவியை வகிப்பவர்கள் அமரும் இரும்பு சிம்மாசனத்துக்கு உரிமை கோரும் வாரிசுகளில் ஒருத்தியாக அறிமுகமாகும் அவள் அதற்காக பெரிய ராணுவத்தையும் ஆட்களையும் உருவாக்கி, அதை அடைகிறாள். அவளுக்கு திருமணப்பரிசாக அளிக்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் இருக்கும். அவை தீயில் பொரித்து குஞ்சு பொரிக்கும். எந்தவிதமான தீயாலும் அழிக்கப்படாத சக்தி அவளுக்கு இருக்கிறது என்பதும் அப்போதே புலப்படும். ட்ராகன்களின் தாய் என அவளை மக்கள் அஞ்சுவர்.

இந்த நிலப்பரப்புக்கு உரிமை கோரும் ஏழு அரசுகள், ஒன்பது அரச குடும்பங்களின் மோதலே இத்தொடர்.

இப்பிரமாண்ட தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் இன்னொன்று டிரியன் லேன்னிஸ்டர். குள்ளமாக இருக்கும் இளவரசன். தொடர் முழுக்க உலவும் பாத்திரம். அவன் பெறும் வெற்றிகள், தோல்விகள், ஆட்களை சமாளிக்கும் நீண்ட உரைகள் என எதுவுமே மறக்கமுடியாதவை. அவன் பேசும் வசன வரிகளை உந்துதல் தரும் வரிகளாக பலர் பரப்புவதை சமூக ஊடகங்களில் பார்க்கமுடியும்.

இங்கே ஒன்பது அரச குடும்பங்கள் சதிகளிலும் கொலைகளிலும் போர்களிலும் ஈடுபட்டிருக்கும்போது, இந்த நிலப்பரப்புக்கு வடக்கே பனியால் ஆன பெரும் சுவர் இருக்கிறது. அதற்கு அப்பால் மனிதர்களை அழிக்கும் சக்தி ‘நைட் கிங்' உருவாகிறான். அவன் இறந்த பிணங்களை எழச்செய்து தன் படையாகப் பயன்படுத்துகிறவன். இந்த பனிச்சுவரைக் காக்கிறது ஒரு படை. அதில் சாமானிய வீரனாகச் சேர்ந்து தலைவனாக உருவாகிறான் ஜான் ஸ்னோ. இந்த முழுத்தொடரில் நல்லவனாக வருகிறவன் அவன் மட்டுமே என்று சொல்லிவிடலாம். இந்த ஜான் ஸ்னோவையும் அவன் உடன் இருப்பவர்கள் பனிபொழியும் நள்ளிரவொன்றில் சூழ்ந்து அம்புகளால் கொன்றுவிடுகிறார்கள். இறந்துபோகும் ஜான் ஸ்னோவை சூனியக்காரி ஒருத்தி உயிர்ப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கும்.

இந்த அரச குடும்பங்களின் ஒன்றான ஸ்டார்க் குடும்ப வாரிசுகளில் இளையவள் ஆர்யா ஸ்டார்க். அப்பாவி சிறு குழந்தையாக அறிமுகமாகும் அப்பெண், பல்வேறு துயரங்கள், பயணங்கள் பயிற்சிகளுக்குப் பிறகு மிகச் சிறந்த வீராங்கனையாகப் பரிணமிக்கிறாள். இத்தொடரின் இறுதியில் முக்கியப் பங்கையும் அவளே வகிக்கிறாள்.

பார்த்தாலே குலை நடுங்க வைக்கும் நைட் கிங்கின் மாபெரும் ‘இறந்தவர்கள்' படையும் மனித குலத்தை அழிக்க பனிச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே வருகிறது. தாற்காலிகமாக தங்கள் சண்டைகளை மறந்து இந்த ஒன்பது குடும்பத்தாரும் பெரும் படையுடன் ‘இறந்தவர்களின் படையை' எதிர்கொள்கிறார்கள். இரண்டு மணி நேரத்துக்கு நடக்கும் அப்போர் மிக அற்புதமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பனிபொழியும் இரவில் நடக்கும் போர்க்காட்சிகள், அதில் செய்யப்படும் உயிர்த்தியாகங்கள், மாபெரும் சாகசங்கள் என அள்ள அள்ளத் திகட்டாமல் இருக்கின்றன.

