பன்முகத் திறனாளர்கள்

Published on

ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது தனிக்கலை. அவற்றில் முத்திரைப் பதிப்பது மிகச்சிறப்பு. எழுத்து, ஓவியம், திரை, வணிகம், தொலைக்காட்சி என ஒரே சமயத்தில் பல துறைகளில் செயல்படும் துடிப்பான இளைஞர்கள் நம் மண்ணுக்குத்  தேவை. அதில் சிலரைப் பற்றி.

சந்தோஷ் நாராயணன்: ஆனந்த விகடனில் அஞ்ஞானக் கதைகள் எழுதுகிறவர் என்றால் சட்டென்று விளங்கிவிடும். நாகர்கோயில் அருகே மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர். சென்னை ஓவியக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றவர். “பலஆண்டுகள் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களுக்கு அட்டை வடிவமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் பணியை மேற்கொண்டிருந்தேன். பதிப்பகங்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் அதிலிருந்து விளம்பரத் துறைக்குச் சென்று-விட்டேன்.” என்கிறார் சந்தோஷ். ஜேடபிள்யூடி, ஓ அண்ட் எம் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கும் இவர் மினிமலிசம் என்ற பெயரில் செய்யும் ஓவியங்கள் பலரையும் கவரும் விதமாய் உள்ளன. இப்போது விகடனில் கலைடாஸ்கோப் என்ற பெயரில் பலரால் ரசிக்கப்படும் சுவாரசியமான தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார்.  மனசுக்குள் சினிமா மீதான கனவை இவர் அடைகாக்கிறார்.

பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்: காரைக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ், அங்கே பி.காம் படித்தபின்னர் சென்னைக்கு திரை இயக்கம் படிப்பதற்காக வந்துசேர்ந்தார். அதன்பின்னர் மக்கள் தொடர்பியலில் முதுகலைப்பட்டமும் இப்போது சட்டமும் படித்துக்கொண்டிருக்கிறார். 14 வயதிலிருந்து திராவிடர் கழக ஏடான உண்மையில் எழுதிக்கொண்டிருப்பவர், இப்போது அந்த இயக்க ஏடுகளான உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியற்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 2007-ல் தொடங்கப்பட்ட பெரியார் வலைக்காட்சியில் படைப்பாக்கத் தலைமையையும் வகிக்கிறார். இப்போது திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளர் பொறுப்பையும் வகித்துவருகிறார் இந்த சுறுசுறுப்பான இளைஞர். ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், குறும்படங்கள் ஆவணப்படங்களும் இயக்கி உள்ளார். அகில இந்திய அளவில் கல்வித்துறையில் இடஒதுக்கீட்டின் சவால்கள் குறித்து ஓர் ஆவணப்படம் ஒன்றை இயக்கிவருகிறார்.

ஆர்.முத்துக்குமார்: திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு என்று குறிப்பிடத்தக்க நூல்கள் உள்ளிட்ட 25 புத்தகங்கள் எழுதியிருக்கும் முத்துக்குமார் எம்.சி.ஏ. பட்டதாரி. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். படிப்பு முடித்ததும் மென்பொருள்துறையில் எந்த வேலைக்கும் போகாமல் சென்னை வந்து கல்கி பத்திரிகையில் ப்ரீலேன்சராக இரண்டு ஆண்டுகள் வேலைபார்த்தார். கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் உதவி ஆசிரியராக இணைந்து, பொறுப்பாசிரியராக வளர்ந்தார். இப்போது சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தில் ஆசிரியர். பல பத்திரிகைகளில் அரசியல் சார்ந்த வரலாற்றுத் தொடர்கள் எழுதிகொண்டிருப்பவர், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் முக்கியமான அங்கமாக மாறி உள்ளார். தனக்கு இன்ஸ்ப்ரேஷனாக எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவைக் கருதும் இவர், மேலும் மேலும் தமிழக அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த வரலாற்றுத் தகவல்களை நூல்வடிவில் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளார்.

சி.சரவண கார்த்திகேயன்: கோவையைச் சேர்ந்த சி.சரவண கார்த்திகேயன், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு  பெங்களூருவில் மென்பொருள்துறையில் பணிபுரிகிறார். பள்ளியில் படித்த காலத்திலிருந்தே  வாசிப்பார்வமும் கவிதை எழுதும் ஆர்வமும் இருந்தது. குங்குமத்தில் வாசகர்களின் முத்திரைக்கவிதையாக இவரது கவிதை தேர்வானதுதான் பத்திரிகையில் வெளியான இவரது முதல் எழுத்து. 2007-2012 காலகட்டத்தில் வலைப்பூ எழுத்துகளில் பலரும் ஆர்வம் காட்டியபோது படுதீவிரமாக இயங்கியவர். இப்போது ட்விட்டரில் மிகப் பிரபலமாக இயங்குகிறார். கார்த்திகேயனுக்கு இன்னொரு முகம் தமிழ் என்ற பெயரில் அவர் நடத்தும் மின்னிதழ். மூன்று கனமான இதழ்களைக் கொண்டுவந்திருக்கிறார். ‘பெரும்பாலும் சமூக ஊடங்களில் சிறப்பாக எழுதுபவர்களின் எழுத்துகளை இதில் இடம்பெற வைக்கிறேன். அது மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களின் எழுத்துகளும் இடம்பெறுகின்றன. எழுதுகிறவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்கிறேன். அதை நிரப்புவதற்கான முயற்சி இந்த இதழ்” என்கிற இவர் ஐந்து நூல்களை எழுதி இருக்கிறார். அதில் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் உண்டு. இவர் எழுதிய சந்திராயன் என்ற நூல் தமிழக அரசின் விருதுபெற்றது.

வேடியப்பன்: சினிமா ஆர்வத்துடன் தர்மபுரி பக்கம் கைலாயபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர் வேடியப்பன். இன்று சென்னை கேகே நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசை நடத்திவருகிறார். இலக்கிய நூல்களுக்கான புதிய சந்தைவாய்ப்பை உருவாக்கிய முன்னோடியாகவும், இலக்கிய நிகழ்வுகளையும் நூல்விற்பனையும் ஒருங்கிணைத்து வடிவமைத்தவராகவும் அடையாளம் காணப்படுகிறார். ”சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கு நவீன இலக்கியத்துடன் தொடர்பை ஏற்படுத்தத்தான் ஆரம்பத்தில் புத்தகக் கடை தொடங்கினேன். இப்போது 25 தலைப்புகளில் நாங்களே நூல்களையும்  கொண்டுவந்திருக்கிறோம்.” என்கிற வேடியப்பனுக்கு  திரைப்பட இயக்குநராக வெற்றி பெறுவது தீராத கனவு. விரைவில் நனவாகும் என்கிற நம்பிக்கையுடன் செயல்படுகிறார்.

செப்டெம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com