நினைவில் ஊருள்ள மனிதர்கள்!

Published on

அதுவொரு டிசம்பர் மாத பின்னிராப் பொழுது. பேருந்துக்காகக் காத்திருந்தேன். காதுகளும் கைவிரல்களும் எனதில்லையோ எனும்படி குளிரில் மரத்துப்போயிருந்தன. ஒப்பனைப் பொருட்களை பெட்டிகளில் அடைக்கும் ஒரு தொழிற்சாலையில் மாலை தொடங்கி இரவு வரை பெல்ட்டைத் துரத்திக்கொண்டோடுகிற வேலை.

கனடாவில் வந்திறங்கி சில மாதங்களேயான ஒருவருக்கு அந்த வேலை கிடைத்ததே பெரிது. வாகனங்கள் ஒளி வீசி விரைந்துகொண்டிருந்தன. சுற்றிவர, பகலில் பொழிந்து தள்ளிய பனியின் வெண்வெளிச்சம். பேருந்துத் தரிப்பினுள் நானும் இன்னொரு சோடியுந்தான். இருவருக்கும் வயது இருபதுக்கும் மேற்படாது. ஊட்டம் நிறைந்த மெழுகுப்பொம்மைகள் போலிருந்தார்கள். முதலில் உரையாடிக்கொண்டுதானிருந்தார்கள். எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது அவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். திடுக்கென்றிருந்தது. அவசரமாகக் கண்களைத் திருப்பிக்கொண்டேன். அவர்களோ, பூமியை நோக்கி விண்கல்லொன்று விரைந்து வந்துகொண்டிருப்பதை அப்போதுதான் அறிந்தவர்கள்போன்று அவசரத்தில் இருந்தார்கள். பகிரங்க முத்தங்கள் பழகாத நிலத்திலிருந்து நான் சென்றிருந்தேன். ஆர்வம் விடவில்லை. மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் அவனுடைய கனத்த குளிராடைக்குள் தன்னை நுழைத்திருந்தாள். அவர்களைப் பொறுத்தமட்டில் நான் அங்கு இல்லை. தெருவோ வாகனங்களோ பனியோ இல்லை. புறவுலகத்தை இரண்டு சோடி உதடுகள் மூடிக்கொண்டுவிட்டன. எனக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும். இது நடந்தது தொண்ணூறுகளின் தொடக் கத்தில்.

‘காமம் பாவம்' என்று கற்பிக்கப்பட்ட நாங்கள், இரகசியத்தில் அநேக ‘அத்துமீறல்'களைச் செய்பவர்கள்தாம். ஆனால், பகிரங்கத்தில் ‘சுத்தபத்த'மானவர்கள். நாளடைவில், தெருச்சண்டைகளைப் போலவே முத்தங்களையும் காணாது கடக்கக் கண்கள் பழகின. 

இயந்திரங்களுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை. ஒருநாள், பெல்ட் ஓட்டமாய் ஓடியது. நகர்ந்துவரும் பெட்டிகள் எனது கைகளைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தபடி செயல் மறந்தவளாக நின்றேன். அன்று, அரைமணி நேரம் என்னால் பெல்ட் நிற்பாட்டப்பட்டது. எங்கள் பகுதிக்குப் பொறுப்பாயிருந்த பெண் முணுமுணுவென்றபடி குற்றவாளியைப் பார்க்கும் கண்களால் என்னை உறுத்துப் பார்த்தாள். வீட்டுக்குச் சென்று மேலாளருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதற்கடுத்த நாள் வேலைக்குப் போகவில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போவதைப் பற்றி யோசித்தேன். ஊரில் வாங்கிய பட்டம் ஒன்றுக்கும் உதவவில்லை. கனடாவில் எத்தனை வயதில் வேண்டுமானாலும் பள்ளிக்கூடம் போய் படிக்கலாம். மீண்டும் பள்ளிக்கூடம் போவதென்பது ஒருவகையில் பால்யத்திற்குத் திரும்புவதுதான். ஒரு நன்னாளில் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இருபத்தாறு வயதில் புத்தகப் பையைக் காவிக்கொண்டு பள்ளிக்கூடம் போக வெட்கமாகத்தானிருந்தது. ஆனால், அறுபத்தேழு வயதான வகுப்புத் தோழரைப் பார்த்ததும் அந்த வெட்கம் போய்விட்டது. அவர் சீனாவைச் சேர்ந்தவர். எனக்கு அருகிலிருந்த பெண் ஸ்பெயினிலிருந்து வந்திருந்தாள். அவள் ஆசிரியரை ‘மார்ட்டின், மார்ட்டின்'என்று பெயர் சொல்லி விளித்தாள். ‘‘இதென்னது? இப்படிக் கூப்பிடுகிறாய்?''என்று வினவியதற்கு ‘‘அவரது பெயர் மார்ட்டின்தானே?''என்று பதிலளித்தாள்.

பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் வெளியில் பார்த்துக்கொண்டு செல்வேன். ஒரு காட்சியையும் தவறவிடாமல் மனம் சேமித்துக்கொள்ளும். என்னுடைய இந்தப் பழக்கத்தை புறக்கவனம் என்றோ, வாய் பார்த்தல் என்றோ அழைக்கலாம். ஆனால், அந்தக் காட்சிகள் மனதில் சேகரமாயிருந்து பின்னர் எழுத்தில் வெளிப்பட்டன. கோடை காலத்தில், மேலே ஒரு சிறிய பனியனும், கீழே அதனிலும் சிறிய காற்சட்டை யும் அணிந்துகொண்டு செல்லும் பெண்களைப் பார்ப்பேன்.  அந்த காற்சட்டை சராசரியான வளர்த்தியுள்ள மூன்று வயதுக் குழந்தைக்கு அளவானது. இவ்விதமாக பெனியனும் காற்சட் டையும் அணிந்தால், எங்களூர்களில் எத்தனை பேர் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் ஓடும். பேருந்தில் பயணிக்கும் எங்கள் ‘பண்பாட்டு'க் கண்கள் இரகசியமான பார்வைகளைப் பரிமாறித் தாழும். கனடாவுக்கு ஒருவர் புதிதாக வந்திறங்கியிருக்கிறாரென்றால், அதை அவர் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். குளிருக்கு பண்பாட்டுப் பிரச்சனைகள் விளங்காது. பாவாடை சட்டை யிலிருந்து ஜீன்ஸ்&சேர்ட்டுக்கு மாறுவதைத் தவிர வேறு வழியேயில்லை. எங்களிற் சிலர், சுரிதார் அணிவதன்மூலம் குளிரையும் பண்பாட்டையும் ஒருசேரச் சமாளித்தோம்.

ஒரு கொடுங்காலத்தை நகைத்துக் கடப்பதொன்றே வழி! மேலே எழுதியிருப்பதைப் போல, தொடக் கத்தில் புலம்பெயர் வாழ்வு அப்படியொன்றும் இலகுவானதாக அமைந்திருக்கவில்லை! வசிப்பிடம், நண்பர்கள், மொழி, தொழில், கல்வி, புழங்கும் சூழல் எல்லாம் தகவமைக்கப்படும்வரை திகைத்துத் திண்டாடிப்போனோம். ஏற்கெனவே பெற்ற அனுபவங்களை, ஞாபகங்களை, பிரிவை, வெளிநாடு செல்வதன் பொருட்டு வாங்கிய கடன்களை, இடையறாது நிகழ்ந்த போரால் விளைந்த இழப்புகளை புதிய நிலங்களுக்கு நாங்கள் காவிச் சென்றோம். புதிய கலாச்சாரமும் (கலாச்சாரங்களும் என்பதே பொருத்தம்) மொழியும் வேறு எங்களைத் திகைப்பிலாழ்த்தின. போதாக்குறைக்கு, ஊரின் அனுகூலங்களை (அங்கிருக்கும்வரை தோன்றாதவை) ஒப்பிட்டுப் பார்த்து மருண்டது மனம்.