இத்தொடரின் முக்கிய அம்சம் அதன் போர்க்காட்சிகள். அப்புறம் அதில் வரும் அரச குடும்பத்தினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள். பார்த்தாலே சிலருக்கு வாந்திகூட வரலாம். ஒரு சில காட்சிகள் அவற்றின் கொடூரத்துக்காக பெருமளவு அமெரிக்காவில் எதிர்ப்பைப் பெற்றவை. இத்தொடர் மனமுதிர்ச்சி அடைந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே என்பதை இங்கே அழுத்திச் சொல்லவேண்டும்.

பெரும் புகழ் பெற்ற இத்தொடர் இப்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இதன் நடிகர்களும் பெரும் புகழ் அடைந்தனர். இதில் நடித்த முக்கிய ஐந்து நடிகர்களுக்கு இறுதி சீசனில் ஒரு எபிசோடுக்கு பத்துலட்சம் டாலர் ஊதியமாக வழங்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்

நண்பர்கள் பொய் சொல்வதில்லை

வினோதமான விஷயங்கள் எனப் பொருட்படும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர் நெட்ப்ளிக்ஸில் உள்ளது. இது ஓர் அமெரிக்கத் தொடர். அறிவியல் கற்பனைக் கதை அதே சமயம் திகில் வகையறா. 1980களில் அமெரிக்காவில் உள்ள ஹாக்கின்ஸ் என்ற சிறுநகரில்(கற்பனைதான்) நடப்பதாக கதை எழுதப்பட்டுள்ளது. இந்த ஊரில் கண்ணாடி பிம்பம்போல் இன்னொரு உலகம் தலைகீழாக உள்ளது.  அந்த ஊருக்குப் பக்கத்தில் ஒரு பரிசோதனைக் கூடம் உள்ளது. இங்கிருந்துதான் அந்த மாற்று பரிணாம வெளிக்குச் செல்லும் வழி திறந்துகொள்கிறது.

இங்கிருந்து வரும் கொடூரமான உயிரி, வில் என்ற சிறுவனை கடத்திச் செல்கிறது. காணாமல் போனவனை அவனது குட்டி நண்பர்கள் ஊர்முழுக்கத் தேடுகிறார்கள். இந்த தேடலில் பரிசோதனைக் கூடத்தில் இருந்து தப்பி வந்த, மனோ சக்தி கொண்ட சிறுமி லெவன் இணைகிறாள். பெரும்பாலும் வளரிளம் பருவ சிறுவர்களே துப்பறிதலில் ஈடுபட்டு சாகசங்கள் செய்வதாக இந்த தொடர் எழுதப்பட்டுள்ளது. இவர்களுக்குத் துணையாக அந்த ஊரின் காவலதிகாரி ஹாப்பர் என்பவர் உள்ளார். அவர் பாத்திரம் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இந்த கதையில் சோவியத் ரஷ்யர்களும் இடையில் வருகிறார்கள். அவர்களும் ஹாக்கின்ஸ் நகரில் ரகசியமாக மாற்று உலகுக்கு வழியைத் திறக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சீசனின் இறுதியில் ஹாப்பர் பெரும் வெடிவிபத்தில் இறந்துவிடுவதாகக் காட்டப்படும். மறு சீசனில் அவர் ரஷ்யாவில் சிறையொன்றில் அடைக்கப்பட்டிருப்பார். அவரை மீட்டுவருவார்கள். இடையில் மாற்று உலகில் இருந்து வெக்னா என்றொரு தீய உயிரி, ஹாக்கின்ஸில் உள்ளவர்களைக் கொல்ல ஆரம்பிக்கும். வெக்னாவுக்கு ஹாக்கின்ஸிலேயே ஒரு கையாள் இருப்பான். கடைசியில் வெக்னாவை இப்போது இளைஞர்களாகிவிட்ட சிறுவர்கள் இலெவென் உதவியுடன் அழிப்பதுடன் நான்காவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஐந்தாவது இறுதி சீசன் தயாரிப்பில் உள்ளது.

