பயணம் செய்வதற்குக் கால்கள் போதும்!

பயணம் செய்வதற்குக் கால்கள் போதும்!
Published on

கோணங்கி, கிட்டத்தட்ட நூறு சிறுகதைகளும், நான்கு நாவல்களையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் “கல்குதிரை' எனும் சிற்றிதழை முப்பதாண்டுகளாகச் சீரற்ற இடைவெளிகளில் நடத்தி வருகிறார். கோவில்பட்டி நகரில் இருப்புப்பாதையின் அருகே உள்ள வீட்டில் வசிக்கிறார். அந்திமழைக்காகத் தொடர்பு கொள்ளும்போது இராமேஸ்வரம் கிளம்பிக்கொண்டிருந்தார்.

‘‘எங்களின் சொந்த ஊரான ஓநாய்ப்பட்டி வைப்பாற்று வெள்ளத்தில் அழிவைச் சந்தித்தது. அந்த பகுதியில் குடியிருந்த விவசாய மக்கள் அருகில் உள்ள மேட்டுக்கு இடம்பெயர்ந்தனர். அதனால் அந்த இடம் மேட்டுப்பட்டி ஆனது. அழிந்துபோன ஓநாய்ப்பட்டியில் வயல்கள் இருந்தன. சில வயல்களைப் பார்க்கும்போது ஓநாய் வால்போல் நீண்டு கொண்டிருக்கும். அப்போதே பயணமும் இடம்பெயர்தலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளாக எங்கள் ஊர் மக்களிடமும், மண் புழுதியிலும் படிந்திருந்தது.

இருக்கன்குடிக்குக் கிழக்கில் முப்பதுகல் தொலைவில் காடல்குடிக்கு வாழ்க்கைப்பட்டுப் போன  கதைச்சொல்லியான என் அத்தையும் மாமனும் பஞ்சம் பிழைக்க நென்மேனி மேட்டுப்பட்டிக்கு வந்தார்கள். வைப்பாற்று தண்ணீருக்கு விளைச்சலும் பஞ்சமும் நெருங்கியும் நெருங்காமலும் இருந்தது. வயிற்றுப் பாட்டுக் காக பூவிழுந்த மாரி மாமாவுடன் புன்னைநல்லூர் தாண்டி களஞ்சேரி கிராமத்தை ராத்திரி அடைந்து  சோத்துப்படி வாங்கி உரலில் குத்தி பசி ஆறினார்கள்..அறுப்புக்கு வந்த ராமநாதபுரத்து சனம் கரையோரம் குடிபோட்டது. மண்டியும் சகதியுமான தண்ணீரில் காலரா பரவி களஞ்சேரியே வெளியேறி ஒடியது. மூணு வாரம் கதிரறுத்த கூலி நெல்லை விற்று மடியில் பணத்தோடு திரும்பவும் காலரா ரயில் ஏறினோர்கள். மானாமதுரை பிளாட்பாரத்தில் மாமன் திடீரென்று வீழ்ந்தார். மடித்துட்டு சிதறியது. மாமா இறந்து சில வருசங்களுக்குப்பின் நானும் செல்வண்ணனும் திண்டுக் கல்லில் இருந்து நெல்மேனி மேட்டுப்பட்டி சொந்த ஊருக்குப் படிக்க வந்தோம். சொந்த ஊரில் அத்தையின் வளர்ப்பில் சோழசீமைக்குச் சோத்துப்படிக்காகப் போன கீகாட்டு சனத்தின் கதையை ஒவ்வொரு இரவும்  சொல்லிவந்தாள்.

பிறகு 1964இல் தனுஷ்கோடி அகதிகள் புயலின் ஓலத்தோடு ஊரூராய் சோத்துப்படி கேட்டு மேற்கு ராமநாதபுரம் வந்தார்கள்.. ஒரு பள்ளிக்கூடமே அழிந்த போது மாண்ட பிள்ளைகளின் குரூப்போட்டோவைக் கழுத்தில் மாட்டி தனுஷ்கோடி வாத்தியார் எங்கள் பள்ளிக்கூடம் வந்தார். அப்போது நான் இரண்டாப்பிலும், செல்வண்ணன் ஐந்தாவது வகுப்பிலும் படித்து வந்தோம். பெற்றோரிடம் ஐந்து நயாபைசா இல்லாததால் நாங்கள் ஒவ்வொருவரும் டவுசர் பையில் தானியத்தைக் கொண்டுவந்தோம். எங்களிடம் தானியம் வாங்கிய தனுஷ்கோடி வாத்தியார் நடந்த புயலின் கதையைச் சொல்லவும் ஊர் சனம் ஒப்பாரி வைத்தது. ஊரே திரண்டு போய் தனுஷ்கோடி அகதிகளுக்கு தவசமும் நெல்லும் காசுமுடிப்பும் கொடுத்து திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

