நாடகக் கலைஞர்கள்

நாடகக் கலைஞர்கள்
Published on

தமிழ் நவீன நாடகக் குழுக்கள் வேகமாக வளர்ந்து இந்திய அளவில் புகழ்பெற்று வருகின்றன. இதில் அரங்க நாடகங்கள், வீதி நாடகங்கள் என தீவிரமான நோக்கோடு பல இளைஞர்கள் பங்கேற்று நாடகமே வாழ்க்கை என்று வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் சிலரைப் பற்றி இங்கே.

விநோதினி, 31

இயல்பாக  கலைகள் மீது நாட்டம் கொண்ட விநோதினி நாடகத்துறைக்குள் நுழைந்தது   2003-ல். பசுபதி, கலாராணி, வெளி ரங்கராஜன், கருணாபிரசாத், மங்கை ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 2006-ல் கூத்துப்பட்டறையில் இணைந்து முழுநேர நாடகக் கலைஞர் ஆகிவிட்டார். தான் பார்த்துவந்த வேலையையும் விட்டுவிட்டார். விநோதினி எம்.எஸ்.சி. சைக்காலஜியும் எம்பிஏவும் படித்தவர். 2009-ல் கூத்துப்பட்டறையில் இருந்து வெளியே வந்தார். பாமாவின் சாமியாட்டம் சிறுகதையை தனிநபர் நாடகமாக இவர் அரங்கேற்றியபோது இயக்குநர் சரவணன் பார்த்துவிட்டு எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்க அழைத்தார். பின்னர் கடல், யமுனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாலுமகேந்திராவின் தலைமுறைகள் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.  நாடக அரங்கேற்றங்கள், நடிப்புப் பயிற்சி அளித்தல் என்று கடந்த பத்தாண்டாக இவருக்கு அரங்கமே எல்லாமுமாக உள்ளது.

கார்த்திகேயன், 39

சூதாடிச் சித்தன் என்றால் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு உடனே பிடிபட்டுவிடும். பெரும்பாலும் சித்தர், சாமியார் போன்ற பாத்திரங்களில் வருவார். அடர்ந்த தலைமுடி, நீண்ட தாடியுடனேயே இவரை டிவி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். “அந்த மாதிரிதான் நம்மை நடிக்க வைக்கிறாங்க” என்கிறார் மென்மையாக. நாடகத் துறையில் முனைவர் பட்டம் வாங்கியவர் கார்த்திகேயன். அத்துடன் தமிழ் செவ்விலக்கியத்தில் முனைவர் பட்ட உயராய்வையும் முடித்துள்ளார். பல்வேறு கல்லூரிகளில் நாடகங்கள் பற்றி உரை நிகழ்த்துவது பயிற்சி அளிப்பது என்று பரபரப்பாக இருக்கும் இவர் இப்போது ஒரு தொலைக்காட்சியிலும் பணியாற்றுகிறார்.  சுமார் 14 நாடகங்களை இயக்கி உள்ளார். தனக்கென்று சுயமான குழு எதுவும் வைத்துக் கொள்ளாமல் தமிழில் இயங்கிவரும் பல்வேறும் நவீன நாடகக் குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறவர்.

லிவிங் ஸ்மைல் வித்யா, 31

ஆரம்பத்தில் தன் இணைய எழுத்துமூலம் கவனத்தை ஈர்த்த திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா இப்போது சிறந்த அரங்கக் கலைஞராக உருக்கொண்டு வருகிறார். தமிழில்  நாடகத்துறையில் நுழைந்த முதல் திருநங்கை இவர்.  2004-ல் இருந்து நாடகத் துறையில் ஈடுபட்டு வருகிற இவர், மொளகாப்பொடி, என் ராமாயணம், சத்ய லீலா, சூர்ப்பணங்கு உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார்.  மு.ராமசாமி, மங்கை, முருகபூபதி, கருணா பிரசாத், ஸ்ரீஜித் சுந்தரம் ஆகியோரின் குழுக்களில் பங்கேற்று அரங்குகளை தன் நடிப்பால் உயிர்ப்பிக்கிறார்.  இவர் தமிழில் எழுதிய சுயசரிதை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கவனமாகப் படிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது. திரைத்துரையிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

---

ஸ்ரீஜித், 25

ஒளிப்பதிவாளர், விளம்பரப் படங்கள் எடுப்பவர் என்பது ஸ்ரீஜித்துக்கு தொழில்முகம். ஆனால் அவருக்கு வாழ்க்கையாக இருப்பது நாடகங்களே. மிக சின்ன வயதிலேயே நாடக வடிவம் நோக்கித் திரும்பியவர். இவரது கட்டியக்காரி நாடகக் குழுவில் திருநங்கைகள், தலித்துகள், மாணவர்கள், ஐடி துறையினர் என்று பல தரப்பட்ட பின்னணிகளை உடையவர்கள் தங்கள் பின்னணிகளைத் துறந்து ஒரே குழுவாக வேலை செய்கிறார்கள். இவர் இயக்கிய எழுத்தாளர் பாமாவின் ‘மொளகாப்பொடி’ நாடகம் இந்திய அளவில் பல பாராட்டுக்களைப் பெற்றது.  களரியும் யோகாவும் முறைப்படி கற்ற நடனக் கலைஞர் இவர். தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு சோளகர் தொட்டி நாவலை மேடையில் நிகழ்த்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

