நாடகம் ஓர் அரசியல் செயல்பாடு!

நாடகம் ஓர் அரசியல் செயல்பாடு!
Published on

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில்  நாடகம் செய்து கொண்டு வருகிறார் பிரளயன்.

 ‘சென்னை கலைக்குழு‘ என்ற நாடகக் குழுவை நிர்வகித்து அதனுடைய அமைப்பாளராகவும் அதனுடைய பெரும்பாலான நாடகத் தயாரிப்பு பணிகளையும் செய்துவருபவர். அவரிடம் பேசியதில் இருந்து சில பகுதிகள்:

‘‘கணிதம் படித்துவிட்டு கணினிப் பொறியியல் படிப்பதற்காக சென்னை வந்தேன். இளநிலை பயிற்சியாளனாக வேலை செய்து கொண்டிருந்த போதுதான் நாடகத்தின் மீதான ஈர்ப்பு வந்தது. நாடகத்தில் தொடர்ந்து செயல்படும் போது அதற்கு இணையாக ஊடகப் பணியையும் செய்தேன்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நான்கில் சென்னைக் கலைக்குழு தொடங்கிய போது தமிழக அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருந்தது. எங்களுடைய முதல் நாடகம் ‘நாங்கள் வருகிறோம்'. எண்பதுகளுக்குப் பிறகு நாடகக் குழுக்களின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. சென்னைக் கலைக்குழுவுக்கு முன்பாகவே மக்கள் கலை இலக்கிய கழகம்,, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், திணைவெளி, போன்ற மற்ற இடதுசாரி அமைப்புகள் தமிழகம் முழுவதும் நாடகம் நடத்திக் கொண்டிருந்தன. அதற்கும் முன்னால் வீதி நாடகம் என்ற கலைக்குழு சென்னையில் திறந்தவெளி நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது.

எண்பதுகளின் தொடக்கத்தில் நாடக செயற்பாட்டாளர்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் துறையால் பதியப்பட்டிருந்தன.  இதனால் நாடக செயல்பாடு என்பது முற்றிலும் முடங்கிப்போனது. எண்பதுக்கு பிறகான அடுத்த மூன்றாண்டுகள் மனித உரிமை வரலாற்றில் கருப்புப் புள்ளிகள் எனலாம்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் மார்க்சிய & லெனினிய குழுக்கள் மீது தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதற்காகப் பல ஜனநாயக உரிமைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. காவல் நிலையப் படுகொலைகள், வழக்குகள், துப்பாக்கிச் சூடுகள் என பல மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அந்த பின்னணியில் தான் நாங்கள் நாடகம் நடத்த வருகிறோம்.

சென்னைக் கலைக்குழுவின் பாரம்பரியம் என்பது அரசியல் செயல்பாட்டுடன் தொடர்புடையது. அரசியல் அரங்கம் என்பது ஒரு வகைப்பாடு. அதேபோல், நாடகம் என்பதே ஒரு அரசியல் தான். இருப்பினும் கூட அரசியல் அரங்கம் என்றும் வகைப்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவே கருதுகிறேன்.

நாங்கள் நாடகம் நடத்த வந்தபோது முப்பதுக்கும் மேற்பட்ட நாடகக் குழுக்கள் இருந்தன. தொண்ணூறுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில் வீதி நாடகம் என்ற வார்த்தை பிரயோகத்தில் இல்லை.

