1992 ஆம் ஆண்டு. ஒரு சனிக்கிழமை காலைநேரம். விஜயா பதிப்பகத்தில் வேலாயுதம், நாஞ்சில்நாடன், ஓவியர் ஜீவா மூவரும் இருக்கிறார்கள். எப்போதும்போல நாஞ்சில்நாடன் கச்சிதமான உடை. சட்டையை சுருக்கில்லாது டக்-இன் செய்து பெல்ட் போட்டிருக்கிறார். காலில் பளிச்சென்று ஷூ. கையில் ஒரு துணிப்பை. அவர் அதை மேசைமீதும் வைக்கவில்லை. அடுத்தவரிடமும் கொடுக்கவில்லை. பத்திரமாய் கைபிடிக்குள்ளேயே வைத்திருந்தார். அடிக்கடி நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கும் பரபரப்பும் பதற்றமும் அவரிடம் இருந்தது. “நாஞ்சில்... நேரமாயிடுச்சு... இப்ப நீங்க தரலாம்” என்று அண்ணாச்சி மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துச் சொல்லவும் பையிலிருந்து அதை வெளியே எடுத்தார். கச்சிதமாக பைண்ட் செய்யப்பட்டிருந்த ஒரு மேனுஸ்கிரிப்ட். பயபக்தியுடன் அதை வெகு ஜாக்கிரதையாக வெளியே எடுத்தார். அண்ணாச்சியிடம் ஒப்படைத்தார். “ராகுகாலம் முடியட்டுமேன்னுதான் கொஞ்சநேரம் ஆகட்டும்னேன்...” என்று சிரித்தபடியே வேலாயுதம் ஆவலுடன் புரட்டலானார். மேலே “சதுரங்கக்குதிரை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கையெழுத்துப் பிரதி வெள்ளைத்தாளில் எழுதப்பட்டு கச்சிதமாக பைண்ட் செய்யப்பட்டிருந்தது. அன்றுதான் நான் அவரை முதன்முதலாக பார்த்திருக்க வேண்டும்.
இன்றைக்கும் அவர் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளாக அவர் பேனாவின் ஊற்று வற்றாது சுரந்துகொண்டேயிருக்கிறது. உண்மையில் இன்றைக்கும் கணிணியை பயன்படுத்தாமல் கையால் எழுதும் ஒரே எழுத்தாளர் நாஞ்சில் மட்டும்தான். அந்தக் கையெழுத்தும் மாறவில்லை. அதன் அழுத்தமும் குறையவில்லை.
அந்த காலகட்டத்தில் எழுத்தாளர்களின் தோற்றம் ஒருவிதமாக நிறுவப்பட்டிருந்தது. அழுக்கான ஜிப்பா, ஜோல்னாபை, சவரம் காணாத முகம், கலைந்த தலைமுடி என்று ஒரு சித்திரம் உண்டு. என்னுடைய அலுவலின் காரணமாக நான் அணியும் உடைகள், இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லும்போதும் அது சார்ந்த நண்பர்களை சந்திக்கும்போதும் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். அந்த எண்ணத்தையும் அசௌகரியத்தையும் போக்கியவர் நாஞ்சில்நாடன்தான்.
எழுத்தாளன் அப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்றில்லை. டிப்டாப்பாக கம்பீரமான நடைஉடையுடன் இருக்கலாம் என்று உதாரணமாய் நின்றவர். இப்போதும் அவர் அப்படித்தான். ஏனோதானோவென்று உடுப்பதைப் பார்க்க முடியாது. நடைஉடையிலும் தோற்றத்திலும் சற்று அசட்டையாக இருக்கிறார் என்றால் அது உதகை நாராயண குருகுலத்தில் தங்கியிருக்கும் நாட்களில் மட்டும்தான்.
நாற்பதாண்டு காலமாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். தான் சொல்ல நினைப்பதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த எழுத் தாளன் என்ற நிலையிலிருந்து இந்த சமூகம் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பதையும் சேர்த்து எழுதுகிற, பேசுகிற பொறுப்பான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஆனந்தவிகடனில் தீதும் நன்றும் தொடர் வெளியாவதற்கு முன்பு நாஞ்சில்நாடன் இலக்கியவட்டத்துக்கு மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர். ஆனால் தீதும் நன்றும் தொடரின் மூலமும் குங்குமத்தில் வெளியான கைம்மண்ணளவு மூலமும் அவர் தமிழ் வாசிக்கும் இன்னும் பெரியதொரு வாசகர் வட்டத்துக்கு சென்றடைய முடிந்தது. இது ஆனந்தவிகடனில் அவர் எழுதினார் என்பதல்ல. அந்த இதழில் அவர் என்ன எழுதினார்? எப்படி எழுதினார்? என்பதுதான் முக்கியம். நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் எண்ணங்களை, கோபங்களை, வருத்தங்களை, சந்தோஷங்களை அவர் பொதுமைப்படுத்தினார். இதை இப்படிப் பார்க்கலாமே, ஏன் இதை இப்படி அணுகமுடியவில்லை என்று யோசிக்கச் செய்தார். இதன் வழியாக தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவருக்குமுரிய ஒரு எழுத்தாளராக அவர் பரிமாணமடைந்தார். இது இன்னும் கூடுதலான வாசகப் பரப்பை அவருக்குத் தந்து கொண்டிருக்கிறது. அவருடைய இன்றைய எழுத்து தீவிர இலக்கிய வாசகனுக்கான எழுத்து மட்டுமல்ல. சமூகத்தைப் பற்றி வாழ்க்கையைப் பற்றி இன்றைய நடைமுறைகளைப் பற்றி பொது வாசகர்களுக்கிடையே உள்ள ஏராளமான குழப்பங்களை பக்குவமாக தெளிவுபடுத்துகிற அக்கறையான எழுத்தும்கூட.
