நச்சென்று நாலுவார்த்தை

நச்சென்று நாலுவார்த்தை
Published on

கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக, தினத்தந்தி பேப்பரில், ஒரு முழுப்பக்க விளம்பரம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர் படம் விளம்பரம் வந்தால் தந்தி பேப்பர், வழக்கத்தை விட கூடுதலான பிரதிகள் அச்சாகும். அப்படியும் அன்றைக்கு காலையில் பேப்பர் கிடைக்கவில்லை. ‘தங்கத்திலே வைரம்’ என்று படத்தின் பெயரே இரண்டு பெரிய திரை ஆளுமைகளின் இணைவைச் சொன்னது. விளம்பரம் வந்த அன்று கே.எஸ்.ஜி பேட்டியும் கொடுத்திருந்தார். பிரம்மாண்டமான ஒரு (சரித்திர)  நாயகனைப் பற்றிய கதை அது. அதற்காகத் தன் முழு உழைப்பையும் செலுத்தப் போவதாகவெல்லாம் சொல்லி இருந்தார். அதில் ஒரு முக்கியமான வரி எனக்கு பிடித்திருந்தது. அப்பேர்ப்பட்ட நாயகன் படத்தில் அறிமுகமாகும்போது எப்பேர்ப்பட்ட வசனத்தைச் சொல்ல வேண்டும். அவன் பேசும் ஒரு வார்த்தையே அவனது ஆளுமையை முழுதாக வெளிப் படுத்த வேண்டும் அல்லவா, அதையெல்லாம் கவனத்தில் கொண்டு படமெடுக்கப் போகிறேன் என்பது போல் சொல்லி இருந்தார்.

அந்தப் படம் வரவே இல்லை. தயாரிக்கவே படவில்லை. அது வேறு விஷயம். வந்த படங்களில் அந்த அம்சம் இருந்ததா, யோசிக்கிறேன். மகாதேவி படத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகம் ஆகும் போது “புலி பறக்கிறது தோழர்களே புலி பறக்கிறது, கொக்கு பறக்கும், குருவி பறக்கும்  ஆனால் இதோ புலி பறக்கிறது, புலிக் கொடி பறக்கிறது தோழர்களே,” என்று சாளுக்கியர்களை வென்று விட்டு கோட்டையின் மீது புலிக் கொடியை ஏற்றி வைத்து முழக்கமிடுவார். அதற்கு வசனம் கண்ணதாசன். உதவி: நாகூரைச் சேர்ந்த செய்யது ஹாஜா மொஹைதீன் என்கிற ரவீந்தர். மகாதேவியில் மட்டுமல்ல அப்போதைய படங்களில்  நச்சென்ற வசனங்களை வில்லன் வீரப்பாதான் அதிகம் பேசுவார். மகாதேவி படத்தில் சாவித்ரியைக் கைது செய்யும் ஆரம்பக் கட்டங்களிலேயே அறிமுகமாகி விடும் கருணாகரன் என்ற பெயரிடப்பட்ட வீரப்பாவின் வாள் வீச்சுடன் வாய் வீச்சும். கொஞ்சமும் பணியாமல் எதிர்த்துப் போரிடும் சாவித்ரியிடம் “அப்பா அப்பாவி, மகள் அகம்பாவி” என்பார். அதில்தான், “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்னும் வீரப்பாவின் பிரபலமான ‘நச்’ வசனமும். இன்னொன்று, கதைப்படி வேறு வழியின்றி எம்.என்.ராஜத்தை மணந்து கொள்வார் வீரப்பா. முதல் இரவில் ராஜம், ‘அத்தான்’ என்று அன்பொழுகக் கூப்பிடுவார். அவர் கூப்பிட்டு வாய் மூடும் முன், வீரப்பா, “ ஆஹா, இந்த சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்” என்று டைமிங்கோடு சொல்லுவார். இன்னொரு காட்சியில் “கண்ணீரிலே சட்டம் கரைந்து விட்டால், நீதி சுடுகாடு நோக்கிப் போய்விடும், அழுது பயனில்லை மகாதேவி”என்று ஒரு வசனம்.

