நாவல்களும் நானும்

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
Published on

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக பிஞ்ச் (Bynge) செயலியில் ஒரு தொடர் கதை எழுதச் சொல்லிக் கேட்டனர். கொரோனா வைரஸை அடிப்படையாகக் கொண்டு பயோ - த்ரில்லர் தொடர் ஒன்று எழுதுகிறேன். கொரோனா வைரஸ் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது. இது ஆரம்பமா? அல்லது அதனுடைய தொடர்ச்சி எப்படி இருக்கும் என்றும் கற்பனையில் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். அதைத்தான் எழுதப்போகிறேன் என்றேன். எந்த மாதிரியான கதை என்று கேட்டார்கள்.

கொரோனா வைரஸை தொடர்ந்து அடுத்த இரண்டு வருடத்திற்குள் வரும் ஒரு அபாயகரமான வைரஸை அழிப்பதற்காக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்த உலகில் மனித இனமே இருக்கக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தோடு நல்ல விஞ்ஞானிகளை கொல்லத் துடிக்கிறான் ஒரு கெட்ட விஞ்ஞானி. அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறான். இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பொதுமக்களும் என்ன வகையான துன்பத்திற்குள்ளாகிறார்கள் என்பது தான் கதை.

அந்த சைக்கோ விஞ்ஞானியை தமிழ்நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், எப்படிக் கண்டுபிடித்து அழிக்கிறார் என்பதைப் பரபரப்பான அத்தியாயங்களுடன் எழுதப்போகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.

எழுத ஆரம்பித்த போது நிறைய தகவல்கள் தேடவேண்டியிருந்தது. நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது. வைரஸ் என்றால் என்ன? பாக்டீரியா என்றால் என்ன? என்பதைப் பகுத்துப் பிரித்து, அதன் பிறகு வைரஸ் எப்படி மனிதனுடன் விளையாடுகிறது என்பதையும், மனிதன் எப்படி வைரஸுடன் விளையாடுகிறான் என்பதையும் அடிப்படையாக வைத்தும் எழுதினேன். அந்தக் கதையை 29 லட்சம் பேர் படித்திருக்கின்றனர்.

பிஞ்ச் ஆப்பில் வெளிவந்த மற்ற எழுத்தாளர்களின் தொடரை விட என்னுடைய பயோ - த்ரில்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குக் காரணம் சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி அந்த கதையை எழுதியிருப்பது. அந்த கதையின் தலைப்பு ‘நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா'. இந்த துர்கா யார் என்பது கதையின் கடைசியில் தான் தெரியும். கதையை 67 அத்தியாயங்களாக எழுதினேன்.

கிரைம் நாவல் என்றால் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது என்ற மாயையிலிருந்து விலகி, குற்றம் நடைபெற்றால் அதை எப்படி அறிவியல் பூர்வமாக எதிர்கொண்டு அழிப்பது என்ற எண்ணத்தோடு சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் என்னுடைய கிரைம் நாவல்களை எழுதி வந்திருக்கிறேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும், அது பணம், பெண், பகை என்ற மூன்று காரணங்களுக்குள் அடங்கிவிடும். இந்த மூன்று காரணங்களை அடிப்படையாக வைத்துத்தான் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கிரைம் நாவல்களை எழுதி வருகிறேன். நான் மட்டுமல்ல, கிரைம் நாவல் எழுதக்கூடிய எந்த எழுத்தாளரும் அந்த மூன்று காரணங்களை அடிப்படையாக வைத்துத்தான் எழுத முடியும். வெகு அரிதாக இந்த மூன்று காரணங்களைத் தாண்டி, வேறு காரணங்களுக்காகவும் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் எனது நாவல்களில் சொல்லியிருக்கிறேன். இதற்காக நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது.

நாளிதழ்களில் ஒரு குற்றச்செய்தி வந்துவிட்டால், அந்த செய்தியில் உள்ள உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானம், மருத்துவம், கணிப்பொறி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த வல்லுநர்களுடன் பேசி தகவலை சேகரிக்க வேண்டியிருந்தது.

புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் மீறி, நாம் எழுத்தில் காலூன்றி நிற்க வேண்டும் என்றால், அவர்கள் தொடாத துறை எதுவென்று யோசித்து குற்றவியல் துறையை தேர்ந்தெடுத்தேன். குற்றவியல் தொடர்பான கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்பதைப் போகப் போக தெரிந்து கொண்டேன். சமூக சரித்திர கதை எழுதும் எழுத்தாளர்களுக்கும், குற்றவியல் தொடர்பான கதை எழுதும் எழுத்தாளர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். சமூக சரித்திர கதை எழுதுவதற்கான கதைக்களம் என்பது மிகப் பெரியது. ஆனால், குற்றவியல் தொடர்பான கதைக்களம் என்பது மிகவும் குறுகியது. இந்த சிறு எல்லைக்குள் தான் குற்றவியல் புதின எழுத்தாளர் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் குற்றவியல் சம்பவங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் மனிதர்களுக்குத் தகாத ஆசை ஏற்படக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்ட காலத்தால் அழியாத இதிகாசங்கள் இவை. நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகளைப் படிப்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும். சில செய்திகள் மட்டும் அடிமனதை நெருடும். குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் ஒருவரின் தோற்றத்தைப் பார்க்கும் போது அவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றும். அவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்றால்? வேறு யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று யோசிப்பேன். அந்த

யோசனை சிறுகச் சிறுக கதைக்கான கருவாக மாறும். அந்தக் கருவை அடிப்படையாகக் கொண்டு ஒரு  சிறுகதையையோ, நாவலையோ எழுதி முடித்துவிடுவேன். 

செய்தித்தாளில் வரும் செய்திகளைக் காட்டிலும் என்னுடைய வாசகர்கள் வீடு தேடி வந்து, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச்  சொல்லுவார்கள். அவை கதைகளில் வரும் கற்பனை சம்பவங்களைக் காட்டிலும் பிரமிப்பை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். அந்த பிரமிப்புதான் என்னை குற்றவியல் புதினம் எழுதும் படைப்பாளியாக மாற்றியது.

நாம் அன்றாடம் எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறோம். ஒருசிலரை நல்லவர்கள் என்று எண்ணியிருப்போம். ஒருகட்டத்தில் அவர் அவ்வளவு நல்லவர் இல்லை என்கிற விஷயம் தெரிகிற போது அதிர்ந்து போகிறோம். என்னைப் பொருத்தவரையில், ஒவ்வொரு மனிதரின் மனமும் மர்ம நாவலைப் போன்றது. நான் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்துவிட்டேன். பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். அதனால் தான் என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுத முடிந்தது. எழுதிக் கொண்டு இருக்கவும் முடிகிறது.

ஜனவரி, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com