நேர்மைப் பயணத்தில் சக பயணி

நேர்மைப் பயணத்தில் சக பயணி
Published on

குளிர்சாதனக் கருவி சற்று தூக்கலாக இருந்ததால் குளிரில் நான் நடுங்கியதைக் கவனித்தார் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐஏஎஸ். ‘’இது மக்கள் அலுவலகம். மக்களுக்கு இடர்ப்பாடாக இருந்தாலும் சரி, உங்களைப் போன்ற செய்தியாளருக்கு இடர்ப்பாடாக இருந்தாலும் சரி.. உடனே அதைக் களைய வேண்டும்” என்று புன்னகையுடன் சொல்லி குளிர்சாதனக் கருவியை நிறுத்துகிறார் அவர். தன் துணைவியாரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றதும் பெரிதும் தயங்கியவர் பின்னர் மெல்ல பேசத் தொடங்கினார்.

“1997-ல் எனக்கும் விமலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சர்க்கரை ஆலை ஒன்றில் மேலாண் இயக்குநராக இருந்தேன். திருமணம் முடிவான பின்னர் அவரிடம் பேச நேர்ந்தபோது, ‘இதுவரை நான் நேர்மையான பணியாளனாக இருந்து வந்திருக்கிறேன். திருமணத்தால் என் நேர்மைக்கு எள்முனை அளவும் குந்தகம் ஏற்படக் கூடாது. அதற்கு ஏற்றதுபோல் நீ நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தேன். ‘எனக்கும் நேர்மை பிடிக்கும். உங்கள் எதிர்பார்ப்பில் எந்த குறைவும் வராது’ என்று அவர் கூறியிருந்தார். இன்று எங்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றுவரை தன் சொல்லை மீறாமல் என் நேர்மையான வாழ்வுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் கூட வராமல் என் துணைவி இருந்துவருகிறார். என் நேர்மையால் ஏற்பட்ட சிரமங்களுக்காக, சின்னதாகக் கூட அவர் கடிந்துகொண்டதோ, முகம் சுளித்ததோ, வருத்தப்பட்டதோ இல்லை. இதை நான் மிகப்பெரிய விஷயமாகக் கருதுகிறேன்.

பல இடங்களுக்கு நான் மாறுதல் செய்யப்பட்டிருக் கிறேன். மாறுதல் செய்யப்படும்போது குழந்தைகள் பள்ளி மாறுதல், இடம் மாறுதல் போன்ற சிரமங்கள் ஏற்படும். ஆனால் நேர்மையின் காரணமாக நடக்கும் மாறுதல் என்பதால் இந்த சிரமங்களை அவர் கம்பீரமாக ஏற்றுக்கொள்வார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ‘கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் தங்கவேண்டும் என்கிற அரசு உத்தரவைக் கடைப்பிடிக்கவேண்டும்’ என்று ஆணை பிறப்பித்தேன். இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இதுவரை கிராமங்களில் தங்கியதில்லை. இதனால் எனக்கெதிராக கடுமையாகப் போராட்டம் செய்தார்கள்.

இந்தப் போராட்டங்களின்போது கிராம நிர்வாக அலுவலர்களால் கடுமையான சொற்களால் நான் விமர்சிக்கப்பட்டேன். இந்த விஷயங்களை வீடியோ பதிவு செய்து மேலதிகாரிகளுக்கு புகாரும் அனுப்பினேன். அந்த நேரத்தில் மிசோரியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சிக்கு நான் செல்லவேண்டி இருந்தது. என் துணைவியார் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சிதலைவர் மாளிகையில் வசித்தார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பொதுவாக இம்மாதிரி பயிற்சிக் காலங்களில் பணியிட மாறுதல் செய்யமாட்டார்கள். ஆனால் நான் போன இரண்டே வாரங்களில் மாறுதல் செய்யப்பட்டேன். எனக்கு வேறு பணியிடம் உடனடியாக வழங்கப்படவில்லை. நானும் உடனே வர இயலாது. இரண்டுமாத பயிற்சி முடிந்துதான் வர இயலும். 2000 கிமீக்களுக்கு அப்பால் இருக்கையில் இந்த பணியிட மாறுதல் கொடுக்கப்பட்டது. இன்னொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் நியமிக்கப்பட்டுவிட்டார். என் குடும்பத்தினர் எங்கே போவார்கள்? என்ன செய்யமுடியும்? பெரும் நெருக்கடி. இந்த துன்பமான சூழலிலும் நேர்மைக்குக் கிடைத்த பரிசாக என் மனைவி இதை எடுத்துக்கொண்டார். கல்வியாண்டின் இடையிலேயே இந்த பணி மாறுதல் நடந்ததால், பிரசித்தி மிக்க மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நாமக்கல்லிலேயே மேலும் மூன்றுமாதங்கள் ஒரு சிறிய வீட்டில், யாருக்கும் தெரியாமல் தங்கி இருந்து, வேலையாட்கள் யாரும் இன்றி, வாகன வசதி இன்றி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அந்த கல்வியாண்டை நிறைவு செய்ய வைத்தார். இதை அவர் மகிழ்ச்சியுடன் செய்தார். என்னைக் காட்டிலும் மிகவும் உறுதியானவராக என் மனைவியையே கருதுகிறேன்.

