பாடிக்கோ

பாடிக்கோ
Published on

ராமச்சந்திரனுக்கு அறுபத்தைந்து வயதாகிறது. கீபோர்ட் ராமேட்டன் என்று சொன்னால் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் உள்ள மெல்லிசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் தெரியும். ஜனனம் பாலக்காடு. பணிசார்ந்து பெரும்பாலும் கோவையிலேயே வாசம்.

இந்த வயதிலும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மேடைகளில் ஓரங்களில் ஓரங்கமாக அவரின் இருப்பு அவர் வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. 1970களின் காலகட்டம்.

பாலக்காடு  நகரத்தின் எல்லைக்குள்ளேயே ஒரு நாடக மேடை. நாடகத்துக்கு பின்னணி இசை வாசிக்க ராமேட்டனும் சங்கமும் போயிருந்தார்கள். அந்தக் காலத்தில் ‘கட் அவுட் சேஞ்ச்’ எனப்படும் நாடகத்தின் காட்சி மாற்றங்களுக்கு இடைப்பட்ட நேரங்களில் பாடல்கள் வாசித்து ரசிகர்கள் போய்விடாமல் தக்கவைத்துக் கொள்வதும் இசைக் கலைஞர்களின் வேலை. ஏற்கனவே இருக்கும் கட் அவுட்டுகளை அவசரமாகப் பெயர்க்கும் சத்தமும் ஆணிகள் அடிக்கப்படும் சத்தமும் மக்களின் சலசலப்பும் இவையெல்லாவற்றுக்கும் இடையே பாடலின் சப்தமுமாக அல் ஓலமும் கல் ஓலமுமாக இருக்கும்.

இந்த நாடகத்தின் கட் அவுட் சேஞ்சிலும் பிரபல திரைப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட் அவுட் சேஞ்சின் போதுதான் அந்தப் பையன் இவர்களை நோக்கி வந்தான். அரும்பு மீசை முளைக்கும் பருவம். அப்போதுதான் குரல் உடைந்துகொண்டிருக்கும் பிராயம். மலையாளப் பையன்களின் டிரேட் மார்க்கான இறுக்கமான சட்டையும் வெள்ளை முண்டும் ரப்பர் செருப்பும்.

கூட்டத்தில் பாவாடை பிராயப் பெண்குட்டிகள் அவ்வப்போது ஒளிக் கண்ணால் இவனைப் பார்த்துகொண்டிருந்தார்கள். பையனுக்கு ‘ஒரு கொச்சு ஹீரோவாக ஷைன்’ செய்ய ஒரு ஆர்வம் போல. ரெண்டுங் கெட்டான் குரலில் ‘சேட்டா... ஞான் ஒரு பாட்டு பாடிக்கோட்டே” என்றான். (சேட்டா ஞான் ஒரு ஆணி அடிச்சோட்டே?” என்றுதான் ராமேட்டனுக்கு முதலில் கேட்டது. பின்னர் ஒரு அனுமானமாய்ப் புரிந்து கொண்டார்.) வயசுப்பையனின் ஆசைதானே, ஒரு பாட்டு பாடிக்கோட்டே என்று நினைத்தார் ராமேட்டன். ‘எந்து பாட்டு அறியும்?” என்றார்.

பையன் சட்டைக்குள் கையை விட்டு கசங்கிப்போன ஒரு எண்பது பக்க நோட்டை எடுத்தான். ஆணிகள் தட்டும் ஓசை இன்னும் பலமாக இருந்தது. “சந்திரிகையில் அலியுன்னு சந்திரகாந்தம்” என்றான்.

அப்போதைய சூப்பர் ஹிட் பாடல் அது. யேசுதாசும் பி.லீலாவும் பாடியது.

“அது டூயட் அல்லே?” என்றார் ராமேட்டன்.

