நம் திரைப்படங்களில் மின்னும் நாயகிகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு என்ன ஆகிறார்கள்? தங்களைச் சுற்றும் ஒளிவட்டம் அணைவதை தாங்க முடிகிறதா அவர்களால்?
காலில் தங்கத்தில் கொலுசு அணிந்தவர்; நீச்சல் குளத்துடன் தி.நகரில் வீடு கட்டியவர்; ஏராளமான புகழும் பேரும் பணமும் சம்பாதித்து ரசிகர்களின் உள்ளமெல்லாம் நிறைந்தவர் என்று புகழ்பெற்ற சாவித்திரியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள். இந்த செய்தியைப் பார்க்கும்போது சாவித்திரியின் இருள் படிந்த கடைசி நாட்களும் நினைவுக்கு வருகின்றன. சொந்தப்படம் எடுத்து பணம் இழப்பு, காதல் கணவனான ஜெமினி கணேசனின் பிரிவு, மதுப்பழக்கம் ஆகியவற்றால் அந்த அழகிய நட்சத்திரம் தன்னைத்தானே எரித்துக்கொண்டு வீழ்ந்துவிட்டது. அவரது வாழ்வின் கருப்புப்பக்கங்களை திரைப்படத்தில் காட்டப்போவதில்லை என்று அந்தப் படத்தின் இயக்குநர் கூறியிருக்கிறார் என்பதே ஒரு ஆறுதல். நடிகையர் திலகமாகப் புகழ்பெற்ற அந்த பளிங்குச் சிலை பளபளப்பாகவே திரையில் தோன்றி அமரத்துவம் அடையட்டும் என்பதே அவரது ஆழமான ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கக்கூடும்.
ஆந்திராவில் எலூரு என்ற இடத்தில் அரிச்சந்திரா நாடகம் போட்டிருந்தார்கள். சந்திரமதியாக நடித்தவர் சரியாக நடிக்கவில்லை. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பதினாறு வயதுப் பெண் எழுந்து, என்ன நடிப்பு இது? கேவலமாக இருக்கிறதே? என்று கூச்சல் போட்டார். சந்திரமதிக்கு வந்ததே கோபம்! உன்னால் நடிக்க முடியுமா? முடிந்தால் வந்து பார் என்று நாடகத்தில் நடுவிலேயே சவால் விட, அந்த பெண் மேடைக்குத் தாவிச் சென்றார். அதே வசனம், அதே பாடல், அதே நடிப்பு ஆனால் ஒவ்வொன்றிலும் இந்த இளம்பெண் பின்னி எடுத்தாள்! எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதுதான் கண்ணாம்பா என்ற மாபெரும் நடிகையின் தொடக்கம்! அதே நாடககுழுவில் அவர் இணைந்தார். அந்த குழுவைச் சேர்ந்த நாகபூஷணம் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்கள். அரிச்சந்திராவை சினிமாவாக 1935-ல் எடுத்தபோது கண்ணாம்பாதான் சந்திரமதியாக நடித்தார். 170 படங்கள் வரை நடித்த அவர், ஒரு படத்துக்கு 85000 ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். அது மிகப்பெரிய தொகை! குழந்தைகள் இல்லாததால் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொண்டவர் அவர். அவ்வளவு புகழ்பெற்றிருந்தபோதும் கூட கடைசிக்கட்டத்தில் அவர் தயாரித்த படங்களால் நஷ்டம் ஏற்பட்டு, நோயுற்று 51 வயதிலேயே இறந்துபோய்விட்டார். அவர் இறந்த பின்னர் அவரது கணவர், தனிமையிலும் வறுமையிலும் நொந்து கவனிப்பாரன்றி இறந்துபோனார்.
கண்ணாம்பா, தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை நடிகை. அவர் எதிர்கொண்ட பணப்பிரச்னை அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சாவித்ரியைப் பீடித்தது. இத்தோடு நின்றுவிடவில்லை. நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது திரையுலகில் இருந்து ஓய்வுபெறும் சமயத்தில் சிக்கலுக்கு உரியதாகவே இருந்துவிடுகிறது.
