நடிகைக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பிரச்சனை இருக்கு

நடிகைக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பிரச்சனை இருக்கு
Published on

ஹீரோ 60 வயதிலும் ஹீரோதான், ஆனால் ஹீரோயின்கள் 30-ஐ தொட்டாலே அக்கா, அண்ணி, பாத்திரங்களுக்கு புரமோஷன் வாங்கிவிடுவதுதான் நம் இந்திய சினிமாக்களின் நிலை. அவர்களின் நடிப்புக் காலம் என்னவோ மிகக் குறைவு ஆனால் அதற்குள் நடக்கும் பிரச்னைகளும், கிசுகிசுக் களும் மட்டும் எத்தனை. இந்த நிலை ஏன்? சீனியர் நடிகையும், அனுபவசாலியுமான கௌதமி நிறைய எதார்த்தங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். ரேடியோ புரோகிராம், தினம் தினம் வித்யாசமான மக்கள். இப்படி வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யம் ஆகியிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு!

மிகச்சில நாயகிகள் மட்டுமே 10 வருடங்களுக்கு மேல நிலைக்கிறாங்க, ஆனால் பெரும்பாலும் நடிகைகளுக்கு ஹீரோயின் என்கிற காலம் மிகக் குறைவா இருக்கே?

 சினிமா மட்டும் இல்லை, இன்னைக்கு பெரும்பாலான தொழில் ஆண்களால உருவாகப்பட்டு வளர்ந்திருக்கு. ஏன் நீங்க ஒரு தொழில் தொடங்கினா உங்களுக்கு ஏற்ப மாத்திப்பீங்க. அப்படிதான் சினிமாவும். ஆண்களால் படைக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு தொழில். அப்போ ஆண்களுடைய செயல்பாடுகள்தான் அதிகமா இருக்கும். அதைவிட முக்கியம் நம்ம கலாச்சாரம். அடுத்தவன் மனைவியைப் பார்க்கக் கூடாது. ஒரு நடிகை கல்யாணம் ஆகிட்டாலே அவள் இன்னொருத்தருக்கு சொந்தம் என்கிற நோக்கம். தானாகவே அந்த நாயகி மேல இருக்கும் ஈர்பைக் குறைச்சிடும். அதையும் தாண்டி ஹாலிவுட் பாணிகள்ல 40+ல நாயகியாகணும்னா அதுக்கேற்ப உடல், முகம் எல்லாத்தையும் அழகா வெச்சுக்கணும். எனக்கென்னமோ அந்த நிலை இப்போ கொஞ்சம் மாறியிருக்கு. எங்க காலத்துல 15 , 16 வயதுல நடிக்க வந்தோம். இன்னைக்கு 30+ ஹீரோயின்கள் நம்பர் 1 இடங்களை பிடிச்சிருக்காங்க. அதுவே நல்ல மாற்றம்!

ஹீரோ 20லும் ஹீரோ, 60லும் ஹீரோக்களா இருக்காங்களே? போக அவர்களுடைய சம்பளமும் ஒரு மடங்கு அதிகமா இருந்தா பரவாயில்லை 10, 20 மடங்குகள் அதிகமா இருப்பது என்ன லாஜிக்?

இது மார்க்கெட் சம்மந்தப்பட்ட விஷயம். ஒரு ஹீரோயினுடைய மார்க்கெட்டை விட, ஹீரோவின் மார்க்கெட் அதிகம். அவருக்குத்தானே ஓபனிங் கொடுக்குறாங்க ரசிகர்கள். பெரும்பாலான கதைகள் ஹீரோக்களை சுற்றிதான் நடக்கும். அப்போ அவருக்கான சம்பளமும் அதிகமாதானே இருக்கும். ஏன் சாதாரண கார்ப்பரேட் கம்பெனிகளே பொண்ணுக்கு ஒரு சம்பளமும், ஆணுக்கு ஒரு சம்பளமும்தானே தராங்க. அதேதான். பெண்களுக்கு இயற்கையாவே ஒரு சில காலங்கள் இடைவேளை வந்துடும். கல்யாணம், குழந்தை இப்படி. இந்த இடைவேளையெல்லாம் பார்க்கும் போது நிரந்தரமான உறுப்பினருக்குதானே எப்பவும் மரியாதை இருக்கும்.