இன்றைய இளம்தலைமுறையிடம் உரையாடும் ஆர்வம் அவரை கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே பேசச் செய்கிறது. 3000 கல்லூரி மாணவிகள் கூடியிருக்கும் அரங்கில் உரையாற்றும்போது தகப்பன் ஸ்தானத்திலிருந்து அவரால் கரிசனையுடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மனம்விட்டுப் பேச முடியாத விஷயங்களை பேச முடிகிறது.
1977ம் ஆண்டு தலைகீழ் விகிதங்களில் நாவலுடன் தொடங்கிய அவரது எழுத்து, இன்று ஆறு நாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், பத்து கட்டுரைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள் என்று தடையின்றி தொடர்கிறது. எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. இதில் செலுத்தப்பட்டுள்ள உடல் உழைப்பு ஒருபக்கம். ஆனால் அதற்கான மனம், சமூகம் குறித்த சிந்தனை, தொடர்ந்து சொல்வதற்கான திறம் ஆகியவற்றைப் பற்றி யோசிக்கவேண்டும். தொடர்ந்து வாசிக்கவேண்டும். யாவற்றையும் கவனிக்கவேண்டும். கவனித்து அதுகுறித்து யோசிக்கவேண்டும். நாற்பதாண்டு கால எழுத்து என்பது ஒரு இயக்கம். ஒரு தலைமுறை என்பதே முப்பதாண்டு காலம் என்று சொல்வார்கள். இவர் ஒரு தலைமுறை தாண்டியும் உழைக்கிறார்.
எழுத்தாளனுக்கு நம் சமூகம் தரும் மரியாதையை உணர்ந்தும் அதைப் பற்றி பொருட்படுத்தாது ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மனம் சலிக்காமல் பல நேரங்களில் கைக்காசு செலவு செய்து கூட்டங்களுக்கு சென்று வருகிறார். அவரோடு எழுதத் தொடங்கியவர்கள் பலரும் இவரளவு தீவிரமாக எழுதுவதில்லை. ஆனால் நாஞ்சில்நாடனிடம் அந்த தீ அணையவில்லை. அதனால் அது ஒளி தருகிறது. வெம்மை கூட்டுகிறது. சிலசமயங்களில் ஆவேசத்துடன் பற்றி எரிக்கிறது.
சாகித்திய அகாதமி விருதைத் திருப்பித் தரவேண்டுமா? கபாலி திரைப்படம் இளைஞர்களிடம் செலுத்தியிருக்கும் எதிர்மறையான தாக்கம் என்ன? செம்மொழி என்று கொண்டாடப்படும் தமிழுக்கு அரசு என்ன செய்கிறது? என்று சமகால நிகழ்வுகளைப் பற்றி சமூகப் பிரக்ஞையோடும் அக்கறையோடும் தொடர்ந்து தன் கருத்தை அழுத்தமாகச் சொல்லும் குரல் அவருடையது. என்ன நடந்தாலும் அதைப்பற்றிய சுரணை இல்லாமல் வெட்கங்கெட்டுப்போயிருக்கும் இந்தச் சமூகத்திற்கு சவுக்கடி கொடுப்பதுபோல அவர் எழுத்தைச் சுழற்றுகிறார். அவர் யாருக்கும் அஞ்சுவதில்லை. முகதாட்சண்யம் பார்ப்பதில்லை. எவர் தயவும் வேண்டுமே என்று தன் கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை. உள்ளதை உள்ளபடி எழுதிவிடுகிறார்.
இத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். நமது பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் நவீன இலக்கியத்துக்குமான முக்கியமான பாலமாக அவர் விளங்குகிறார். கம்பனையும் வள்ளுவனையும் கபிலரையும் ஔவையாரையும் சிற்றிலக்கியங்களையும் ரசனைபூர்வமாக விமர்சன பூர்வமாக எடுத்துச்சொல்லும் அனுபவமும் வாசிப்பும் அவருக்கு மட்டுமே உரித்தானது.
எழுதுபவன் காலப்போக்கிலும் தன் எழுத்தின் தடத்திலும் அடையும் பரிணாமவளர்ச்சி மிக முக்கியமானது. ஒரு எழுத்தாளனுக்கும் ஞானிக்கும் இடையிலான பாதை அது. எழுத்தாளனாக நாஞ்சில்நாடன் தொடங்கிய தன் பயணத்தில் பல படிநிலைகளைக் கடந்து இன்றும் வேகத்துடன் ஆற்றலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பாதையில் அவர் அடையும் தொலைவு என்பது தமிழ் நவீன இலக்கியத்துக்கும் சிந்தனைக்கும் மிக முக்கியமானது.
ஜனவரி, 2018.