நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும் மேனியெங்கும் வசந்தம்

நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும் மேனியெங்கும் வசந்தம்
Published on

மரபுக் கவிதையின் செழுமை, புதுக்கவிதையின் வீச்சு, நாட்டுப்புறப் பாடல்களின் வெளிப்பாடு, கிராமிய மணத்தின் வாழ்வு என்று அத்தனைக் கலவையும் வைரமுத்துவின் காதல் பாடல்களில் வெளிப்பட்டன.

‘அந்திமழை பொழிகிறது; ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’

என்று வைரமுத்து எழுதியபோது, அந்தப் பாடல் தமிழ்க் காற்றில் ஒலிக்காத நாட்களே இல்லை.

‘பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்’

என்று எழுதிய வைரமுத்துவின் செழுமை, தமிழ்த் திரைப்படப் பாடலுக்குப் புதிது.

‘வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்’

என்று இன்பத்திலும் துன்பத்திலும் காதலர்கள் பிரியாமல் இருப்பார்கள் என்பதைக் கவித்துவத்தோடு எழுதினார்.

கண்ணதாசனுக்கும், வாலிக்கும் காதல் பாடல்களை எழுதுவதற்குக் கூட, நேர்த்தியான கதையும், கதைக்கு ஒரு பின்னணியும், பாத்திர வார்ப்பும் (ஞிடச்ணூச்ஞிtஞுணூண்) இருந்தன. நிலப்பிரபுத்துவ வாழ்க்கை உடைந்தபோது, கூட்டுக் குடும்பங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை அவர்கள் அபாரமாக எழுதினார்கள். எண்பதுகளில் எழுத வந்த வைரமுத்து, தன் தமிழையும், இளையராஜாவின் இசையையும் நம்பியே எழுத வேண்டி இருந்தது.

‘இசைமேடையில், இன்பவேளையில் சுபராகம் பொழியும்

இளமை நெருக்கம், இருந்தும் தயக்கம்’

என்ற பாடலில்,

‘நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும் மேனியெங்கும் பூவசந்தம்’

என்று எழுதினார். காதல் புரியும்போது, காதலர்களுக்கு ஓர் அச்சம் இருக்கும் என்றாலும் இன்பமும் இருக்கும் என்பதை வேறு எப்படிச் சொல்லமுடியும்?

‘கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க - வந்துதொடும்

உன் கைகள் வகிடெடுக்க...’

என்று வைரமுத்து, காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இடம் அபாரமானது.

பிற திரைப்படப் பாடலாசிரியர்கள், காதல் பாடல்களை எழுதினார்கள். வைரமுத்து, தன் திரைப்படப் பாடல்களில் காதலர்களுக்காக வழக்காடினார். காதலர்களுக்காகவும் காதலுக்காகவும் நியாயம் கேட்டார். பொருந்தாத திருமணத்தை எண்ணி,

‘பன்னீருக்கும் மண்ணெண்ணெய்க்கும் கல்யாணமாம்

சாமி’ என்று பெண் அழுதபோது,

‘காவலுக்கு நாதியில்லையா - எந்நாளும்

காதலுக்கு நீதியில்லையா’

என்ற கேள்வியை வைரமுத்து எழுப்பினார்.

‘காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது’ என்பது வைரமுத்துவின் காதல் பிரகடனம்.

‘புத்தி கெட்ட தேசம் - பொடி வெச்சு பேசும்

சாதி மத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்’

என்ற தார்மீகக் கோபத்தைக் காதலை முன்வைத்து வெளிப்படுத்தினார்.

சாதியின் காரணமாகக் காதலர்கள் இறந்தபோது,

‘வாங்கி வந்த மாலை, மலர் வளையம் ஆகும் வேளை

சாதியின் சாதகம் யார் பார்ப்பதோ?’என்றும்

‘கொல்லைத் துளசி எல்லை கடந்தால்

வேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா?’

‘சின்னக் கிளியிரண்டும் செய்துவிட்ட பாவமென்ன?

