"நீ பிள்ளை குட்டிக்காரன் நான் செல்கிறேன்!''

"நீ பிள்ளை குட்டிக்காரன் நான் செல்கிறேன்!''
Published on

அது ஜூன் 19, 1999. கார்கில் போர் தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகி இருந்தன. அந்த இரவில், ட்ராஸ் பகுதியில் இருந்த 5140 என்ற உச்சி நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தனர், இந்தியப் படையின் சிறுகுழுவினர்.

எப்படியாவது அந்த மலைச் சிகரத்தைக் கைப்பற்ற வேண்டும். பகலில் செல்லமுடியாது. உச்சியிலிருந்து வரும் தாக்குதலை இரவில் சென்றால்தான் சமாளிக்கமுடியும். லெப்டினென்ட் விக்ரம் பத்ரா, தம் வீரர்களுடன் முன்னேறினார். இதைக் கைப்பற்ற வேண்டியது மிக முக்கியம் என்று இவர்கள் அறிந்திருந்தனர். பத்ரா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் தப்பியவர். அவருக்காக வந்த தோட்டா தவறி , பின்னால் வந்த வீரர் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது. அந்த நினைவில் இருந்து அவர் மீளவே இல்லை. எனக்காகக் குறிவைக்கப்பட்ட தோட்டா, இன்னொருவரின் உயிரைக் குடித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருப்பார். பத்ராவுக்கு வயது 24 தான். சண்டிகரில் அவருக்கு ஒரு காதலி இருந்தார்.

அந்த இரவு போர்க்குரல்களால் கிழிபட்டது. எதிரி வீரர்களை அழித்து அந்தச் சிகரம் கைப்பற்றப்பட்டது. அவரது குழுவில் இருந்த அனைத்து வீரர்களும் வெற்றியுடன் திரும்பினர். ஓர் உயிரிழப்பு கூட இல்லை. 'யே தில் மாங்கே மோர்!‘ என்றார், விக்ரம் பத்ரா. அவரும் பிற வீரர்களும் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானிய ஆயுதங்களுடன் மலை உச்சியில் எடுத்துக்கொண்ட படம், நாடு முழுக்க ஊடகங்களில் வெளியானது. கார்கில் போரின் அடையாளமாக அந்தப் படம் ஆனது. எல்லோரும் விக்ரம் பத்ராவை அறிந்தார்கள். எதிரிகளும் கூட. அவரை ஷெர் ஷா என்று செல்லமாக அழைத்தார்கள்.

விக்ரமின் தந்தை ஒரு பள்ளிக்கூட பிரின்சிபால். அந்த மலை உச்சியைப்  பிடித்தபின், தந்தையுடன் விக்ரம் பேசினார். ‘அப்பா, நாங்கள் வென்றுவிட்டோம். நான் நலமாக இருக்கிறேன்,'' அந்தத் தந்தை மகனின் குரலில் பெருமிதம் கொண்டார். இந்த உச்சியைப் பிடித்தபிறகுதான் டைகர் ஹில் என்று அழைக்கப்பட்ட இன்னொரு சிகரத்தைப் பிடிக்க முடிந்தது.

அதற்கு ஒன்பது நாள் கழித்து, இரவு பத்ரா தன் பெற்றோரை அழைத்தார். 'இன்னொரு முக்கியமான போர் முனைக்குச் செல்கிறேன்!‘ என்றார். வெற்றியுடன் திரும்பு என்று சொல்லத்தான் அந்தப் பெற்றோரால் முடிந்தது. அதன் பின்னர் பத்ராவிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.

அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள். ஒருவர் விக்ரம். இன்னொருவர் விஷால். விக்ரம் ராணுவத்தில் நாட்டைக் காக்க இணைந்து 18 மாதங்களே ஆகி இருந்தன.

விக்ரம் அடுத்த போர்முனைக்குச் செல்வதற்கு முன்னால் அன்று மாலை அவரிடம் ஒரு தொலைக்காட்சி     செய்தியாளர் பேசுகிறார். டிவியில் தோன்றும் பத்ரா, ‘இறந்துபோன வீரர்களின் குடும்பத்தை இந்த நாடும் சமூகமும் நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,'' என்று ஏனோ சொல்கிறார். அதைக் காணும் பெற்றோர் அடிவயிற்றில் ஏதோ அச்சம் கவ்வுகிறது. அவன் திரும்பி வரமாட்டான் என்று தந்தைக்கு உள்ளுணர்வு சொல்கிறது. கடைசியாக அந்த ஆண்டு ஹோலி பண்டிகைக்கு விக்ரம் பத்ரா வீட்டுக்கு வந்து சென்றிருந்தார். விடுமுறை முடிந்து செல்கையில் உருளைக்கிழங்கு சிப்ஸும் மாங்கா ஊறுகாயும் அம்மா கொடுத்து பேருந்து ஏற்றிவிட்டார். உபிக்கு செல்லுமாறு ராணுவத்தில் உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் போர் வந்ததும் கார்கில்லில் பணிக்குச் செல்லுமாறு உத்தரவு வந்துவிட்டது.

