பரம் இருப்பது எவ்விடம்?

பரம் இருப்பது எவ்விடம்?

Published on

இளம் வயதில் இறை குறித்து முதலில் அறிமுகமான சொல் கடவுளோ, தெய்வமோ, இறைவனோ அல்ல. சாமி என்பதே. உடனே சில சாமி எனும் சொல் ஸ்வாமி எனும் வடசொல்லின் தமிழாக்கம் என்பர். ஆட்டுக் குட்டி என்பதை ‘ஆஷ்டுக் குஷ்டி’ எனும் சொற்பிறப்பு என்பாரும் உளர். மூடர் என்பாரில் தென்புலத்தார், வடபுலத்தார் எனப் பகுப்பு உண்டா என்ன?

-சாமி கும்பிடலம் வா!

- மான் வாகனத்திலே அம்மன் சாமி வருகு!

- சாமி கொண்டாடி வாறாரு, குறுக்க போகாதே!

- சாமி பிரசாதம் சாலையிலே போடப் பிடாது!

-அவருக்கு சாமி வந்து ஆடுறாரு!

- சாமி கொண்டாடிக்கு ஆராசனை வந்து ஆடிப் பூ எடுத்தாரு!

- அந்தக் கிடாவை வெட்டாதே, சாமிக்கு நேந்து விட்டிருக்கு!

- சாமிக்கு முன்னால வச்ச பெறகு  சுசியன் தாறன், பொறு!

- சாமி குத்தம் வந்திரும்மா, வேண்டாம்!

- சாமி இல்லாடா அவன், ஆசாமி!

என்பன அன்றாடம் யாம் கேட்கும் உரையாடல்களில் சில.

சாமி எனும் சொல்லுக்குப் பேராகராதி தரும் பொருள்கள்:

1.கடவுள், Lord, The Supreme Being

2.முருகன் (பிங்கல நிகண்டு)

3.அருகன் (பிங்கல நிகண்டு)

4. தலைவன், Chief, Chieftain, Master

5. குரு (பிங்கல நிகண்டு), Spiritual Preceptor

6. மூத்தோன் (திவாகர நிகண்டு), Elter, Senior, Elder Brother

7. மரியாதை, அன்பு முதலியன குறித்து அழைக்கும் சொல்.

சாமி என்றால் Lady, Mistress, தலைவி என்ற பொருளும் தருகிறது பிங்கல நிகண்டு. பொன், Gold என்ற பொருளும் தருகிறது. செல்வம், Wealth என்கிறது சூடாமணி நிகண்டு.

ஒரு காலத்தில் அந்தணர்களை, பூசாரிகளை, பண்ணையார்களை, செல்வந்தவர்களை சாமி என்று அழைத்தனர். அந்த வரிசையில் இன்று தலைவர்களை, நடிகர் நடிகையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கடவுளைக் குறித்து எம் முதற் சொல் சாமி. ‘பீடம் தெரியாமல் சாமி ஆடாதே!’ என்பர். சாமிக்கு பிறகே கடவுள். எம் பள்ளிப்பருவத்தில் இறைவணக்கம் என்ற சொல் அறிமுகம் இல்லை. கடவுள் வாழ்த்துத்தான். கடவுள் வாழ்த்து என்பதுவும் கடவுள் வணக்கமே! இன்று மேடைகளில் புளித்துச் சளித்துப் போன சொற்றொடர் பயன் படுத்துவார்கள் – வாழ்த்த வயதில்லை, எனவே வணங்குகிறேன் என்று. கடவுள் வாழ்த்து என்றால் மும் மூர்த்திகளில் ஒருவரை உயர்த்திச் சொல்லும் துறை என்கிறது புறப்பொருள் வெண்பா.  ஒரு நூலின் முதற்பகுதியில் முதலில் கடவுள் வணக்கம் அல்லது கடவுள் வாழ்த்து அமைத்தனர்.

