சாப்பாடு முதல் மளிகைவரை எல்லாவற்றுக்கும் மொபைல்களில் செயலிகள் வந்துவிட்டன. ஆனால் தமிழ்நாட்டில் கோயில்களுக்கு செல்கிறவர்களுக்கு உதவியாக கைபேசியில் செயலிகள் இல்லையே என்ற யோசனைக்குப் பின் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது temple tourisms என்கிற செயலி.
ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி என்ன இருக்கிறது என்று பார்த்தோம்.
இந்த செயலியின் முக்கிய அம்சமே நாம் எங்கு இருக்கிறோமோ அதைச் சுற்றிய கோயில்களைக் காண்பிப்பதுதான். சென்னை என்று நமது இடத்தைத் தேர்வு செய்தோம். இங்கிருக்கும் முக்கிய கோயில்களான கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோயில், பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் என்று வரிசை கட்டி நின்றன இந்துக்கோயில்கள். அதே வரிசையில் சாந்தோம், லஸ் கிறித்துவ தேவாலயங்களும் மசூதி, தர்காக்களும் காண்பிக்கப்படுகின்றன.
நவதிருப்பதி, நட்சத்திரக்கோயில்கள், பரிகாரப் பயணங்கள் என எதற்கும் பிறர் உதவியை நாடவேண்டிய தேவை இல்லாமல் அனைத்துவிவரங்களையும் இந்த செயலியே தந்துவிடுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
கோயில் பெயரை அழுத்தினால் உள்ளே அக்கோவில் பற்றிய சிறுகுறிப்பு, வழிகாட்டும் மேப், கோவிலில் மூலவர், தாயார், தலவிருட்சம், தல தீர்த்தம், பூசைகள் திருவிழாக்கள் பற்றி தெளிவான குறிப்புகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல அருகே இருக்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், அப்பகுதியில் கிடைக்கும் சிறப்பு உணவுகள்,
சுற்றுலா இடங்கள், பிற முக்கியமான கோவில்கள், விமான நிலையம், ரயில் நிலையம் என்று எல்லாம் பக்காவாக திரையில் விரிகின்றன.
“நீங்கள் ஒரு ஊருக்குப் போய்விட்டீர்கள்; அங்குள்ள கோயிலுக்குப் போகும் முன்பாக அங்கே பூஜைகள் செய்ய ஒரு குருக்களை ஏற்பாடு செய்ய விரும்பிகிறீர்கள். அதற்கும் இந்த செயலியில் வழி இருக்கிறது. ஒவ்வொரு கோயிலையும் சார்ந்துள்ள குருக்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள இதில் வழி உள்ளது. அதுமட்டுமல்ல, எந்த ஊர் கோயிலின் குருக்கள் உங்களுக்கு வேண்டுமோ அதைப் பதிவு செய்து வைத்தாலும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் உங்களைத்தொடர்பு கொள்ளவும் இதில் வசதிகள் ஏற்படுத்தி வைத்துள்ளோம்‘ என்கிறார் இந்த செயலியை உருவாக்கி நிர்வகிப்பவரான விவேக் நெல்சன்.
‘கோயில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள், அவற்றை சென்றடையும் மேப்கள், தங்குமிடங்கள், அவற்றைப் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள் என எல்லாவற்றையும் முழுமையாகத்தரக்கூடிய பயணத் துணைவனாக இதை வடிவமைத்துள்ளோம்‘ என்கிறார் அவர்.
மூவாயிரம் ஆண்டு பழைமையான பாறை ஓவியங்கள், ஜமீன் பங்களாக்கள், கோயில்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள் என நாம் இருக்குமிடத்துக்கு அருகில் இருக்கும் சுற்றுலா சார்ந்த எதையும் விடாமல் இச்செயலி காண்பிக்க முயற்சி செய்கிறது.
ஆண்ட்ராய்டு, ஐ ஓஎஸ் இரண்டுக்குமான செயலிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலம், தமிழ் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்தமுறை ஆன்மிக சுற்றுலா தமிழ்நாட்டுக்குள் செல்லுகையில் temple tourisms செயலியை தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்!
ஏப்ரல், 2023