நீட் இல்லாத மருத்துவ படிப்புகள்!

நீட் இல்லாத மருத்துவ படிப்புகள்!
Published on

மனித மருத்துவப் படிப்பை இலக்கு வைத்திருந்தவர்களுக்கு அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால், மருத்துவம்சார்ந்த பல்வேறு படிப்புகள் இருக்கின்றன. நீட் தேர்வு வந்தபிறகு இவ்வாறான மருத்துவம்சார் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் மாணவர்கள் நம்பிக்கையோடு சேரலாம். இவற்றில் கணிசமானவை, தனியார் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில படிப்புகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கல்விநிலையங்களிலும் வழங்கப்படுகின்றன.

அதாவது, எம்பிபிஎஸ், பல் மருத்துவம் பிடிஎஸ், சித்தா பிஎஸ்எம்எஸ், ஓமியோ பிஎச்எம்எஸ், ஆயுர்வேதா பிஏஎம்எஸ், யுனானி பியுஎம்எஸ், யோகா பிஎன்ஒய்எஸ் ஆகியவையும், மருந்தியல் பி. ஃபாம், பிசியோதெரப்பி பி.பி.டி., ஆக்குப்பேஷனல் தெரப்பி பிஓடி, பிஏஎஸ்எல்பி ஆகியவையும் அல்லாமல் வேறு பலவகைப் படிப்புகள் இன்னும் உரிய கவனம் பெறாமல் இருக்கின்றன.

இதில், மருத்துவமனையில் அவசரகாலச் சேவைகள் தொடர்பான படிப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. முன்னர், பொது மருத்துவத்தின் பிரிவு என்கிற அளவில் இருந்த அவசரச் சிகிச்சை இப்போது தனித் துறையாகவே மாறிவிட்டது. இது தொடர்பான B.Sc. Accident & Emergency Care Technology, B.Sc.- Critical Care Technology ஆகிய படிப்புகளைப் படித்தால் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. விபத்து, அவசரச் சிகிச்சையின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் நிலையில் இதன் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைமுறை மாற்றம், அதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் உலக அளவில் தொற்றாநோய்கள் எனும் வரிசையில் மிக வேகமாகவும் அதிகமாகவும் பரவிவருகிறது. இதில் இதயக் கோளாறுகள், அவைதொடர்பான சிகிச்சைக் காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கின்றனர்.

இந்த நிலையில், B.Sc. - Cardiac Technology, B.Sc, - Cardio Pulmonary Perfusion Care Technology ஆகியவை பெரிய பெரிய மருத்துவமனை நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை அளிக்கின்றன. வெளிநாடுகளில் பணியாற்றச் செல்ல விரும்பினால் அதற்கும் இவை உதவியாக இருக்கின்றன.

நீரிழிவு சிகிச்சை வசதிகள் கிட்டத்தட்ட வட்டார மருத்துவமனைகள் அளவுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. சிறு நகரங்களில் தனியார் மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் செய்யப்படும் அளவுக்கு நோயின் தன்மை பரவிவிட்டது. அதற்கேற்ற பணியாளர்களின் தேவையும் பெருகிவருகிறது. எனவே இதற்கு உதவும் B.Sc. - Dialysis Technology படிப்பானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.

நோய்களாலோ விபத்துகளாலோ உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகளையும் உருவாக்குவது, பொருத்துவது தனியான ஒரு துறையாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான Bachelor of Science in Prosthetics & Orthotics படிப்பு குறிப்பிடத்தக்கது.

சீராகப் பேச இயலாதவர்களுக்கான பயிற்சி முறையியலையும் பேச்சு இயலையும் அறிந்து கொள்வதற்கான படிப்பு, B.Sc. - Audiology & Speech Language pathology இந்தப் படிப்பை முடித்ததும், கற்றல் குறைபாடு உள்ளவர்கள், திக்கித்திக்கிதான் பேசமுடியும் எனும் நிலையில் உள்ளவர்களை

சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இந்தப் பட்டதாரிகளால் முடியும். பெரும்பாலும் இந்தப் படிப்பை முடித்து உரிய பயிற்சியைப் பெற்றவர்கள் விரைவில் தனியான கிளினிக் அமைத்துவிட முடியும்.

