1952ல் வெளிவந்த படம்‘ஜெனோவா’: இது தமிழ். மலையாளம் இரண்டிலும் ஒரே நேரத்தில் தயாரானது. இரண்டிலும் எம்.ஜி.ஆரே நாயகர். அந்தப் படத்தில் அந்தந்த மொழியில் பேசியிருந்தார்.
‘நான் மலையாளத்தில் நடித்த ‘கதாநாயகன்’ வேடத்தில் என்னால் பேசப்பட்டிருந்த மலையாள மொழி உரையாடல்கள் ஒரு மலையாள நடிகரால் டப்பிங் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
ஏனென்றதற்கு ‘ நீங்க பேசின மலையாளம் தமிழ் மொழி பேசுற மாதிரிதான் (அதாவது ஓசை) இருக்கிறதே தவிர மலையாள ஓசை அதில் இல்லை’ என்று சொல்லிவிட்டார் படத்தயாரிப்பாளர்.
‘சிறு பையனாக நாடகக் கம்பெனியில் இருந்த போது திருவனந்தபுரம் நோக்கி ரயிலில் சென்றேன். ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகையை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு ஒரு சிக்கல்.
திடீரென்று ஏதோ எங்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தோம். பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தோம். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது என்று சொன்னார்கள். மலையாள மொழி எனக்கு தெரியாமலிருக்கமுடியுமா? என்று கேட்பீர்கள். ஆனால் நான் கல்வி கற்பதற்காக நுழைந்த முதற் பள்ளியே தமிழ்பள்ளிதான். அப்படியிருக்க, மலையாள மொழியை எங்கு கற்க முடியும்? மலையாளத்தில் எழுதப்படிருந்த ஊரின் பெயர் எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு பையன்கள் எல்லோரும் என்னைக் கேலி செய்தார்கள். ஏற்றுக் கொண்டேன், என்ன செய்வது? பிறப்பால் ஒரு மலையாளியாக இருந்தும் தெரியவில்லை என்பதால் எழுந்த கேலி அது.
ஓவ்வொருவருக்கும், அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமை மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய தாய் பேசிய மொழி மலையாள மொழி ஆகும். அப்படியானால் நான் பேச வேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகவேதான் இருந்தாக வேண்டும்? என்னைப் பொருத்தவரையில் ஒரு விசித்திரமான நிலைமை எப்படியோ உருவாகக்கப்பட்டுவிட்டது.
எனது காதுகள், புரிந்து கொள்ளும் பழக்க வழக்கங்கள் எனக்குச் சொன்னவையெல்லாம் , தமிழ்ப் பண்பாட்டின் நிழலாட்டங்களைத்தான். பண்பாட்டு தமிழ், எழுத்து தமிழ், பேச்சு தமிழ், சுற்றுச் சார்பு தமிழ் . இப்படி எங்கு பார்த்தாலும் கேட்டாலும், படித்தாலும் பேசினாலும், வாழும் முறைகளிலும் தமிழ்... தமிழ்... தமிழ்... என்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்திற்குள், என்னை முட்டைக்குள் குஞ்சாக்கிய பிறகு, வெளியே வந்து பார்த்தபோதும், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றிருக்குமாயின், நான் எப்படி வளர்ந்திருப்பேன் என்பதை நானே சொல்லி என்னைத் தெரியப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா? அப்படியானால் தாய்மொழி என்று சொல்கின்றார்களே அது பொய்யா? அந்த தாய்மொழிப் பற்று என்னைப் போன்றவர்களுக்கு இல்லை என்று முடிவு கட்டிவிடப் போகின்றோமா?
எனக்கு மலையாள மொழிப்பாடல்களைக் கேட்பதில் நல்ல விருப்பம் உண்டு. சில கருத்துக்களை கேட்கும்போது மனத்திலே ஒரு கிளர்ச்சி ஏற்படுவதும் உண்டு!
ஆனால், தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மனம் பூரித்து அந்தக் கவிதை நயத்தைப் பற்றி திறனாய்வு செய்து மகிழுவதைப் போன்று , மலையாள மொழியை விமர்சிக்க முடிவதில்லை. ஏன்? அந்த மொழியில் சரியான முறையில் பாண்டித்தியம் இல்லாத காரணத்தினால், என்னால் சிறந்த ஓர் மலையாளியாக என்னை எதிரொலிக்கச் செய்ய இயலவில்லை.பிறப்பால் மலையாளியாகவும் வளர்ப்பால் தமிழனாகவும் உள்ள எனக்கு எந்த மொழி சொந்த மொழி?
மன்ன பத்மநாபன் கேரளத்தின் பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவர், அவர் இறந்ததைக் கேள்விப்பட்டதும், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கேரளாவிற்குச் சென்று மரியாதை செலுத்தி வந்தேன். அடுத்த நாள் ஒரு பத்திரிகை, ‘மலையாளியான எம்.ஜி.ஆர். மலையாளியான மன்ன பத்மநாபன் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டார்’ எனச் செய்தி போட்டது.
இதைப்படித்ததும் என் உள்ளம் மிகமிக வேதனையடைந்தது. எங்கிருந்தாலும் என்னை வளர்த்து புகழுடன் அன்புடன் இருக்கும்படி செய்தது தமிழ் மக்கள்தான். ஆகையால் நான் தமிழன்தான் என்று என் மனம் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். இன்று என் மனம் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது ஏன் தெரியுமோ? பம்பாய் தமிழ்ச் சங்கத் தலைவர் வரவேற்புரையில் ‘தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர்’ என்று வாய் நிறைய வாழ்த்தினார். ‘தமிழ்ச்சங்கம்’ தமிழன் என்று என்னை ஏற்றுக்கொண்டுவிட்டது.
என் கவலை பறந்துவிட்டது.
( நன்றி: பேசும் படம், வே.குமரவேல் தொகுத்த ‘எம்.ஜி.ஆர் எழுத்தும் பேச்சும்’ புத்தகம்)
டிசம்பர், 2017.