நாம் அறியும் இலக்கியச் சான்றுகளின் படி கரிகாலனின் வரலாற்றை இவ்வாறாகத் தொகுத்துச் சொல்லலாம். உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்ற சோழனுக்கு மகனாகப் பிறந்தவன் கரிகாலன். இளஞ்சேட்சென்னிக்கு ஓர் அண்ணன் உண்டு. அவன் தான் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கவேண்டும். இளஞ்சேட்சென்னி என்ற பெயரே அவன் பட்டம் பெறாதவன் என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். அண்ணனுக்கு மகன் இல்லையென்பதால் இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும். இதனால் பங்காளிப் பகை புகைந்துகொண்டிருந்தது. கரிகாலனின் தாயின் ஊர் அழுந்தூர் ஆகும். இது மயிலாடுதுறை அருகே உள்ளது. இவன் பிறந்த ஊரும் அழுந்தூர்தான். இவன் தாயின் வயிற்றில் இருக்கையிலேயே தந்தை இறந்துவிட்டார். எனவே வயிற்றில் இருக்கையிலேயே ஆட்சிப்பொறுப்பைப் பெற்றவன். இதைத் ‘தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தியவன்’ என்கிற பொருநராற்றுப்படை வரி குறிப்பிடுகிறது. ஆட்சிப்பொறுப்புக்கு எதிரான சூழல் நிலவியதால் அவன் கரூர் சென்று சிறுவயதில் வாழ்ந்திருந்தான்.
சோழநாட்டில் ஆட்சிக்கு மன்னன் வேண்டுமென்பதால் அக்கால வழக்கப்படி யானையில் கையில் மாலையைக் கொடுத்தனர். கழுமலம் (சீர்காழி) என்ற ஊரில் புறப்பட்ட யானை கரூர் சென்று கரிகாலன் கழுத்தில் மாலையைப் போட்டு அழைத்துவந்ததாகத் தகவல் உண்டு. ஆனால் எதிரிகள் அவன் உறையூர் வந்ததும் அவனைச் சிறையில் அடைத்தனர். சிறைச்சாலையை எரியூட்டினர். அதில் தப்பிச் செல்கையில் அவனது கால்கள் எரிந்ததால் கரிகாலன் என்ற பெயர் உண்டென்பர். உறவினரும் புலவருமான இரும்பிடர்த்தலையர் அவனை பாதுகாத்து வைத்தவர். தக்க சமயம் வந்ததும் கரிகாலன் படை திரட்டினான். தன் தாயின் ஊரான அழுந்தூரில் இருந்து தெற்கு நோக்கி வந்து வெண்ணி என்ற இடத்தில் எதிரிகளை எதிர்கொண்டான். வெண்ணி என்கிற ஊர் தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே உள்ள இன்றைய கோவில் வெண்ணி. எதிர்ப்படையோ பெரிது. சேரலாதன் என்கிற சேர வேந்தன், பாண்டியன், பதினோரு வேளிர்கள் இணைந்த படை. கரிகாலனுக்கு அப்போது 18 வயது இருக்கலாம். இந்த வெண்ணிப்போரில் சோழப்படை வென்றது.
சேரனும் பாண்டியனும் களத்தில் இறந்தனர். சேரலாதனின் மார்பில் வேல் பாய்ந்து முதுகில் வெளிவந்து விட்டது. புறப்புண் நாணி, அம்மன்னன் அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.
இந்தப் போர் நடந்த இடமான வெண்ணியைச் சேர்ந்த பெண்பாற் புலவர் குயத்தியார் கரிகாலன் மீது பாடல் பாடுகிறார்(புறம் 66) அதில்:
‘நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே’ என்கிறார்
போரில் வென்ற கரிகாலனை விட அங்கே வடக்கிருந்து உயிர்நீத்த சேரலாதன் பாராட்டப் படுகிறான். “நின்னினும் நல்லனன்றே.. ( உன்னைவிட அவன் நல்லவன்)” என்று சொல்கிறார் வெண்ணிக்குயத்தியார். கழாத்தலையார், மாமூலனார், பரணர், ஆகிய சங்ககாலப்புலவர்களும் இந்த சேரலாதனின் செயலைப் பாடுகின்றனர்.
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழிசை முரசம் பொருகளத் தொழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி யறுத்த ஞான்றைத்
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. (பரணர் அகம் 242). இப்பாடலில் பதினொரு வேளிரையும் வேந்தரையும் கரிகாலன் தோற்கடித்ததை அடுத்து கரிகாலனின் தாய் ஊரான அழுந்தூர் ஆர்ப்பரித்தது என்ற செய்தி காணப்படுகிறது.
