நினைவில் முகமில்லாது நிற்பவன்!

நினைவில் முகமில்லாது நிற்பவன்!
Published on

என் கவிதைகளைப் படித்துவிட்டு என்மீது அன்பு பாராட்டிய வாசக நல்லுள்ளங்கள் பலரை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன். இன்றைக்கு என்னிடம் பழைமை மாறாப் பண்போடு அன்பு செலுத்துகின்ற பலரும் என் முதல் தொகுப்பிலிருந்து என் கவிதைகளை உவப்போடு படித்து உள்ளம் நெகிழ்ந்தவர்கள்.

‘‘பூக்கள் பற்றிய தகவல்கள்' என்னும் என் முதல் தொகுப்பு ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஆறாம் ஆண்டு வெளியானது. கவிதைகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு தொகுப்பு வெளியிடுவதுதான் நமக்குரிய பெயரை முறையாக இலக்கிய உலகுக்கு அறிவிப்பதாகும் என்று நண்பர்கள் பலரும் சொன்னார்கள். 

என்னுடைய பதினாறாம் அகவை முதல் இருபதாம் அகவை வரை எழுதி வெளியான கவிதைகள் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பெரும்பாலான கவிதைகள் கணையாழியில் வெளியானவை. கணையாழிக்கு மாதந்தோறும் ஐந்து கவிதைகளை அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன். இன்றைக்குத்தான் நாள்தோறும் ஐந்து கவிதைகளை எழுதுகின்றோமே தவிர, அக்காலங்களில் ஒரு கவிதையை ஐந்தாறு நாள்களுக்குக் கூட எழுதிக்கொண்டிருப்போம். மாதத்திற்கு ஐந்து கவிதைகள் எழுதி அனுப்பிவிட்டால் அவற்றில் ஒன்றேனும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுமே என்ற நப்பாசைதான் அவ்வாறு அனுப்புவதற்குக் காரணம். 

அப்படி நான் முதன்முறையாக அனுப்பிவைத்த ஐந்து கவிதைகளுமே வெளியீட்டுக்குத் தேர்வு பெற்றன. அக்கவிதைகளைப் படித்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியில் வெளியான என்னுடைய முதல் கவிதைகளில் ஒன்றான ‘‘குடை'' என்ற கவிதையைக் குறித்துத் தம் கணையாழிக் கடைசிப் பக்கங்களில் எழுதிவிட்டார். ‘‘சென்ற இதழில் வெளியான குடை (மகுடேசுவரன்) என்னும் கவிதை கவிதையெழுதி வருந்தும் வருத்தும் கவிஞர்கள் முதலில் படிக்க வேண்டிய கவிதை'' என்று தம்முடைய கடைசிப் பக்கக் கட்டுரையில் எழுதிவிட்டார். கணையாழியில் அச்சேறிய என் முதல் கவிதைக்கே சுஜாதாவின் பாராட்டு கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. என் கவிதைகளை நான் யார்க்கும் படிக்கக்கொடுப்பதில்லை. என் கவிதைகளைக் கேட்டுப் படிக்கக்கூடிய சுவைப்புலம் கூர்மையடைந்த நண்பர்களும் என்னருகே இல்லை. அதனால் நான் எழுதும் கவிதைகள் ஓர் இதழாசிரியரின் பார்வையில்தான் முதற்கண் படவேண்டும். ஆக, என் கவிதைகளின் முதல் வாசகர் என் கவிதைகளைப் படித்துப் பார்த்த இதழாசிரியர்தான். 

