நனவில் ஒலித்தப் பாடலுக்கு கனவில் நடனமாடியிருக்கிறேன்

நனவில் ஒலித்தப் பாடலுக்கு கனவில் நடனமாடியிருக்கிறேன்
Published on

வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவு காண்பவர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருக்கக் கூடும். பள்ளிக் காலங்களில் கண்ட கனவுகள், அதைக் கண்டு விழித்த நொடியில் கூட தெளிவாக நினைவிருந்ததில்லை. ஆனால் கனவுகள் நிழலாடிவிட்டுப் போனதை உறுதியாகச் சொல்ல முடியும். வயதும் பக்குவமும் கூடக் கூட கனவுகள் நினைவில் இருந்திருக்கின்றன. நடனம் தெரியாது என்றாலும், நனவில் ஒலித்தப் பாடலுக்கு கனவில் நடனமாடியிருக்கிறேன்.

போதிய அளவுக்குத் தூங்கி எழுந்து பின் மறுதூக்கம் பிடிக்கையில் கனவுகளை கண்டிருக்கிறேன். இப்படியான பொழுதுகளில் கண்ட கனவுகளையெல்லாம் திட்டமிட்டதும், உருவாக்கியதும் கண்டு முடித்ததும் நானேதான். பெரும்பாலான கனவுகள் கண்களை மூடியபடி விழித்திருந்து கண்டவைகளே.

கனவுகள் இப்படித்தான் இருக்க வேண்டுமென திட்டமிட்டு அப்படியான கனவை நெய்து, ஓட்டிப் பார்ப்பதில் சுகம் கண்டாயிற்று, இனி கனவுக்காக காத்திருக்க முடியாது. கனவு காண விருப்பப்படும்போதெல்லாம் கனவு காணத் துவங்கி விட முடிகிறது.

செய்யவிருக்கும் வேலைகளை செறிவாகச் செய்கிறபடியும், செம்மையாய் செய்த செயலுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுக் கொள்வது போலவும் கனவுகளை வடிவமைத்து பலகாலமாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இப்படியான கனவுகளில் பரிசளிப்பும் பாராட்டும் நிரம்பி வழியும் மேடைகளை அலங்காரம் செய்வதிலிருந்து, கைதட்டவும் பாராட்டவும் யார் யாரெல்லாம் வந்திருக்க வேண்டும் என்கிற பட்டியல் வரைக்கும் தயார் செய்து வைத்திருக்கிறேன். எப்படியான ஆடையுடன் மேடை ஏற வேண்டுமென்றும், இரத்தினச் சுருக்கமாக ஆற்ற வேண்டிய உரையையும் ஆற்றிப் பார்த்து இருக்கிறேன். ஆயிரமாயிரம் முறை கண்டு கொண்டிருக்கும் இந்தக் கனவில், ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்து கொண்டிருப்பது கூடுதல் சுவராஸ்யம்.

மேலும், மேற்குறிப்பிட்ட மேடைக்குப் போக வேண்டி, திரைத்துறைக்கு வந்ததிலிருந்து கேள்விப்படுகின்ற,

வாசிக்கின்ற, காண்கின்ற அனைத்து சம்பவச் சூழல்களிலும் ஒரு சிக்கலை உண்டாக்கி அதை விடுவிக்கும் ஒரு நாயகனாக இருப்பது போல தினமும் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அதில் அழுத்தமானப் பகுதிகளை திரைக்கதையில் சிறப்புக் காட்சிகளாக எழுதிப் பதிவும் செய்கிறேன்.

படுக்கையில் மட்டுமல்ல நடக்கையில், இருக்கையில் வேலைகளில் ஈடுபடுகையில் என எல்லாப் பொழுதுகளிலும் இந்தக் கனவுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நிறுத்தி வைத்து நிறுத்திய இடத்திலிருந்து சௌகரியப்படும் நேரத்தில் துவக்கிக் கொள்ளவும் முடிகிறது. இந்தச் சிறு பதிவு கூட சில மணி நேர கனவு ஓட்டத்திலிருந்து தேர்ந்த ஒன்றுதான்.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com