நீண்ட காலமாக டிப்ளமோ படிப்பாக இருந்த மருத்துவ ஆய்வக நுட்பப் படிப்பானது, இப்போது பட்டப்படிப்பாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே, பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு B.Sc. - M.L.T படிப்பை நம்பிக்கையாக எடுக்கலாம். பெரிய மருத்துவமனைகளிலும் தனியாகவோ கூட்டாகவோ மருத்துவ ஆய்வகம் அமைக்கவும் இந்தப் பட்டதாரிகளால் முடியும். பேரூராட்சியிலிருந்து சென்னையைப் போன்ற பெருநகரங்கள்வரை இதற்கு சந்தையில் பரவலான வரவேற்பு உண்டு.

அறுவை சிகிச்சைக்கூடம், மயக்கவியல் நுட்பம் தொடர்பான B.Sc. - Operation Theatre & Anaesthesia Technology மருத்துவ உதவியாளர் பணி தொடர்பான B.Sc. - Physician Assistant,  பார்வை அளவையியல் தொடர்பான B.Sc - Optometry, ரேடியோகிராஃபி, ரேடியோதெரப்பி ஆகியவை தொடர்பான B.Sc. - Radiography and Imaging Technology, B.Sc. - Radiotherapy Technology ஆகியவை,

நெஞ்சக நோய்கள் குறிப்பாக கொரோனா தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் பெரும் நலவியல் நெருக்கடியாக மாறியிருக்கும் நிலையில், B.Sc. - Respiratory Therapy படிப்பு ஒவ்வொரு ஊரிலும் பயன்மதிப்பு உடையதாக இருக்கும்.

நாள்பட்ட நோயாளிகள், உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படுவோருக்கு கட்டுப்பாடான உணவும் அத்தியாவசியம் என ஆகிவிட்டது. பெரிய நிறுவன மருத்துவமனைகளில் உணவூட்டத்துக்கான தனியான வல்லுநர்களின் முடிவுப்படிதான் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. இன்னொரு பக்கம், தகவல் யுகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் பெருகிவருவது கண்கூடு. இந்த சூழலில், நேரடியாக இளநிலையிலேயே B.Sc.  Clinical Nutriton எனும் பட்டப்படிப்பு கொண்டுவரப்பட்டது, காலப் பொருத்தம். தனியாக உணவு ஆலோசகர் பணியாகவும் செய்ய விரும்புவோருக்கு இது பயனளிக்கக்கூடியது.

நோய்கள் பெருகப் பெருக அதற்கேற்ப மருத்துவ ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றுவோரின் தேவையை, ஒட்டுமொத்த உலகமே கொரோனாவின்போது உணர்ந்துகொண்டது. இதற்கான B.Sc -Microbiology பட்டப்படிப்பும் சந்தையில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மருத்துவப் பட்டப் படிப்பு கிடைக்காதவர்களுக்கு அதற்கு இணையானதொரு வாய்ப்பாக முன்வைக்கப்படுவது, ஃபாம் டி Pharm D படிப்பு. இந்த  பட்டத்தை முடித்தால், பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இல்லாத இந்தப் படிப்பில், மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் இந்த ஆண்டிலிருந்து தலையிட்டு சில புதிய முடிவுகளை அறிவித்திருப்பது, ஒரு முன்னேற்றம்.

உணவு, வாழ்க்கைமுறை மாற்றத்தால் மாறிக்கொண்டிருக்கும் மனிதர்களை உடல், மனக் கோளாறுகள், நோய்கள் தாக்காவண்ணம் பேணுவதும் இப்போது தனித் துறையாக நிபுணத்துவம் கொண்டதாக மாறிவிட்டது. நடப்புக் கல்வியாண்டு முதல்  B.Sc.- Fitness and Life Style Modification எனும் பட்டப்படிப்பை தமிழ்நாடு அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. இதன் போக்கு, சாதக வாய்ப்புகள் குறித்து யோசித்து முடிவுசெய்யலாம்.

மருத்துவ சிகிச்சை, மருத்துவமனைத் தரவு ஆகியவற்றின் நிர்வாகவியல், மருத்துவ சமூகவியல் போன்ற வளர்ந்துவரக்கூடிய துறைகள் கிட்டத்தட்ட ஊரகப் பகுதிகளிலும் பயன்படக்கூடியவையாக மாறிவிட்டன. முன்னைவிட, பொது சுகாதார - மருத்துவத் துறைகளில் புதுப்புது திட்டங்கள் கொண்டுவரப்படும் நிலையில், இவற்றின் இன்றியமையாமை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே, இவை தொடர்பான B.Sc.- Medical Record Science, B.Sc.- Medical Sociology, B.Sc.-Clinical Data Management and Clinical Trial ஆகிய படிப்புகள் மிகவும் பயனுள்ளவை.

ஜூன், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com