நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல்!

நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல்!
Published on

க டந்த காலத்தின் நினைவுகளாகப் பதிவாகியிருக்கிற கதைகள், இலக்கியப் படைப்புகளில் தொன்மங்களாக உறைந்திருக்கின்றன.

Myth என்ற ஆங்கிலச் சொல் தமிழில் தொன்மம் எனப்படுகிறது. தொன்மம் என்றால் பழங்கதை அல்லது கட்டுக்கதை என்று பொருள். முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற  கடவுளர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற அதியற்புதச் சம்பவங்களை உள்ளடக்கிய புனைவுகளின் தொகுப்பாக விளங்கும் புராணம் என்ற சொல்லுக்குக் ‘கடந்த காலத்தின் கதை' என்று பொருள். படைப்புகளின் வழியாகத் தொன்மக் கதையாடல், அடுத்தடுத்த தலைமுறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. சமூகத்தின் கனவுகளையும், கற்பனைகளையும் கொண்டதாகத் தொன்மம் இருக்கிறது. தொன்மங்களுக்கு காரணங்கள் கற்பிக்க இயலாது.  சங்க இலக்கியத்தில் இராமாயண, மகாபாரதத்  தொன்மங்கள் இடம் பெற்றுள்ளன. ஆட்டனத்தி - ஆதிமந்தி, ஒரு முலை இழந்த திருமாவுண்ணி, பெண் கொலை புரிந்த நன்னன் ஆகிய மூன்று தொன்மக் கதைகள் சங்கப் படைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

செவ்வியல் மொழிப் படைப்புகளில் தமிழில் மட்டும்தான் அதியற்புதப் புனைவுகள் நிரம்பிய தொன்மக் கதைகளுக்கு இடமில்லை.  தமிழ் மரபில் கருவிலே திருவுடையானுக்குத்தான் செய்யுள் இயற்றுவது சாத்தியம் என்று புனைவு, தொன்மம். சம்ஸ்கிருத மரபில் கவிஞர் காளிதாசனின் நாவில் கடவுளாகிய காளி எழுதியதால், பாடல் புனைவது சாத்தியமானது என்பது கர்ண பரம்பரைக் கதை. யாப்பு இலக்கணத்திலான செய்யுள்  வடிவம் பற்றிய அதீதப் புனைவும், புலவன் அறம் பாடினால், அரசாட்சிகூட வீழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் தொன்மக் கதையாடல்தான். நெல் அறுவடையின்போது, களத்திற்கு வந்த புலவர் வாழ்த்திப் பாடினால், களம் பொலிந்திடும் என  நம்பிய சம்சாரிகள், புலவர் அரியாக நெற்கட்டைக் கொடுப்பதில் தொன்மம் பொதிந்துள்ளது.

இன்று தொன்மம் மாறியுள்ளது.  ஆளு கண்ணகி, நெற்றிக்கண்ணுடன் திரியுறான், வாழும் வள்ளுவர், நடமாடும் பல்கலைக்கழகம், ஆள் சரியான சகுனி, கலைஞர் என்று நினைப்பு, ஆள் வடிவேல் மாதிரி, அவளுக்கு ஐஸ்வர்யான்னு நினைப்பு, மன்மதக் குஞ்சு... நவீன வாழ்க்கையில் தொன்மக் கதையாடல் தொடர்கிறது.  தமிழர் வாழ்க்கையில் திரைப்படம் சார்ந்து உருவாகியுள்ள தொன்மங்கள் ஏராளம். யதார்த்த வாழ்க்கை தொன்மங்களால் நிரம்பியுள்ளது. இலக்கியத்தை முன்னிறுத்திப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, ஒருவகையில் புனைவுகள்தான். இலக்கிய உலகில் நிலவுகிற தொன்மங்களை   உண்மை என்று நம்புகிறவர்கள் நிரம்ப இருக்கின்றனர்.  இலக்கியம் பற்றிய பரந்துபட்ட பார்வையில்லாமல் தன்னுடைய ஆளுமையை முக்கியத்துவப்படுத்தவும், குறுகிய வணிக நோக்கங்களுக்காகவும்கூடத்  தொன்மங்கள்  உருவாக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில்  நவீனத் தமிழிலக்கிய உலகில் நிலவுகிற தொன்மக் கதையாடல்களை இங்கே தொகுத்துத் தர முயற்சி செய்கிறேன்.

சிறுபத்திரிகையை முன்வைத்துத் தீவிர இலக்கிய உலகில் பல்வேறு தொன்மங்கள் நிலவுகின்றன. சிறுபத்திரிகை என்ற சொல்கூட ஒருவகையில் தொன்மம்தான். சிறுபத்திரிகையில் பிரசுரமாகிற படைப்புக்கள் எல்லாம் உன்னதமானவை என்ற நம்பிக்கை; மங்கலாகவும் கலங்கலாகவும் எழுதுவதுதான் சிறந்த படைப்பின் அடையாளம்;  சராசரி வாசகர்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்படுகிற கட்டுரைகள் தனித்துவமானவை.