அப்போது ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலையில் நிர்வாக ஆசிரியர்  கஸ்தூரிரங்கனின் வீட்டு மேல்தளத்தில்தான் கணையாழி அலுவலகம் செயல்பட்டுவந்தது. பெங்களூரில் தாம் பார்த்து வந்த வேலையிலிருந்து பணியோய்வு பெற்று வந்த சுஜாதாவும் அதே தெருவில்தான் குடிவந்திருந்தார். கஸ்தூரி ரங்கனும் சுஜாதாவும் கணையாழியைத் தொடங்கிய காலத்திலிருந்து நண்பர்கள். ஸ்ரீரங்கம் எஸ். ஆர். என்ற பெயரில் கணையாழியின் கடைசிப்பக்கக் கட்டுரைகளை சுஜாதா எழுதத் தொடங்கியதும் அப்போதுதான். அதனால் கஸ்தூரி ரங்கனின் நிர்வாகத்தின்கீழ் வந்துவிட்ட கணையாழியில் கவிதைத் தேர்வுக்கு சுஜாதாவே பொறுப்பேற்றார். 

அந்நேரத்தில்தான் கணையாழிக்கு என் கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன். சுஜாதா என்னை என் முதல் கவிதையிலேயே அடையாளங் கண்டுபிடித்துவிட்டார். ஆக, என் தொடக்கக் காலக் கவிதைகளின் முதல் வாசகர் எழுத்தாளர் சுஜாதாதான். நான் அனுப்பும் கவிதைகள் அனைத்தையுமே அவர் தேர்ந்தெடுத்துத் தந்துவிடுவதால் எதைப்போடுவது, எதை விடுவது என்று உதவி ஆசிரியர் குழுவினர் தடுமாறினர் என்று எனக்குச் சொல்லப்பட்டது. 

பிறகு ஞானக்கூத்தன் அப்பொறுப்பை ஏற்று கவிதைத் தேர்வைச் செய்தபோதும் என் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். சுஜாதாவும் ஞானக்கூத்தனும் என்னைக் கவிஞனாக வளர்த்தெடுத்து இவ்வுலகுக்கு அளித்தவர்கள் என்றே கூறுவேன். பிற்பாடு கஸ்தூரி ரங்கனின் கையைவிட்டுப்போன ‘‘கணையாழி'' ஓர் அறக்கட்டளை அமைப்பிடம் சென்று சேர்ந்தது. அவ்வமயம் அங்கே பணியாற்றிய ஓர் உதவி ஆசிரியர் என் கவிதைகள் எவையும் கணையாழியில் வெளிவராதபடி பார்த்துக்கொண்டார் என்பது பின்குறிப்பு.

கணையாழி, புதிய பார்வை, சிற்றிதழ்கள் சில ஆகியவற்றில் வெளிவந்த என் கவிதைகள்தாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றன. ஐந்நூறு படிகள் அச்சடிக்க ஐயாயிரம் உரூபாய் செலவாகும் என்று தெரிந்தது. என்னிடம் இரண்டாயிரம் ஊரூபாய் இருந்தது. நான் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவன முதலாளியிடம் மூவாயிரம் ஊரூபாய் பெற்று அந்தத் தொகுப்பை வெளியிட்டேன்.

அண்மையில் என்னைத் தொடர்புகொண்ட ஒளிப்பதிவாளர் துவாரகநாத் ‘‘பூக்கள்பற்றிய தகவல்கள்'' தொகுப்பு மறுபதிப்பு வந்தால் உடனே வாங்கிக்கொள்வேன் என்றார். அவர் திரைப்படத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு அத்தொகுப்பைப் படித்துவிட்டு மிகுந்த கிளர்ச்சியடைந்தவர். 

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அண்மையில் படித்த நூல்களில் மிகப்பிடித்தது என்று அக்கவிதை நூலைக் குறிப்பிட்டார். தொகுப்பைப் படித்தவுடன் இயக்குநர் கே. பாலசந்தர் எனக்கு விரிவான கடிதமொன்றை எழுதினார். குங்குமம் கேள்வி பதில் பகுதியில் அத்தொகுப்பின் கவிதையொன்றைக் குறிப்பிட்டுப் பாராட்டினார் வைரமுத்து.