எதிர்பார்ப்புகளும் யதார்த்தமும் முட்டிக் கொண்டன. சிலர் இரண்டுடனும் சமரசம் செய்யத் தவறினார்கள். புதிய சூழலோடு இசைவாக்கம் பெறுவதற்குள் மனம் சிதைந்துபோனவர்கள் உண்டு. குறிப்பாக பெண்கள் எதிர்கொண்ட தனிமையும் இருண்மையும் எழுதித் தீராதவை. சொந்த ஊர்களில் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்தாலும், சமூக மனிதர்களாக நாங்கள் எங்களை உணர்ந்திருந்தோம். அக்கம்பக்கத்துத் தொடர்பாடலே அற்ற தொடர்மாடிக் குடியிருப்புகளில், அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் கணவன் பின்னிரவில் வீடு திரும்பி வரும்வரை மணித்தியாலங்களைக் கணக்கிட்டுக் கொண்டு காத்திருப்பது கொடுமை! அப்போது தொலைக்காட்சியில் தமிழ் சானல்கள் தொடங்கப்பட்டிருக்கவில்லை. வானொலிகளும் பிந்தி வந்தவை. 

காலநிலை, மனோநிலையில் எத்தகைய செல்வாக்கினைச் செலுத்தக்கூடும் என்பதை உணர்ந்துகொண்ட காலமது. அங்கு கோடையின் ஆயுள் குறுகியது. ஏப்ரலில் தயங்கித் தயங்கி எறிக்கத் தொடங்குகிற வெயில் செப்டெம்பர் நடுப்பகுதியோடு தன்னைச் சுருக்கிக்கொள்ளும். குளிர்காலங்களின் பகற்பொழுதுகள் குறுகியவை. மாலை ஐந்து மணிக்கே இரவாகிவிட்டாற்போன்ற தோற்றம் காட்டுபவை. பனியாலும் மழையாலும் எப்போதும் மூடிக்கட்டிக்கொண்டிருக்கும் வானம் இருண்மையைக் கூட்டியது. இப்போது இருப்பதுபோன்ற தொலைத்தொடர்பு வசதிகளுமில்லை. முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களோ, வாட்ஸ் அப், வைபர் போன்ற இலகு தொடர்பாடல்களோ இல்லை. ‘பெல் கனடா' என்ற ஒரே நிறுவனம் தொலைபேசி தொடர்பாடலுக்கான தனியுரிமையைக் கொண்டிருந்தது. ஊருக்கு ஒரு நிமிடம் கதைப்பதென்றால், ஒரு டொலருக்கும் அதிகமான கட்டணம். ஆக, குரல்களற்ற பாழ்வெளியில் தனித்து விடப்பட்டிருந்தோம். அந்நாட்களில் அனுபவித்த இருட்டை வார்த்தைகளில் எழுதமுடியாது என்பது மிகையல்ல. அது எப்போதைக்குமாய் நினைவில் படிந்த இருட்டு.

காலநிலை, மனோநிலையில் எத்தகைய செல்வாக்கினைச் செலுத்தக்கூடும் என்பதை உணர்ந்துகொண்ட காலமது. அங்கு கோடையின் ஆயுள் குறுகியது. ஏப்ரலில் தயங்கித் தயங்கி எறிக்கத் தொடங்குகிற வெயில் செப்டெம்பர் நடுப்பகுதியோடு தன்னைச் சுருக்கிக்கொள்ளும். குளிர்காலங்களின் பகற்பொழுதுகள் குறுகியவை. மாலை ஐந்து மணிக்கே இரவாகிவிட்டாற்போன்ற தோற்றம் காட்டுபவை. பனியாலும் மழையாலும் எப்போதும் மூடிக்கட்டிக்கொண்டிருக்கும் வானம் இருண்மையைக் கூட்டியது. இப்போது இருப்பதுபோன்ற தொலைத்தொடர்பு வசதிகளுமில்லை. முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களோ, வாட்ஸ் அப், வைபர் போன்ற இலகு தொடர்பாடல்களோ இல்லை. ‘பெல் கனடா' என்ற ஒரே நிறுவனம் தொலைபேசி தொடர்பாடலுக்கான தனியுரிமையைக் கொண்டிருந்தது. ஊருக்கு ஒரு நிமிடம் கதைப்பதென்றால், ஒரு டொலருக்கும் அதிகமான கட்டணம். ஆக, குரல்களற்ற பாழ்வெளியில் தனித்து விடப்பட்டிருந்தோம். அந்நாட்களில் அனுபவித்த இருட்டை வார்த்தைகளில் எழுதமுடியாது என்பது மிகையல்ல. அது எப்போதைக்குமாய் நினைவில் படிந்த இருட்டு.

