1970ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழ் நடத்திய மாவட்ட வாரியான சிறுகதைப் போட்டியில் அப்போதைய ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிறுகதை மூலம் படைப்பிலக்கிய உலகிற்கு அறிமுகமான நான் அதனைத் தொடர்ந்து அப்போது சிபிஎம் சார்பில் தொடங்கி நடத்தப்பெற்று வந்த இலக்கிய இதழான ‘செம்மலர்’ மாத இதழில் சிறுகதைகள் எழுதி வந்தது.
இயந்திரத்தனமான இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட கட்சியின் இதழில் மாதந்தோறும் கதைகள் வெளிவந்தாலும் பின்னணியில் கூடவே எனக்கும் கட்சியின் இலக்கியக் கோட்பாட்டிற்குமான மோதல்களும் வாதப் பிரதிவாதங்களும் ஒரு புறம் தொடர்ந்தன.
இந்நிலையில் 1974 இல் தேர்தல் தில்லு முல்லுகள் மூலம் தில்லியில் ஆட்சியைப் பிடித்த இந்திரா காந்தி தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க 1975 இல்அவசர நிலையைப் பிரகடனம் செய்ய நாட்டில் சனநாயகமும் கருத்து சுதந்தரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் முடக்கம் செய்யப்பட்டன.
இப்படிப்பட்ட நெருக்கடிகளிலிருந்து மீள பல்வேறு கட்சிகளும் பல்வேறு உபாயங்களைக் காண சிபிஎம் தனது கட்சி நடவடிக்கைகளுக்கான மாற்றுத் தளமாக த.மு.எ.ச. எனும் இலக்கிய அமைப்பைக் கண்டது.
மிக வறட்டுத் தனமான இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி இயங்கிய இவ்வியக்கத்தின் அப்போதைய உடனடி இலக்கு இவ்விலக்கிய அமைப்பின் வழி தன் அரசியல் நிலையை முன்னெடுப்பதாகவும் அதன் வழி தன் அரசியல் அமைப்பிற்கு ஆள் பிடிப்பதாகவுமே இருந்தது. எனவே இது அந்த நோக்கில் இடதுசாரி படைப்பிலக்கியங்களை அதிக அளவில் வெளிக் கொணர வேண்டும் என முயற்சித்து ‘நூறு பூக்கள் மலரட்டும்’ ‘ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான படைப்புகள் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பட்டும்’ எனப் பிரகடனம் செய்தது.
எனில் அப்போதைய முற்போக்குப் படைப்பாளிகள் பலரும் கவிதை அல்லது கவிதை என்கிற பெயரில் எதையாவது எழுதுபவர்களாக இருந்தார்களே அன்றி, தொகுப்பாகக் கொண்டு வருமளவிற்கு அதிகம் கதைகள் எழுதுபவர்களாக எவரும் இல்லை. அதே வேளை ‘வர்க்கப் போரைப்’ பற்றியே எதுவும் பேசாத என்னுடைய கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வருவதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை.
இந்நிலையில் அப்போது சென்னையில் பாட்டாளிகள் வெளியீடு என்னும் பதிப்பகத்தை நடத்தி புனைவு சாரா நூல்களை வெளியிட்டு வந்த பாண்டியன் என்பார் - இவர் கட்சி நிலைப்பாடுகளைப்பற்றி அதிகம் பொருட்படுத்திக் கொள்ளாதவர்- என்னுடைய சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவர ஆர்வம் காட்டி தொகுப்புக்கான கதைகளைத் தெரிவு செய்து தரும்படி கோரியிருந்தார்.