கடவுள் என்றால் இறைவன் என்கிறது பிங்கல நிகண்டு. வானவன், முனிவன், குரு, நன்மை, தெய்வத்தமை என்பன் பிற பொருள்கள். சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் பதினைந்து நூல்களில் கடவுள் இருக்கிறார். ஐயாயிரம் ஆண்டுகள் காலக் கடிகையில் பின்னோக்கிப் போய் இன்று கடவுளை எப்படித் துரத்துவது? சங்கப் பாடல்கள் வாழும். இனியும் பல்லாயிரம் ஆண்டுகள்.

தேவலோகத்து ஆடல் மகளுக்கு கடவுட் கணிகை என்றொரு சொல்லை மணிமேகலை பயன்படுத்துகிறது. இந்தக் கட்டுரைக்காக சொல் தேடி அலைந்த எனக்கு கடவுட்டீ என்றொரு சொல் கண்பட்டது. அது கடவுள் + தீ = கடவுட்டீ. ஊழித் தீ என்பது பொருள். தேவதாரு எனும் மரத்தை – Red cedar – கடவுள் தாரம் எனக் குறித்துள்ளனர்.

சாமியைப் போலவே கடவுளையும் தினம் தினம் கூவி அழைத்தனர், இனாம் வாங்க ரேஷன் கடை வாசலில் வரிசையில் நின்ற சாமானியர்.

-        கடவுளுக்கு கண் அவிஞ்சு போச்சா?

-        கடவுளே, உனக்குக் கண் இல்லையா?

-        கடவுள் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கான் இந்தக் கொடுமையை!

கொடுமை எனும் சொல்லின் பிரதியாக நீங்கள் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், வாரிக்கோரிச் சுருட்டுதல், அபகரித்தல், கலப்படம், அஃகம் சுருக்கல், சுரண்டுதல் என எச்சொல்லும் பெய்து கொள்ளலாம்.

நாட்டில் நடக்கிற அழிமதிகளைக் கண்ணுறுகிறபோது, செவிப்படுகிறபோது, உணர்கிறபோது, நமக்கே தோன்றும் இவை எல்லாம் அனுமதித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு, கண் மூடி மெளனியாகி இருப்பதுதன் பெயர் கடவுளா என்று. இவற்றைக் தட்டிக்கேட்கமாட்டான், தண்டிக்க மாட்டான் என்றால்- அவன் அல்லது அது கடவுளா? யுகே யுகே என்பதுவும் உயிர்த்தெழுவான் என்பதுவும் என்று, எவர்க்காக, எதன் பொருட்டு?

இது நாத்திகவாதம் இல்லையா என்பாரும் உண்டு. இது கடவுள் நம்பிக்கை கொண்டவரின் ஆற்றாமையும், அங்கலாய்ப்பும், கையறு நிலையும், கையாலாகாத்தனும், சுய வெறுப்பும் ஆகும்.

நான் கடவுளை நம்புகிறவன், இறை மறுப்பாளன் என்று. ‘If at all there is no God, it is very much necessary to find one’ என்ற மேனாட்டு அறிஞனை மேற்கோள் காட்டி வெண்டைக்காய் விளக்கெண்ணெய் – உளுந்து அரைத்து அம்மி வகையறாவில் சேரும் பிரியமில்லை எனக்கு. பிறப்பால், வளர்ப்பால், மரபால் யாம் சைவம் மதம். பள்ளிச் சான்றிதழ்களின் படி இந்து மதம். எனினும் வீர நாராயண மங்கல முத்தாரம்மன் கோயில் நடையில் வணங்கி நிற்கிற எனக்கு அன்னை வேளாங்கன்னி சந்நிதானத்திலும் மும்பை ஹாஜி மசூதி – தர்காவிலும் பிரார்த்தித்து நிற்பது சாத்தியமாகிறது. மேலும் எவருக்கும் எதையும் நிறுவும் நிரூபிக்கும் கடப்பாடும் இல்லை.