இந்த தொடரை எழுதி உருவாக்கி இருப்பவர்கள் டஃப்பர் சகோதரர்கள். மனோஜ் நைட் ஷ்யாமளனால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து தொழில் கற்றவர்கள். சிறுவர்களை முன்னிலைப்படுத்தி இவர்கள் எழுதிய இந்த திரைக்கதை பலரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் நெட்ப்ளிஸால் ஆதரிக்கப்பட்டது. இந்த தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இக்கதையை அடிப்படையாக வைத்து ஏராளமான காமிக்ஸ்கள், கதைப் புத்தகங்களும் எழுதப்பட்டு வெளியாகி உள்ளன. இசை, அருமையான திரைக்கதை, நல்ல தயாரிப்பு, அருமையான நடிப்பு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட இந்த தொடர் எண்பதுகளின் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது. நான்காவது சீசனில் மாற்று உலகுக்குள் நுழைந்து எட்டி முன்சன் என்கிற இளைஞன் மெட்டாலிகா பேண்டின் மாஸ்டர் ஆப் பப்பெட்ஸ் பாட்டை கிடாரில் இசைப்பான் பாருங்கள்... உடல் சிலிர்க்கும்! இந்த தொடரின் அடிநாதமாக இருப்பது நட்பு. அதுவும் மானுடத்தின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று என்பதால் இத்தொடரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனலாம். ‘ப்ரெண்ட்ஸ் டோண்ட் லை' என்று இலெவன் சொல்லும் காட்சி இளம் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மில்லி பாபி ப்ரவுன், இந்த தொடரின் முக்கிய நாயகி. இலெவன் என்ற பாத்திரம் ஏற்றவர். 12 வயதில் இதில் நடிக்க ஆரம்பித்து இன்று தன் 19 ஆவது வயதில் உலக சூப்பர் ஸ்டார் நாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். வெறும் நடிகை மட்டும் அல்ல. ப்ளோரன்ஸ் என்கிற அழகுசாதன நிறுவனம், எனோலா ஹோம்ஸ் என்கிற திரைப்பட வரிசை தயாரிப்பாளர், இந்த ஆண்டு வெளியாகி இருக்கிற 19 ஸ்டெப்ஸ் என்கிற நாவலின் ஆசிரியர். 

பீக்கி ப்ளைண்டர்ஸ்

கிரைம் உலகம்

முதலாம் உலகப்போர் முடிந்து பர்மிங்காம் திரும்பி இருக்கும் முன்னாள் ராணுவவீரர்கள் குடும்பத்தின் கிரிமினல் குழுவின் பெயர் பீக்கி ப்ளைண்டர்ஸ். கிட்டத்தட்ட காட்பாதர் படத்தில் வரும் குடும்பம் மாதிரியே. பிரிட்டனில் பர்மிங்காம் நகரத்தில் இயங்கும் குடும்பம் இது. அச்சமயம் லிபியாவுக்கு அனுப்புவதற்காக பிரிட்டன் வைத்திருந்த ஆயுதங்கள் காணாமல் போகின்றன. அவற்றைக் கொள்ளை அடித்தது யாரென்று கண்டு பிடிக்க பர்மிங்காமுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர் செஸ்டர் கேம்பல். இந்த கொள்ளையைச் செய்தவர்களைப் பிடிக்குமாறு கட்டளையிடுகிறார் அப்போது அமைச்சராக இருக்கும் வின்ஸ்டன் சர்ச்சில். செஸ்டர் கேம்பல் பர்மிங்காமை கிடுகிடுக்க வைக்கிறார். அதுவரை சூதாட்டங்கள், குதிரைப் பந்தயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பீக்கி ப்ளைண்டர்ஸின் முக்கிய உறுப்பினரான டாமி ஷெல்பியின் ஆட்கள்தான் ஆயுதங்களை எதேச்சையாக கொள்ளையடித்திருப்பார்கள். அதிலிருந்து அந்த குடும்பத்தின் வளர்ச்சி, அவர்கள் எதிர்கொள்ளும் புதுப்புது எதிரிகள் என 1914 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கான காலத்தில் நடக்கும் கதையாக பட்டையைக் கிளப்பி இருக்கிறார் இதன் இயக்குநர் ஸ்டீவன் நைட். பிரிட்டனில் பிபிசியில் வெளியான இத்தொடர் நெட்ப்ளிக்சில் காணக்கிடைக்கிறது. இடதுசாரிகள், ஐரிஷ் குடியரசு ராணுவம் போன்ற அக்காலத்து குறியீடுகளுடன் அசத்தலான கிரைம் டிராமாவாக வளர்ந்து செல்லும் தொடர் இது. 2013&இல் தொடங்கி ஆறு சீசன்களாக ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்தது. பீக்கி கேங் உறுப்பினர்களின் தலைமுடி வெட்டிக்கொள்ளும் பாணி அதாவது பக்கவாட்டிலும் பின்னாலும் சுத்தமாக மழித்துவிடுதல், தலையில் போடும் தொப்பி ஆகியவை மிகப்பிரபலம். அத்துடன் இதில் வரும் பாத்திரப்பெயர்களான ஆர்தர், ஆடா ஆகியவைதான் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர்களாக 2018 - இல் பிரிட்டனில் இருந்தன.