சினிமா நடிகைகளுக்கு அரசியல் ஈடுபாடு என்பது ஆரம்பகாலத்தில் இருந்தே உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, சினிமா ராணி என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தவர். தமிழின் முதல் பேசும்படத்தில் நடித்தவர். தமிழின் முதல் பெண் இயக்குநராக ஆணாதிக்கத்தை உடைத்தவர். அவர் சுதந்தர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்திய தாய் என்ற படத்தைத் தயாரித்து தன் பொருளை எல்லாம் இழந்திருக்கிறார். பிரிட்டிஷ் தணிக்கையால் இந்த படத்தின் பெயரை அவர் தமிழ்த்தாய் என்று மாற்றி 1940ல் வெளியிட்டார். சுதந்தர வேட்கை கொண்ட பாடல்களைப் பாடி இவர் கைதாவதும் நிகழ்ந்திருக்கிறது. இவரைப்போலவே கேபி சுந்தராம்பாளும் சுதந்திர வேட்கை கொண்டவராக, பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டவராக காங்கிரஸ் கட்சியின் அபிமானியாக வாழ்ந்திருக்கிறார். இவர்கள் காலகட்டத்தில் 1940களில் வாழ்ந்தவர் டி.ஆர். ராஜகுமாரி. உண்மையிலேயே கனவுக்கன்னி. மன்மதலீலையை வென்றார் பாட்டில் அவர் தரும் ப்ளையிங் கிஸ் அந்த காலத்தில் புரட்சி. அவர் தன் வாய்ப்புகள் சுருங்க ஆரம்பித்த பின்னர் ஐம்பதுகளில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். குலேபகாவலி, கூண்டுக்கிளி போன்ற படங்கள் அவர் தயாரிப்புதான். இறுதிவரை திருமணமே அவர் செய்துகொள்ளவில்லை. அறுபதுகளில் அவர் சுத்தமாக தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பிரார்த்தனைகளில் காலத்தைக் கழித்து நோய்வாய்ப்பட்டு மரணத்தைத்தழுவினார்.
இந்த இடத்தில் வங்க நடிகை சுசித்ரா சென்னை நினைவுகூரலாம். மிகவும் நேசிக்கப்பட்ட நடிகையான அவர் 1970களில் சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதிலிருந்து சமீபத்தில் மரணம் அடையும் வரை அவர் பொதுவாழ்வில் இருந்து சுத்தமாக விலகியே இருந்தார். யாரையும் சந்திக்கவே மாட்டார். அவரது சினிமா பாரம்பர்யம் என்பது அவரது மகள் மூன்முன் சென், பேத்திகள் ரைமா சென், ரியா சென் என்று தொடர்ந்தாலும் அவர் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஆனாலும் அவர் தனிமையையே பெரிதும் விரும்புபவராக இருந்தார்.
இதற்கு நேரெதிராக இருப்பவர் சரோஜா தேவி. கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சுந்தரி. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்கு நாயகியாக, தமிழ் சினிமாவில் அறுபதுகளின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர். இன்றும் பொதுநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்பவராக செய்தியாளர்களுக்கு நேர்காணல்கள் அளிக்க சலிக்காதவராக இருக்கிறார்.
அறுபதுகளில் சுடர்விட்ட நடிகைகளில் வைஜயந்திமாலா பாலி, ஜமுனா ஆகிய இருவரும் அரசியலில் இறங்கினர். வெற்றிகரமாக இல்லையென்றாலும் கொஞ்சகாலம் அவர்கள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஆர்வத்துடன் இயங்கினர். நடிகை பத்மினி காமராஜருக்கு ஆதரவாக பிரச்சாரம் கூட செய்திருக்கிறார். என்ன காரணமோ பிரச்சாரம் செய்த கையுடன் அவர் அரசியலுக்கு டாடா காட்டிவிட்டார். பத்மினி, டாக்டர் ராமச்சந்திரனை மணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றபோது தன்னுடைய இன்னொரு ஆர்வமான நடனத்துறையில் இறங்கினார். வகுப்புகள் எடுத்தார்.இது ஓய்வுபெற்ற நடிகைகள் தங்கள் ஆர்வத்தைப் பின் தொடர்வதற்கான உதாரணம். இன்று எழுபதைக் கடந்தாலும் வைஜயந்திமாலா நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார்.
நடிகைகளுக்கும் சராசரி மனது இருக்கிறது, விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் மீதிருக்கும் புகழ் வெளிச்சத்தை நம்பி தங்களைத் தாங்களே விருப்பப்பட்டு ஏமாந்துபோகிறார்கள் என்பதுதான் அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உளவியல். பத்மினியும் சிவாஜியும் மிகப்புகழ்பெற்ற ஜோடி. கனடாவில் வாழும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் வீட்டில் பத்மினி மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அங்கு அவரைப் பார்க்கவந்தவர்கள் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜியை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார்கள். பத்மினி புன்னகையுடன் அக்கேள்விகளைக் கடந்தாலும் ஓய்வாக இருக்கும்போது முத்துலிங்கத்திடம் கூறினார்: ‘ நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி.. நடக்கிற காரியமா? ‘ என்று. அவர் கண்கள் பளபளவென மின்னிக் காட்டிக் கொடுத்தன என்று எழுதி இந்த சம்பவத்தை முத்துலிங்கம் முடித்திருப்பார்.