சிறுபத்திரிகைக்காரன் என்ற தெனாவட்டும், நம்பிக்கையும்; சிறுபத்திரிகை ஆசிரியர் என்ற ஹோதாவில் மாபெரும் சாதனையாளராகத் தன்னைக் கருதுகிற ஆசிரியர்.

முந்நூறு பிரதிகள் அச்சடிக்கிற பத்திரிகைதான் சிறுபத்திரிகை. இத்தகைய சிறுபத்திரிகையில் படைப்புப் பிரசுரமாகிவிட்டால், இலக்கியச் சிகரத்தை அடைந்து விட்டதாகக் கருதும் மனநிலை.

ஐம்பதுகளில் ‘எழுத்து' பத்திரிகை  தொடங்கி வைத்த இருண்மையான கவிதை மரபை 2020 ஆம் ஆண்டிலும் அப்படியே நகலெடுத்து, அத்தகைய மரபின் தொடர்ச்சிதான் சிறந்த கவிதையின் அடையாளம் என்று நம்புதல்.

ஒரு குழு சார்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கவிஞர்கள் எழுதுவது மட்டும்தான் நவீன கவிதை என்று பிரகடனப்படுத்துதல்; வேறு யார் கவிதை எழுதினாலும்  கவிதைப் புத்தகத்தை வாசிக்காமல் அவன் எழுதுறது எல்லாம் கவிதையா? என்று திட்டுதல்.

கவிதை என்பது உயர்சாதியினர்க்கு மட்டும்தான் சாத்தியம்; பிறப்பினால் தலித்தாக இருக்கிறவர் எப்படி  சிறந்த கவிதை எழுத முடியுமென்று வெறுப்புடன் சொல்கிற திமிரான பேச்சு.

ஔவை, ஆண்டாளுக்குப் பின்னர் பெண் கவிஞர்கள் தமிழில் உருவாகவில்லை என்ற ஆண் மேலாதிக்கப் பேச்சு.

ஆங்கிலச் சொற்களைக் கலந்து, திருகலான மொழியில் எழுதப்பட்ட  விமர்சனத்தை முக்கியமானதாகக் கருதுதல்.

அடுத்தடுத்த வாசிப்பில் புரியக்கூடிய கவிதையைப் பற்றி ஒருபோதும் புரியாத மொழியில் விமர்சித்து எழுதப்படுகிற விமர்சனத்தை சிறப்பானதாகக் கருதுதல்.

இலக்கிய விமர்சனம்  என்றால் ஒரு படைப்பை எதிர்மறையாகக் கண்டனத்துடன் திட்டி எழுதுதல் என்ற பார்வை.

ஒரு காலட்டத்தில்  தடம் பதித்த படைப்பாளி இறந்து சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்தப் படைப்பாளி   வாழும் காலத்தில் பத்திரிகையில் எழுதி, அதை வேண்டாமென்று தொகுப்பில்  சேர்க்காமல், கசக்கிப் போட்ட தாளைத் தேடியெடுத்து, தற்சமயம் செம்பதிப்பு என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வருதல். செம்பதிப்புப் பற்றிய பிரேமை.

எழுபதுகள் காலகட்டத்திய படைப்பாளர்கள்தான் சாதனையாளர்கள் என்று 2020 ஆம் ஆண்டிலும் எழுதுதல். இந்த விஷயத்தில் மொழி திரைப்படத்தில்  பேராசிரியராக வரும் பாஸ்கர்  போல் ஒரு காலகட்டத்தில் உறைந்திருக்கிற சிலர் தொடர்ந்து நாளிதழ்களில் எழுதுகிற கட்டுரைகள்.

மார்க்யூஸ், போர்ஹே, முரஹாமி போன்றவர்களின் படைப்புகளை மட்டும் எப்பொழுதும்  உயர்வாகக் கூறுதல்; தமிழில் சிறந்த படைப்பு எதுவுமில்லை என்று கூறுதல்.

தாஸ்தாயெவ்ஸ்கியின் அகம் சார்ந்த படைப்புகளை மட்டும் உன்னதமானவை, அவருக்கு நிகராக உலகில் யாருமில்லை என்று தொடர்ந்து எழுதுதல்.

பாரதிதாசன் இனவாதம் பாடிய கவிஞன் என்ற புறக்கணிப்பு.

பாரதிக்கு அடுத்த மகாகவி நான் தான் என்று பெருமையாகச் சொல்லும் கவிஞன்.

மௌனியின் 24 கதைகளும் அற்புதம்; மௌனி, தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்; மௌனியின் சிறுகதைகளுக்கு ஒப்பீடாகத் தமிழில் யாரையும் சொல்ல முடியாது என்ற பினாத்துதல்.

தி.ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவலை

விமர்சனம் எதுவுமின்றிப் பாராட்டுதல்; வெகுஜனப் பத்திரிகையின் வாசகர்களுக்காக எழுதப்பட்ட மோகமுள் நாவலில்  வரும் யமுனா மீதான காதலுடன் கும்பகோணம் தெருக்களின் அலைந்தது குறித்த பதிவுகள்.