கடவுள் உருவோ அருவோ, உணர்வோ அறிவோ, உளதோ இலதோ, மதங்கள் மூலம் மாந்தர் பேதித்து வழங்கும் எதுவோ அறியேன்! ஆனால் சமயங்களில் அதன் சாந்நித்தியத்தில் மன்றாடி, கண்கலங்கி நிற்க வேண்டிய நெருக்கடி உண்டு. இதில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் எனப்பகுத்து, உன் தெய்வம், என் தெய்வம் எனப் பிரித்து, கீழ்மேல் பார்ப்பவர் மீது அலட்சியமும் அவநம்பிக்கையும். ‘எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?’ என்பார் சித்தர் சிவவாக்கியர்.

எந்தக் கற்பாறையின் முன், மரத்தின் முன், நெருப்பின் முன், நிலத்தின் முன், விசும்பின் முன், நீர் பாயும் கூடத்தின் முன், பரந்து வீசும் காற்றின் முன், விலங்கு பறவை மீனின் முன், மனிதன் கண்மூடி மெளனமாகிக் கரைந்து உருகு நிற்கிறானோ, அது அவன் கடவுள்! அதில் பெரியதென்ன? சிறியதென்ன?

ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தும், தங்கக் கவசம் அணிவிக்கும், நவமணி முடி சூட்டும், பொற்றேர் வழங்கும் முத்தாரமும் ஒட்டியாணமும் தண்டையும் சிலம்பும் சமர்ப்பிக்கும், நவரத்தின வாளும் மழுவும் ஆழியும் குலிசமும் குண்டிகையும் வேலும் பணி செய்து வைக்கும் மாந்தருக்கே கடவுள் இரங்குவார் எனில், அவன் என் கடவுள் அல்ல!

மன்றாடலைச் செவி மடுக்க முறையீட்டைக் கவனிக்க, நோக்காட்டைக் கருத்தில் கொள்ள எனக்கொரு கடவுள் வேண்டும். அவனப்படிக் கேட்கிறானா என வினவினால், நானறியேன்! ஆனால் வேறு மார்க்கம் என்ன, போக்கு ஏது? இருக்கண்களை Non judicial stamp paperial எழுதி சுத்த சுயம்பு அமைச்சர் பெருமகனாரிடமா சென்று முறையிட இயலும்?

பாவநாசம் சிவன் இயற்றிய மாயா மாளவ கெளளை இராகக் கீர்த்தனை ஒன்றுண்டு. சஞ்சய் சுப்ரமணியம் பாடிக் கேட்க வேண்டும். “பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னைப் புவி தனில் ஏன் படைத்தாய்?”

என்று வளர்வது. அங்ஙனம் கலங்கி, இரங்கி, தட்டமிந்து சிற்கவும் ஓரிடம் வேண்டுமல்லவா!

தியாகராஜ சுவாமிகளின் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளில் ஒன்று, ‘நகுமோமு கநலேநி’ என்று தொடங்குவது ஆரபி இராகம். பன்னிரண்டு வயது முதல், பல ஊர் கோயில் திருவிழாக்களில், பல இசை ஏதைகள் பாடக் கேட்டிருக்கிறேன். அன்றும் இன்றும் எனக்கு தெலுகு தெலிசிலேது. என்றாலும் பாவத்தின் மூலம் புரிந்து கொண்ட எட்டடிப் பாடலுன் ஈற்றயலடி – ‘ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது’ என்பது.

‘பரமாத்மாவே! இந்த உலகில் நான் எவரிடம் சென்று முறையிடுவேன்’ என்பது அந்தப் பாடல் வரிக்கு எனது புரிதல்.

ஆம்! என் அவலங்களை, ஆற்றாமையை, அல்லலை, மனக்குறையை, நாட்டில் நடக்கும் அநியாயத்தை, அட்டூழியங்களை, ஈரம் என்று ஒரு பொருள் இலாத  மனத்தவர் செய்யும் மக்கள் தூரோகத்தை எவரிடம் சென்று முடையிடுவோம்?