ஆறாம் வகுப்பில் பள்ளியை விட்டே தப்பியோடியதில் ஒரு வருடம் பின்தங்கினேன். என் உயிர் நண்பர்கள்

 ராமசாமி, சாமிகேசவன் ஏழாம் வகுப்பிற்கு முந்திவிட்டனர். என் எட்டாவது வகுப்பை கோவில்பட்டி ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தேன். என் தந்தையும் சர்வே நாடோடியாக இருந்தார். போடிநாயக்கனூர் பாஸஞ்சர் ரயிலின் ஓசையுடன் என் பெற்றோர், அண்ணன் தம்பி தங்கையுடன் ஒவ்வொரு ரயில் நிலையமாக இடம் மாறினோம். களிமண் பூசிய

சேத்தாண்டிகள் கந்தலை உடுத்தி பஞ்சம் பிழைக்கப்போன கொலக்கால் பாதையைத் தொட்டவாறு ஒவ்வொரு நகரமாக மாறிப் போய்க்கொண்டிருந்தது எங்களின் குடும்பம். வெகுநாளாக மனசுவிட்டு விரிந்து திரிய, எந்த ஊரில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளும் மனநிலையை எனக்குள் உருவாக்கியது இந்த சூழல்தான். ஒரு சோல்னா பையுடன் போக வேண்டி இடத்திற்கான காசு மட்டும் கிடைத்தால்போதும், ஊர் சுற்றும் இன்பத்திற்காகவே இப்படி சிலகாலம் வாழ்ந்திருக்கிறேன்.

1976-இல் முதன் முதலில் எட்டயபுரம் பாரதிவீட்டுக்குப் பக்கத்தில் டவுன் கூட்டுறவுச் சங்கத்தில் காரியதரிசியாக நியமிக்கப்பட்டது தற்செயலானதுதான். ஒரு வருடம் அங்கே வேலைப்பார்த்தேன். அப்போது செப்டம்பரில் நடந்த பாரதிவிழாவில் எழுத்தாளர் தொ.மு.சி ரகுநாதன், தாமரை இதழ் ஆசிரியர் தி.க.சி, மற்றும் கலைஇலக்கிய பெருமன்ற எழுத்தாளர்களையும் சந்தித்தேன். அதன் பிறகு கயத்தாறுக்கு மாறுதலாகி வந்துவிட்டேன். ஆசூர், தளவாய்புரம் கிராமக் கூட்டுறவுச் சங்கத்தில் இருபது கிராமங்கள் இணைந்திருந்தன. அன்று கிராம வாழ்வும் விவசாயமும் அழியாமல் இருந்தது. என்னை உருவாக்கிய கிராமப்பாதைகளும் பனைகள் மூடிய ஓடைக்காடுகளும் கம்மங்காடுகளும் செழிந்திருந்தன. கடன் கொடுத்த இருபது கிராமங்களுக்கும் தினசரி சைக்கிளில் சென்று வந்தேன். ஊருக்கு ஊர் காட்டுப்பாதைகளும் வண்டித்தடங்களும் கதை சொல்வதை நடுக்காட்டில் கேட்டிருந்தேன். காப்புலிங்கம்பட்டி என்ற வெளியாள் அதிகம் வராத வினோதமான கிராமம் கடம்பூருக்கும் கயத்தாருக்கும் இடையிலிருந்தது. 1978-இல் கூட்டுறவு கடன் வசூல் கெடுபிடியாக நடந்தது. போலீஸோடு வந்து விவசாயிகளை ஜப்தி செய்தார்கள். கரட்டாண்டி முட்டையிடப் பயந்து ஒடும் நிலத்திலிருந்தும், கலப்பைகள் ஒடிந்து திணறும் கரிசல் சம்சாரிகளின் மண்கால்களோடு மருள் வந்து, சொல்வோரும் கேட்போரும் குலவையிட்டு ஓடி ஆடும் மயானக் கொள்ளையிலிருந்து தீப்பந்தம்