இந்த தொடரின் முக்கிய பாத்திரம் டாமி ஷெல்பி. ஐரிஷ் நடிகரான சிலியன் மர்பி நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த தொடர் இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று தனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று பேட்டிகளில் கூறுகிறார். பீக்கி பிளைண்டர்ஸ் உறுப்பினர்கள் போட்டிருக்கும் தொப்பியும் விசேஷமானது.  அதனுள்ளே பிளேடுகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். கேங்க்ஸ்டர் வகையறாவில் நம்பர் ஒன் ஆக இருப்பவர்கள் பீக்கி பிளைண்டர்ஸ் தான்!

தி க்ரௌன்

ராணியின் கதை

சமீபத்தில் இறந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கையைச் சொல்லும் தொடர் தி க்ரௌன். மணிமுடி. 1947 - இல் அவர் பிலிப்ஸை மணம் செய்துகொள்வதில் தொடங்குகிறது இதன் முதல் எபிசோட். அவரது திருமணத்துக்கு வருகிறார்கள் பல விஐபிகள். நாம் தானே கடைசி என உறுதி செய்துகொண்டு உள்ளே வருகிறார் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். மூத்த அரசியல்வாதியான அவர் கடந்த தேர்தலில் தோற்றுவிட்டிருந்தவர். அப்போதைய பிரதமர் அட்லீ முன்கூட்டியே வந்துவிட்டார். சர்ச்சில் வரும்போது எல்லோரும் எழுந்து மரியாதை செய்கிறார்கள். அட்லீக்குக் கூட கிடைக்காத மரியாதை என்று ஒருவர் சொல்கிறார். அடுத்த தேர்தலுக்கான பிரச்சார மேடையாக அரச குடும்ப திருமண நிகழ்வைக்கூட வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார் என்கிறார்கள். கிங் ஆறாம் ஜார்ஜ், எலிசபெத்தின் அப்பாவுக்கு நுரையீரலில் புற்றுநோய். யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சாகப்போகிறோம் எனத் தெரிந்த நிலையில் வாத்து வேட்டைக்குச் செல்லும் ஆறாம் ஜார்ஜ், தன் மருமகன் பிலிப்பிடம் சொல்கிறார். ‘நீ உன் தேசபக்தியை என் மகள் மீது அன்பு செலுத்துவதிலும் அவளைக் காப்பாற்றுவதிலும் காட்டு'. பிலிப் அதன் படியே வாழ்ந்தவர். 73 ஆண்டுகள் எலிசபெத்தின் கணவனாக வாழ்ந்து 2021இல் தான் மரணம் அடைந்தார். 2022 - இல் எலிசபெத்தும் நீண்டகாலம் கோலோச்சிய அரசி என்ற பட்டத்துடன் போய்ச் சேர்ந்துவிட்டார். கிரௌன் ஒருவிதத்தில் பிரிட்டனின் எழுபது ஆண்டு கதையும் கூட. ஏராளமான அரசியல் வரலாற்றுச் சம்பவங்களை அவிழ்த்துகொண்டே செல்வது. உலகமே வியந்து பார்த்த டயானாவின் கதையும் இதில் வருகிறது. இத்தொடரின் பிரம்மாண்டமும் அரச குடும்பத்தின் நடை உடை, கம்பீரம் மீதான நம் வியப்பும் இதன் வெற்றிக்கு காரணம். கதையில் ராணிக்கும் பிலிப்புக்கும் வயதானதும் அவர்களது வேடங்களுக்கு புதிய நடிகர்களை வைத்து எடுத்தார்கள். தன்னைப் பற்றி நெட்ப்ளிக்ஸில் வெளியான தொடரை ராணி பார்த்திருப்பாரா? அவரது எதிர்வினை என்ன என்று தேடினால் இணையத்தில் ஏராளமாக கட்டுரைகள் கொட்டுகின்றன. அவை அனைத்துமே ராணி முதல் சீசனை ரசித்துப் பார்த்தார் என்கின்றன.