“ரண்டு சப்தமும் ஞான் தன்னெ பாடிக்கொள்ளாம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். ஈ தண்டேடம் எல்லாம் கொறச்சு நாளே உள்ளு மோனே என்று நினைத்தபடி

“ம்.. ம்ம்.. பாடிக்கோ” என்றார் ராமேட்டன். கொச்சு ஹீரோ மைக்கைப் பிடித்துக்கொண்டான்.

ஆணிகளின் சத்தம் கூட்டத்தின் சலசலப்பு... இடையே கம்பீரமாகப் பாட ஆரம்பித்தான். சிலர் கேட்க, சிலர் கதைபேசிக்கொண்டிருந்தார்கள். பையன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெண்குட்டிகள் இருக்கும் திசை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தான். ராமேட்டன் ஹார்மனியம் வாசித்துக்கொண்டிருந்தார். ஜோசப் தபலா வாசித்துக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. ராமேட்டனும் ஜோசபும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். எங்கோ சில இடங்களில் தாளம் தவறுகிறது. பையன் பாடும்போது சம்பந்தமில்லாமல் ‘ஆணு...பெண்ணு...’ என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விழுகிறது..

ராமேட்டன் அவன் பாடுவதை உற்றுக்கேட்டார்.

“பெண்ணு சந்திரிகையில் உறங்குன்னு”

“ஆணு நின் சிரியில் விரியுன்னு...”

குழப்பத்துடன் “டா நிறுத்து.. ஆ புஸ்தகம் ஒன்னு தா” என்று நோட்டைப் பிடித்து வாங்கினார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

பெண் : சந்திரிகையில் உறங்குன்னு சந்திரகாந்தம்..”

ஆண் : “நின் சிரியில் விரியுன்னென் ஜீவ ராகம்”

உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருக்கும் ராமேட்டனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கொச்சு ஹீரோ.

ராமேட்டன் சொல்கிறார்: “நல்ல காலம். அவனை சரணம் வரை பாட விடல... பிக்காலிப் பய.. கடைசி சரணத்தில, “ஆணும் பெண்ணும் சந்திரிகையில் உறங்குன்னு’ன்னு எழுதியிருக்கான்.”

அன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் ’பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்’ முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி.

கச்சேரிக்கு முன் ஒரு ’கட்டிங்’, கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பதும் ஒரு விதி.

ஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்து கொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம் - சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது - டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்தசரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ இல்லாமல்இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த ‘பா’வின் ‘ஆ’காரத்தை ‘தம்’ பிடித்து இழுத்து ‘டுங்களே’ என்று முடிப்பார்.

எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு ‘கட்டிங்’ கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலேயே மிக

நீளமான பா.

நான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து ’அந்த அரபிக்கடலோரம்’ துவங்கிவிட்டது. ‘ட்ரூப்பிலே ஆளாணு அல்லே?’ என்று கேட்டார். ‘அதெ’ என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். ‘மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே’ என்று கேட்டார். ‘அதெ’ என்றேன். ‘ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு’ என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். ‘எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா’ என்றார். ‘எந்து கார்யம்’ என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது.

‘காரியம் அல்ல, ஒரு வாக்கு’ என்றார். ‘எந்து வாக்கு’ என்றேன். வாக்கு,

சொல், வார்த்தை. ‘மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ’ என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து ‘எந்து வாக்கு’ என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து ‘ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே? புள்ளாங்குழல்..? அதிலெ ஒரு வாக்கு...’ என்று சொல்லச்சொல்ல தலை தொங்கியது.

அரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து ‘எந்து வாக்கு?’ என்று அலறினேன்.‘டுங்களே’ என்றபடி நிலம் பதிந்தார்.

(மேடை இசைக்கலைஞர்களின் வாழ்வனுபவங்களை மையமாக வைத்து ஸ்ரீபதி எழுதிக்கொண்டிருக்கும் ‘474வது பார்’ என்ற புத்தகத்திலிருந்து )

டிசம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com