சம்பளம் குறைவு, நடிப்புக் காலமும் குறைவு ஆனால் பிரச்னைகள், கிசுகிசுக்கள் மட்டும் ஏன்?

மறுபடியும் அதே பதில்தான். ஆண்களுக்கான பொழுதுபோக்குகள் பத்தி பேச ஆண்களுக்கான ஒரு தளம் மீடியா. அது பெண்கள் உலகைதான் அதிகமா அறிய முற்படும். இன்னொன்னு நம்மை நாம் எப்படி உலகிற்கு கொடுக்கிறோமோ அப்படிதான் உலகம் உன்னை ஏத்துக்கும். நான் ஆரம்பம் முதலே பிரச்னை, கிசுகிசுக்கள்ல சிக்கிக்கிட்டே இருப்பேன் பாணி ரகமா இருந்தா தொடர்ச்சியா பிரச்னைகளும் வரத்தான் செய்யும். ஒவ்வொருத்தரும் நடிப்போட

சேர்ந்த சில நல்ல குணநலன்களையும் வளர்த்துக்கணும். ஆட்டோகிராப் கேட்டு மேல வந்து விழும் போது கோபப்படறது ஒரு ரகம். அதே சமயம் சிரிப்பு கலந்து ப்ளீஸ் இதை செய்யாதீங்கன்னு சொல்லலாம். அடிக்கிற பழக்கம் உள்ளவங்களைக் கூட நான் பார்த்துருக்கேன். இது தேவையே இல்லை! நம்மை தினம் தினம் சினிமாக்கள்ல பார்த்து பார்த்து ஒரு ஆர்வத்துல இருப்பாங்க. நேர்ல பார்க்கும் போது நிச்சயம் மனசு சஞ்சலம் ஆகத்தான் செய்யும். நாம எடுத்து சொல்லணும். அவ்வளவுதான்.  மீடியாக்கள், பத்திரிகைகள் எல்லாமே நடிகைகளுடைய அந்தரங்கத்தை தானே அதிகமா எழுதுறாங்க. அப்போ படிக்கிற ரசிகன் நிச்சயமா அப்படியான மனப் போக்கோடுதான் இருப்பான்!

மார்பிங் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள், உங்கள் கருத்து என்ன?

 நாம தப்பு பண்ணாம இருந்தா உண்மையான வீடியோக்கள் வர சான்ஸே இல்லை. அதே சமயம் நடிகைகளுக்கு மட்டும் இல்லை எல்லா பெண்ணுங்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கு. என்ன மற்றப் பெண்களுக்கு நடக்குறது பெரிதா வெளிய வருவது இல்லை. நடிகைகள் என்பதால ரிலீஸ் ஆகி சர்ச்சைக்கு ஆளாகுது. அறிவியல் வளர்ந்துவிட்டது. நாமதான் ஜாக்கிரதையா நம்மைப் பார்த்துக்கணும். ஏன் செல்பி போடக்கூடாதுன்னு கூட சொல்றாங்க. ஆனால் இன்னைக்கு அதுக்காகவே இன்ஸ்டாகிராம் வந்துடுச்சு. முடிஞ்சா பதட்டப் படாம நடந்த பிரச்னைய ஆராய்ந்து தீர்வுதான் யோசிக்கணும். தேவையில்லாமல் நாம பதில் சொல்லி, அது நான் இல்லைன்னு விவாதம் பண்ணி இன்னும் பெயரைக் கெடுத்துக்கறதுக்கு அப்படியே விட்டுட்டா பிரச்னை முடிஞ்சது. ஆனால் பாவனா பிரச்னையையும், வேலை இல்லாம பண்ற மார்பிங் வேலைகளையும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அது நடிகை பிரச்னை இல்லை. ஒரு பொண்ணுக்கு நடந்த பயங்கரம். அதுக்குக் காரணம் சரியான தண்டனைகள் இல்லாததுதான். குறைந்தபட்சம் அதை போலீஸ் வழக்கு அளவுக்கு எடுத்துட்டு போனாங்களே அதுவே நல்ல மாற்றம். நம்ம  சட்டதிட்டங்கள் அவ்வளவு பலவீனமா இருக்கு.

ஜூன், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com