இந்த மனச்சிதைவை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டும் அனுபவிக்கவில்லை. புதிய நிலங்களுக்குப் பெயர்ந்துசெல்லும் எல்லோருக்கும் பொதுவானது. அண்மைய தரவுகளின்படி ரொறன்ரோவில் வாழ்கிற மக்களில் 51 வீதமானோர் கனடாவுக்கு வெளியில் பிறந்தவர்கள். ஆனால், தொடர்பாடல்கள் பெருகிவிட்ட இந்நாட்களில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்திருந்த தனிமையிருள் இருக்காதென்றே எண்ணுகிறேன்.

சற்றே வித்தியாசமான ‘கலாச்சார அதிர்ச்சி'யை கனடாவில் ஆண்கள் எதிர்கொள்ள நேரிட்டது. நேரிடுகிறது. அதாவது, பிள்ளையையோ மனைவியையோ (அரிதாகக் கணவனையோ) உள, உடல் ரீதியாகத் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பதே அதுவாகும். பெரும்பாலான நாடுகளில் குடும்ப வன்முறையானது சட்டப் புத்தகங்களில் மட்டுமே குற்றமாக இருக்கிறது. அவ்வாறான சூழலில், காவல் நிலையத்தைச் சென்றடைவதற்குள் கணவனில் கனிவு சுரந்துவிடுகிறது. அல்லது, காவற்றுறை அதிகாரிகள் குடும்பநல அதிகாரிகளாக மாறி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்கள். கனடாவைப் பொறுத்தமட்டில், அத்தகைய சேட்டைகளெல்லாம் செல்லுபடியாகாது. ஒரேயொரு தொலைபேசி அழைப்பு போதுமானது. சில நிமிடங்களுக்குள் காவற்றுறையினர் கதவடியில் வந்துநிற்பார்கள். அதன் பிற்பாடு, சம்பந்தப்பட்ட மனைவியோ, கணவனோ கெஞ்சினாலும் கைகளில் பூட்டப்பட்ட காப்பு கழற்றப்படாது. அதைவிட, சிறைத் தண்டனையை அனுபவித்து முடித்தபிறகும், குடும்ப வன்முறைக்கு ஆளானவர் வாழுமிடத்தின் குறிப்பிட்ட கிலோ மீற்றர் எல்லைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் எக்காரணங் கொண்டும் செல்லத் தடை விதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் உள்ளதுபோல, இதற்கும் மறுபக்கம் என ஒன்று உண்டுதான். உறவுச் சிக்கலின் உப விளைவுகளாக அதிகரித்துச் செல்லும் தனிப்பெற்றோர் வீதம், பெற்றோருக்கிடையில் சிக்கிச் சின்னாபின்னமாகும் பிள்ளைகளில் ஏற்படும் மனோரீதியான பாதிப்பு இன்னபிற.

தன் பிரஜைகளை தேர்தலின்போது மட்டும் கண்ணெடுத்துப் பார்க்கிற கீழைத்தேசமொன்றிலிருந்து சென்றவள் என்றவகையில், பெண்களுக்குச் சார்பான பல சமூகநல வசதிகளைக் கொண்டுள்ள நாடாகவே கனடாவை உணர்கிறேன். கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் வேலைக்குச் செல்லும்வரையில் சமூகநலக் கொடுப்பனவின் மூலம் ஓரளவிற்கு அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்திசெய்கிறது. அந்தக் கொடுப்பனவு, உயர்ந்து செல்லும் வாடகைக் கும் இதர செலவுகளுக்கும் போதாமலிருப்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். ‘ஷெல்டர்' எனப்படும் தற்காலிகத் தங்குமிடங்கள், உள வள ஆலோசனைகளும் உண்டு. பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம், வீட்டு வன்முறையிலிருந்து தப்பித்து தனித்து வாழ வகை செய்கிறது.

