நீ இங்கு சுகமே

காதல் சிறப்பிதழ்
நீ இங்கு சுகமே
Published on

எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டூடியோவில் மீனவ நண்பன் படப்பிடிப்பில் இருந்தார்.. மதிய உணவு நேரம். கவிஞர் முத்துலிங்கம் அவரைப் பார்க்கச் சென்றார். ‘இந்தப் படத்தில் நீங்க என்ன பாட்டு எழுதியிருக்கீங்க?’ எம்ஜிஆர் கேட்டார். முத்துலிங்கம் மெல்ல..‘ஒரு பாட்டும் எழுதலை’ என்றார். ‘எப்படி? உங்களுக்கு பாட்டு கொடுக்க சொல்லியிருந்தேனே?’ என்று முகம் சிவந்த எம்ஜிஆர். தயாரிப்பு நிர்வாகியை அழைத்தார். விசாரித்தார். பிறகு இயக்குநர் ஸ்ரீதரும் தயாரிப்பாளரும் வந்து சேர்ந்தார்கள். ‘கவிஞர் ஊருக்குப் போய்விட்டார் அதனால் அவருக்கு வாய்ப்புத் தர முடியவில்லை. இப்போது பாட்டெல்லாம் முடிந்துவிட்டது’ என்றனர்.

‘பரவாயில்லை. கனவுப் பாட்டு ஒன்று வையுங்கள். முத்துலிங்கம் எழுதுவார்’ என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர்.

அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்- உன்

அங்கங்களோ மன்மதனின் படைக்கலம்

இரவினிலே தீபமாகும் உன் முகம்- நீ

இன்பத் தமிழ் கவிதைகளின் இருப்பிடம்- என்று எழுதிக்கொண்டு போனார் கவிஞர்.

படைக்கலம் என்றால் புரியாதே என்றார் ஸ்ரீதர். அது என்னய்யா அடைக்கலம்? பாதிரியார் பேர் போல உள்ளதே என்றார் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.

‘அடைக்கலத்தை நீங்கள் தூக்கிவிட்டீர்கள், படைக்கலத்தை அவர் தூக்கிவிட்டார். என்னிடம் வெறுங்கலம்தான்’ இருக்கிறது என்றார் முத்துலிங்கம்.

வேறொரு டியூன் போட்டார் எம்.எஸ்.வி. அந்த ட்யூனுக்குப் பிறந்ததுதான் எம்ஜிஆரின் அழியாத காதல் பாடல்களில் ஒன்றான

’தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கைபோல வந்துநிற்கும் அழகோ.. நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ’

முத்துலிங்கம் 1973-ல் பொண்ணுக்குத் தங்கமனசு படம் மூலம் எழுத வந்தவர். காலத்தால் அழியாத பல காதல்வரிகளுக்குச் சொந்தக்காரர்.

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து..(படம்: வயசுப்பொண்ணு, இசை எம்.எஸ்.வி) என்று வர்ணிப்பார்.

மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ

வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ? என்றும் கேட்பார்

( கிழக்கே போகும் ரயில். இசை: இளையராஜா)

புதிய வார்ப்புகளில், ‘ இதயம் போகுதே.. எனையே மறந்தே’ என உருகுவார்.

இதழில் கதை எழுதும் நேரம் இது... என்று  உன்னால் முடியும் தம்பியில் வர்ணித்தவர், பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்! என்று குறும்பாக காதல் ரசமும் வடிப்பார்.

பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்துகொண்டு புலவருக்குப் படித்தவர் புலவர் புலமைப்பித்தன். அவரது பாடல்களில் ஒரு காவியத்தன்மை இருந்துகொண்டிருக்கும். மெட்டை நிரப்பும் வெறும் சொற்களாக இல்லாமல் கவிதையாக வடிப்பவர்:

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்?

எழுத்துக்களில்  இருக்கும் அந்த மெல்லினம்

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

என் மன்னனுக்குப் பிடித்ததெல்லாம் இடையினம்...

அடிமைப்பெண்ணில்(1969) எம்ஜிஆருக்கு ஆயிரம் நிலவே வா பாடலை எழுதினார். முக்கியமான காதல் பாடல் இது. எஸ்.பி.பி பாடிய முதல்பாடலும் இதுதான். தொடர்ந்து பல்லாண்டுகள் பல முக்கியமான பாடல்களை எழுதிவிட்டார்.

