பத்திரிகையாளர்கள்

Published on

எல்லோரையும் பற்றி செய்தி எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களையே செய்தி ஆக்கி இருக்கிறோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து எழுதிக்கொண்டிருக்கும் செய்தியாளர்கள், அலுவலகத்தில் கட்டுரைகளைத் திருத்திக்கொண்டிருக்கும் உதவி ஆசிரியர்கள் என்று இருமுனைகளைக் கொண்டது அச்சு ஊடகம். அதிலிருந்து சில நட்சத்திரங்கள்.

டி.எல்.சஞ்சீவிகுமார்: சேலம் தினமலரில் நிருபராக பணியை தொடங்கியவர். தற்போது தி- இந்து தமிழ் நாளிதழில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார்.  தினமலரில் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சுமார் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் விகடன் குழுமத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.

ஜூனியர் விகடனில் இவர் எழுதிய ‘மயக்கம் என்ன? குடி குடியைக் கெடுக்கும்’ என்கிற குடிபோதைக்கு எதிரான 48 அத்தியாயங்களாக வெளிவந்த தொடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே கருத்துகளை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்பு ‘தி இந்து’ தமிழில் ‘மெல்லத் தமிழன் இனி’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடரும் பெரும்பாலோனோரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இவை தவிர, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அநேக வனப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று களப்பணிகள் மூலம் தொடர்ந்து சுற்றுசுழல் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

உத்தரகாண்ட் பேரழிவுக்கு பின்பான அங்கிருந்த நிலைமையை நேரில் கண்டு எழுதினார். மகாராஷ்டிரம் பன்னா காப்பகத்தில் புலிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டது உட்பட - இந்தியா உள்ளிட்ட புலிகள் வாழும் நாடுகளில் புலிகளின் நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு சிறப்புக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தல் தொடர்பாக 20 பேர் கொல்லப்பட்ட போது ஆந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட ஜவ்வாது மலைக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தொடர் கட்டுரைகளை தி இந்துவில் எழுதியிருக்கிறார். தாமிரபரணி, பவானி ஆறுகள் பற்றிய தொடர் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.

ம.கா.செந்தில்குமார்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் விகடனில் உதவிப்பொறுப்பாசிரியர். சினிமா, கிரைம், பொது விஷயங்கள் என்று எல்லாப் பிரிவுகளிலும் புகுந்து செய்திக்கட்டுரைகள் பேட்டிகள் என்று வெளுக்கிறவர். பூண்டி கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் படித்தவர் சென்னைக்கு வந்து பத்திரிகை ஆர்வத்தில் ஒரு இதழில் கணிப்பொறி தட்டச்சராக வேலைபார்த்து, அங்கிருந்து இன்னொரு பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர். அதன் பின்னர் தினகரன், விகடன் என்று தாவியவருக்கு ஒரு திருப்பம். விகடனில் வி.ஏ.ஓ தேர்வுக்காக நூல் எழுதித் தந்தார். அத்துடன் இவரும் தேர்வு எழுத, விஏஓ வேலை கிடைத்துவிட்டது. பதினோரு மாதங்கள் மட்டுமே அரசு வேலை பார்க்க முடிந்தது. வேலையை உதறிவிட்டு மீண்டும் விகடனுக்கே வந்துவிட்டார். “பத்திரிகை வேலை, அரசுவேலை இரண்டையும் பார்த்தாயிற்று. இதில் எது பிடித்திருக்கிறது என்று யோசித்து ஒரு முடிவை எடுத்தேன்” என்கிற செந்தில்குமார் இப்போது விகடனில் வரும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறார்!

கி.கார்த்திகேயன்: பொதுவாகப் பத்திரிகை அலுவலகங்களில் உள்பணி செய்கிற பத்திரிகையாளர்களை யாரும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் இதழைக் கொண்டுவருவதில் அவர்களின் பணி மகத்தானது. செய்தியாளர்களை ஒருங்கிணைத்து, பேட்டிகளுக்கான கேள்விகளை தயாரித்தளித்து, கட்டுரைகளை சரிபார்த்து, அருமையான தலைப்புகள் தந்து, வடிவமைப்புக்கு அனுப்பி பக்கங்களைத் தயார் செய்யும் வேலை. கார்த்திகேயன் ஆனந்தவிகடனில் இப்போது முதன்மை பொறுப்பாசிரியராக இந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். “2005-ல் ஆனந்தவிகடன் மாணவ நிருபர் திட்டத்தில் இணைந்து அந்த ஆண்டு மிகச்சிறந்த மாணவ  நிருபராகத் தேர்வு பெற்றேன். பின் விகடனிலேயே வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நிருபர், மூத்த நிருபர், பின் பொறுப்பாசிரியர் என்று பதவி உயர்வுகள் கிடைத்தன. வந்து சேர்ந்த ஆரம்பத்தில் சென்னையில் இவ்வளவு பேர் பிளாட்பாரத்தில் வசிப்பது பற்றி ’கேர் ஆஃப் பிளாட்பார்ம்’ என்று ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தது நிறைவை அளித்தது” என்கிற கார்த்திகேயன் ஆங்கிலத்தில் வரும் சுயநம்பிக்கை நூல்களைப் படித்து அதன் சாரத்தை எளிமையாக விகடனில் எழுதுவதன் மூலம் கவனத்தை ஈர்ப்பவர். விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் தரும் ஊக்கமும் உற்சாகமும் முக்கியமானது என்கிற இவர், “செய்கிற வேலையை ரசித்துச் செய்கிறேன். விகடனின் பக்கங்களை ஒழுங்குசெய்வதில் ஒரு போதை இருக்கிறது” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஜெகதீஷ் ராஜசேகர்: எம்.பி.ஏ. பட்டதாரியான ஜெகதீஷ், ஒரு பெருநிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கினார். ஆனால் வேலைச் சூழல் அவருக்கு பிடிக்கவே இல்லை. குறைவான சம்பளமாக இருந்தாலும் நிறைவான வேலையாக இருக்கவேண்டும் என்பதற்காக வந்து சேர்ந்த இடம் பத்திரிகைத் துறை. நியூஸ் டுடே வில் ஆரம்பித்தவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில- காலம் வேலைபார்த்தார். தினமணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிகிறார். ரயில்வே, மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை பற்றி தொடர்ந்து எழுதிவருகிறார். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டபணிகள் பற்றி ஆரம்பத்திலிருந்தே அவர் எழுதிவரும் செய்திக்கட்டுரைகள் கவனம் பெற்றன. “எனக்கு பயணங்கள், காட்டுயிர், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் உண்டு. எனவே அந்த துறைகள் சார்ந்த செய்திக்கட்டுரைகளை இப்போது எழுத ஆரம்பித்துள்ளேன். சூழல் பற்றிய சரியான அக்கறையையும் கவனத்தையும் சமூகத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன்” என்கிறார் ஜெகதீஷ்.