பொருளாதார அகதிகளும் உண்டுதான் எனினும், ஆண்களில் ஏராளமானோர் போரிலிருந்தும் அரச படைகளின் கைது மற்றும் சித்திரவதைகளிலிருந்தும் தப்புவதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர்கள். அந்நிலையில், வெளிநாடு செல்வதற்காக ஊரில் அல்லது வேறு நாடுகளிலுள்ள உறவினர், நண்பர்களிடமோ வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருந்தது. இன்னொரு வகையில் கூறினால், கடன் அவர்களுக்கு முன்னால் போய்க் காத்திருந்தது. தவிர, முன்னர் குறிப்பிட்டதுபோல அவர்கள் தனிமனிதர்கள் அல்லர். அவர்களுக்குப் பின்னே ஒரு சமூகமும் பொறுப்புகளும் இருந்தன. நானறிய, சில மணி நேரமே உறங்கி, இரண்டு வேலைகள், மூன்று வேலைகள் என்று செய்தவர்களும் உண்டு. ‘இரவெனப்படுவது உறங்குவதற்கானது' என்பதெல்லாம் அவர்களளவில் பொய். மொழிக்கும் அறிவுக்கும் தொடர்பேயில்லை என்றாலும், மொழிக்கும் வேலை வாய்ப்புக்கும் தொடர்புண்டு என்று அறிந்த காலமாக அது இருந்தது. சீனர்களைப் போலவே எம்மவரும் கடும் உழைப்பாளிகள். உழைப்பினால் புகலிட தேசங்களில் தம் இருப்பை உறுதிப்படுத்தியவர்கள். இருண்ட காலத்திலிருந்து நிலைமாறு காலத்திற்கு நகர்ந்து இன்று பொருளாதார ரீதியில் ஏறுமுகத்தில் இருப்பதற்கு எம்மவரின் அயராத உழைப்பு மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

கனடாவை கடும் உழைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை நல்கும் சொர்க்கம் என்றும் சொல்லலாம். மறுவளமாக, வேலையன்றி வேறு நினைவற்றிருந்தால், மனித இயந்திரங்களின் நரகம் என்றும் சொல்லலாம். வாழ்க்கைக்கும் வருமானத்திற்குமான நேரப் பகுப்பில் இருக்கிறது எல்லாம்.

கலாச்சார வேறுபாடுகளுக்கிடையில் சிக்கித் திணறுபவர்களாக பிள்ளைகள் இருக்கிறார்கள். உணவுப்பழக்கம், மொழி, பெண்களென்றால் ஆடை மற்றும் பண்பாடு என வீடு கற்பிப்பது ஒன்றை. வெளி சொல்வது மற்றொன்றை. எதற்குச் செவிமடுப்பதென்ற குழப்பம். ஆனால், வளர்ந்தவர்களைப் போல இரண்டுக்குமிடையில் நின்று குழம்பாது, வாழ்நிலத்தின் பண்பாடு, கலாச்சா ரங்களோடு இசைவாக்கம் கொண்டுவிடுபவர்களாக சிறுவயது மற்றும் பதின்மவயதுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். வெளி அவர்களை விரைவில் தத்தெடுத்துக்கொள்வதானது தவிர்க்க இயலாது நிகழ்கிறது. அப்படி வலிந்து தவிர்க்க எண்ணும்போது அவர்கள் ஏனைய சமூகத்தவர்களிடமிருந்து தனித்து விடப்பட நேர்கிறது.

ஒரு இனம் தனக்கேயுரிய தனித்துவமான அடையாளங்களை இழப்பதென்பது வேறு; புதிய நிலத்தோடு இசைவாக்கம் பெறுவதென்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளலாகாது. கனடா ஒரு பல்கலாச்சார நாடு. தனித்துவத்தை இழக்காமல், பல்வேறு நிலப் பின்னணிகள், கலாச்சாரங்களைக் கொண்ட மனிதர்கள், மொழிகள் இவற்றை ஒரேயிடத்தில் சந்திக்க நேர்வதானது புலம்பெயர்தலின் ஆரோக்கியமான அனுகூலங்களிலொன்று. கனடாவும் பூர்வகுடிகளின் நிலத்தைப் பிடுங்கி உருவாக்கப்பட்ட நாடே. இன்னுஞ் சொன்னால், பூர்வகுடிகள் நீங்கலாக இங்கு வாழும் யாவரும் வந்தேறு குடிகளே. அதனால்தானோ என்னவோ ஒப்பீட்டளவில் இனத் துவேசம் குறைவு.

