நடிகர்கள்

Published on

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் புதிதாக நம்பிக்கையூட்டும் பல முகங்கள் அறிமுகமாயினர். ஏற்கெனவே அறிமுகமானவர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்தனர். இந்த வரிசையில் சிறந்த எதிர்காலம் உள்ள இளம் கலைஞர்கள் ஐவர் இங்கே:

கலையரசன்: சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியிலிருந்து சினிமாத்துறைக்கு டவுன்லோடு ஆனவர். இவர் முதன்முதலாக நடித்த ’அர்ஜூனன் காதலி’, வெளிவருவதற்கான வாய்ப்பே தெரியவில்லை. இவரது முட்டைக் கண்கள் இயக்குநர் மிஷ்கினை கவர்ந்துவிட ‘நந்தலாலா’, ‘முகமூடி’ என்று அடுத்தடுத்து பளிச்சிட்டார். ‘அட்டக்கத்தி’யில் சின்ன வேடம்தான் என்றாலும், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இன்று கலையரசனை கொண்டுச் சென்றிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்துக்கு அதுதான் அடிகோலியது. ‘மதயானைக்கூட்டம்’ மாதிரி சின்ன கேரக்டர் கிடைத்தாலும் அதிலும் பிரகாசிக்கும் திறமை. ‘ஜின்’, ‘உறுமீன்’ என்று செலக்டிவ்வாகவே படங்களை ஒப்புக் கொள்கிறார். நிச்சயம் பிழைத்துக் கொள்வார்.

ரமேஷ் திலக்: சூரியன் எஃப்.எம். வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே நடிப்பு மீதுதான் கண்.

‘மங்காத்தா’, ‘மெரீனா’ படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் தலைகாட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் இவரை சினிமாவுக்கு உந்தித் தள்ளியது. ‘சூதுகவ்வும்’ கொடுத்தது சூப்பரான ஓப்பனிங். ரமேஷின் ‘நேரம்’ நல்லாயிருக்க ‘நேரம்’ படத்திலும் பின்னி பெடலெடுத்தார். ‘வாயை மூடிப் பேசவும்’ ‘காக்கா முட்டை’ ‘டிமாண்டி காலனி’ படங்களுக்கு பிறகு ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படத்தில் கிட்டத்தட்ட ஹீரோவாகி விட்டார். ரமேஷின் அச்சு அசலான தமிழ் முகமும், நடிப்பென்று டமாரம் அடிக்காத இயல்பான நடிப்பும் தமிழ் திரைத்துறையில் தனித்துவமான இடத்தை இவருக்குப் பெற்றுத்தரும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: காக்கா முட்டைகளின் அம்மாவாக இன்று எல்லோராலும் அறியப்படும் ஐஸ்வர்யாவின் ரிஷிமூலம் கலைஞர் தொலைக்காட்சியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிதான்.

சினிமாவில் ’அட்டக்கத்தி’ இவருக்கு அறிமுகம் கொடுத்திருந்தாலும், விஜய்சேதுபதியோடு அடுத்தடுத்து ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களில் நடித்ததின் மூலம் பரபரப்பாக முன்வரிசைக்கு வந்தார். ’இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமே தண்டனை’, ‘தீபாவளி துப்பாக்கி’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்று கைநிறைய மினிமம் கேரண்டி படங்களோடு வலம் வருகிறார். ஐஸ்வர்யா, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அளந்தே வைக்கிறார். சேரவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்தில் போய் சேருவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

யோகி பாபு: அப்பா இராணுவவீரர் என்பதால் இவருக்கும் தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்காகவே ஜிம்முக்கு போய் உடம்பை கும்மென்று ஆக்கினார். விஜய்டிவியின் ‘லொள்ளுசபா’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவரை பிடித்து ஒரு காட்சியில் நடிக்க வைத்தார்கள். அன்றே இராணுவத்தை மறந்து சினிமாவுக்கு வந்தார். வில்லனுக்கு அடியாள், துண்டு துக்கடா வேடங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தவருக்கு அடையாளம் கொடுத்த படம் ‘யோகி’. ‘யாமிருக்க பயமேன்’ படத்தில் பன்னி மூஞ்சிவாயனாக கலக்கியவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிகின்றன. அன்றைய செந்திலின் இடத்தை இவர்தான் இன்று நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

சென்றாயன்: சொந்த ஊர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர். சினிமா திரையில் தன் முகம் தெரிய பதினைந்து ஆண்டுகாலம் போராடினார். போராட்டத்துக்கு பலன் ‘பொல்லாதவன்’. தனுஷின் பைக்கை திருடும் கீரோல் இவருக்குதான். அடுத்தது ‘ஆடுகளம்’. ‘ரௌத்திரம்’ படத்தில் சோலோ வில்லனாக ஆனார். ‘மூடர் கூடம்’ இவருக்கு வேறு ரூட்டு காண்பித்தது. தொடர்ந்து  காமெடி வேடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், வேறுவிதமான நடிப்புக்கு மெனக்கெட்டு வருகிறார். யாருக்குத் தெரியும்?

விசித்திரமான உடல்மொழியும், நறுக்கென்ற டயலாக் டெலிவரியும் இவரை வருங்கால சந்திரபாபுவாகக் கூட வார்த்தெடுக்கலாம்.

செப்டெம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com