இதற்காக 1978ஆம் ஆண்டு இறுதியில் ‘பறிமுதல்’ என்கிற கதைத் தலைப்பின்கீழ் 15 சிறுகதைகளைத் தொகுத்து அன்று நிலவிய இலக்கியம் பற்றிய புரிதல்கள் சர்ச்சைகள் குறித்து ஒரு விரிவான முன்னுரையையும் எழுதி அவரிடம் தந்தது. அவர் அதை வாங்கி வைத்திருந்தாலும் உடனடியாக அதை வெளிக் கொணர முடியாத சில நெருக்கடிகளில் தொகுப்பு அவரிடம் அப்படியே கிடப்பில் இருந்தது.
இதற்கிடையில், எனக்குள் வேறு ஒரு படைப்பும் உருவாகி இருந்தது. இந்திராகாந்தி பிறப்பித்திருந்த அவசர நிலைக்கு ஆதரவாக மக்களின் கருத்தை வென்றெடுக்க தில்லி அரசு ‘20 அம்சத் திட்டம்’என்கிற ஒரு திட்டத்தை முன் வைத்து பட்டி தொட்டிகள் தோறும் அதைப் பிரச்சாரம் செய்தது.
மக்கள் அனைவரும் இத்திட்டத்தை ஏற்று இவற்றை செயல்படுத்த ஒத்துழைப்பதுடன் இந்திராவின் கரத்தை வலுப்படுத்த முன்வர வேண்டும் காரணம் ‘இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா’ எனவும் முழங்கி வந்தது. அதோடு இந்த 20 அம்சத் திட்டமே இந்தியாவின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான ஒரே திட்டம் என்பதான பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து அதன் மூலம் தன் இருப்பைத் தக்க வைக்கவும் பாதுகாக்கவுமான முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், அன்றாடம் என் வீடு தேடி வரும் ஒரு விவசாயக் குடும்பத் தோழர் தனக்கான பிரச்சினைகளோடு அதன் தீர்வுக்கு என்னை ஒரு வழிகாட்டியாக நம்பி, அன்றாடம் மாலை நேரங்களில் என்னிடம் வந்து அவற்றை முறையிட்டு வந்தார்.
அவர் மீதான அக்கறையில் அவருடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டி, அரசு அறிவித்த 20 அம்ச திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டம், எந்த ஒரு திட்டமாவது இவரது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். இதில் எந்தத் திட்டமும் அவர் குறையைத் தீர்க்க உதவுவதாயில்லை என்பதோடு, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் அவர் ஏதாவது நிவாரணமாவது பெற முடியாதா என்று ஆராய்ந்ததில் அதற்கானத் தீர்வும் கிட்டாது என்கிற நிலையில், இவரது கோரிக்கைத் தொடர்புடைய அலுவலகங்களைப் படிப்படியாக ஏறி இறங்கிய அனுபவத்தில் இவர் பிரச்சினைக்காக நான் வேறு என்னதான் செய்வது? மாற்றுத் திட்டம்தான் என்ன? என்கிற யோசனையில் சிலநாள் குழம்பிக் கிடக்க அந்தக் குழப்பத்தின் தீர்வாக உதித்ததுதான் ‘21வது அம்சம்’ என்கிற திட்டம். இதுபற்றி யோசிக்க இதையே தலைப்பாக வைத்து, நான் சந்தித்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறுநாவல் அல்லது நெடுங்கதையை எழுதத் திட்டமிட்டு அதன்படியே எழுதியும் முடித்தது.
விரைவிலேயே இதை நூலாகக் கொண்டுவர வேண்டும் என்கிற விழைவில் பல அமைப்புகளையும் பதிப்பகங்களையும் அணுக இதைப் பதிப்பிக்கும் ஆர்வத்தில் அல்லது இது சார்ந்து ஏதும் சிக்ககல்கள் நேர்ந்தால் அதை எதிர்கொள்ளும் தெம்போடு தமிழகத்திலுள்ள எந்த முற்போக்கு இயக்கங்களும் தயாராக இல்லை என்பது தெரிந்தது. இந்நிலையில், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து நண்பர்களின் உதவியுடன் சொந்த முயற்சியில் வெளிக் கொண்டு வரலாமா என்று அதற்கான ஏற்பாடுகளில் இறங்க, அப்படியே பொருளியல் ஏற்பாடுகளைச் சொந்தமாக ஏற்பாடு செய்தாலும்கூட, தமிழ்நாட்டிலுள்ள எந்த அச்சகமும் இதை அச்சாக்கித் தர தயாராக இல்லை என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில்தான் புதுவையில் உள்ள சில முற்போக்கு நணபர்கள் தோழர்கள் குறிப்பிட்ட எந்த அரசியல் அடையாளமும் இன்றி இயங்கி வந்த சமூகக் கல்வி மையம் என்னும் அமைப்பின் தோழர்களை அணுகியது.