2011 சட்டமன்றத் தேர்தல். அதற்கு இருபது நாட்களுக்கு முன்பாக மதுரையின் மாவட்ட ஆட்சித் தலைவராக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டேன். தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும் என்பது எனக்கிடப்பட்ட ஆணை. அப்போது பல பிரச்னைகள். என்னை மாறுதல் செய்யவேண்டும் என்று மீது இரண்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. எனக்கு எதிராக கொடும்பாவி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. தேர்தல் அலுவலராக இருந்த துணை ஆட்சியர் ஒருவரை எனக்கெதிராகத் தூண்டிவிட்டு, அவர் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணையத்திடம் கூறிவிட்டு, மருத்துவமனையில் இருந்து எனக்கெதிராகப் பேட்டி கொடுத்தார். வட்டாட்சியர் மீது தாக்குதல், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தது, எனக்கெதிராக பெரிய அரசியல் தலைவர்களெல்லாம் அறிக்கை விடக்கூடிய சூழல்.. இவற்றைச் சமாளித்து தேர்தலை நடத்தவேண்டி வந்தது. இந்த அசாதாரணமான சூழலில்கூட துணிச்சலுடன் எனக்குத் துணையாக நின்றார் என் மனைவி.

அதை அடுத்து தொடர்ந்து ஓராண்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவராக அங்கே பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. 2012 மே மாதம் மேலூரில் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையாக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பினேன். அந்த சமயம் தலைமைச் செயலகத்தில் மேலதிகாரிகளால் ஒரு ஆய்வுக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டேன். அந்த ஆய்வை முடிந்ததும் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது மதுரை ஆட்சித் தலைவர் பதவியில் இருந்து  மாற்றப்பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட ஆட்சியராக சென்னை சென்ற நான் திரும்பி வருகையில் எனக்குப் பதவி போய்விட்டது. இதைத் தொடர்ந்து கிரானைட் முறைகேடு பிரச்னை வெளிவரத் தொடங்கிய சமயம்,

சிக்கலான சூழல். அச்சமயத்திலும்  ஓராண்டு காலம் மீண்டும் குழந்தைகளின் படிப்புக்காக அவர் மதுரையில்தான் இருந்தார். கொஞ்சம்கூட முகம் சுளிக்கவில்லை. ஏன் இப்படி? மற்றவர்கள் போல

நீங்களும் இருக்கக் கூடாதா? என ஒரு கேள்விகூட கேட்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் டிஆர்ஓ- வாகப் பணியாற்றியபோது பெப்சி நிறுவனத்தின் மீது வந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்துக்கு சீல் வைத்தேன். காலையில் இந்த பணியை முடித்துவிட்டு பல ஊர்களுக்கு ஆய்வுக்குச் சென்றுவிட்டு இரவில் திரும்பியபோது ‘கலெக்டர், தொழில்துறைச் செயலர், தலைமைச் செயலாளர் என்று வீட்டு எண்ணுக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்துச்சே. என்ன காரியம் செய்தீர்கள்?’ என்று கேட்டார். ‘ஒண்ணுமில்லை,

பெப்சிக்கு சீல் வெச்சேன். பெட்டி படுக்கையெல்லாம் கட்டி தயாராக வைச்சுக்கோ... நாம் நாளைக்கே மாறுதலில் கிளம்ப வேண்டியிருக்கும்’ என்றேன். அன்றும் அவர் முகத்தில் அதிர்ச்சியைக் காணமுடியவில்லை. அவர் ஏற்கெனவே அதற்கு தயாராக இருந்ததுபோல் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.

என்றைக்குமே ஆடம்பரமாகச் செலவுசெய்ய மாட்டார். அதே சமயம் வீட்டுக்கு வந்தவர்களை நன்றாக உபசரிக்கத் தயங்கமாட்டார். பெரிய ஆசைகள் ஏதும் அவருக்குக் கிடையாது. நாமக்கல்லில் மாவட்ட ஆட்சித் தலைவராக நான் பணியாற்றியபோது ஒரு வேண்டுதலுக்காக சேலத்தில் இருந்த தேவாலயத்துக்கு பஸ்ஸில்தான் தொடர்ந்து பத்துவாரங்கள் சென்று வந்தார். இன்றும் குறைந்த தூரமென்றால் தயங்காமல் பஸ் ஏறிவிடுவார். இது ஒரு ஏழை நாடு. இங்கே நமக்கு இவ்வளவு வசதிகள் கிடைத்துள்ளன. இதுவே போதும் என்பார். ஓர் உயர் அரசு அதிகாரியாக நானும் அதிகமாகவே சம்பளம் பெறுகிறேன். சராசரி மனிதர்களைக் காட்டிலும் நல்ல வாழ்க்கையையே நாங்களும் வாழ்கிறோம். இதையும் தாண்டி அதிகம் தேவைப்பட்டால் இதோ நம் மகன் வளர்கிறான். அவன் சம்பாதித்து பூர்த்தி செய்வான் என்று பேசிக் கொள்வோம்.

ஒரு விவசாயியைப் பார்த்து அவரது மனைவி ஏன் அதிகம் சம்பாதிக்கவில்லை என்று கேட்கப் போவதில்லை. ஏனெனில் அவர்களின் நிலத்தில் எவ்வளவு விளையும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அரசு அதிகாரியைப் பொருத்தவரை இன்றைய சூழலில், சாதாரணமானவர்கள் கூட நல்ல வளமாக, வசதி களுடன் இருக்கையில் பல மனைவிமார்களுக்கு தங்கள் கணவர்களுக்கு மீது கேள்விகள் வரலாம். ஆனால் எல்லாவிதமான இக்கட்டான சூழலிலும் என் மனைவி துணைநிற்பவர். அவர் என்னுடைய நேர்மைப் பயணத்தில் சோர்வடையவே வைத்ததில்லை. என்னுடைய பயணம் அவரது உறுதியான ஆதரவு இல்லையென்றால் சாத்தியமில்லை என்றே சொல்வேன்.” காலத்தின் காயங்களை தன் புன்னகைப்பால் புறந்தள்ளிவிட்டு முடித்தார் சகாயம்.

அக்டோபர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com