உண்மையில் நானொரு கோழை. எது பாதுகாப்பானதோ அதைமட்டும் நான் சொல்வேன். எது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அதைமட்டுமே விமர்சிப்பேன். நாம் உண்மையைச் சொல்லமுடியாது என்பதே உண்மை. நாம் ஒரு பார்வையை முன்வைக்க முடியாது என்பதே ஏற்றுக்கொள்ளக்கூடிய பார்வை. இந்த சென்ஸிடிவான சொற்களின் அகராதியை, துரதிருஷ்டவசமாக நிறைய சிரமப்பட்டு உருவாக்கினேன். சொற்களை வடிகட்டும் திறனில் சிறந்துள்ளேன். எந்த வார்த்தையை அல்லது சொற்றொடரை நீக்குவது என்று எனக்குத் தெரியும். நீக்கப்படுவதை அதுதான் வழி என்று ஏற்றுக்கொண்டுள்ளேன். சிலசமயம் நானே நேரத்தை மிச்சப்படுத்த அதைச் செய்துவிடுவதுண்டு. இதை நான் காயடிக்கப்பட்ட எழுத்து என்பேன். நானே காயடிக்கப்பட்டவன். மருத்துவர் கத்தியை எடுக்கும்முன்பே என்னை நானே காயடித்துக்கொண்டுள்ளேன்”
-முராங் ஸ்யூகன்
சுதந்திரம் என்பது முழுமையானது. அதில் பாதி என்று ஒன்று இல்லவே இல்லை
-டேனியல் டெல்காடோ எப்
நீங்கள் சொல்வதை நான் மறுக்கலாம், ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையைக் காக்க நான் உயிரையும் தருவேன்
-எஸ்.ஜி. டாலண்டைர்
முன்னுரையாக எழுத நினைத்ததை ஏற்கெனவே மூன்று பேர் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள் அவர்களது வார்த்தைகள் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுபவர்களுக்கு எதிரானது, ஏற்கனவே நம்பப்படும் வழக்கங்களுக்கு /மதங்களுக்கு எதிரானது, மற்றும் பாலியல் / தனிமனித வாழ்வு ரகசியங்கள் சம்பந்தப்பட்டது என்று மூன்று பிரிவுகளின் கீழ் தடை செய்யப்பட்ட படைப்புகளை அடக்கலாம்.
தடைகள் பல வேளைகளில் படைப்புகளைப் பிரபலப்படுத்தியிருக்கிறது.
சல்மான் ருஷ்டியின் , The Satanic verses ’ தடைசெய்யப்பட்டபின் தான் அதிகமாக விற்றிருக்கிறது’ இது போன்ற உதாரணங்கள் தமிழகம் தொடங்கி உலகம் முழுவதும் உள்ளது.
இன்றைய உலகின் ஆளும் வர்க்கம் இணைய வெளியில் பரவும் எதிர் கருத்துக்களை தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
படைப்புகளின் தடை மற்றும் அது படைப்பாளிக்கு தரும் வலியை பதிவு செய்ய முயன்றிருக்கிறோம். படைப்புச் சுதந்திரம் பக்கம் துணை நிற்க விரும்பும் அந்திமழை பல முறை தனது நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டிருக்கிறது. இந்த இதழில் கூட அது நிகழ்ந்துள்ளது.
எதிர்க்கருத்துகளை கண்ணாடியாக பாவிக்கும் நபர் தனது முகத்தின் குறைகளை சரி செய்ய முடியும்.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்
ஏப்ரல், 2017 அந்திமழை இதழ்