LUCIFER

நரகத்திலிருந்து வந்தவன்

ஓவியர் ஜீவா

எல்லாம் வல்ல தேவனுக்கு எதிர்நாயகன் நம் லூசிபர். சொர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால் நரகத்தின் அதிபதியாக பணி புரிய இறைவனால் தண்டிக்கப்பட்டவன். தந்திரமும் அதிபுத்திசா லித்தனமும் நிறைந்தவன். புகழ் பெற்ற டிவி சீரிஸின் நாயகன். இதன் திரைக்கதையின்படி லூசிபர், ஒரு கட்டத்தில் அதிபதி பொறுப்பில் சலிப்படைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் லக்ஸ் என்ற பெயரில் ஒரு பிரமாணடமான் இரவு விடுதியை நிர்மாணிக்கிறான். ஒரு ஐந்து வருடங்களுக்கு பின் அந்நகர காவல் துறையின் சிவிலியன் ஆலோசகராகவும் பகுதி நேரமாகப் பணிபுரிகிறான். லூசிபர் தன் சாத்தான் அடையாளத்தை மறைப்பதில்லை. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தன்னை வெளிப்படுத்துபவன். ஆனால் பலர் இவனது கூற்றை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. தவிர்க்கமுடியாத பாலுணர்ச்சியை ஈர்ப்பவனும் கூட என்பது இன்னொரு விந்தை.

அவனுக்கு சில மாயத்திறமைகள் உண்டு. சாகாவரம் பெற்றவன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவன். குண்டுகள் அவனை துளைப்பதில்லை. பற்றி எரியும் கட்டடத்தினுள் சாதாரணமாக நடந்து செல்பவன்! ஆனாலும் அவனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள் உள்ளன. ஒரு புலிநகத்தை போல வளைந்திருக்கும் இந்தோனேஷிய கரம்பிட் பிச்சுவா கத்திகள் எப்போதுமே அவனுக்கும் ஆபத்தானவையே!

லூசிபருக்கும் ஒரு ஜோடி இறக்கைகள் இருந்தன. லாஸ் ஏஞ்செல்ஸ் வரும்போது அவைகளை துண்டித்துக் கொண்டான். ஆனாலும் இரண்டாவது சீசன் முடியும்போது அவை தானாக முளைத்து படபடக்கும் அதிசயங்கள் நடக்கின்றன. அவை அசையும்போது புயலின் வேகம் உருவாகி, ஒரு மனிதனையே வீழ்த்தும் திறன் படைத்தவை. அவனைப்போலவே அவையும் சுலபத்தில் அழிக்கமுடியாதவையே! லூசிபரின் சக்திகளில் இன்னொன்று, எவரது உள்ளக்கிடக்கையையும் அறியும் திறன், கண்ணோடு கண் நோக்கும்போது அவனுக்கு கைகூடும் சக்தி!

அவனது குடும்ப உறவுகள் அவ்வளவு இனிமையானவை அல்ல. அவனது சகோதரன் ஒரு கட்டத்தில் அவனை திரும்ப நரகத்துக்கு ஆட்சி செலுத்த போகச் சொல்கிறான். அவனது இறக்கைகள் களவாடப்படுகின்றன. பெரும் முயற்சிக்கு பிறகு அவற்றை மீட்டு எரித்து விடுகிறான் லூசிபர். தன் தந்தையான இறைவனுக்கெதிரான ஒரு கண்டன அடையாளமாம் இந்த சிறகெரிப்பு !

இந்த தொடரில் லூசிபர் சந்திக்கும் ஒரு துப்பறியும் நிபுணர் க்ளோ டெக்கர். இவனுடைய எந்த கவர்ச்சி ஈர்ப்புகளும் மாயாஜாலங்களும் அவளிடம் செல்லுபடியாவதில்லை. ஒரு குற்ற வழக்கை துப்பறியும் போது, இவனுடைய தனித் திறனான, மற்றவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணரும் சக்தி, அவளுக்கும் உதவுவதால், இவனும் காவல்துறைக்கு நண்பனாகும் சந்தர்ப்பம் அமைகிறது. இந்த தொடர் முழுதும் இவர்கள் இருவரும் சந்திக்கும் விசித்திர புலனாய்வுகள் நிறைய!

லூசிபர், பெரும் வெற்றியடைந்திருக்கும் தொடர்களில் ஒன்று. ஆறு சீசன்களாக வெளியாகி நெட்ப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது. பலர் இதற்கு ரசிகர்கள்!! ஆனால் என்னைப்போன்றவர்களைக் கவர இதில் ஒன்றும் இல்லை அல்லது இந்த வேக உலகத்திற்கு நான் பொருத்தமற்றவன் என்றும் சொல்லிக்கொள்ளலாம்!