சுஜாதாவுக்குப் புத்தகங்களை அனுப்பிவிட்டு, அவர் ஏதாவது தன்னைப்பற்றி எழுத மாட்டாரா என்று காத்திருந்துவிட்டு, வெளியில் சுஜாதாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுதல்.

நகுலனின் ‘ராமச்சந்திரனா' என்ற கவிதையை மட்டும் வாசித்துவிட்டு, பித்து மனநிலையில் அலைதல்.

கோணங்கியின் எழுத்துகளை வாசிக்காமல், அந்தப் பெயரும், அவருடைய பேச்சும் உருவாக்குகிற போதையில் திரிந்து,கோணங்கியின் நண்பன் என்ற பில்டப். 

இலக்கியப் படைப்புகள் மூலம் புரட்சியை உருவாக்கிட முடியுமென்று எழுதுகிற இடதுசாரிப் படைப்பாளரின் நம்பிக்கை மொழிபெயர்ப்புப் படைப்புகள் எல்லாம் மேன்மையானவை; இலத்தீன் அமெரிக்க இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் காத்திரமானவை; இருபத்து நான்கு மொழிகளில் 64 லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ள நாவல், உலக இலக்கியத்தின் உன்னதமான நாவல்; மொழிபெயர்ப்புப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது, தமிழில் சிறந்த நாவல் எதுவும் இல்லை.

தமிழ்க் கவிதைகள் குறித்துப் புறக்கணிப்பான மனநிலை; மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஒப்பீடு அற்றவை என்ற நம்பிக்கை.

எரிட்டேரிய மொழியில் அற்புதமாக ஒரு நாவல்  மட்டும் எழுதியுள்ள பெண் படைப்பாளி போல உலகில் யாரும் இல்லை எனக் கூறுதல். அப்புறம் அந்தப் பெண் படைப்பாளியின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகப் பிரகடனப்படுத்துதல்.

போர்த்துக்கீசிய மொழியில் 23 நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரின் பதினேழு நாவல்களை வாசித்துவிட்டு, தற்சமயம் பதினெட்டாவது நாவலில் பாதியளவு வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதுதல்.

மூத்த கவிஞரிடம் அணிந்துரை வாங்கிக் கவிதைப் புத்தகத்தில் சேர்த்தால், இலக்கியத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை.

சொந்த சாதிப் படைப்பாளிகளுக்கு மட்டும் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவிட்டு, தன்னுடைய கவிதைகளைக் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த காரணத்தினால் புறக்கணிக்கின்றனர் என்று ஒப்பாரி வைக்கிற உயர்சாதிக் கவிஞர்.

சாகித்திய விருது பெறுவதற்காக எல்லாவிதமான லாபிகளும் செய்து, அறிவிப்பு வெளியானவுடன் அந்த விருது தானாகத் தேடி வந்ததாகக் கூட்டங்களில் பேசுகிற விருதாளரின் பேச்சு.

கிளாசிக் நாவல் வரிசையில் பிரசுரமாகியுள்ள நாவல்கள் எல்லாம் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை என்று விளம்பரப்படுத்துகிற பதிப்பகம் உருவாக்குகிற புனைவு.

குறிப்பிட்ட பதிப்பகங்கள் வெளியிடுகிற படைப்புகள் எல்லாம் முக்கியமானவை என்ற பிரச்சாரம்.

எப்பொழுதும்  ஏதோவொரு பிரச்சினையை முன்வைத்து எழுதி, எல்லோரின் கவனமும் தன் மீது விழுமாறு செய்கிற எழுத்தாளரின் மனோபாவம்.

எவ்விதமான வேலையும் செய்யாமல், அலைந்து திரிந்து, படைக்கிற முழுநேரப் படைப்பாளியிடமிருந்துதான் உன்னதமான படைப்பு வரும்; மற்றபடி ஏதாவது வேலை, அலுவலகப் பணியாற்றுகிற பகுதி நேர எழுத்தாளனிடமிருந்து சிறந்த படைப்பு வராது எனல்.

டாஸ்மாக்கில் விற்கப்படும் மட்டமான மதுவை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு, எரிச்சலுடன் கண்டமேனிக்குப் பேசி, அலப்பறை பண்ணி, உளறுகிற படைப்பாளியைக் கலகக்காரனாக அவதானித்தல்.

எல்லாம் தொன்மங்களாக மாறுகிற இன்றையச் சூழலில் எனது கட்டுரையும் தொன்மக் கதையாடலாகி விட்டது. விடாது தொன்மம்.

வாசகர் மைண்ட்வாய்ஸ்: அந்திமழை ஓர் இலக்கியப் பத்திரிகை என்று ஒரு Myth உலவுதே.. அதை கட்டுரை ஆசிரியர் விட்டுட்டாரே!

ஜூலை, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com