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடந்து கொண்டிருக்கும்போது, புலவர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க அங்கு சென்றிருக்கிறார் ... அந்தப் படத்திற்காக அருமையான பாடல்கள் எழுதியவர் புலவர்... இவரைப் பார்த்ததும் எம் ஜி ஆர்... ‘என்ன புலவரே, உங்க மனைவிக்கு நீங்க சொல்லவேண்டிய காதலை எங்க மூலமா பாடலா தூதுவிடுகிறீர்களா?’ என்று கிண்டலாகக் கேட்க, புலவர் அதற்கு ‘வீட்டுல யாரும் பாட்டுப்பாடிகிட்டு இருக்க மாட்டாங்க’ என்று கிண்டலாகவே கூற, எம்.ஜி.ஆர் அங்கிருந்த ஒரு கைத்துண்டை எடுத்து புலவரைச் செல்லமாக துரத்த... இருவரும் அந்த அரண்மனை வளாகத்தில் கொஞ்சம் தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வந்தார்களாம்... அங்கு லொகேஷனில் இருந்த அத்தனைப்பேரும் சிறுவனைப்போல ஓடிப் பிடித்து விளையாடும் எம் ஜி ஆரைப் பார்த்து வியந்துவிட்டார்கள்”( தகவல் நன்றி: Niramvilwam/facebook.com)

---இந்த அளவுக்கு எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தவர்.

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

மழை கொண்ட மேகம்,(மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)

நீயொரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம் (நாயகன்),

கல்யாணத் தேனிலா... காய்ச்சாத பால் நிலா(மௌனம் சம்மதம்)

செவ்வந்திப்பூக்களில் செய்தவீடு...(மெல்லப் பேசுங்கள்)

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது...(மதனமாளிகை)

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?(தங்கமகன்)

அந்தப்புரத்தில் ஒரு மகாராணி (தீபம்)

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா?(அழகன்)

-என புலமைப்பித்தனின் காதல் பாடல்களின் பட்டியல் மிகவும் பெரியது.

இவர்களையடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் எழுபதுகளில் இளையராஜாவின் இசை ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது தன்னந்தனியாக ஒரு ராஜ்யம் நடத்திய டி.ராஜேந்தரைச் சொல்லவேண்டும். ஒரு தலைராகத்தில் அவரது பாடல்கள் வரிகளுக்காக திரும்பிப் பார்க்க வைத்தன. அவரது இசையும் கூட. இன்றளவும் அவரது காதல் தோல்விப்பாடல்களுக்கு மவுசே குறையவில்லை.

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது (ஒருதலை ராகம்), நானொரு ராசியில்லா ராஜா.. இது குழந்தை பாடும் தாலாட்டு,  கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்.., அமைதிக்குப் பெயர்தான் சாந்தி..(ரயில் பயணங்களில்) வசந்த காலங்கள்.. அசைந்து ஆடுங்கள்...(ரயில் பயணங்களில்) ஆகிய பாடல்கள் அந்த காலத்தில் இளைஞர்களுக்கு மனப்பாடம். நாற்பது வயதைத் தாண்டிய யாரும் இப்பாடல்களை இன்று முழுவதுமாகச் சொல்லக் கேட்கலாம்.

அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு என்று கேட்டவர் உவமைக் கவிஞர் சுரதா. தைபிறந்தால் வழிபிறக்கும் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த பாடல்.மிகக்குறைவான பாடல்களையே எழுதியிருந்தாலும் இந்தப் பாடலின் மூலமாக இக்கட்டுரையில் அவருக்கு இடம் இருக்கிறது.

நா.காமராசன் புதுக்கவிதை பிதாமகன். அந்த பாணியைத் திரைப்பாடல்களிலும் புகுத்தியவர். பல்லாண்டு வாழ்க இவர் எழுதிய முதல் படம்.

போய்வா நதியலையே..(பல்லாண்டு வாழ்க)

கனவுகளே.. ஆயிரம் கனவுகளே... என் காதலியைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்..(நீதிக்குத் தலைவணங்கு)

மானே மானே மானே.. உன்னைத் தானே (வெள்ளை ரோஜா)

எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம்(இதயக்கனி) போன்ற பாடல்கள் உதாரணம்.

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது’

- இது எம்.எஸ்.வி இசையில் தங்கரங்கன் படத்தில் நா.காமராசன் எழுதியது. ஜெயச்சந்திரனும் சுசீலாவும் இப்பாடலை அமரத்துவம் பெற வைத்திருக்கிறார்கள்.

- இன்னொரு புதுக்கவிதை உலகப் பாடலாசிரியர் கவிஞர் மேத்தா. ராஜராஜ சோழன் நான்.. என்ற மனசை வருடும்  இரட்டைவால் குருவிப் படப்பாடல் இவர் எழுதியதுதான்.

வா..வா.. கண்ணா.. வா..

தா..தா.. கவிதை தா... என்று வேலைக்காரன் படத்தில் காதல் ரசம் பிழிந்தார். இந்தப் பாடலில் ‘தாஜ்மகாலின் காதிலே ராமகாதை கூறலாம், மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்.. ‘என்று மத ஒற்றுமை பேசும் வரிகளும் வந்து விழும்.