சங்கப்புலவர்களின் பாடல்கள், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகியவற்றை ஆய்பவர்கள் சிலர் மூன்று கரிகாலன்கள் உண்டு என்கிறனர். இதற்குக் காரணம் உருத்-திரங்-கண்ணனாரின் பட்டினப்பாலையில் கரிகாலன் என்ற பெயரே இல்லை. திருமாவளவன் என்ற பெயரே காணப்படுகிறது. வெ.சு.சுப்ரமணிய ஆச்சாரியார் இவ்வாறு மூன்று கரிகாலர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு ‘கரிகாலன் மூவர்’ என்று நூலே எழுதி உள்ளார். முதற் கரிகாலனின் காலம் கி.மு.3 அல்லது 4ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார் இவர்.
ஆனால் இந்தப் பாகுபாடு ஏற்புடையதாக இல்லை. எல். உலகநாதப்பிள்ளை ஒரே கரிகாலன் தான் எனச்சொல்லி அவன் காலத்தை கிமு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி என்கிறார். சங்கப்பாடல்களிலிருந்து பட்டினப்பாலை வரை காணப்படும் கரிகாலன் ஒருவனே என்கிறார் டாக்டர் மொ.அ. துரையரங்கனார்.
பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு 16 கால் மண்டபத்தை கரிகாலன் பரிசளிக்கிறான். ஆனால் அந்த மண்டபத்தைப் புலவரால் பராமரிக்க இயலாது என்பதால் பத்தோடு நூறாயிரம் பசும்பொன் கொடுத்து திரும்ப வாங்கிக்கொள்கிறான் என்றொரு தகவலை சதாசிவப்பண்டாரத்தார் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை கரிகாலன் ஒருவனே. காவிரிக்கு அணைகட்டி, கரை எடுத்து வளத்தைப் பெருக்கியதால் பெருவளத்தான் என்று அவன் பெயர் பெற்றான். திருமாவளவன் என்ற பெயரும் அதனால் அவனுக்கு வந்திருக்கவேண்டும் என்று கொள்ளலாம். இதை விட்டாலும் பட்டினப்பாலையில் வரும் திருமாவளவனையும் பொருநர் ஆற்றுப்படையில் வரும் கரிகாலனையும் இணைக்கும் வழி எதுவும் தெரியவில்லை. ஆ.ராசமாணிக்கனார் பொருநராற்றுப்படை கரிகாலனின் இளவயதில் பாடப்பட்டது. பட்டினப்பாலை அவன் முதிர்ந்தபின் பாடப்பட்டது என்கிறார்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும் ஒன்றாக அமர்ந்திருந்ததைக் கண்டு காவிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியபாடல் (புறம் 58) ஒன்று உள்ளது. அதேபோல் மதுரைக் குமரனாரும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனைப் பாடி உள்ளார். இந்த பெருந்திருமாவளவனும் பட்டினப்பாலையில் வரும் திருமாவளவனும் ஒருவர்தானா என்ற ஆராய்ச்சி செய்யத் தகுந்ததே. இந்த ஆய்வின் முடிவுகள் வரும் வரை கரிகாலனும் திருமாவளவனும் ஒன்றே எனக் கருதுவதே சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். இன்றைய பூம்புகார் அருகே உள்ள தில்லையாடிக்கு அருகே திருவிடைகழி என்ற ஊர் உள்ளது. இங்குதான் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் பள்ளிப்படை வீடு உள்ளது. இதை சுத்தானந்த பாரதியார், சீர்காழி தாண்டவராயப் பிள்ளை, அவ்வை துரைசாமிப்பிள்ளை ஆகியோர் குறித்துள்ளனர். இங்கே ஒரு முருகன் கோவிலும் உள்ளது. இக்கோவிலுக்கு சோழர்கள் எட்டுப்பேர் விழா எடுத்துள்ளனர். இவ்விடம் சோழர்கள் இருக்கையாக இருந்திருக்கவேண்டும். மூன்றாம் குலோத்துங்க சோழனும் இக்கோவிலை புதுப்பித்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் குரா மரம். இதனால்தான் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்ற பெயர்.
(கட்டுரையாளர் பூம்புகாரைச் சேர்ந்த ஆய்வாளர். அவர் நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)
மே, 2015.