சுற்றி பிணந்தின்ன வரும் சிறு தெய்வங்களின்

சாட்சிக்கு கட்டுபட்டதால் வேலைக்குச்செல்ல மனம் ஒப்பவில்லை. ஒவ்வொரு விவசாயி களின் துயரத்தையும் 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' என்ற குறு நாவலில் எழுதினேன். எத்தனையோ கதைகளுக்கு அந்த கிராமங்களும் காடுகளும் பின்னணியாக இருந்து வருகின்றன. இன்று தெம்மாங்கையிழந்த காற்று வீசுகிறது. வண்டிப்பாதை விவசாயம் மெல்ல மறைந்து வருகிறது. வண்டிப்பாதைகளில் போக்குவரத்து இல்லை. மண்மூடிய பாழ் கிணற்றை எட்டிப்பார்த்தபடி நின்றிருந்தது. வெற்றுத் தெலாக்கல்.

1989 அக்டோபர் 30ஆம் தேதி விருத்தாச்சலம் அருகிலுள்ள பூவனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிக் கிளம்பிய பகல் நேரத்து பாசஞ்சர் வண்டியில் சிறுகதை எழுத்தாளர் உதய

சங்கர் அங்கு ஸ்டேசன் மாஸ்டராக இருந்து பச்சைக் கொடி காட்டியதில் கடைசிப்பெட்டியில் இருந்த நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கடைசி மூன்று ரயில்பெட்டிகளை விழுப்புரத்தில் களைந்துவிட்டு சென்னைக்கு ரயில் போய்விட்டது. தூங்கி விழித்தப்போது ரயில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்தது. உளுந்தூர் பேட்டைக்கு வெளியே ரயில் மூச்சு விட்டு நின்றபோது இறங்கி செங்குறிச்சி முக்கூட்டுச்

 சாலைக்குப்போய் தற்செயலாய் வந்த சேலம் பஸ்சில் ஏறி,

சின்னச்சேலம் கல்லாநத்தம் என்ற ஊரில் சௌந்தர்ய அருளிடம் போய் சேர்ந்தேன். அங்கு சுற்றி திரிந்ததில் கல்வராயன் மலைக்குப் பக்கத்தில் வனம் திரியும் இருளனைச் சந்தித்தேன். ‘இதோ கல்குதிரை, இந்த கல்குதிரைக்கு சக்தி இருந்தால் உயிரூட்டி சவாரி செய் பிடி வரம்' என்றான்...

கல்குதிரைக்கான பாதை குகை என்ற இடமான திருவான்மியூரில்தான் ஆரம்பமானது.. பின்னர் அந்த இடம்தான் கல்குதிரையின் முகவரியாகவும் மாறியது. முதல்இதழ் கல்குதிரை துவங்குவதற்கு பிரமிளைப் பார்ப்பதற்காக என்னை விக்கிரமாதித்தன் கூட்டிட்டு போனார். பிரமிள் என்னைப் பார்த்தவுடன் ‘காண்டுமிராண்டி, வெளியே நில்' என்றார். என் விரல்களில் வளர்ந்திருந்த நீளமான நகத்தைப் பார்த்துதான் அப்படி சொன்னார். ஒரு யானத்தில் (கிண்ணம்) தண்ணீர் கொண்டுவந்து என் நகங்களை நனைத்து அவரே வெட்டிவிட்டு ‘உள்ளே வா' என்று அழைத்தார். அப்போது அந்த அறையில் காலசுப்பிரமணியன் இருந்தார். கல்குதிரையின் முதல் இதழுக்கு அவரிடமிருந்து ‘வரலாற்று சலனங்கள்' கட்டுரை கேட்டேன். மகத்தான கவிஞனின் அந்த கட்டுரையோடு கல்குதிரை துவங்கியது. 1989 நவம்பரில் முதலிதழ் தோழர். வைகறை வாணன் நடத்தி வந்த ராசகிளி அச்சகத்தில் ஒருமாத காத்திருப்பில் கல்லூரி மாணவர்களின் தேநீர், சிகரெட் குடிக்கிற காசுகளை வைத்துதான் இதழைக் கொண்டுவந்தேன். கல்குதிரையை நடத்துவதற்கு ஆதார முகவரியாக த.அஸ்வதரன் இருந்தான். தனி இதழ் ஐந்து ரூபாய் ஆண்டுச் சந்தா இருபது ரூபாய்.. ஒரு இதழ் கொண்டுவர பத்து மாதங்கள் வரை ஆனது. அப்போதுதான் எனக்கு  சென்னையில் காசு இல்லாமல் வாழ்வதற்கான பாதையைச்  சொல்லிக்கொடுத்தார் விக்கிரமாதித்தன்.. ஓராண்டு விளைச்சலுக்காக ஒரு விவசாயியைப்போல் காத்திருப்பதும், ஓராண்டு மழை பொய்த்துவிட்டால் விளைச்சல் சுருங்குவதையும் கல்குதிரை இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