லோகி

குறும்புக்கார கடவுள்

மார்வெல் யுனிவெர்ஸ் படங்களில் குறும்புக்காரக் கடவுளாக அறிமுகமாகும் பாத்திரம் லோகி. ஆஸ்கார்ட் கிரகத்தின் கடவுள் தோருக்கு அவரது சகோதரனாக இருக்கும் லோகி கொடுக்கும் தொல்லைகள் மார்வெல் படங்களைப் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்த குறும்புக்காரக் கடவுளை வைத்து எழுதப்பட்ட வெப் தொடர்தான் லோகி. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மூன்று சீசன்களாக வெளியாகி இருக்கிறது. அவெஞ்சர்ஸ் சீரீஸின் இறுதிக்கட்ட படம் ‘எண்ட்கேம்' வெளியான பிறகு நடப்பதாக இந்த கதை எழுதப்பட்டுள்ளது. ‘இன்பினிட்டி வார்' படத்தில் லோகியை வில்லனான தானோஸ் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவான்.

செத்துப்போன லோகி எப்படி இந்த கதையில் வர முடியும்?

‘எண்ட்கேம்' படத்தில், உலக அழிவைச் சரிசெய்யத் தேவையான சக்திக் கற்களை எடுக்க அவெஞ்சர்ஸ் காலப்பயணம் மேற்கொள்வார்கள். அதில் 2012 - இல் வரும் லோகி அங்கிருந்த ஒரு சக்திக் கல்லை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார். அதனால்  காலக்கோட்டில் ஒரு தனிக்கோடு உருவாகும். இந்த காலக்கோட்டுப் பிழைகளைச் சரிசெய்வதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் டிவிஏ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்  அந்த லோகியைப் பிடித்துக்கொண்டுபோய் விசாரிப்பார்கள். இந்த டிவிஏ என்ற அமைப்பு காலம் வெளிக்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்குவது. காலக்கோட்டில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்துகொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருப்பது. இதுமாதிரி காலக்கோட்டில் கிளை உண்டு பண்ணினால் அந்தக் கிளையைத் துண்டிப்பதுடன் அந்த ஆளையும் போட்டுத் தள்ளிவிடுகிறார்கள். லோகியைப் போட்டுத் தள்ளாமல் இருக்கவேண்டுமானால் லோகி சில வேலைகளைச் செய்யவேண்டும்.  டிவிஏவை அழிவில் இருந்து காப்பாற்றி, அது காத்துவரும் நிரந்தரமான காலக்கோட்டையும் காத்து பேரழிவைத் தவிர்க்க வேண்டிய நிலை வருகிறது. அதுவரை வில்லனாக இருக்கும் லோகி ஹீரோவாக மாறுகிறார். காலத்தில் முன்னும் பின்னும் வழுக்கிச் செல்லும் திறன் அவருக்குக் கிடைக்கிறது. அதையே பயன்படுத்தி காலக்கோட்டையும் அதன் மூலமாக இந்த பிரபஞ்சத் தையும் காக்கிறார்.

லோகியாக நடித்திருப்பவர் டாம் ஹிடில்ஸ்டன் என்கிற ஆங்கில நடிகர். அவரது முகத்திலும் கூர்மையான மூக்கிலும் ஒளிந்திருக்கும் குறும்பு அவரை இப்பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக ஆக்குகிறது. இந்த சீரீஸில் இன்னொரு முக்கிய பாத்திரமான மோபியஸ் ஆக நடித்திருப்பவர் ஓவன் வில்ஸன்.

தி குயின்ஸ் கேம்பிட் விளையாட்டு

சேகுவேரா

எலிசபெத் ஹார்மென் (Elisa 'Beth' Harmon) என்கிற சிறுமி, ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்து, செஸ் விளையாட்டில் உள்ளூர் ஜாம்பவான்களையெல்லாம் வென்று, கிராண்ட் மாஸ்டர் என்கிற அளப்பெரிய தகுதி பெற்று, உலக ஜாம்பவான்களையும் எதிர்கொண்டு வெல்லும் கதை தான் The Queen’s Gambit.

1983ஆம் ஆண்டு வால்டர் டெவிஸ் (Walter Tevis) என்கிற புனைவாசிரியரால் எழுதப்பட்ட நாவலின் காட்சி வடிவமே இந்த மினி சீரீஸ்.  2020ஆம் ஆண்டு வெளியானது.