எனவே முறையிட ஓரிடம் வேண்டும். அவ்விடம் எம்மதத்தவர் பேணுகையில்  உளதென்பது என் கவலை இல்லை. முறையீடு கவனிக்கப் படுமா என்பதுவும் நானறியேன்! கடவுளிடம் நல்லவர்களின் முறையீடு மெய்ப்பட்டிருந்தால், இத்தனை அல்லல்கள் இருக்காது நாட்டில். தினமும் பாத்துத் தீமைகளாவது செத்துக் கிடக்கிறதா என்ன? அது நடவாது என்றறிந்த போதும் முறையீட்டுக்கே வழியற்றுப் போனால் பலர் தெருக்களில் உன்மத்தம் பிடித்து அலைந்து கொண்டிருப்பார்கள்.

‘அல்லல் என் செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தம் தன் என் செயும்”

என்று கேட்டு மோன நிலையில் ஆழ்ந்து போக நாம் திருநாவுக்கரசரும் அல்லவே!

சாமிக்கும் கடவுளுக்கும் இன்னொரு சொல் தெய்வம். திருவள்ளுவர் 1330 அருங்குறட்பாக்களில் எங்கும் கடவுள் என்ற சொல்லை ஆண்டாரில்லை. ஆனால் ஆறு குறள்களில் தெய்வம் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

‘தென்புலத்தார் தெய்வம்’ என்றும், ‘வானுறையும் தெய்வம்’ என்றும், ‘தெய்வம் தொழா அள்’ என்றும் ‘தெய்வத்தால் ஆகாது எனினும்’ என்றும் ’தெய்வத்தோ டொப்பக் கொளல்’ என்றும் ‘தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்றும் பேசுகிறார். முழுப்பாடைகளை அறிய விரும்புவோர் – குறட்பாக்கள் 43, 50, 55, 619, 702 , 1023 பார்க்கலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் தெய்வம் எனும் சொல் பன்னிரண்டு நூல்களில் பயன்படுத்துப் பெற்றுள்ளது. இன்றும் ‘திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை’ என்றும் ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ எனும் சொலவங்கள் புழக்கத்தில் உண்டு. தமக்கு வேண்டாதவரை அரசன் அன்று கொல்வான் என்பது புதிய உரை. தெய்வம் தீயவரை நின்றும் கொல்லாது என்பது அனுபவம்.

தெய் எனும் சொல்லுக்கு தெய்வம் என்றும் கொலை என்றும் பொருள் தருகிறது பிங்கால நிகண்டு. தெய்வம், Deity எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருட்கள்:

1.கடவுள், God, Deity (சூடாமணி நிகண்டு)

கரும்பொருள்கள் குறித்துப் பேசுமிடத்து, தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா –

‘தெய்வம் உணாவே மா மரம் புள் பறவை

செய்தி யாழின் பகுதியொரு தொகை இ

அவ்வகை பிறவும் கரு என மொழி’

என்கிறது.

2. தெய்வத் தன்மை Divine nature

“தெய்வமே கமழும் மேனி” என்பது சீவக சிந்தாமணி.

3. தெய்வத்தனை உள்ளது. That Which is Divine

4. ஊழ், Fate, Destiny

5. தெய்வ மணம்

6. தெய்வா தனம்

7. ஆண்டு. Year

8. வாசம் Fragrance

9. புதுமை Newness

இறையருள் என்பதைக் குறிக்க தெய்வ கடாட்சம் எனும் சொலுண்டு. தெய்வ சகாயம் என்றால் கடவுள் துணை. தேவசகாயம் என்றும் குறிப்பதுண்டு. தெய்வ சித்தம் எனில் தெய்வ சங்கற்பம். காமதேனுப் பசுவுக்கு தெய்வ சுரபி என்ற மாற்றுச் சொல் தரும் சங்க அகராதி. எந்த இன்னல் வந்தாலும் தெய்வம் சோதிக்கிறது என்றோம். தெய்வக் குற்றம், தெய்வ கடாட்சம், தெய்வக்களை, தெய்வச் சிலை, தெய்வச் செயல், தெய்வ சாட்சி, தெய்வ சிந்தனை, தெய்வ நிந்தனை, தெய்வ சோதனை, தெய்வத்துரோகம், தெய்வ தூசணம், தெய்வப் பிறவி, தெய்வப் புலமை, தெய்வ பக்தி, தெய்வ பயம், தெய்வாதீனம், தெய்வீகம், தெய்வோபாசனை, தெய்வத் தலம் என்பன தெய்வம் தொடர்பான சில சொற்கள் மேலும் சில சொற்கள் பொருளுடன் பட்டியலிடலாம்.