‘ஒரு ஐஏஎஸ் நுழைவுத்தேர்வில்,' கேப்டன் விக்ரம் பத்ரா கைப்பற்றிய மலை உச்சிகளின் பெயர்களைக் கூறுக!' என்று கேட்டிருந்தார்கள். நாட்டையே எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதிய மகனைப் பெற்றோம். இந்த அங்கிகாரத்தைவிட வேறு என்ன பேறுவேண்டும்?'' என்று சொல்கிறார் ,அவர் அப்பா.

விக்ரம் பத்ரா கடைசியாக விடைபெற்றுச் சென்றது 4875 என்ற மலை உச்சியைப் பிடிக்கும் போருக்காக. 16,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த உச்சியைப் பிடிக்க இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருந்தது. உச்சியில் இருந்து பாகிஸ்தான் தாக்கியதால் உயிர்ச்சேதம் நமக்கு அதிகம். பக்கவாட்டில் ஒரு படை மெல்ல ஏறியது. அதில் விக்ரம் இருந்தார். இரவில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. மூடுபனியில் எதுவும் தெரியாத கடினமான மலைப் பாதை. பத்ராவின் வருகையை மேலே இருந்து எதிரிகள் அறிந்தனர். எனவே தாக்குதல் கடுமையாக இருந்தது.

விக்ரம் பத்ராவின் குழுவினர் எதிரிகளின் பதுங்கு குழிகளை அழித்து முன்னேறினர். சில இடங்களில் நேரடியான கைகலப்பும் நடந்தது. பாக் படையினர் பின் வாங்கினர். வெற்றி கையில் கிடைத்த நிலையில் ஒரு ஜூனியர் அதிகாரி காலில் சுடப்பட்டார். அவரை யாராவது சென்று தூக்கி வந்து காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் அவர் உயிர் போய்விடும். ஆபத்து நேரத்தில் சக வீரரை இந்திய ராணுவம் கைவிடுவது இல்லை.

மறைந்திருந்த இடத்தில் இருந்து அவரைக் காப்பாற்ற விக்ரம் பாய முனைந்தார். அருகில் இருந்த சுபேதார்,  ‘நீங்கள் தயவு செய்து அங்கே போகவேண்டாம் சார், நான் போகிறேன்,'' என்று கேட்டுக்கொண்டார். விக்ரம்,‘  உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றன. நீ இங்கேயே இரு. நான் போயே ஆகவேண்டும்' என்று, சுபேதாரின் குரலுக்குச் செவிகொடுக்காமல் பாய்ந்தார். அங்கே ஒரு குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்தது. அந்த இரவு விடிந்தபோது 4875 என்ற அந்த உச்சியை இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்தது. ஆனால் அதைக் கண்டு மகிழ விக்ரம் பத்ரா இல்லை.

போர்க்களத்தில் அசாத்தியமான வீரம் காட்டியதற்காக பரம் வீர் சக்ரா அவருக்கு வழங்கப்பட்டது. அவருடன் களத்தில் நின்ற அனுஜ் நய்யார் என்ற வீரருக்கு மகாவீர்சக்ரா வழங்கப்பட்டது. இருவருக்குமே மரணத்துக்குப் பின் அது வழங்கப்பட்டது.

விக்ரம் பத்ரா இறந்த அன்று மதியம் அவரது வீட்டுக்கு இரண்டு ராணுவ அதிகாரிகள் வந்து தகவலைத் தெரிவித்தனர். தந்தை, செய்தி கேட்டு மயக்கமுற்றார்.

 ‘கடவுள் எனக்கு இரு குழந்தைகளைக் கொடுத்தார். ஒன்றை நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். இன்னொன்று இதோ எனக்காக இருக்கிறான்'' என்று கண்ணீர் விட்டார் விக்ரமின் தாய்.

பாத்ரா காதலித்த பெண், அவரது இறுதிச் சடங்கில் பெற்றோருடன் வந்து கண்ணீர் வடித்தார். அவர் பின்னர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com