நேரு சகாப்தத்தின் முடிவு - எல்.கே.அத்வானி

Published on

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் 1962ம் ஆண்டின் சீன ஆக்ரமிப்பு பல வழிகளிலும் முக்கியத் திருப்பமாக ஆயிற்று. போரின் முடிவு பண்டித நேருவின் மன எழுச்சியை சீர்குலைத்து விட்டது. கடைசி வரை அவரால் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. 1964 மே 24ம் தேதி அவர் இயற்கை எய்தினார். இந்திய அரசியலில் குறிப்பிடதக்க ஒரு சகாப்தம் முடிந்து போயிற்று. அவர் உயிரோடிருந்த காலங்களில் அவரைப்பற்றி இரு வேறு கருத்துக்களை நான் கொண்டிருந்தேன். அவரது ஆளுமை மற்றும் சாதனைகள் பற்றிய எனது மரியாதை இத்தனை வருடங்கள் கழித்த பிறகும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. சந்தேகம் இல்லாமல் நேரு ஒரு மிகப் பெரிய தேசபக்தர்தான். இந்திய சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட போராட்டமும் செய்த தியாகமும் மிகப் பெரியவை. 1947ல் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரதமர் பதவிக்கு சர்தார் படேலுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. மகாத்மா காந்தி சர்தார் படேலுக்கு பதிலாக நேரு பிரதமர் ஆவதை விரும்பினார். அதனால் நேருவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு நேருதான் உறுதியான அடிப்படைகளை உண்டாக்கினார்.

சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆரம்ப வருடங்களில் இந்தியாவின் தொழில்மய மாறுதலால், பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின.

எனினும் சோவியத் யூனியனின் தாக்கத்தால் லைசென்ஸ்,  கோட்டா, பர்மிட் முறை ஏற்பட நேருதான் காரணமாக இருந்தார். அது தனியார் தொழில்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்திவிட்டது. அவரது மகள் இந்திராகாந்தி குறை மலிந்த சோவியத் பாணியை இந்திய பொருளாதார வளர்ச்சியில் செயல்படுத்தி, தனியார் தொழில்கள் வளர்வதையும், லைசென்சு, பர்மிட், கோட்டா முறையை மேலும் இறுக்கிவிட்டார். இந்திய அரசியல் நிர்வாகத்தை நிறுவியதிலும், இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தியதிலும் நேருவின் பங்களிப்பை நான் பல சமயங்களிலும் புகழ்ந்திருக்கிறேன்.  அவரது இந்தத் தன்மைகளுக்கு மாறாக அவரிடம் ஓர் ஆணவத்தின் கீற்று இருந்து கொண்டே இருந்தது. தனக்குப் பிடிக்காத சகாக்களின் மீது தனிப்பட்ட பகையை வளர்த்துகொள்கிற குணம் இருந்தது. சமயங்களில் குறுகிய மனம் படைத்தவராக தன்னை காட்டிக் கொண்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் விடுதலை இயக்கத்திற்க்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார். அவர் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஆனார். அரசியல் அமைப்பு சட்டப்படி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த அவருக்கு மரியாதையை நேரு தரவில்லை. நேருவின் குறுகிய மனப்பான்மைக்கு இதை ஓர் உதாரணம் எனலாம்.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நேருவின் அமைச்சரவையில் இருந்து விலகி பாரதிய ஜன சங்கத்தை நிறுவினார். அவர் மீது நேரு கொண்டிருந்த தனிப்பட்ட கோபம் பிரசித்தமானது.  ஒரு  நாள் நேரு பாராளுமன்றத்தில் “நான் ஜன சங்கத்தை நசுக்குவேன்’‘ என்றார். அதற்கு பதிலளித்த டாக்டர் முகர்ஜி “ பிரதமரின் இந்த நசுக்கும் மனப்பான்மையை நாங்கள் நசுக்குவோம்“ என்றார். வரலாற்றில் நேருவின் மிகப் பெரிய தோல்விகள் என்றால் அவை 1948ல் பாகிஸ்தான் போரையும், 1962ல் சீனப் போரையும் கையாண்ட விதத்தில் கடைப்பிடித்த குறைகள்தான். காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முதல் முயற்சியை முறியடிக்க அவர் உறுதியாகவும் சமரசத்திற்கு  இடமின்றியும்  செயல்பட்டிருந்தால் காஷ்மீர் பிரச்சனை  அப்போதே முடிந்து போயிருக்கும். அதே போல சீனாவைப் பற்றிய கொள்கையில் அவர் மேம்போக்கான பார்வையை மேற்கொள்ளாமல், மிகவும் யதார்த்தமான அடிப்படையில் பீஜிங்குடன் உறவை வளர்த்துக் கொண்டிருக்க முடியும். சீனா உடனான எல்லைத் தகராறுக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டிருக்க முடியும்.

நன்றி: என் தேசம் என் வாழ்க்கை, லால்கிருஷ்ண அத்வானியின் சுயசரிதை, தமிழாக்கம்: வசந்தன் பெருமாள், சுதாங்கன் வெளியீடு: அல்லயன்ஸ்.

மார்ச், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com