நேர் கொண்ட பார்வை: இந்தியப் பெண்ணின் பிரதிநிதி!

நேர் கொண்ட பார்வை: இந்தியப் பெண்ணின் பிரதிநிதி!
Published on

மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் ஒன்றாகச் சந்தித்துக் கொள்ளும் ஓர் இயல்பான, நட்பார்ந்த நிகழ்வு எப்படி பெண்கள் மீதான வன்முறைகளுக்கான ஊற்றிடமாக மாறியிருக்கிறது என்ற விசாரணையே திரைக்கதை. பெண், ஆணுக்கு இடையே இடைவெளியையும் மோதல்களையும் உருவாக்கும் ஊக்கத்தைக் கொடுத்துவிட்டு அதன் நெருப்பில் குளிர்காயும் வீடும் நாடும், நமது.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்தச் சமூக அமைப்பின் அதிகாரக் கட்டுமானத்திற்குள் வந்துவிட்டால் ஒரே மாதிரி தான் நடந்துகொள்கிறார்கள், என்பதே இந்தப்படத்தின் அடித்தளம். வீடு, குடியிருப்பு, பத்திரிகை, காவல், நீதிமன்றம், ரிசார்ட் வெயிட்டர் என இந்தப் பட்டியல் நீளும். பாறையில் நீர் கசியும் இடமும் உண்டு. மனித மனங்களோ பாறையாக இறுகிக்கொண்டே இருப்பவை. உண்மைகள், கருத்துகள் பற்றிய நிதானமான அலசல். திரிக்கப்படும் ஒரே உண்மை, பாரபட்சமான கருத்து என்ற இரட்டைப் பின்னல்களினூடே திரைக்களம் விரிகிறது.

சிஸ்டங்களின் வழியே பிரச்னைகளை அணுகக் கற்காத சமூகம், அவற்றிற்கு வெளியே அதை ஊதிப்பெரிதாக்கும். செயல்படும் அமைப்புகளுக்கே எதிரான வேலையியலே இங்கு வாழ்வியல். ஆதிக்கத்திற்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையே இயங்கும் ஈரெல்லையின் மொழிகளும், அதாவது, சமூக மொழிகளும் திரையில் குறிப்பான வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே நிகழ்வு ஒவ்வொரு முறை தீவிரமாய் விசாரணை செய்யப்படும் போதும், இந்தியாவின் வெவ்வேறு கதையாடல் நினைவிற்கு வந்து போகிறது. இந்தியாவைப் பற்றிய அகண்ட நினைவென்றால் அது பெண்களின் மீதான பாலியல் வன்முறை பற்றியதாகவே இருக்கும். நல்ல குடும்பப் பெண்ணிற்கு எதிராக, பெண்ணுரிமை கோரும் பெண்கள் நிறுத்தப்படுவதை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது. மறைமுகமாகச் சுழலும் ஏளனக் குறிப்புகள் ஆங்காங்கே. கடைசியில், வழக்காடி வென்ற கதாநாயகனிடம் கைகுலுக்கும் காவல்துறை பெண், குடும்பப்பெண்ணாக, பணியில் இருக்கும் பெண்ணாக, பொதுவெளியின் சாட்சியாகும் பெண்ணாக, நீதிக்கான வலிமையை உணர்ந்த பெண்ணாக முழுமையுறுகிறார்.

மீரா கிருஷ்ணன் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா நடித்திருக்கிறார். கூரிய கத்தி போன்ற ஆளுமை. நில்லாமல் சாலையில் ஓடிக்கொண்டேயிருக்கும் பெண். சலனமற்ற, தனக்குள்ளேயே குமைந்துகொள்ளாத, ஒளி ஊடுருவக்கூடியவள். தன் தோழியிடம் விவாகரத்து கொண்ட கணவனிடம் கோழை என்று சொல்லும் தருணத்தில் ஆகட்டும், நீதிமன்றத்தில் தன் வாதத்தைக் கேட்பவர்கள் முன் அவள் கன்னிப்பெண்ணா என்ற வழக்கறிஞரின் கேள்விக்குப் பதிலளித்து மூர்ச்சிக்கச் செய்வதில் ஆகட்டும் மெல்லிய கயிற்றில் உயரத்தில் நடக்கிறார். முகத்தில் காணும் தெள்ளிய நீரோடையின் வழியே அவளின் அகத்தை முழுதாகக் காணமுடியும். தன் குரலுக்கான உரிமையை வெல்வதன் வழியே கோடான கோடி இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகும் நேர்த்தியான நடிப்பு வெளிப்பாடு.

இந்தியாவிற்கே, இது பொதுவான படம். இடையிடையே நீண்ட மௌனத்தைத் திரையரங்கில் எழுப்பிய திரை வெளிப்பாடு. ஆனால், ஏனோ இந்தப் பாலியல்  சிக்கல்களுக்கும் வன்முறைகளுக்கும் இந்தியச்  சாதியமைப்பின் முன்கட்டுமானங்கள் தாம் காரணம் என்பதை விளங்கவைக்க இந்தியாவின் எந்தத் திசையிலிருந்து வரும் திரைக்கதையும், எந்த மொழிக்கு மாற்றப்படும் திரைக்கதையும் போதுமானதாக இல்லை.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com