ஓர் அனாதைப் பெண்,  காப்பகமொன்றில் அடைக் கலமாகும் சூழல், அதில் வசிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் விட்டமின்கள் மற்றும் மனநிலை மட்டுப்படுத்தும் மருந்துகள் என 1960களின் பின்னணியில் விரிகிறது கதை. காப்பகத்தின் சுகாதாரப் பணியாளரிடம், அவர் விளையாடும் கருப்பு வெள்ளை கட்டங்கள் அடங்கிய பலகையும் காய்களும் கொண்ட அதைக் கற்றுத்தரும்படி கேட்கிறாள்.  அவர் மறுக்கவே மனதுக்குள் அவ்விளையாட்டை உருவாக்கி விளையாடுகிறாள். இதைத் தொடர்ந்து அவ்விளையாட்டின் பல அடிப்படை நுட்பங்களை கற்றுக்கொடுக்கிறார் அவர்.

சொற்ப நாள்களில் அவரையே  வீழ்த்துகிறாள். அவர் கொடுக்கும் பயிற்சியும், அவ்வயதிலேயே அவளுக்கு இருந்த கணித மேதைமையும், மருந்துகளின் ஊக்கத்தால் அவள் விளையாடும் மன விளையாட்டும் அவளை உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன. பால்யம், பதின் பருவத்து போதைப் பழக்கம், தனிமை, மறுவாழ்வு என இதில் சொல்லப்பட்டிருப்பதில் அநேகம் இதன் ஆசிரியரான வால்டர் டெவிஸின் நிஜ வாழ்வின் பிரதிபலிப்புகள் என அறிய நேர்ந்தது, மேலும் ஒப்பற்ற நடிகரான ஹீத் லெட்ஜர்(Heath Ledger) மறைவுக்கு முன் இந்தக் கதையைத்தான் திரைப்படமாக்க பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பதும் இக்குறிப்பிற்கான தேடலின் போது தெரிய வந்தது.

சதுரங்கம் தெரியாதோர் கூட இத்தொடரின் அழகியலை உணர வழிவகுத்தது இதன் படத்தொகுப்பு. முகத்திற்கும், மேசைக்கும், சதுரங்கத்தில் பயன்படுத்தப்படும் கடிகாரத்திற்கும் என வெட்டி வெட்டி, நம்மையும் கதைக்குள் ஒட்டவைக்கும் திறனுக்கே பார்க்கலாம் இத்தொடரை. 

பிரேக்கிங் பேட்

போதையும் துப்பாக்கியும்

மூளைக்கார வேதியியல் பள்ளி ஆசிரியர் வால்டர் ஒயிட். அவரின் திறமையை மதிக்காத சமூகம். நுரையீரல் புற்று நோயின் இறுதி கட்டம் என்று தெரியவர, மருத்துவ செலவிற்கும், தனக்கு பின் குடும்பதேவைக்கும் என்ன செய்வது என்று குழம்பி, போதை மருந்து தயாரிக்க களமிறங்குகிறார். அவருக்கு துணையாக அவரின் தறுதலை மாணவன் ஜெஸ்ஸி பிங்க்மேன். இவர்கள் இருவர் மட்டுமல்ல, போதைக் கும்பலை பிடிக்க போராடும் வால்ட்டரின் சகளை ஹேங்க், இவர்களின் வக்கீல் சால் குட்மேன், கோழித் தொழிலை முன்னாடி வைத்துக்கொண்டு ரகசியமாக இயங்கும் கஸ், பாதுகாவலர் மைக் என்று 'பிரேக்கிங் பேட்' தொடரில் அத்தனை கதாபாத்திரங்களும் தெளிவாக முழுமையாக எழுதப்பட்டவை. முக்கிய கதாபாத்திரங்கள் யாரும் முழுமையான நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. சூழ் நிலைக்கேற்ப அவர்களுக்கு சரி என தோன்றுவதை செய்கிறார்கள். மெக்ஸிகோ போதை கும்பலில் ஆரம்பித்து அமெரிக்காவின் போதை, துப்பாக்கி கலாச்சாரத்தை முன்னும் பின்னுமாக நெய்து ஏறக்குறைய 60 எபிசோடுகளை கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் பரபரப்பாக நமக்குத் தருகிறது.