நதியின் கரைதொட்டோடும்

புனலில் கால் நனைத்திராதவன் கவிதை எழுதி என்ன…!                              

என்பது அவர் குறிப்பிட்ட கவிதை.

என் கவிதைகளின் வாசகர் ஒருவர் ஈரோடு மாவட்டத்தின் ஊர்ப்புறத்துக்காரர். என் அகவையொத்த இளைஞர். அத்தொகுப்பில் என் முகவரியையும் கொடுத்து அச்சிட்டிருந்தேன். முதலில் அவரிடமிருந்து நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்ட மிக நீளமான கடிதம் வந்தது. ஒவ்வொரு கவிதையையும் பாராட்டிப் பேசிய அக்கடிதம் அந்தத் தொகுப்பு தன் காதல் வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது என்று முடிந்தது. தொகுப்பின் கவிதைகள் ஒவ்வொன்றையும் தன் காதலியிடம் விளக்கிப் பேசியபோதுதான் அப்பெண் தன் காதலை ஏற்கும் முடிவுக்கு வந்தாள் என்று கூறியிருந்தார். கவிதைக்கு மயங்காத பெண்மனம் உண்டா என்ன ! நல்லது நடந்தால் சரி என்று நினைத்துக்கொண்டேன். 

முகவரியை வைத்துக்கொண்டு தேடி அந்த இளைஞர் என் அலுவலகத்திற்கும் வந்தார். அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. மற்றொரு முறையும் வந்தார். அப்போதும் நான் இருக்கவில்லை. இப்படி இருமுறையும் என்னைக் காண வந்து பார்க்க முடியாமல் போனது குறித்து கடிதமொன்றை எழுதினார். இப்போதுள்ளதுபோல் அப்போது கைப்பேசிகள் இல்லையே. நானும் ஆறுதல்படுத்தி ஒரு கடிதம் எழுதியதாக நினைவு. பிறகு அவரிடமிருந்து திருமண அழைப்பிதழும் அதன் முன்னிணைப்பாக நீள்கடிதமும் வந்தன. என் காதலுக்குக் காரணமான கவிதைகளை எழுதிய தாங்கள் என் திருமணத்திற்கு அருள்கூர்ந்து வரவேண்டும் என்ற வேண்டுதல் அதிலிருந்தது. கடிதத்தின் முடிவில் இளைஞரும் அவர் காதலியும் சேர்ந்து கையொப்பமிட்டிருந்தனர். அப்போது என் தொழில்வாழ்க்கையில் நான் நாயாய் பேயாய் அலைந்துகொண்டிருந்தேன். அத்திருமண நாளில் தவிர்க்க முடியாத பணியின்பொருட்டு நான் சென்னைக்குச் சென்றுவிட்டேன். அத்திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை.  

பிறகு அவ்விளைஞரிடமிருந்து எவ்வொரு கடிதமும் வரவில்லை. நானும் என்னைத் தொழிலுக்குத் தின்னக் கொடுத்துவிட்டேன். அந்த அகவையில் நான் அவ்வளவு பெரியவன் ஒன்றும் இல்லைதான். ஆனால், என் கவிதைகளின் வழியாக என்னை நாடிவந்த என்னைப்போன்ற ஒருவனுக்கு ஏதோ ஒரு முனையில் முகங்கொடுக்கத் தவறிவிட்டேன். இன்றைக்கும் நான் எனக்கு வரும் அழைப்புகள் அனைத்துக்கும் சென்று நிற்பவன் அல்லன். ஆனால், அந்தத் தம்பியின் திருமணத்திற்குப் போக முடியாத நிலையையெண்ணி இன்றைக்குவரை வருந்துகிறேன். இது நடந்து இருபதாண்டுகள் கடந்துவிட்டன. என் கண்ணில் படாத அந்த வாசகனும் அவனுடைய காதல் மனைவியும் என் நினைவில் உறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com