வட இந்தியாவை சேர்ந்த சப்தர் ஹாஷ்மி என்ற நாடகக் கலைஞர் வீதியில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் போது காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்டார். அவருடைய பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக அவருடைய அதே நாடகம் வெவ்வேறு இந்திய மொழிகளில் அந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்குப் பிறகு தான் வீதி நாடகம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

வீதி நாடகத்தைப் பரவலாக்குவதற்காக சென்னை கலைக்குழு பல்வேறு பணிகளை மேற்கொண்டது. காலப்போக்கில் பல்வேறு குழுக்கள் தங்களின் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. ஒரு காலத்தில் அமைப்பிற்குள் இருந்து செயல்பட்ட குழுக்கள் இன்று அமைப்புக்கு வெளியே நின்று அரசியல் நாடகங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

எண்பதுகளின் தொடக்கத்தில் மதுரையில் நிஜ நாடக இயக்கம், சென்னையில் வீதி நாடகக் குழு, மக்கள் கலை இலக்கிய கழகம், ஞாநியின் பரிக்‌ஷா, சென்னை கலைக்குழு, நெய்வேலியில் ராஜேந்திர  சோழனின் (அஷ்வகோஷ்), நாடகக் குழு, கோவையில் அரவிந்தனின் நாடகக் குழு, கோவில்பட்டியில் இயங்கிய சிருஷ்டி நாடக்குழு போன்ற பல்வேறு குழுக்கள் திறந்தவெளியில் அரசியல் நாடகங்களை செய்து கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் யாரும் தொடர்ந்து நாடகத்தை இயக்கவில்லை. இப்போது நாடகம் இயக்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நாடகங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல்,  பல்கலைக்கழகங்களில் நாடகங்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதையெல்லாம் தான் நாங்கள் இடதுசாரி நாடகங்கள் என்கிறோம். இவை தான் இடதுசாரி நாடகக் குழுக்களின் வரலாறு.

நாங்கள் எங்களை இடதுசாரி நாடகக்குழுக்கள் என்று வகைப்படுத்திக் கொள்வதில்லை. இன்றுள்ள பெரும்பாலான நாடகக் குழுக்கள் அரசியல் பேசக் கூடியவையாகத்தான் உள்ளன. நவீன நாடகக் குழுக்கள் தங்களை சபா நாடகங்களிலிருந்தும், ஏற்கனவே பாரம்பரியமாக இருந்து வரும் மரபுக் கலைகளிலிருந்தும் வேறுபடுத்திக் கொண்டுள்ளது.

நவீன நாடக செயல்பாட்டில் இருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளராகத்தான் இருக்கின்றனர். ஏதேனும் ஓர் இடதுசாரி அரசியல்  அமைப்புடன் தொடர்பில் இல்லையென்றாலும் கூட அவர்களின் நாடக செயல்பாடுகள் இடதுசாரி தன்மை கொண்டதாகத்தான் இருக்கின்றன. நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

இரண்டாயிரத்துக்குப் பிறகு, தேசிய நாடகப்பள்ளியில்  படித்த கிட்டத்தட்ட பதினெட்டுப் பேர் தற்போது நாடகம் இயக்கும் பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நாடகக் குழுக்களின் செயல்பாடும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. தமிழகத்தின் நவீன நாடக செயல்பாடு என்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த செயல்பாடாகத்தான் இருக்கின்றது. அவர்கள் எல்லோருமே இடதுசாரி கண்ணோட்டம் கொண்டவர்களாக இருப்பது தான் உண்மை.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது கேரளா, கர்நாடகாவில் நாடகத்திற்கான சமூக ஆதரவு மட்டுமல்ல அரசு நிறுவனங்களின் ஆதரவும் இருக்கின்றது. தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லை. கர்நாடகாவில் எல்லா தாலுகா மையங்களிலும் நாடக அரங்கங்கள் உண்டு. அவை நாடகக் குழுக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் குறைந்த வாடகையில் தரப்படுகின்றன. ஆனால், சென்னையில் உள்ள அரங்கங்கள்  லட்சக் கணக்கில் வாடகை கேட்கின்றன. தமிழகத்தில் நவீன நாடக செயல்பாட்டிற்கு எந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. நாடக கலைஞர்களே அவர்களின் கைப் பணத்தைப் போட்டு அல்லது நிதியைத் திரட்டி தான் நாடகத்தைத் தயாரிக்க வேண்டியுள்ளது.''

அக்டோபர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com