"நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு..."

Published on

எந்தப் பொருளையும் நாம் தெரிந்தே தொலைக்க முடியுமா? ‘ஆமாம்ல்லே முடியாது,' என்பதுதான் எல்லோரின் பதிலாய் இருக்கும்.

ஆனால்  வாழ்க்கையை மட்டும் தெரிந்தே தொலைக்க முடியும். ஒரு இரவைத் தொலைக்க வேண்டுமா, ‘‘அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது அபிமானம் மாறாது...'' என்றோ ‘‘நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ நிலை பெறாதாதும் ஏனோ விலை நானோ,...'' என்றோ வரும் தேவதாஸ் பாடல்களில் ஒன்றைக் கேட்டால் போதும். தொடர்ந்து வரும் ஒரு நாளைத் தொலைக்க வேண்டுமா, ‘‘அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் '' என்கிற பாட்டைக் கேட்க வேண்டும். ஒரு வாரத்தைத் தொலைக்க வேண்டுமா தேவதாஸ் படத்தையே பார்த்தால் போதும்.  ஆனால் வாழ்க்கையையே தோற்றுத் தொலைத்து காதல் ஜெயிக்க வேண்டுமா, கவிஞனாகி விடுங்கள். இதை நான் சொல்லவில்லை நான் படித்த, என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கை வரை'' நூலில் வரும் ‘‘ பிரபா'' என்கிற கதை சொல்லித் தருகிறது.

வடமொழியின் மகாகவி ‘அஸ்வகோஷ்'. சாகேத (அயோத்தியா) நகரத்தில் பிறந்த சாதாரண கவியாகிய அஸ்வகோஷை மகா கவியாக்கியவள் அங்கே வசித்த பிரபா. பிரபா கிரேக்க அழகி. ஆண்டு தோறும் வரும் வசந்த உற்சவத்தின் போது நடக்கிற நீச்சல் போட்டியில், அறிமுகமே இல்லாத பிரபாவும் அஸ்வகோஷும் பெருக்கெடுத்தோடும் அகன்ற சரயூ நதியினை நீந்திக் கடக்கிறார்கள். இருவரும் முதலில் வந்தாலும் அஸ்வகோஷ் சற்றே பிந்தி பிரபாவை வெல்ல வைக்கிறதில் ஆரம்பிக்கிறது இருவரின் காதலும்.  சாதீயம் அவர்களைப் பிரிக்க முற்படுகிறது, அஸ்வகோஷின் தந்தை வடிவில். பிரபாவிடம் சாதிக் கவுரப் பிச்சை கேட்கிறான் கிழவன். அவனுக்கு நேரடியான பதில் சொல்லவில்லை யென்றாலும் அஸ்வகோஷுக்கே தெரியாமல் ஒரு முடிவெடுக்கிறாள்.  ‘‘நான் இறக்க நேரிட்டாலும், உனக்குள்ளிருந்து வெளி வந்த, வெளிவரப் போகிற ஆயிரமாயிரம் இளமை பொங்கும் கவிதைகளுக்காக  நீ தற்கொலை எதுவும் செய்து கொள்ளக் கூடாது,'' என்ற வாக்கினைப் பெறுகிறாள்.

ஆனால் இங்கேயெல்லாம் இது கதையாகவில்லை. அவளுக்கு இன்னொரு உண்மையும் தெரியும். அவர்கள் இல்லறம் மேற்கொண்டு வயதும் காலமும் அவளது இளமையையும் அழகையும் பலி வாங்கி விட்டால், அதை அவன் காண நேர்ந்தால், அவனது காவிய நாயகிகளின் இளமையும் அப்படிப் பல்லுப் போன, கூன் விழுந்த கிழமாகி விடக் கூடாது, அவனது இளைய வாசகர்களை ஏமாற்றக் கூடாது. அதற்கு  இப்போதைய இளமையான பிரபாவே அவன் சிந்தை, உடல் பொருள் ஆவி அனைத்திலும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிற பிரபா பெருவெள்ளச் சரயூ நதியில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் அவள் விரும்பியபடியே அஸ்வகோஷின் இலக்கிய வானில் எப்போதும் இளைய நிலாவாக இன்றும் ஒளி வீசிக் கொண்டே இருக்கிறாள். இது நிகழ்ந்தது கி.பி.50 - ல். பத்தொன்பது நூற்றாண்டுகளுக்குப் பின்னரும், எத்தனையோ அஸ்வகோஷ்களின் வாழ்க்கையை இன்றும் இது போல் பிரபாக்கள் தங்களை அறியாமலே கூட மாற்றி விடுகிறார்கள், கி.பி 1950 இல் பிறந்த என் வாழ்க்கையினை இந்தக் கதை மாற்றியது போல.

ஒரு அசந்தர்ப்பமான, வால்நுனிப் பொறி: நான் அஸ்வகோஷுக்கு அருகில் கூடப் போக முடியாது என்றாலும் ஒரு சிறிய ஒற்றுமையை விதி, வரமாகவோ சாபமாகவோ வழங்கி இருக்கிறது.   எனக்குக் கவிதை நல்கிய என் தோழியை நான் பார்த்து சுமார் முப்பத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன. இது என் போன்றோர்க்கு சாபமென்றால், ‘நான் பாடிய முதல் பாட்டு; இவள் பேசிய தமிழ் கேட்டு' என்றும், ‘இங்கு நானும் கவியாக யார் காரணம் அந்த நாலும் விளையாடும் விழி காரணம்,'' என்றும் வருகிற  கண்ணதாச வரிகள் எங்களுக்கு ஆறுதலை வரமருளட்டும்.   

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com