எண்பதுகளுக்குப் பின்னர் அரசியலில் கால்வைத்த நடிகைகள் அதில் வெற்றிபெற்றும் காட்டினார்கள். ஹேமமாலினி ஒரு சிறப்பான உதாரணம். ஜெயப்பிரதா, ஆந்திர நடிகையாக இருந்தாலும் உ.பியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். விஜயசாந்தியும் ரோஜாவும் இவர்களுக்கு அடுத்து நுழைந்தவர்கள். குஷ்பூவும், கர்நாடகாவில் ரம்யாவும் வாய்ப்பு குறைந்த நிலையில் அரசியலை முழு நேரமாக்கிக் கொண்டார்கள். இப்போதுதான் பொல்லாதவன் வெளிவந்தது போல் இருக்கிறது. அதற்குள் காங்கிரஸில் சேர்ந்து இளம் வயதிலேயே ரம்யா, தேர்தலில் வென்று எம்பியாகவும் ஆகிக்காட்டினார். தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போன நக்மா, காங்கிரசில் சேர்ந்து, தேர்தலில் நின்று தோற்றாலும், இன்று மகளிர் அணிக்குப் பொறுப்பாக இங்கே வந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். அரசியலுக்கு வந்தபின்னர் இந்த நடிகைகளில் சினிமா புகைப்படங்களை எடுத்துப்போட்டு எதிரணியினர் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதையும் தாண்டித்தான் நாம் பார்த்த மேற்சொன்ன நாயகிகள் வெற்றிகரமாக இருக்கிறார்கள். அதற்கான மன உறுதியும் இவர்களிடம் இருக்கிறது!
இந்திய பெண்களுக்கே உரிய பொதுவானகுணம் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் அமைதியாக செட்டில் ஆகிவிடவேண்டும் என்பது. அதற்கேற்ற சரியான துணை கிடைப்பது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. பலர் பாதுகாப்பான வாழ்க்கையை வேண்டி தொழிலதிபர்களை மணந்துகொண்டு காணாமல் போய் பின்னர் குழந்தைகளுடன் எங்காவது காணப்படுவார்கள். பத்திரிகையாளர்களின் நேர்காணலில் பாதுகாப்பான பதில்களைச் சொல்லிக் கொண்டு காணாமல் போவார்கள். நடிகை ரம்பா மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட நடிகைதான். வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் திருமணம் என்று காணாமல் போனவரை இப்போது திருமணப் பிரச்னைக்காக நீதிமன்றத்தில்தான் காணமுடிகிறது.
கே.ஆர்.விஜயா தொழிலதிபர் வேலாயுதம் என்பவரை மணம் செய்துகொண்டு செட்டில் ஆனவர்தான். வேலாயுதம் கே.ஆர்.விஜயா பெயரில் கப்பலும் விமானமும் வாங்கி வைத்து மகிழ்ந்தார்.
சுகாசினி, இயக்குநர் மணிரத்னத்தை மணந்துகொண்டாலும் திரைத்துறையில் தொடர்ந்து பங்கேற்கிறார். ரேவதி, இயக்குநர் சுரேஷ்மேனனை திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டார். தொடர்ந்து சமூக சேவை, திரைப்படத்தில் அர்த்தமுள்ள பாத்திரங்கள் என்று ரேவதி தொடர்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் திருமண வாழ்வு கிடைத்துவிடுவதில்லை. ஒரு நாயகிக்கு திருமணத்துக்காக மணமகன் தேடி கிடைக்காமல் போய், மணமகன் தேவை என்று விளம்பரமும் கொடுத்தார்கள். ஆனாலும் மணமகன் கிடைக்கவே இல்லை. இன்னும் தனிமையில்தான் இருக்கிறார். இன்னொருவர் திருமணங்கள் செய்து அலுத்துப்போய்விட்டார்.