புதுச்சேரி எனது சொந்த ஊரான மயிலத்துக்கு 35 கி.மீ. தொலைவில் உள்ள நகரம். ஒரு மணி நேரப் பேருந்து பயணம். நூலின் அச்சாக்கப் பணிகளைக் கவனிக்க சென்னையைவிட வாய்ப்பான நகரம் என்பது ஓருபுறம்; சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பாரதி, பிரிட்டிஷாரின் கொடுமை தாங்காமல் எப்படி புதுச்சேரி சென்று தன் கொள்கையை முழங்கினாரோ அதுபோல தற்போதைக்கு இந்தியாவின் கொடுமைகளிலிருந்து மீள புதுச்சேரிதான் விடியல் போலும் என்கிற தெம்பு மறுபுறம் என்று இந்த வசதிகள் கருதி, சிக்கலை அவர்களிடம் முன்வைத்தது.
அவர்கள்தான் புதுவையில் உள்ள ராமன் அச்சக உரிமையாளர் திரு. இராமன் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இராமன் நடுத்தர வயதைத் தாண்டியவர். நியாய உணர்ச்சியுள்ளவராகவும் நேர்மையான செயலாற்றல் நோக்கில் உறுதிமிக்க நபராகவும் தெரிந்தார். நான் விவரங்களைச் சொல்ல கைப்பிரதியை வாங்கிப் புரட்டியவர் ‘நூலை நான் அச்சாக்கம் செய்து தருகிறேன். நூலை எதன் சார்பில் வெளியிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
நான் எந்தத் திட்டமும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்திருந்த சொந்த முயற்சி என்கிற திட்டத்திலேயே மனத்தளவில் நின்று குழம்ப அவர்தான ‘சமூகக் கல்வி மையம் சார்பிலேயே வெளியிடலாம்’ என்றார். அதன் அடிப்படையில்தான் 21வது அம்சம் நூல் புதுவையில் தயாரிக்கப்பட்டு புதுவை ஓவிய நண்பர் ஜானகிராமனின் முகப்போவியத்துடன் டிசம்பர் 1979இல் வெளி வந்தது. எனில் இதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பாட்டாளிகள் வெளியீடு சென்னை புக் ஹவுஸ் ஆக உருமாறி சென்னை ஓவிய நண்பர் பரமேஸ் கிருஷ்ணமூர்த்தியின் முகப்போவியத்துடன் 79 நவம்பரில் ‘பறிமுதல்’ தொகுப்பு அதற்கான சர்ச்சைக்குரிய முன்னுரையோடு வெளி வந்திருந்தது.
இப்படியாக, ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு நெடுங்கதையும் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெளி வந்ததுதான் என்னுடைய முதல் தொகுப்புக்கான பதிவாக இன்னமும் மனதில் நிலவிக் கொண்டிருக்கிறது. எனில் இரண்டுமே அஸ்வகோஷ் என்கிற புனைபெயரில் வெளி வந்தவையே. இராசேந்திர சோழன் என்கிற பெயரில் வெளிவந்த முதல் தொகுப்பு என்று பார்த்தால் கிரியா வெளியிட்ட எட்டு கதைகள்தான் முதல் தொகுப்பு.
ஜூன், 2016.