தெய்வக் கம்மியன்    - தேவதச்சன்

தெய்வக்கல்                 - இறை உருவங்கள் வடிக்கும் கல்

தெய்வ கணம்             -  தேவர் கூட்டம்

தெய்வ குஞ்சரி           - தெய்வ யானை

தெய்வச் சிலையார்  - தொல்காப்பியச் சொல்லதிக்கார உரையாசிரியர்

 தெய்வ தச்சன்         - விசுவகர்மா

தெய்வதை              - தேவதை

தெய்வ நதி                - கங்கை

தெய்வ நியமம்     -     கடவுள் ஆணை

தெய்வப் பலகை    - சங்கப் பலகை

தெய்வ பாத்திரம்     - அட்சய பாத்திரம்

தெய்வப் பாவை    - கொல்லிப்பாவை

தெய்வப்புணர்ச்சி   - இயற்கைப் புணர்ச்சி. Union of Lovers brought about by destiny

தெய்வப்புள்   -        கருடன்

தெய்வப் பெண்    - தேவலோக மகள்

தெய்வ மணம்     -  தெய்வப் புணர்ச்சி

தெய்வ மணி         -   சிந்தாமணி

தெய்வ முனு     -   நாரதர் போன்ற தேவ இருடி

தெய்வ யாகம்    - கடவுள் வேள்வி

தெய்வ யானை  - 1. ஐராவதம் 2. தெய்வானை

தெய்வயானை காந்தன்    - தெய்வானை கணவன், முருகன்

தெய்வலோகம்    - சுவர்க்கம், துறக்கம்

தெய்வ வாக்கு       -   அசரீரி

தெய்வ விரதன்    - பீஷ்மர்

தெய்வாவி     - பரிசுத்த ஆவி. Holy ghost

’தெய்வமே என்று இருந்தேன்’ எனும் சொல்லாடலே, இன்று மருவித் தேய்ந்து ‘’ ’தேமேண்ணு இருந்தேன்’ என வழங்கும் தெய்வம் எனும் சொல்லை, தன்மையை, மேன்மையை உணர்த்தும் பல பழமொழிகள் நடப்பில் உண்டு, காணலாம் சில.

1.      கொடுப்பானைத் தெய்வம் கெடுக்கும்

2.      சுவாமி இல்லை என்றால் சாணியைப் பார் (If you say there is no god, look at the cow dung)

3.      நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

4.      வையம் தோறும்  தெய்வம் தொழு (what ever world you inhabit, worship god)

5.      திருடனுக்குத் தெய்வமிலை, அசாரிக்கு ஆணை இல்லை.

6.       இரு கூடைக் கல்லு தெய்வமானால் கும்பிடுவது எந்தக் கல்லை?

7.      ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; காவல் காரனுக்கு தெப்பத் திருவிழாவா?

8.      ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கையில், மூலையில் கிடைக்கிறு தெய்வம் குங்கிலியம் கேட்டதாம்

9.      பிறக்கிற போதே முடமானால், தெய்வத்துக்குப் படைத்தால் தீருமா?

10.  தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி (To the doubting heart, god is the only witness)

11.  தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி

12.  கும்பிடும் தெய்வமானாலும் பொய் சத்தியம் செய்தால் பொறுக்குமா?

ஒரு சொல் மக்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்றிருக்கும் செல்வாக்கின் சான்றுகள் இவை. சொல்லின் செல்வாக்கு என்பது சொல் குறித்த தத்துவத்தின் செல்வாக்கு. விவேகமும் பண்பும் அற்ற வெற்று ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், அவதூறுகள் இதனை அழித்துவிடக் கூடுமா?