அதேபோல் நகுலனைப் பார்ப்பதற்கு  செங்கோட்டையிலிருந்து வண்ணநிலவனின் கவிதைகளில் ஒன்றான 'குளத்துப்பிழை ஆறு' வழியாக கேரளாவிற்குக் கூட்டி சென்றதும் விக்கிரமாதித்தன்தான். கோல்ப் விளையாட்டு மைதானத்தின் அருகே அவரது வீடு இருந்தது. அந்த வெள்ளை பந்தே தாவி வந்து என்னை கூட்டிக்கொண்டு போனமாதிரி.இருந்தது விக்கிரமாதித்தனின் உறவுதான் நகுலனின் சிறப்பிதழ் கொண்டு வருவதற்குத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல எஸ்.வி.ராஜதுரையின் மாணவர்கள் பலர் கல்குதிரையில் ஒன்றிணைந்தார்கள் காசு வரும்போகும். ஆனால். நூற்றுக்கணக்கான பேர் கல்குதிரை இதழுக்காக உதவியிருக்கிறார்கள்

என் வாழ்க்கையில் உரையாடல் வழியாக, பேச்சுவழியாக, விமர்சனத்தின் வழியாக, நமது துடுக்குத்தனத்தை மண்டையில் ஒரு கொட்டு கொட்டி வளர்த்தெடுப்பதன் வழியாக மிக முக்கியமாக பங்களித்தவர்கள் பிரமிள் மற்றும் நகுலன். இவர்கள் இருவரிடமும் என்னை அறிமுகம் செய்தவர் விக்கிரமாதித்தன். அதை மறக்கமுடியாது. விக்கிரமாதித்தன் எனக்குத் தொடர்புகளை ஏற்படுத்திவிட்டார். தொடர்ந்து ஒவ்வொரு கதைக்கும் கடிதங்கள் எழுதுவார் . மொழிவழியாக பிரமிளை எடுத்துக்கொள்கிறேன். பித்தநிலையையும், அரூபசலனங்களையும் நகுலனிடத்தில் இருந்தும், நிலப்பரப்பையும் வானையும், இணைக்கிற நீர்கோடாக புனைவு பாதை வழியாக சென்ற ப.சிங்காரத்தின். நாவலின் வடிவத்தை இன்னொன்றாகவும் எடுத்துக் கொள்கிறேன். பிரமிள், நகுலன், ப. சிங்காரம், வள்ளலார் போன்றவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள். இவர்களைதான் என்னுடைய மூதாதையர்களாக கருதுகிறேன். அவர்களின் வாழ்வியல் தடங்களில்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன்.

மகாதேவன் ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போவதற்கு கையில் காசு கொடுப்பார். குறிப்பிட்ட இடத்திற்கு போக நினைக்கும் போது எங்கெங்கிருந்தோ கையில் காசு வரும். தங்குவதற்கு நூறு இடங்கள் சென்னையில் இருந்தன. திருவல்லிகேணி மேன்சன்களுக்கு நவீன இலக்கியத்திற்கான நான்கு திசைகளில் இருந்து வரும் படைப்பாளிகளைக் காக்கும் தன்மை உண்டு. ரத்னா கபே காபிக்கும் உண்டு. சரஸ்வதி மேன்சனுக்கும் உண்டு. திருவல்லிகேணி எழுத்தாளர்களுக்கான இடமாக மாறியிருந்தது. இந்த புரிதலால்தான் காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் நகருவது சாத்தியமானது,' என்கிறார் கோணங்கி.

பயணம் செய்வதற்கு பணம் தேவையில்லை கால்கள்தான் தேவை என்ற பொன்மொழிக்கு சொந்தக்காரான கோணங்கி தனுஷ்கோடியில் இருந்து லோத்தல் கடலடி வரை இந்தியாவின் நாற்திசைகளிலும் பயணித்திருக்கிறார். 2002-இல் அவரது நண்பர் ஏ.எஸ். பன்னீர்செல்வமும் அவரது துணைவியாரும்தான் இவரை லண்டன் அனுப்பிப்பார்க்க ஆசைப்பட்டு நிறைவேற்றினார்கள்.

பிப்ரவரி, 2023.

logo
Andhimazhai
www.andhimazhai.com