கார்ட்டூனிஸ்ட் பாலா: மும்பையில் பிறந்துவளர்ந்த பாலா, செய்தி ஊடக ஆர்வத்தால் அங்கே மும்பை தமிழ்டைம்ஸ் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். கூடவே அரசியல் பார்வை கொண்ட கார்ட்டூன்களாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார். எதற்கும் வாய்ப்பிருந்தால் முயற்சி செய்வோமே என்று சென்னையில் குமுதம் அலுவலகத்தில் வேலைக்குச் சேர முயற்சி செய்தார். பணியும் கிடைத்தது. அதிலிருந்து பத்து ஆண்டுகளை அப்பத்திரிகையின் கார்ட்டூனிஸ்டாக கடந்துவிட்டார். அழுத்தமான கோடுகள், மிக அழுத்தமான அரசியல் விமர்சனம் -இதுதான் பாலாவின் பாணி. பத்திரிகை மட்டுமல்ல சமூக ஊடகத்திலும் துணிச்சலாக தன் சொந்தக் கருத்துகளை வெளியிட்டுவருகிறார். தெளிவான அரசியல் பார்வை கொண்டவராக இருப்பதே இவரைத் தனித்துக்காட்டுகிறது. அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதவும் ஆர்வம் காட்டுகிறார். “என் அரசியல் பார்வை வாசிப்பினாலும் பெரியாரிய, இடதுசாரிய, நக்சல் பாரிய நண்பர்களின் உறவினாலும் உருவானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால் பொதுமக்களின் பார்வைக் கோணத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் கார்ட்டூன்கள் வரைவதற்கு உதவியாக இருக்கிறது” என்கிறார்.

அதிஷா: கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத்குமார் என்கிற அதிஷாவின் துடிப்பான எழுத்துகளை புதிய தலைமுறை இதழில் காணலாம். ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்துக்கொண்டிருந்த அதிஷா, எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். சமூகம், சினிமா, இலக்கியம், விளையாட்டு, தொழில்நுட்பம் என்று சகட்டுமேனிக்கு புகுந்து விளையாடும் எழுத்துகள் இவருடையது. பயணம், அறிவியல், சாகசம் என்று இருக்கும் இளைஞரான இவர் புதியதலைமுறை இதழில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத விளையாட்டுத்துறை வீரர்களைப் பற்றி எழுதிய தொடர் கவனத்தைப் பெற்றது. அதிஷா ஒரு மாரத்தான் ஓட்டக்காரரும் கூட. புதிய தலைமுறை இதழில் அசிஸ்டண்ட் எடிட்டராக இருக்கும் இவர், “இன்று வாசகர்களுக்குத் தெரியாத விஷயங்களோ கூகுளுக்குத் தெரியாத விஷயங்களோ இருக்கமுடியாது. எனவே பத்திரிகையில் எழுதும்போது அதே விஷயங்களை உயிரோட்டத்துடன் கொடுக்கவேண்டும். அத்துடன் அது பகிர்தல் என்ற ரீதியில் அமையவேண்டும். இதைச் சார்ந்தே நான் இயங்கவிரும்புகிறேன்” என்கிறார்.

ப்ரியா கண்ணன்: ப்ரியா, வயது 37, சொந்த ஊர்  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். ஆனால் பிறந்து வளர்ந்தது சென்னை.  மக்கள் தொடர்பியல், உளவியல் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு தினமலரில் தொடங்கியது பத்திரிகைப் பணி. அதன் பின் 2006ல் இருந்து இன்றுவரை தினகரன் நாளிதழில் வசந்தம் இணைப்பிதழின் சீனியர் நிருபராக பணியாற்றுகிறார். 

15 வருட பத்திரிகை அனுபவத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்டுள்ளார். அதில் குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த செய்திக் கட்டுரைகள் அதிகம். வெகுஜன ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்படாத பெண்களை ஊடக வெளிச்சத்துக்குள் கொண்டு வந்து அவர்களை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன இவரது கட்டுரைகள்.  இவரது கணவர் அருண் சுவாமிநாதனும் ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.

செப்டெம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com