பசித்த மாணவர்கள்

பசித்த மாணவர்கள்
Published on

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன்.

அந்த ஆசிரியரோ வகுப்பறையில் சில மாணவர்களை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் பேசுவதற்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்த ஆசிரியரிடம், ‘ஏன் சார், காலையிலேயே பசங்கள நிக்க வச்சு வகுப்பெடுக்கிறிங்க?' எனக் கேட்டேன்.

‘பசங்கள நிக்க வச்சு தொந்தரவு படுத்தல..இரண்டாவது பீரியடிலையே மாணவர்கள் சிலர் டயர்டாக இருந்தாங்க.. எத்தனை பேர் காலையில் சாப்பிட்டு வந்தீங்க கேட்டேன். சிலர் எதுவும்

சொல்லல. சாப்பிடாம வந்தவங்க எழுந்திரிங்க என கேட்டேன். 11 மாணவர்கள் சாப்பிடலன்னு சொன்னாங்க. அதில் ஏழு மாணவர்கள் தினசரி காலையில சாப்பிட மாட்டாங்களாம். ஏன்னு கேட்டா, அவங்க வீட்ல ராத்திரியில் மட்டும் தான் சமைப்பாங்-களாம். காலையிலேயே அப்பா அம்மா வேலைக்கு போயிடுவாங்க. இந்த பசங்களுக்கு மத்தியானம் ஸ்கூல்ல போடுற சத்துணவு தான் சாப்பாடு.  இத பத்திதான் ஒவ்வொரு மாணவரிடம்  பேசிட்டு வந்தேன்' என வருத்தத்தோடு அந்த ஆசிரியர்  சொன்னார்.

உலகத்தில் எந்த ஊரில் கிடைக்கும் பொருட்களையும் வாங்குவதற்கு வாய்ப்புள்ள சென்னை திநகர் பாண்டிபஜார் பகுதியில், ஒரு பள்ளியில் ஒன்பது மாணவர்கள் வீட்டில் சோறு இல்லை என்பதற்காக

சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் எனில் சென்னை மாநகரத்தில், தமிழகம் முழுவதும் நகரங்களிலும் கிராமங்களிலும் காலை உணவு கிடைக்காமல்  பசித்த வயிற்றுடன் வரும் மாணவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

மாணவர்களின் இத்தகைய நிலைமையைப் புரிந்து, தமிழகத்தின் நூற்றாண்டு மரபின் தொடர்ச்சியாக பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திருப்பது பெரும் போற்றுதலுக்குரிய முன்னெடுப்பு. தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

‘ஸ்கூல்ல ஒரே ஒருவேளை சத்துணவு சாப்பிடுற நீங்கள் எல்லாம் இப்படி இருக்கீங்கன்னா‌.. மூணு வேளை ஒழுங்கா சோறு தின்னா எப்படி இருப்பீங்க?' என பி.டி. வாத்தியார் எங்களைப் பார்த்து கேட்ட கேள்வி இப்ப நினைவுல வந்து நிக்குது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்டிருக்கும் காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும்.

‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் பாரதி.

ஒரு மாணவர்கூட பசி இல்லாமல் கல்வி பயிலும் நிலைமையை உருவாக்கி விட வேண்டும் என்பதையே என் கனவாக முன்வைக்கத் தோன்றுகிறது.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com