நிபந்தனைகளுக்கு உட்பட்டது

நிபந்தனைகளுக்கு உட்பட்டது
Published on

எ ண்பதுகள் தொன்னூறுகளின் காலகட்டம் என்றால் அடித்து ஆடலாம்.

ஒருபுறம் தேசபக்திப் படங்களாய் எடுத்துத் தள்ளினார்கள் என்றால் மறுபக்கம் தேகபக்திக்கும் பஞ்சம் இருக்காது.

ஒருபடத்தில் ஹீரோ காதலுக்காக  நாக்கை அறுத்துக் கொண்டானென்றால் மற்றொரு படத்தில் கதாநாயகன் வேறு எதையாவது அறுத்து காதலை நிரூபிப்பான்.

இந்தியாவுடனான இரண்டு யுத்தங்களிலும் தப்பிப் பிழைத்த பாகிஸ்தானியர்களை தேடிப்பிடித்து சுட்டுத் தள்ளுவார்கள் விஜயகாந்த், அர்ஜுன் வகையறாக்கள்.

தேசபக்திக்கான பாகப்பிரிவினை பிரச்சனையில் கேமராவோடு மும்பை, அஸ்ஸாம், காஷ்மீர் பார்டர் என பயணிப்பார் மணி ஷார்.

பிரதமராய் இருந்தால் காப்பாற்றுவது....

முதல்வராய் இருந்தால் போட்டுத்தள்ளுவது....

என்கிற எழுதப்படாத விதியில் உழலும் கோடம்பாக்கம்.

''எனது மாமனாரின் மகன் எனக்குக் கணவனானால் எனது மாமியாரின் மகன் அவருக்கு என்ன உறவு?'' என்பது போன்ற தத்துவார்த்தச்
சிக்கல்களையெல்லாம் முடிச்சவிழ்த்து விட்டு... முதல் மனைவிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கலை மூன்றாவது மனைவியைக் கொண்டு முடித்து வைப்பார் 'இயக்குநர் சிகரம்' கே.பி.

சோளம் வெதைக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளையை நகரத்து யூத்துகளுக்கு பரிச்சயப்படுத்திய பாரதிராஜாவும், மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளை காமிராவின் வழியே கடத்திய மகேந்திரனும், பாலு மகேந்திராவும் சத்தமில்லாமல் தத்தமது காய்களை நகர்த்திக் கொண்டிருக்க...

'குத்துவதில் வீரன் நான்.... குஸ்திகளில் சூரன் நான்.... யார் காதிலும் பூ சுற்றுவேன்... நான்தான் சகலகலாவல்லவன்' என சகலத்தையும் ஹைஜாக் செய்து கொண்டு போனார் எஸ்.பி.முத்துராமன்.

ஆனாலும் திமிறிக்கொண்டு போன தமிழ்
சினிமாவை கடிவாளத்தைப் போட்டு பிடித்து இழுத்து வந்தவர்களில் தோழர் மணிவண்ணனுக்கும் பங்குண்டு.

சமூக நீதித் தத்துவமும் புரியாமல்... இட ஒதுக்கீடு வரலாறும் தெரியாமல்... பள்ளிகளில்
சேர்க்கையின்போது மட்டும் ஏன் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் என்கிற அடிப்படை அறிவும்கூட இல்லாமல் வந்த குப்பைகள்தான் சேரனின் 'தேசியகீதமும்' ஷங்கரின் 'ஜெண்டில்மேனும்'.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இதில் ஓரளவுக்கு உடைப்பை ஏற்படுத்தியது பாலாவின் 'சேது' எனலாம்.

ஆனாலும் நந்தாவில் கொத்தோடு அறுத்தெறிவது...

பிதாமகனில் குரல்வளையைக் கடித்துக் குதறுவது...

நான் கடவுளில் பிறப்பறுக்கும் நோக்கில் பூஜாவின் ரத்தம் குடித்து விடுதலை அளிப்பது...

அவனிவனில் தனது குருநாதனை கொன்று அம்மணமாய் தொங்கவிட்டவனை உயிரோடு கொளுத்துவது போன்ற ஷாக் வேல்யூக்களில் இருந்து தப்பி வரவேண்டும் தம்பி பாலா.

சம காலத்தவர்களான அமீர், ஜனநாதன், பாலாஜி
சக்திவேல், கரு பழனியப்பன், வசந்தபாலன், மிஷ்கின், பிரம்மா போன்றவர்களது சில படங்கள் ஆறுதல் அளிக்கத் தவறவில்லைதான். 