உதயகீதம் படத்தில் பாடு நிலாவே என்ற புகழ்பெற்ற பாடல். இந்த பாடுநிலாவே வரியை  பெண் பாடுவார். அதையே ஆணும் திருப்பிப் பாடவேண்டும். இளையராஜா ஆணும் பாடுகையில் பாடு நிலாவே என்று பாடினால் சரிவராதே என்று சின்னதாய் ஒரு ‘ம்’ சேர்த்து பாடும் நிலாவே என்று மாற்றியதில் மேத்தாவின் வரிகள் இன்னொரு பரிணாமம் பெற்றன. இதை கவிஞரே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். பெண்மானே

சங்கீதம் பாடிவா... என்ற நான்

சிவப்பு  மனிதன் படப்பாடலும் குறிப்பிடத்தகுந்த பாடல்.

பாடல் எழுதிய இயக்குநர்களில் காதல் பாடல் எழுதியவர்களில் குறிப்பிட வேண்டியவர் அகத்தியன். காதல்கோட்டையில் நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா என்ற பாடல் நவீனமாகவும் இருந்தது; காலத்துக்கு ஏற்பவும் இருந்து பெரும் புகழ் அடைந்தது. ஆர்.வி.உதயகுமாரும் எஜமான், கிழக்குவாசல்  என கலக்கியிருக்கிறார். நிலவே முகம் காட்டு என்ற எஜமான் படப்பாடல் மிகவும் முக்கியமான அழகான காதல் பாடல் என்று சொல்லலாம்.

பஞ்சு அருணாசலமும் பல பாடல்களை எழுதியிருக்கிறார். கலங்கரை விளக்கம் படத்தில் பொன்னெழில் பூத்தது புதுவானில்  என்ற அருமையான பாடலை அவருடையது. இந்த வரிசையில் கங்கை அமரனை தவிர்க்கவே இயலாது. வைகறையில் வைகைக் கரையில்.. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு போன்ற பல அட்டகாசமான காதல் பாடல்களில் அவர் புகுந்து விளையாடி உள்ளார். ஆத்தா ஆத்தோரமா வாறியா?, கண்ணத் தொரக்கணும் சாமி போன்ற பாடலும் கங்கை அமரனின் சில்மிஷக் கொடைதான். ஜானி படத்தில் அழகான பாடல்களையும் அவர் எழுதி உள்ளார்.

திருப்பத்தூர் ராசு என்ற பெயரில் தாலாட்டு படத்தில் பாட்டெழுதியவர் கொஞ்சநாள் இடைவெளிக்குப் பின்னர் காளிதாசன் என்ற பெயரில் தேவாவுடன் இணைந்து எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். வைகாசிப் பொறந்தாச்சு படத்தில் எழுதிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா..அம்மாடி.. என்ற பாடலை மறக்க முடியுமா?

அடி மாங்கனி பூக்குடமே...  ப்ரியா.. ஓ.. ப்ரியா போன்ற இவரது பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அழகாய்ப் பூக்குதே என்ற ஒரு மிக இனிமையான பாடல் மூலம் பாடலாசிரியர் கலைக்குமாரும் அவரது பல பாடல்களும் நினைவுக்கு வருகின்றன.

இளம் கவிஞர்களால் அண்ணன் என்று கொண்டாடப்படுகிற அறிவுமதியின் பாடல்களில் தமிழ் விளையாடும். மாலை தன் வேலையைக் காட்டுதடி என்ற சேது படப்பாடல் ஆகட்டும் உதயா.. உதயா. என்ற ஏ.ஆர்.ரகுமான் இசையில் உதயா படத்தில் வந்த பாடல் ஆகட்டும்; ஜெயம் படத்தில் வந்த கவிதையே தெரியுமா? ஆகட்டும்; திருமலையில் வந்த அழகூரில் பூத்தவளே... என் அடி நெஞ்சை சாய்த்தவளே ஆகட்டும்; ரன் படத்தில் வந்த பொய்சொல்லக் கூடாது  காதலி... பொய்சொன்னாலும் நீயே  என் காதலி ஆகட்டும் ஒவ்வொன்றும் தனிக்கவிதைகளாய் நிற்கும் தகுதி படைத்தவை.

பிரியாத வரம் வேண்டும் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பிரிவொன்றைச் சந்தித்தேன் நேற்று என்ற பாடலை எழுதுகையில் அதில் இப்படி எழுதினார். ஒரு வரி நீ; ஒரு வரி நான்; திருக்குறள் நாம்’. எஸ்.ஏ.ராஜ்குமார் படித்துவிட்டு நெகிழ்ந்துபோனார். உடனே அதே இடத்தில் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றி கவிஞருக்குப் போட்டுவிட்டார். அள்ளித் தந்த வானம் படத்தில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட.. வசமா வந்து மாட்டிக்கிட்ட’ என்ற மிகப் புகழ்பெற்ற குத்துப்பாட்டையும் எழுதி துள்ளல் பாடல்களிலும் தன்னை நிரூபித்தவர் அறிவுமதி.

இன்னும் எத்தனையோ கவிஞர்களின் காதல்வரிகளில் காதுகள் மூழ்கிக் கிடக்கின்றன.

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com