கடவுளை அர்த்தப் படுத்தும் இன்னொரு சொல் இறை. இறையெனில் இறைவன். இறைவி அல்லது இரண்டும் ஒன்றான, இரண்டுமே கடந்த நிலை.  இறை எனும் சொல்லும் தமிழில் வளமானது. பேரகராதி தரும் பொருள் பார்ப்போம் முதலில்.

I இறை : 1. உயரம் height

                 2. தலை Head (சூடாமணி நிகண்டு)

                 3. கடவுள். Supreme god நம்மாழ்வாரின் திருவாய்மொழி, ‘இறை நிலை உணர்வரிது, உயிர்கள்’ என்னும்.

                 4. சிவன்  (பிங்கல நிகண்டு)

                 5. பிரமன்  (பிங்கல நிகண்டு)

                  6. அரசன்.  King, Sovereign, Monarch

                  7.தலைமை.  Eminence, greatness (பிங்கல நிகண்ட)

                  8. நடுவு நிலைமை.  Justice, Impartiality

                  9. உயர்ந்தோர்

                  10. தலைவன் Superior, Master, chief (திவாகர நிகண்டு)

                  11. தமையன் Elder Brother, பரிபாடல் இப்பொருளில் பயன்படுத்தியுள்ளது.

                  12. கணவன்

                   13. வீட்டுக் கூடையின் இறவானம்

                   14. இறகு Feather

                    15. சிறகு   Wing

                    16. இறத்தல்

                    17. மாமரம்

II இறை: 1. தங்கல்   Halting

2. ஆசனம் Seat

3. கடமை Duty, obligation

4. வரி Tax, duty

5. விடைAnswer, reply

6. விரல்களின் குலுக்கு வலை

7. விரற்கடை அளவு

8. அற்பம்

9.முன்கை. Wrist, fore arm

10. கை. Arm

11. உடலின் மூட்டுகள்

12. மூலை

இறைமை என்றொரு சொல்லும் காணக்கிடைக்கிறது. தலைமை, அரசாட்சி, தெய்வத்தன்மை என்பன பொருள். இறை குறித்தும் பல பொருள் பொதித்த சொற்கள் உள.

இறைமையாட்டி        -1. தலைவி (திவாகர நிகண்டு)

                                           2. அரசி

இறையமன்                   - சனி, பரிபாடல் இப்பொருளில் ஆண்டுள்ளது

இறையவன்                   1. தலைவன்

                                           2. கடவுள்

                                           3. இந்திரன், தேவர் தலைவன்

இறையனார்                  - கடைச் சங்ககால புலவர். குறுந்தொகையில் ‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! எனத் தொடங்கும் பாடல் இவர் பாடியது

இறைனார் அகப்பொருள்   - இறையனார் இயற்றிய களவியல் நூல்

இறையான்            - சிவன்

இறையிலி              - வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலம்

இறையோன்          - கடவுள்

இறைவன்               - 1. தலைவன், 2. கடவுள், 3. திருமால், 4. சிவன், 5. பிரமன், 6. அரசன், 7. கணவன், 8. மூத்தோன், 9. குரு

இறைவாகனம்        - இடபம் (பிங்கல நிகண்டு) சிவன் வாகனம்.

இறைவி          -     1. இறைவனின் பெண்பால், 2. உமை (பிங்கல நிகண்டு) 3. துர்க்கை, 4. தலைவி

இறை எனும் சொலைத் திருக்குறள் ஒன்பது பாடல்களில் ஆள்கிறது.

”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.”

என்பது இறைமாட்சி அதிகாரத்துக் குறள்

”இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை

முறை காக்கும் முட்டாச் செயின்”

என்பது செங்கோன்மை அதிகாரத்துக் குறள்

மாணிக்க வாசகர், போற்றித் திரு அகவலில்,

“வானோர்க்கும் அரிய மருந்தே போற்றி

ஏனோர்க்கும் எளிய இறைவா போற்றி”

என்னும் ‘இருள் கொட அருளும் இறைவா போற்றி’ என்னும் வாழ்த்துவார் திரு அண்டப் பகுதியில், ‘காக்கும் கடவுள், கருத்துடைக் கடவுள்’ என்பார். ‘கரும்பணக் கச்சைக் கடவுள்’ என்பார். கரிய நாகத்தை அரைக்கச்சையாக அணிந்த கடவுள் என்பது பொருள்.

