காட் பாதர் படத்துக்கு இது ஐம்பதாவது ஆண்டு. அன்றிலிருந்து இன்றுவரை உலக அளவில் வெளியான மாபியா /படங்களுக்கான உச்சபட்ச அளவுகோல் காட்பாதர் தான். விட்டோ கார்லியோன்(மார்லன் பிராண்டோ) என்ற நிழலுலக தாதாவின் மகள் திருமணத்தில் தொடங்கும் இந்த படம் அவரின் இரண்டாவது மகன் மைக்கேல்(அல் பாச்சினோ) அடுத்த தலைவனாக எப்படி உருவாகிறார், மற்ற மாபியா கூட்டத்தையும் அரசாங்கத்தையும் எப்படி எதிர் கொள்கிறார் என்று மூன்று பாகங்களாக வெளிவந்தது.
மாபியா என்றாலே பணத்திற்காக வரைமுறை இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? அது உண்மையில்லை. காட்பாதரில் போதை மருந்து விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளுக்கு பிராண்டோ மறுத்து விடுவார். இவர்கள் என்ன நடந்தாலும் சில விஷயங்களைச் செய்வதில்லை என்ற கட்டுப்பாடு கொண்டு செயல்படுபவர்கள். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும். பணம் சேர்ந்த பிறகு அல்பச்சினோ ஏங்குவது அங்கீகாரத்திற்கும் அதிகாரத்திற்கும். புதுப்பேட்டை படத்தில் லோக்கல் ரவுடி அரசியல்வாதியாக ஆசைப்படுவது போல. காட்பாதர் படத்திலிருந்து வேறுபட்டது மலையாள லூசிபர் (2019). இது இன்றைய மாபியா கும்பல் எப்படி போதை மருந்து, அரசியல், ஊடகம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து செயல்படுகிறது என்பதை நிகழ்காலத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டிய முக்கியமான படம்.
பாராமவுண்ட் பிக்சர்ஸ் வரிசையாக பெரிய பட்ஜெட் தோல்விப்படங்களை கொடுத்து எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற தவிப்பில் இருந்தது. அப்போது எழுத்தாளர் மரியா பூசோ கடன் சுமையை சமாளிக்க முடியாமல் முடிக்கப்படாமல் உள்ள தன்னுடைய மாபியா நாவலை பத்தாயிரம் டாலருக்கு பாரமவுண்ட் பிக்சருக்கு விற்கிறார். அதைப் படமாக்க அந்நிறுவனம் பிரபலமான இயக்குநர்களை அணுகுகிறது. ஆறேழு பேர் நிராகரித்த அந்த நாவல் அதுவரை பெரிய ஹிட் படம் எதுவும் கொடுத்திருக்காத பிரான்ஸிஸ் போர்ட் கப்போலா கைக்கு வருகிறது. அவரும் கடுமையான பண நெருக்கடியில் இருப்பதால் படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த பிரச்னை நடிகர்கள் தேர்வு. அறுபதுகளில் மார்லன் பிராண்டோ வரிசையாக தோல்விப் படங்களை கொடுத்திருந்தார். அவருடைய நடவடிக்கைகளும் ஹாலிவுட்டை வெறுக்க வைக்கிறது. ஏறக்குறைய தடை விதிக்கப்பட்ட நடிகராக ஆகியிருந்தார். ஆனால் கப்போலாவும், மரியா பூசோவும் விட்டோ கார்லியோன் பாத்திரத்திற்கு அவர்தான் வேண்டும் என்கிறார்கள். வழக்கத்தைவிட மிக குறைவான சம்பளத்திற்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து பிராண்டோ ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அடுத்ததாக மைக்கேல் பாத்திரத்திற்கு அல்பாச்சினோ. அவர் குள்ளம், சரியானவர் இல்லை என்பது தயாரிப்பு தரப்பு வாதம். ஆனால் பிடிவாதமாக அல்பாச்சினோதான் வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று சாதிக்கிறார்கள். பல நேரங்களில் கப்போலாவை மாற்றி வேறொருவரை வைத்து படமெடுக்க திட்டமிட்டு கடைசி நேரத்தில் கைவிடுகிறது பாராமவுண்ட் நிறுவனம்.
காட் பாதர் கதையை படமாக்கக் கூடாது என்று உண்மையான அமெரிக்க நிழலுலக தாதாக்களிடமிருந்து மிரட்டல்கள் வருகிறது. தயாரிப்பாளரின் கார் தாக்கப்படுகிறது. பல முயற்சிகளுக்குப் பிறகு படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு ஓக்கே சொல்லும் அவர்கள் ‘மாபியா' என்ற வார்த்தையை படத்தில் எங்கும் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்.