அன்பைக் கொன்றுவிட்டு ஆசாரம் வாழ்வதென்ன?’

என்றும் எழுதியதில்தான் வைரமுத்துவின் தனித்துவம் இருந்தது.

 ‘புதுக்கவிதை’ திரைப்படத்தில்,

‘மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ’ என்று எழுதியதோடு நிற்காமல்,

‘வரையறைகளை மாற்றும்போது, தலைமுறைகளும் மாறுமே’ என்று வைரமுத்து எழுதியதை அவ்வளவு எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.

‘சாதனை’ என்ற படத்தில், அனார்கலி உயிரோடு சமாதியாகிறாள். சலீம் வரவில்லை.

‘பாவை செய்த பாவம் என்ன

வந்து சொல்லக் கூடாதா

சாவை இன்னும் கொஞ்ச நேரம்

தள்ளிப் போடக் கூடாதா’

என்று கெஞ்சி கெஞ்சி அழுகிறாள் அனார்கலி. இன்னும் ஒரு செங்கல்தான். ஒரு பெண்ணின் உடலும், கண்ணீரும் புதைந்துவிடும். வைரமுத்து எழுதினார்:-

‘நெஞ்சில் இன்று போர்க்களம்

நீரில் மூழ்கும் கண்களும்

சாவு மூன்று அங்குலம்’ இதுதான் வைரமுத்து.

காதல் பாடல்களில் வைரமுத்து சில அபாரமான உவமைகளைக் கையாண்டிருக்கின்றார்.

‘கம்பஞ்சொங்கு விழுந்த மாதிரியே

கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே’

என்ற வரியை உணர்வதற்குக் கிராமத்து வாழ்வியல் தெரிந்திருக்க வேண்டும். நகர வாழ்க்கையில், ‘கம்பஞ் சொங்கு’ யாருக்குத் தெரியும்?

‘காதல் என்ற ஒன்று - அது கடவுள் போல

உணரத் தானே முடியும் - அதில் உருவம் இல்லை.

காயம் கண்ட இதயம் - ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே - சொல்ல வார்த்தை இல்லை’

என்ற வரிகளில் உள்ள உவமைகள் மட்டுமல்ல; உணர்வுகளும் கவிதை தெரிந்த எல்லோருடைய இதயங்களையும் தொடுபவை.

 ‘என் பெயரே எனக்கு மறந்துபோன ஒரு வனாந்தரத்தில் - என்னைப் பெயர் சொல்லி அழைத்தது யார்? நீயா?’ என்னும் புதுக்கவிதை கூடப் பாடலாக இடம்பெற்றது வைரமுத்துவிற்குக் கிடைத்த பெருமை.

வைரமுத்துவின் பிற்காலக் காதல் பாடல்களில்,

‘காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன்

காதல் என்றாய்...  போல பல அழகான பாடல்கள் உண்டு.

ஆய்த எழுத்து என்னும் திரைப்படத்தில் இடம்பெறும், ‘யாக்கை திரி - காதல் சுடர்’, ‘ஜீவன் நதி - காதல் கடல்’, ‘பிறவி பிழை காதல் திருத்தம்’, ‘இருதயம் கல் - காதல் சிற்பம்’ என்ற வரிகளாகட்டும்,

‘நீ காற்று - நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்’

என்ற வரிகளாகட்டும், வைரமுத்து தன் திரைப்படக் காதல் பாடல்களில், பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்தவர்.

‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே

கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்

பொன் அரும்புகள் மலர்கையிலே மெல்மெல்லிய சப்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது’

என்ற வரிகளில் கலீல் ஜிப்ரானைத் தன் மொழியில் எவ்வளவு அழகாக இறக்குமதி செய்திருக்கிறார் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

முப்பது வருடங்களில், தன் தமிழால் காதலை மேம்படுத்திய வைரமுத்துவைக் காதலர்கள் நன்றியோடு நினைத்துப் பார்ப்பார்கள்.

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com