நட்சத்திரம் நகர்கிறது: புதிய திறப்பின் வாசல்

நட்சத்திரம் நகர்கிறது: புதிய திறப்பின் வாசல்
Published on

‘எனக்கது நட்சத்திரம்...நட்சத்திரத்துக்கு நான் யார்' எனும் வண்ணநிலவன் கவிதை வரிகளோடு இந்த வாழ்வைப் பார்த்தோமேயானால் நாம் ஒன்றுமே அல்ல. அற்ப காலங்களில் வந்துபோகிற நமக்குத்தான் எத்தனை தேவைகள் இருக்கிறது. பணம், மதம், சாதி மயிறு என்று நிறைய அங்க வஸ்திரங்கள் தேவையாய் இருக்கிறது. ஒன்றுமே இல்லாதவன் என்கிற பதம் எத்தனை அர்த்தபூர்வமானதாய் இருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படமும் எனக்கு இப்படியாகத்தான் தோன்றுகிறது. புதிய களமான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பின்னணியில் தொடங்கும் இத்திரைப்படத்தில் வரும் அத்தனை கதை மாந்தர்களுக்கும் ஏதாவதொரு தேவை இருக்கிறது. தேவைகள் தான் மானுடத்தின் ஆதாரம் எனில், தேவையற்ற கௌரவம் என கருதுகிற சாதியிலிருந்து விடுதலையாகி ஒரு பறவையென பறந்து இந்த வாழ்வை நேசிக்கும் ஒருத்தியாகத்தான் கதையின் நாயகி ரெனே (துஷாரா) வருகிறார். அனைத்திலும் சமத்துவத்தை பேசுபவளாக இருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே ரெனேவின் பாத்திரத்தை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இசையிலிருந்து தொடங்கி இருவரின் காதல், காமத்தில் லயித்து முடிந்த காட்சியிலிருந்து ரெனே பேசத் தொடங்குகிறார்.

‘நீயெல்லாம் இப்படித்தான் பேசுவ...உன்ன பத்திலாம் எனக்கு தெரியாதா' என்று வன்மத்தை உமிழ்கிற காதலனைப் பார்த்து வெகுண்டெழுந்து கோபமுற்று, சட்டையைப் பிடித்து அழுது ஒப்பாரி வைக்காமல், அவனைப் பார்த்து, அவனது வன்மத்தைப் பார்த்து சிரிக்கிறாள். ரெனேவின் சிரிப்பு அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்குகிறது. மேலும் சிரிக்கிறாள். ரெனேவின் சிரிப்பு என்பது காலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகையிலிருந்து விடுதலையான, சாதியிலிருந்து விடுதலையான ஒருவரின் சிரிப்பு. இதுவும் ஒரு வகையில் ஆயுதமென நினைக்கிறேன். ‘‘கொஞ்சம் நேரம் முன்னாடி LICK பண்ணியே...அப்போ தெரியிலியா நா என்ன ஜாதின்னு...'' தமிழ் சினிமாவிற்கு இப்படியான திறந்த உரையாடல் தேவையாகத்தான் இருக்கிறது. நான் யாருக்கும் கீழானவள் இல்லை என்கிறவளின் சிரிப்பின் உரையாடல் இப்படியாகத்தான் இருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை பார்த்து சிம்பு சொல்வார். ‘‘Daily Love making with you jeni'' என்று ஆங்கிலத்தில் சொல்ல தியேட்டரே விசில் அடித்தது.

ஆனால் ரெனேவின் உரையாடல், உடல்மொழி வேறு மாதிரியானது. அது வரலாற்றின் வதைகளிருந்து நிமிர்ந்து நின்று ‘அடிங்கோ...தா' என்று தனக்கான நீதியை கோருகிற குரல். ரெனே எல்லா தர்க்கங்களையும், முரண்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் பேசுகிறார். ‘இப்படியா ஒரு பொண்ணு பேசும்' என்று சொல்லி நைச்சியமாக நீங்கள் நகர்ந்து கொள்வீர்களேயானால் இப்படியாக ஒரு பெண்ணை பேச வைத்த குற்றத்துக்காக நிச்சயம் நீங்கள் தண்டனைக்குள்ளாவீர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ரெனே தமிழ் சினிமாவின் புதிய குரல், புதிய திறப்பின் வாசல்.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com