Office

பரம் என்பதுவும் சாமி, தெய்வம், கடவுள், இறைவன் வரிசையில் வருவோர் சொல்.

நைவேத்தியம் செய்வோம், நிவேதனம் செல்லும். ஆனால் படையல் செல்லாது என்பது நமது மொழி அபிமானம். படையல் எனும் சொல்லுக்கு மாற்றுச் சொல் படைப்பு. நாஞ்சில் நாட்டார் படப்பு என்போம். உடனே அரசு இலவச ஓய்வூதியம் விருதுகளும்  விண்ணப்பித்து, ஆள் பிடித்து, அடங்கல் கொடுத்துப் பெறும் அறிஞர் மந்தை. படப்பு என்பது வட்டார வழக்குச் சொல் என்பார்கள். ஐயா பேராசிரியர் கே.என்.சிவராஜ பிள்ளை நூல்களை வாசியுங்கள் என்றால் அது வெள்ளாள எழுத்து என்பார்கள்.

அது போலவே பரம் எனும் சொல்லை  ஆள்வதில் நமக்கோர் மனத்தடை உண்டு. மனத்தடை என்றேன், மன பிறழ்வு என்றல்ல. ஒருவேளை பரம் பிதா, பரமண்டலம், பரலோக சாம்ராஜ்யம் எனும் சொற் பயன்பாடுகளின் தாக்கமாக இருக்கலாம். உண்மையில் பரமபதம் எனும் சொல்லைப் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் பயன்படுத்துகிறது. சேக்கிழார் பெருமான் அருளியது. பகவான் என்றாலே பரப்பிரம்மம் தான்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவாய்மொழிப் பாடல் வரி, ‘வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்’ என்று குறிக்கப்படுகிறது. பரபோகம் என்றால் பேரின்பம். பரம்பரன் எ நிம் முழுமுதற் கடவுள். சிவபெருமானை, நீல கண்டனை, பரம சிவன் என்று தானே குறிக்கிறோம். பரம சுந்தரி என்றால் தரும தேவதை எனப் பொருள் தருகிறது நிங்கல நிகண்டு. அறம் வளர்த்த நாயகி தூய தமிழ், சசீந்திரம் தாணு மாலய சாமி கோயிலில் அவளுக்கு சந்நிதி உண்டு.

பரம சுவாமி என்றாலும் கடவுள் தான்.  The Supreme being. பரமண்டலம் என்றால் நமக்குப் பாமண்டலத்தில் இருக்கும் பிதா நினைவுக்கும் வரும். பரமண்டலம் எனும் சொல்லின் பொருள் அன்னிய நாடு எனப் பதிற்றுப்பத்து உரையாசிரியர் குறிக்கிறார் என்கிறது பேரகராதி. நாம் மோட்சம், சுவர்க்கம், துறக்கம் எனும் சொற்களால் ஆள்வது பரமண்டலமும் ஆகும். பரமபதம் என்றாலும் துறக்கமே!

எனவே பரமபிதா என கிறிஸ்துவ மதத்தினர் வழங்கும் சொல்லின் பொருளும் கடவுள் தான். God, as the father of all beings என்கிறது பேரகராதி. பரமபுருஷன் என்றால் கடவுள். பரம மூர்த்தி என்றால் முழு முதற் கடள். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் ஒன்று:

”ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே!.”

என்று கசிந்து உருகும்.

பரம் சந்தோஷம், பரம உபகாரம், பரம திருப்தி, பரம ஆனந்தம் என்கிறோம் அல்லவா, பரமம் எனில் சிறப்பு என்பது பொருள். தலைமை, திவ்ய நிலை, பரம மூர்த்தி என்பன கூடுதல் பொருள்கள்.