சட்டென்று விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்புடனே நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. தன் வாழ்நாள் முழுக்க நம்மை சிரிக்கவைத்துக்கொண்டே இருந்த மனோரமாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மணம் வீசவே இல்லை. கசப்பான சம்பவங்கள் இருந்தாலும் அவர் அதைப்பற்றிப் பேசாமல் நெடுவாழ்வு வாழந்து மறைந்தார்.சமீபத்தில் மரணமடைந்த சுஜாதாவின் திரைப்பட வாழ்க்கை இன்னொரு விதமானது. அபூர்வமான பாத்திரங்களில் ஜொலித்த அவருக்கு பின்னாளில் அவருடன் இணையாக நடித்த நடிகர்களுக்கே தாயாக நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அதை ஏற்றுக்கொண்டார். உழைப்பாளி, கொடிபறக்குது, பாபா ஆகியவற்றில் ரஜினிக்கு அம்மாவாக, மங்கம்மா சபதத்தில் கமலுக்கு அம்மாவாக. ஆனால் அவரது சொந்த வாழ்க்கை, திருமண வாழ்க்கை பற்றி அவர் பகிர்ந்துகொண்டதே இல்லை. நோயால் அவர் இறந்த செய்தி திடீரென வந்து ரசிகர்களைத் தாக்கியது. ஸ்ரீவித்யாவின் கதை துயரங்கள் நிறைந்தது. அதை அவர் வெளியே சொல்லிக்கொண்டதே இல்லை. எல்லோராலும் நேசிக்கப்பட்ட அந்த தேவதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது சிகிச்சைக்காக அவர் சொந்தப்பணத்தைக் கொடுத்திருந்த அறக்கட்டளையே ஒரு முக்கிய மருந்தை வாங்கப் பணம் தரத் தயங்கியதாக வந்த செய்தி பெரும் சோகம். அவர் இறந்தபோது கேரள அரசு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது. அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன், “ஸ்ரீவித்யா தமிழராகப் பிறந்திருந்தாலும் கேரளத்தின் மகளாக ஏற்றுக்கொண்டுவிட்டோம்” என்றார். அதே சமயம் நீண்ட நாள் அழகான குடும்பவாழ்க்கையை வாழும் பாக்கியசாலிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
ஸ்ரீதேவியைவிடவா தமிழ் ரசிகர்களால் ஏன் இந்திய ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒருவர் இருந்துவிடப்போகிறார்? ரஜினி, கமல் என்று அவரது இளமைக்காலத்தில் மிகப்பிரபலமான நாயகி. கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் நிஜவாழ்க்கையில்கூட திருமணம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று அவரது தாயார் கூட நினைத்ததாகச் சொல்வதுண்டு. இந்திக்குப் போன ஸ்ரீதேவி, அங்கே அனில்கபூரின் சகோதரர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டபோது, ரசிகர்கள் வயிற்றில் அமிலம் லிட்டர்கணக்கில் சுரந்தது. ஆனால் அதே ஸ்ரீதேவி, குழந்தை பெற்று, தன்னுடைய கம்பீரம் மாறாமல் இங்கிலிஷ் விங்க்லிஷில் நாயகியாக தன் ஐம்பது வயதில் நடிக்க வந்தபோது வரவேற்பையே பெற்றார்.
நம்பிக்கையூட்டும் வாழ்வுக்கு நடிகை விஜயநிர்மலாவின் வாழ்வை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். உலகில் அதிகமான படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் அவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பதினேழு வயதில் நாயகி ஆன விஜய நிர்மலா எங்கவீட்டுப்பெண், பணமா பாசமா, என்று நடித்தவர் இன்றும் எலந்தைப் பழம் பாட்டுக்காக நினைவு கூரப்படுபவர். 47 படங்களில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடன் நடித்தவர். அவரையே மணந்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னும் இருவரும் ஜோடியாக நடித்த படங்கள் வெற்றி பெற்றன. அதன் பின்னர் சொந்தமாக தயாரிப்பு கம்பெனி தொடங்கி படங்களை இயக்கவும் தொடங்கினார். மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று அவர் படங்களை இயக்கினார். ஞானஒளி படத்துக்காக சிவாஜி கொடுத்த கால்ஷீட்டை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி 20 நாட்களில் ஷூட்டிங்கை முடித்ததற்காக சிவாஜியே அவரை மனம் திறந்து பாராட்டினார். மொத்தம் 370 படங்களில் விஜயநிர்மலா பணிபுரிந்திருக்கிறார்.
ஆரம்ப கட்ட சினிமா இல்லை இப்போதிருப்பது. நடிகை சாவித்ரி நடிக்க வந்தபோது அவருக்கு 16 வயது. சௌகார் ஜானகி நடிக்க வந்தபோது 17 வயது. அதுமட்டுமல்ல அவருக்குக் கைக்குழந்தையும் இருந்தது. பெரும்பாலான நடிகைகள் கல்வி அறிவும் உலக அறிவும் பெறாத பச்சை மண்ணாக இருந்தார்கள். ஆனால் இன்று பட்டம் பெற்ற, இருபது வயதைத் தாண்டிய பெண்கள் நடிக்க வருகிறார்கள். நயன்தாராவும், அனுஷ்காவும் முப்பதுகளின் நடுவில் உச்சகட்ட புகழில் இருக்கிறவர்கள். ஆனாலும் தங்கள் இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்கள். அவர்களின் இடம் பறிபோக இன்னும் நாட்கள் ஆகலாம் அல்லது அவர்களே வேறு அவதாரமும் எடுக்கலாம்.
நடிகைகள் வெள்ளித்திரையில் நமக்காக ஒளியூட்டிக்கொண்டிருக்கிறார்கள். உதிரும் எரி நட்சத்திரங்களாக அவர்கள் மாறிவிடக்கூடாது என்பதே நம் ஆசை.
ஜூன், 2017.