தனித்துவமான அடையாளங்களைத் துறந்து, மேற்கத்தேயப் பழக்கவழக்கங்களை அப்படியப்படியே பின்தொடரும் தமிழர்களும் உளர். அவர்களுள் அநேகர் எண்பதுகளுக்கு முன்னம் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களது வீட்டின் புழங்குமொழி ஆங்கிலமாக இருக்கிறது. ஆனால், அத்தகையோர் மிகச் சொற்பமானோர். ஓரளவு புரிதலுள்ள எவரும் ‘மண்ணிற வெள்ளைக்காரர்'களாக முயற்சி செய்வதில்லை.

நான் கனடாவுக்குப் போகும்போது என்னுடைய பயணப்பொதியினுள் ஆடைகளை விட இடம்பிடித்திருந்தவை, இடித்து வறுத்துத் திரித்த அரிசி மாவும் மிளகாய்த்தூளும் இன்னபிற உணவுப்பொருட்களுமே. இப்போது மிளகாய்த்தூள் மட்டும் ஏழெட்டுப் பெயர்களில் விற்பனையாகிறது. வழக்கமான உணவுப் பழக்கவழக்கத்தை இன்றுவரையில் எம்மவர்களிற் பெரும்பாலானோர் மாற்றிக்கொள்ளவில்லை. இத்தாலியின் பிட்சாவும், சீனாவின் நூடுல்சும், மேற்கத்தையோரின் சான்ட்விச்சும் எங்களது உணவு மேசைக்கு வந்துவிட்டன. ஆனால், ‘‘என்னதானிருந்தாலும் சோறு சாப்பிடாட்டாப் பத்தியமில்லை'' என்பது அடிக்கடி கேட்கக்கூடிய  வாசகம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ரொறன்ரோவல்ல இன்றிருப்பது. அப்போதெல்லாம் ஓரிரண்டு தமிழ்க்கடைகளுக்கே திரும்பத் திரும்பச் செல்வோம். முருங்கைக்காயைப் பார்த்தால் ஆ! ஒடியலைப் பார்த்தால் ஆ! கருவேப்பிலையைப் பார்த்தால் ஆ! படம் பார்ப்பதென்றால் ஸ்காபுரோவிலிருந்து (ஈழத்தமிழர்கள் அதிகம் வாழ்ந்த நகரம்) வேக நெடுஞ்சாலையில் ஓடோடென்று ஓடி ஜெராட் ஸ்ரீட்க்குப் போவோம். படம் பார்த்து முடித்ததும், அங்கேயே ஒரு உணவகத்தில் சாப்பாடு. அங்குதான் தமிழ் உடுப்புக் கடைகளும் நகைக் கடைகளுமிருந்தன. 6 குமார்ஸ், நீலம் சில்க்ஸ், சாய் டெக்ஸ்டைல்ஸ் இப்படிச் சில பெயர்கள் நினைவிருக்கின்றன. பொதுவில் அது இந்தியர்கள் செல்வாக்குச் செலுத்திய கடைத்தெரு. அங்கே சில ஈழத்தமிழர்களது கடைகளும் திரையரங்கும் இருந்தன. இப்போது, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கனடாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தத்தம் உறவுகளை வரவழைத்துவிட்டார்கள். பெண்களில் அநேகர் வேலைக்குப் போகத்தொடங்கிவிட்டார்கள். ஆளுமை மிக்க பெண்களைக் கொண்ட சமூகமாக ஈழத்தமிழ் சமூகம் உருவாகிவிட்டிருக்கிறது. 