இதன் ஊடுபாவாக அமைந்திருக்கும் சால் குட்மேனின் கதை தனியாக  60 பாகம் பெட்டர் கால் சால் என்ற பெயரில் தனித் தொடர்.  இறுதியில் ஜெஸ்ஸி பிங்க்மேன் என்ன ஆகிறார் என்பது எல் காமினோ திரைப்படம். இப்படி ‘பிரேக்கிங் பேட்' ஐ ஒட்டி வரும் அத்தனையும் இந்த தொடர் இன்னும் சில பாகங்கள் வராதா என்று நம்மை ஏங்க வைக்கும் ரகம்.  யார் நல்லவர்? யார் கெட்டவர் பிரேக்கிங் பேடை பார்க்கும் போது பல தருணங்களில் இந்த கேள்வி நம்மை உலுக்குகிறது.

யங் ஷெல்டன்

இளம் மேதை

ஷெல்டன் கூப்பர் ஓர் இளம் மேதை. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பெற்றோருடன் வசிக் கிறான். அவனுக்கு ஒரு தங்கையும் அண்ணனும் இருக்கிறார்கள். அவனுடைய மேதைமை வாய்ந்த கேள்விகள் சமூகத்தில் ஏற்படுத்தும் திகைப்புகள் அருமையான திரைக்கதையாக அமைந்துள்ளன. அவன் வயதுக்கு மீறிய பெரியவர்களுடன் சேர்ந்து  11 வயதிலேயே கல்லூரிக்குப் போய்ப் படிக்கிறான். எல்லாவிதமான அறிவியல் நுட்பங்களிலும் மிகுந்த அறிவு கொண்டவனாக இருக்கிறான். இந்த இளம் மேதையை கையாளத் தெரியாமல் சமூகமே தவிக்கிறது. குடும்பம் அதற்கும் மேல். இருந்தாலும் தன் குடும்பம் மீதான அன்பை அவனுக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது. ஷெல்டன் பாத்திரத்தில் நடித்திருப்பது இயான்  ஆர்மிடேஜ் என்ற சிறுவன்.  இவனது அட்டகாசமான நடிப்புதான் இந்த அறிவியல் தொடரின் முதுகெலும்பே. சர்ச்சில் வைத்து மதக்கொள்கைகளை கேள்வி கேட்பதாகட்டும், எதையும் தான் படித்த அறிவியலின் பின்னணியில் வைத்து வயது வித்தியாசம் இல்லாமல் கிழிகிழி என கிழிப்பதாகட்டும்; ஷெல்டன் என்கிற பாத்திரத்தின் கனத்தை அனாயாசமாகத் தாங்கிச் செல்கிறான். இவனது அப்பா, அம்மா, பாட்டிவேடத்தில் நடித்திருப்பவர்களும் பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். பிக் பேங் தியரி என்ற தொடர் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு, இதற்கு முந்தைய நிகழ்வுகளைச்

சொல்வதாகவே இந்த யங் ஷெல்டன் எடுக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனையை வளர்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த தொடரை சிபாரிசு செய்யலாம்.

செக்ஸ் எஜுகேஷன்

ரகசிய ஆலோசனை

பெயரைப் பார்த்து பயந்துவிடவேண்டாம். இதுஒரு பிரிட்டிஷ் பதின்பருவ இணைய காமெடி தொடர். பாலியல் பிரச்னைகளைப் பேசத் தயங்குவது, அது பற்றி புரிதல் இல்லாத நிலை என்பது உலகளாவிய பதின்பருவத்தினர் பிரச்னைதான். ஓடிஸ் ஒரு பள்ளி மாணவன். அவனது தாயார் பாலியல் ஆலோசகராக இருக்கிறார்.  இதனால் இந்த பாலியல் விவரங்களில் அவன் தேர்ந்த அறிவு படைத்தவனாக இருக்கிறான். அவன் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களுக்கு இதுபற்றி பல அறியாமைகள் இருப்பதைக் கண்டு தன் தோழியுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆலோசனை அளிக்கத் தொடங்குகிறான். ரகசியமான இந்த கிளினிக்,  வெற்றிகரமாகப் போகும்போது தோழி மீது இவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படிப் போகும் இந்தத் தொடர் நான்கு சீசன்களாக வெளியாகி இருக்கிறது. நகைச்சுவையுடன் கூடிய இத்தொடர் காணொலித் தொடர்களில் செக்ஸ் என்பதை மறுவரையறை செய்வதாக அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டப்பெறுகிறது. இத்தொடரில் வரும் பதின் பருவ பாத்திரங்களும், அவற்றின் பிரச்னைகளும் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பது இத்தொடரை மேலும் சுவாரசியம் ஆக்குகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com