‘யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க’ என்பார் மாணிக்க வாசகர்

‘உலகு உயிர் தேவு மற்றும் படைத்தவன் பரம மூர்த்தி’ என்பார் நம்மாழ்வார்.

பரம யோக்கியன் எனும் சொல்லின் நேரான பொருள் உண்மையில் சிறந்தோன். Extremely honest person. நாம் அச்சொற்றொடரை இன்று எதிர்மறைப் பொருளில் ஆள்கிறோம், தலைவர் எனும் சொல்லைப் போல, பரம் எனும் சொல்லுக்கு பன்முகப் பொருள்கள் உண்டு.

1.      மேலது 2. திருமால் நிலை ஐந்தினுள் ஒன்று 3. கடவுள் 4. மேலுலகம் 5. திவ்யம் 6. மோட்சம் 7. பிறவி நீக்கம் 8 முன் (பிங்கல நிகண்டு) 9. மேலிடம் 10. அன்னியம் 11. சார்பு 12. தகுதி 13. நிறைவு 14. நரகம்  (பிங்கால நிகண்டு) 15 பாரம்  (பிங்கால நிகண்டு) 16 உடல் 17. கவசம் (சூடாமணி நிகண்டு) 18. கேடய வகை 19 குதிரை மேல் அமர்வதற்கான சேணம் (பிங்கால நிகண்டு) 20. அத்திமரம்.

எத்தனை ஆச்சரியமான அர்த்தங்கள். மொழிக் கல்விக்கு நமை பரம கல்யாணியோ, பரமேசுவரனோ, பாரகோடி கண்டன் சாஸ்தாவோ அருளட்டும்.

சிவவாக்கியார் ‘பாட்டிலாத பரமனை, பரமலோக நாதனை’ என்பார். மேலும், ஆணித்தரமாக கேட்பார் –

பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்

அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே

கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது

பரமிலாத சூன்யமாம் பாழ் நரகமாகுமே!”

என்பார் சிவவாக்கியர் யாரை, எதற்குச் சொன்னார் என நிறுவ நான் துணிய மாட்டேன் உயிரெச்சமே காரணம்.

‘நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே! என சிவவாக்கியர் பாடலையும், ‘கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா? என்ற இராமச்சந்திரக் கவிராயர் பாடலையும் மேற்கோள் காட்டினாலும், அப்பாடல்களின் ஆதார சுருதி இறை மறுப்பு அல்ல என்பதை நாம் தெளிந்து கொள்ளவில்லை.

கோளத்தின் ஓரினத்தை மேம்படுத்தி அருளியவர் ஸ்ரீநாராயண குரு. அச்சமூகம் இன்ரு நாம் எவர்க்கும் இளைத்தவர் இல்லை என தலை நிமிர்ந்து நிர்கிறது. வேறுபாடும் மறைந்துவிட்டது. ஸ்ரீநாராயண குருவின் பிரபலமான வாசகம், ‘மதம் ஏதாயால் எந்தா? மனுஷ்யரு நன்னாவணும்’ என்பதாகும். பொருள்: பின்பற்றும் மதம் எதுவாக இருந்தால் என்ன, மனிதர் நல்லவராக இருக்க வேண்டும்.

இறவனை நம்பலாம், நம்பாமலும் போகலாம். கடவுளை வழிபடலாம், வழிபாடு அவசியம் இல்லை என்று நினைக்கலாம். ஆனால் நாராயணகுரு சொன்னதைப் போல, நல்லவனாக இருக்க முயல்வது அவசியம்.

நல்லவன் போல நடிக்க முயல்வதும், மதத்தை, சாதியை வைத்து அரசியல் செய்து ஆஸ்தி சேர்ப்பதும் கேவலமான கீழ்மக்கள் செயல்.

பரிபாடல் குறிப்பிடுவதைப் போல், “யாம் நின்னிடம் இரப்பவை, பொருளும், பொன்னும், போகமும் அல்ல.!” என்பதே ஆகும். புறநானூறு சொன்னாற்போல-  “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்!”

ஜூன், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com