இப்போது, ஸ்காபுரோவில் மல்லிகைச் செடியிலிருந்து பினாட்டு வரை (பனங்களியில் செய்யப்படும் தின்பண்டம்) எல்லாம் கிடைக்கிறது. மார்க்கம் என்ற நகரம் மற்றொரு ஸ்காபுரோவாகிவிட்டது. பொருளாதார ரீதியாக நாங்கள் (நானில்லை. ஊதாரிகளுக்கும் பணத்திற்கும் எட்டாம் பொருத்தம்) பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவிட்டோம். நிலங்களை வாங்கி, தங்களுக்கென தனியான வணிக வளாகங்களையும், பேரங்காடிகளையும் நிர்மாணித்துவிட்டார்கள். வீடுகளோ வசதிக்கேற்றபடி அளவிற் பெருத்துக்கொண்டே போகின்றன. கலாச்சார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் அதிகரித்துவிட்டன. நாமாக விலகியிருந்தாலொழிய இந்த அலையில் சிக்காமலிருப்பது கடினம் எனும்படியாயிற்று.

எமக்கு அடுத்த தலைமுறை சோறையும் கறியையும் கடந்துகொண்டிருக்கிறது. சாமத்திய வீடுகளைக் கண்டு முகம் சுளிக்கிறது. ‘வயதுக்கு வருவதை ஏன் கொண்டாட வேண்டும்?' என கேள்வி எழுப்புகிறது. பிற சமூகத்தினருடனான திருமண உறவுகள் இயல்பாகிவிட்டன.

நனவிடை தோய்தல் தேய்ந்து செல்கிறதோ? இலக்கியத்தில் மட்டும் இறந்தகாலம் இருந்துகொண்டிருக்கிறதோ? என்று அண்மைக்காலமாக ஒரு எண்ணம் ஓடுகிறது. அதற்கு, முள்ளிவாய்க்காலின் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையும் அதன் விளைவான விரக்தியும் மனச்சோர்வும் காரணமாக இருக்கலாம். நிலத்தடியில் நீர் போல மனதாழத்தில் இழப்பின் வலி ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதேசமயம், அன்றாடத்தின் முன் அடிபணியவேண்டியவர்களாகவும், போட்டி மிக்க இவ்வுலகில் முன்னகர்ந்து சென்றாலே பிழைத்திருக்க முடியும் என்ற யதார்த்தத்தை முகங்கொள்ள வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்.

ஒருகாலத்தில், தனிமையின் வீச்சு தாளாமல் ஊருக்குத் திரும்பிப் போய்விடப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தவரை அண்மையில் சந்தித்தேன். இருபதாண்டுகளுக்கு முன்னர் தற்கொலை எண்ணத்தோடு திரிந்தவர். அவரிடம் ஊருக்குத் திரும்பிச் செல்வதைப் பற்றி விசாரித்தேன்.

‘‘நாங்கள் அஜாக்ஸில் வீடு வாங்கிவிட்டோம். அரை ஏக்கர் காணியில் வீடு. பிள்ளைகளது படிப்பை விட்டுவிட்டு இனி ஊருக்குப் போகேலாது.''

மனிதர்களின் நெருக்கத்திற்காக ஏங்கியவர், இன்று பழகிய உறவுகளை விட்டு வேறிடம் நாடிச் செல்கிறார். அவர் கனடாவின் பிரஜாவுரிமை பெற்றுவிட்டார். மொழித் தடையைக் கடந்துவிட்டிருக்கலாம். உறவுகள் அனைவரையும் வரவழைத்துவிட்டிருக்கவும் கூடும். ஆக, அவருக்கு புதிய நிலத்தின் மீது ஒட்டுதல் மிகுந்துவிட்டது. கனடாவை இரண்டாவது தாய்நாடாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது அவருடைய மனம்.

இருத்தல் என்ற நிலை மாறி வாழ்தலை நோக்கி எமது மக்கள் நகர்ந்துவிட்டார்கள். நிச்சயமற்ற அந்தரத்திலிருந்து எதிர்காலம் குறித்த உறுதிப்பாடுடைய நிரந்தரத்திற்கு மாறிவிட்டார்கள். 

ஆனால், என் போன்றவர்கள், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதையில் வரும் ‘நினைவில் காடுள்ள மிருகம்' போல, நினைவில் ஊருள்ள மனிதர்கள்! எங்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் இனவெறிப் பூதத்தின் அச்சுறுத்தலின்றி வாழக் கூடிய முதலாவது தாய்நாடு எங்களுக்கு எப்போது வாய்க்கும் என்பதே!

ஏப்ரல், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com