இப்படி பல பிரச்னைகளை தாண்டி உருவான காட் பாதர் படம் அதிரி புதிரியான வெற்றியடைகிறது. விமர்சகர்களும் படத்தைத் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
‘உலகின் அதிகம் பார்க்கப் பட்ட, அதிகம் ரசிக்கப் பட்ட, திரைப் பட மொழியை அதன் உச்ச கட்ட நேர்த்தியுடன் கையாண்ட காட் பாதர் இன்றும் ஒரு உன்னதம் என்று கருதப்படக் காரணம் வாழ்க்கை பற்றி அது முன் வைக்கும் பார்வை. அதிக ஆயுள் கொண்ட ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் அத்தனையும் காட் பாதரில் நிகழும்,கச்சிதமான சினிமா மொழியில். எழுத்தும், சினிமாவும், தொழில் நுட்பமும் கலந்து அளிக்கும் அதன் உச்சகட்ட அனுபவம் சொற்களில் அடங்காதது,' என்று இன்னொருவனின் கனவு நூலில் எழுதுகிறார் குமரகுருபரன்.
இப்படி கொண்டாடப்படும் காட்பாதர் படத்திற்கான சிறந்த நடிகர் விருதை மார்லன் பிராண்டோவிற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை அவர் வாங்காமல் மறுத்து விடுகிறார். ஏன்? தன்னுடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய விருது ஒன்றை பிராண்டோ ஏன் நிராகரிக்க வேண்டும்?
காரணத்தை அறிய காலசக்கரத்தில் இன்னும் கொஞ்சம் பின்னால் செல்ல வேண்டும்.
1960 களில் அமெரிக்க அரசு தன்னுடைய பூர்வ குடியான செவ்விந்தியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. வறுமை, வேலை வாய்ப்பின்மை, நிற வெறி ஆகியவற்றை எதிர்த்து பூர்வ குடி மக்கள் போராட தொடங்குகிறார்கள். பூர்வ குடி மக்களின் தலைவரான ரிச்சர்ட் வில்சனை கைக்குள் போட்டுக் கொண்டு அமெரிக்க அரசாங்கம் அம்மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு சில மாதங்களுக்கு முன்பாக வூண்டட் நீ என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் குவிகிறார்கள்.வில்சனை நீக்கவும், அமெரிக்க பூர்வ குடிகளின் உரிமையை மீட்டெடுக்கவும் போராட்டத்தை தொடங்குகிறார்கள். இந்த இடத்திற்கு ஏற்கெனவே போராட்டம் நடந்து பூர்வ குடிகள் கொல்லப்பட்ட வரலாறும்(1890) இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் வலுப் பெறுகிறது. போராட்டத்தை ஒடுக்கும் விதமாக உணவு, குடி நீர், மின்சாரத்தை துண்டிக்கிறது அமெரிக்க அரசு. பத்திரிகையாளர்கள் அந்தப் பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கிறது. இந்த குரலற்றவர்களின் குரலாக தான் ஒலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார் பிராண்டோ.
முதன் முறையாக 1973 இல் ஆஸ்கர் விழா நேரடி டிவி ஒளிபரப்பிற்குத் தயாராகிறது. அந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான தேர்வில் நான்கு பேரில் ஒருவராக மார்லன் பிராண்டோ பெயரும் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க பூர்வ குடி மக்களின் பிரச்னையை கவனப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் பிராண்டோ.
சச்சீன் லிட்டில்பெதர் என்ற மாடல் நடிகை, பூர்வ குடிகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர். இவர் ஏற்கெனவே பிராண்டோவை தொடர்பு கொண்டிருக்கிறார். விருதைப் புறக்கணிப்பதற்கு லிட்டில்பெதரை தேர்வு செய்கிறார் பிராண்டோ.
ஆஸ்கர் விழாவில் அவ்வாண்டின் சிறந்த நடிகராக பிராண்டோவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் பூர்வ குடிகளில் உடையை அணிந்து லிட்டில் பெதர் மேடைக்கு வருகிறார். அவரிடம் ரோஜர் மூர் விருதை வழங்க முனைகையில் அதை கையால் தொடாமல் மறுத்து பிராண்டோ இந்த விருதை ஏன் நிராகரிக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்ல ஆஸ்கர் அரங்கில் கூச்சலொலிகள் எழுகிறது.
அடுத்த நாள் டைம்ஸ் நாளிதழில் பிராண்டோவின் அறுபது பக்க அறிக்கை முழுமையாக வெளியானது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த காட் பாதர் படம் இன்றைக்கும் கொண்டாடப்படுவதைப் போல பிராண்டோவும் ஆஸ்கர் விருதை நிராகரித்ததன் மூலமாக புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக என்றும் நினைவில் இருப்பார்.
உலக அளவில் காட்பாதர் படத்தின் தாக்கத்தில் வெளியான மாபியா படங்கள் அதிகம். இந்தச் சிறப்பிதழில் நம்மை வசீகரித்த மாபியா படங்களின் நிழலுலகத்திற்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்கள்... வாருங்கள் பயணிப்போம்.
ஜூலை, 2022