ராமின் தங்கமீன்கள் நேசத்தின் உச்சம் என்றால் வெற்றிமாறனின் விசாரணை பிரமிப்பின் உச்சம் எனக்கு.

கோபி நைனாரின் அறமும், ரஞ்சித்தின் மெட்ராசும் புதிய களம் தமிழ் சினிமா உலகிற்கு.

காக்கா முட்டை மணிகண்டன் மற்றொரு கவனிக்கத் தக்க வரவு.

இவர்களில் இளையவர்களான நலன்
குமரசாமி, வினோத், ராம்குமார், அருண்பிரபு, என நம்பிக்கையூட்டும் ஏராளமான புதுவரவுகளும் உண்டு.

புதிதிலும் புதிதாக வந்திருக்கிற தம்பி மாரி
செல்வராஜும்... லெனின் பாரதியும்... இன்னும் பல சேதிகளைச் சொல்வார்கள் என்கிற நம்பிக்கையை நம்முள் உண்டு பண்ணுகிறார்கள்.

ஆனாலும் 'பிரமாண்டம்' என்கிற பெயரில் வெளிவரும் குப்பைகள்  இத்தகைய வரவுகளையும் பின்னுக்குத் தள்ளி தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாட வைக்கின்றன. பட்ஜெட்டென்னவோ பிரமாண்டம்தான் ஆனால் படத்தின் உள்ளடக்கமோ பூஜ்ஜியத்திலேயே நிலைகுத்தி நிற்கின்றன.

சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான படங்களின் வருகைக்கு மத்தியில் வெட்டி வீரவசனம் பேசும்
சாதிவெறிப் படங்களுக்கும் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  வேல் கம்புகளும் வீச்சறிவாள் பெருமைகளும் உலாவரும் படங்கள் நாம் இன்னும் காட்டுமிராண்டி காலத்தைக் கடந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கின்றன.

சாதீய வெறிப் படங்கள் ஒருபக்கமென்றால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளும் அபத்தங்களும் நிறைந்த படங்கள் நம்மை ரத்தம் கக்க வைக்கின்றன. பேய்களோடு குடித்தனம் நடத்தும் படங்களுக்குத் தப்பி வேறொரு தியேட்டருக்குள் கால்வைத்தால் ''அய்யாவின் ஆவி'' புகுந்தால்தான் ஆக்டிங்கே வரும் என்கிறது இன்னொரு படம். சுந்தரபாண்டியனுக்குத் தப்பி சீதக்காதியில் கால்
வைத்தவனுக்கு நேர்ந்த கதி இது.

முத்துராமலிங்கம், சேதுபதி, கடல், காவிய நாயகன் போன்ற காவியங்களை இதில் சேர்க்காததற்கு ஒரே காரணம் நான் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை நண்பர்களே.

ஆக....

(அனுமதியின்றி இவ்வார்த்தையைப் பயன்படுத்தியமைக்காக ஸ்டாலின் மன்னிப்பாராக)

கடந்த காலங்கள் முழுக்க கழிசடைக் காலங்கள் என்று நிறுவுவதோ...

இதுதான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று பறைசாற்றுவதோ அல்ல இக்கண்றாவியின்.... சாரி...  இக்கட்டுரையின் நோக்கம்.

சிலாகித்தவர்களில் சொதப்பியவர்களும் உண்டு. சொதப்பியவர்களில் சிலாகிக்க வைத்தவர்களும் உண்டு.

ஆனாலும்.... 'முன்னூறு வார்த்தைகளுக்குள்  ஒரு கட்டுரையை முடித்துத் தொலை' என கழுத்தில் கத்தி வைக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியனின் கட்டளைக்கு இப்படித்தான் ஒரு பாமரன் எழுதித் தொலைக்க முடியும்.

இதில் விடுபட்டவர்கள் தமிழ் சினிமா வரலாற்றில் இருந்தே விடுபட்டவர்களுமல்ல. கொண்டாடப்பட்டவர்கள் நாளை அதே தரத்தில் தருவார்கள் என்கிற உத்திரவாதமுமல்ல. 

இன்னமும் இதில் சந்தேகம் இருப்பவர்கள் இக்கட்டுரையின் தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசிக்கக் கடவார்களாக.

நவம்பர், 2019

logo
Andhimazhai
www.andhimazhai.com