--- 

கோபி, 35 ஸ்டெல்லா, 31

கோபியும் ஸ்டெல்லாவும் நாடகத்தம்பதியர்.  கோபி, புதுச்சேரியில் உள்ள ஓவியக்கல்லூரியில் பயின்றவர். அங்கிருந்த காலத்தில் தான் பார்த்த வ. ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி’ எனும் நவீன நாடகமே தன்னை நாடகத்தில் ஈடுபட பெரும் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கிறார். அதன்பின்னர் நாடகத்தின் மீது பேரார்வம் கொண்டு பல்கலைக்கழக நாடகத்துறையில் பயின்ற காலத்தில் பேரா.இராமானுஜம், வ.ஆறுமுகம், இரா.ராஜு, கரு.அழ.குணசேகரன், அ.ராமசாமி, ச.முருகபூபதி, பிரளயன், எல்.ரவி மற்றும் இலங்கை நாடகவியலாளர்களான செ. சுந்தரேஸ், பாலசுகுமார்  போன்றோரின் நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த காலங்களில் சில   நாடகங்களை இயக்கவும் தொடங்கியிருக்கிறார். அதில் முருகபூபதியின்  ‘சரித்திரத்தின் அதீத மியூசியம்’,  ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ போன்ற நாடகங்கள் இவரது இயக்கத்தில் மேடையேறின. அக்காலக்கட்டத்தில்தான் தமிழ் முதுகலை மாணவியான ஸ்டெல்லா நடிகையாக ‘சரித்திரத்தின் அதீத மியூசியம்’ நாடகத்தில் இவருடன் இணைந்துள்ளார். இருவருமே புதுச்சேரி ‘களம்’ மற்றும் மதுரை ‘மணல் மகுடி’ குழுவில் இயங்கினர்.  கோமாளிகள் விடுதி, பாழ் நகரத்துப்பிரதி, நான் வளர்மதி  போன்ற நாடகங்கள் கோபி எழுதியவை. கோமாளிகள் விடுதி நாடகத்தில் பெண்கோமாளியை அறிமுகப்படுத்தியதை குறிப்பிட்டுச் சொல்கிறார்.

ஸ்டெல்லா, அந்நாடகத்தில் பெண் கோமாளியாக நடித்தார். ‘பெண் ஒருவர் கோமாளியாக நடித்தது முக்கியத்துவம் நிறைந்தது’ என்கிறார் அவர்.

கலைத்துறையில் இணைந்து பணியாற்றிய இருவரும் 2010-ல் வாழ்க்கையிலும் இணைந்தனர். தற்போது ஸ்டெல்லா புதுச்சேரி அரசுப் பள்ளியில் (சோரப்பட்டு) தமிழ் மொழி ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். கோபி பொதுக்கல்வியை ஊக்கப்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் அஸீம் பிரேம்ஜி நிறுவனத்தில் ‘கல்வியில் நாடகம்’ என்பதன் அடிப்படையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.  ‘யாழ்’ என்ற அமைப்பையும் நிறுவி புதுச்சேரிக் கலைஞர்களின் கலை அனுபவத்தை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோபியின் எழுத்து இயக்கத்தில் உருவான ‘சிகப்புக் கண்ணாடி’ நாடகம் கேரளாவில் முதல் மேடையேற்றத்தைக் கண்டது. காலாகாலமாக பெண் உடல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை கேள்விக்குட்படுத்தும் இந்நாடகத்தை இன்னும் பல இடங்களில் மேடையேற்றும் வேலைகளில் இருக்கின்றனர்.

---

தம்பிச்சோழன், 31

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்திலிருந்து ப்ளஸ் 1 முடித்த கையுடன் சென்னைக்கு சினிமா ஆர்வத்துடன் வந்தவர் தம்பிச்சோழன். அவருக்கு நாடக அறிமுகம் கிடைத்தது ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறையில். அங்கே வேலைக்காகச் சேர்ந்தவரை நாடகம் உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கிருந்தவாறே சுமார் ஐந்தரை ஆண்டுகள் தமிழ்நாடெங்கும் போய் ஏராளமான வீதிநாடகங்கள் நடத்தியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றுக்குப் பல நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியிருக்கிறார்.

ந.முத்துசாமி இயக்கத்தில் அர்ஜுனன் தபஸ் உள்ளிட நாடகங்களில் நடித்துமிருக்கிறார். விக்கிரமாதித்தன் கதை என்ற ந.முத்துசாமியின் நாடகத்தை தெருக்கூத்தாக இயக்கி இருக்கிறார்.  இமையம், பாமா போன்றவர்களின் கதைகளை நாடகவடிவமாக்கிய இவர், தனிநபர் அரங்க நிகழ்வுகளையும் செய்துவருகிறார். திரைப்படங்களில் அவ்வப்போது தலைகாட்டி இருக்கும் இவர் இப்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் பணியைச் செய்துவருகிறார்.

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com