நாடோடி மன்னன் படத்தில், சரோஜா தேவி அப்பா என்பார். வீரப்பா, “ அப்பா ஒரு அப்பாவி” என்பார். அதில் அவரது கையாளாக வரும் சக்ரபாணி, குருநாதரே ஒன்றுமே புரியவில்லையே என்பார்,  “சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்,” என்று சொல்லிவிட்டு ஒரு வெடிச் சிரிப்பை உதிர்ப்பார். நாடோடி மன்னன் படத்தில் அடிக்கடி எம்.ஜி.ஆர், “மன்னனல்ல மார்த்தாண்டன்” என்று சொல்லி விட்டு மூக்கு உறிஞ்சும்  ஸ்டைலான மேனரிசத்தைச் செய்யாத சக மாணவர்களே பள்ளியில் கிடையாது. வீரப்பா, சிவகங்கைச் சீமை என்றுதான் நினைவு, “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்..” என்பார். “ரத்த ஓட்டத்திலிருந்து பாசத்தைப் பிரித்து விடு, இதயம் சுத்தமாகிவிடும். மண்டை ஓட்டின் மீது நடந்து மண்டலத்தை ஆண்டவர் பலர், தன் தம்பியின் பிணத்தின் மீது நடந்து தரணியை ஆளப் போகிறவன் உன் கணவன்.” “வாழத் தெரியாதவன் வறண்டுபோன தத்துவங்களின் பிரதிநிதி, ஜெயிக்கும் கட்சியிலே சேரத் தெரியாதவன் போராடுபவர்கள் கட்சியிலே சேர்ந்து புத்தி இழந்தவன்..”,“மந்தை ஆடுகள் மக்கள், வாழ்ந்து காட்டுகிறேன் பார், வருக வருகவென வாழ்த்துரைக்கச் செய்கிறேன் பார்..”. இன்றைக்கும் நம்மை முட்டாளாக்கி வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளை அன்றே (1959) தோலுரித்துக் காட்டி இருக்கிறர் கவிஞர் கண்ணதாசன். வீரப்பாவின் குரலும் அச்சுப் பிசகாத உச்சரிப்பும் தேவையான கொடூரத்தைக் கொண்டு வரும். அதுவே சமயத்தில் வெடிச் சிரிப்பையும் கொணரும்.  உதாரணமாக வஞ்சிக் கோட்டை வாலிபனில், அவர் சொல்லுகிற “ சபாஷ் சரியான போட்டி”,கிட்டத்தட்ட 60 வருடங்களாகியும் மங்காத புகழுடன் காதுகளில் ஒலிக்கிறது. அதைக் கேட்கிற போது நம் உதடுகளில் ஒரு புன்னகை நெளியும்.

மர்மயோகி படத்தில் ஒரு வகையான ராபின் ஹூட் பாத்திரத்தில் கரிகாலன் என்ற பெயரில் எம்.ஜி.ஆர். வருவார். அம்பு எய்வதிலும் கத்தி வீசுவதிலும் குறி தவறாதவர். கரிகாலன், “குறி வைத்தால் தவறமாட்டேன் தவறுமானால் குறி வைக்க மாட்டேன்” என்று,  ‘சத்தக்’ என கத்தி மகுடத்தை தட்டிப் பறிக்கையிலோ, காலடியில் நகர முடியாமல் அம்பு தைக்கும் போதோ தவறாமல்  சொல்லுவார். அந்தக் காலத்தில் இதைச் சொல்லிக் கொண்டு, மூங்கில் வில்லை வைத்துக் கொண்டு திரிந்ததாக ஒரு அண்ணன் சொல்லுவார். 

பின்னால் ‘ஒளிவிளக்கு’ படத்திலும், கத்தி எறிவதில் சமர்த்தராக வந்து, “ஏய், ரத்தினம் நகராதெ, நான் குறி வச்சா தப்பாது அது உனக்கே தெரியும்” என்பார், எம்.ஜி.ஆர். மர்மயோகிக்கு வசனம் ஏ.எஸ் ஏ.சாமி. பின்னது சொர்ணம். ஏ எஸ் ஏ சாமி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நிறைய இறக்குமதி செய்தார். ஷேக்ஸ்பியரின் பாதிப்பில்தான் இந்திய, தமிழ் சினிமாக் காட்சிகளை வசனங்கள் மூலமாகவே நகர்த்தும் பழக்கம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். மர்ம யோகியில் மாக்பெத்தின் சாயல் தெரியும்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு புதிய வசனகர்த்தாவாக பந்துலு ஆர்.கே .சண்முகத்தைக் கொண்டு வந்தார். ஆயிரத்தில் ஒருவன் ‘மணி மாறன்’ பாத்திரப் படைப்பு   பிரம்மாண்டம் நிறைந்தது. எம்.ஜி.ஆர் அறிமுகமாகும் முதல்காட்சியில் ‘வெற்றி, வெற்றி, வெற்றி அழகா , வெற்றி ’ என்று பிரமாதமான சிரிப்புடன் ஆரம்பிப்பார். நாகேஷ், ‘என்னண்ணேன் நீங்க போருக்கு போனாலும் வெற்றி, பாம்பு புஸ்ஸுன்னாலும் வெற்றியா,’ என்பார் பதிலுக்கு. தேவர் பிலிம்ஸ் படங்களின் முதல் நாள் படப்பிடிப்பில் எம்.ஜிஆரோ அல்லது கதாநாயகியோ வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று சொல்லித்தான் ‘ஷூட்’ செய்வார்கள்.    அது அநேகமாக ஒரு பாடல் காட்சிக்கான ஆரம்ப வசனமாக இருக்கும். படத்தின் முதல் காட்சியாக இருக்காது. ஆயிரத்தில் ஒருவன் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமாயின. “நிலைத்து நிற்கும் என் அதிகாரத்தின் ஆழம் புரியவில்லை உனக்கு,” என்று மனோகர் கொக்கரிக்க, எம்.ஜி.ஆர், “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு,” என்று பதில் சொல்லுவார். கைதட்டல் பறக்கும். அதிலேயே நம்பியாரும் எம்.ஜி.ஆரும் மோதும் போது, நம்பியார் “மதங் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா,” என்று சொல்ல, “சினங்கொண்ட சிங்கத்தின் முன் தோற்று ஓடும்” என்று பதில் வரும்.  தோல்வியையே அறியாதவன் நான் என்ற மிரட்டலுக்கு ‘தோல்வியை எதிரிக்கே பரிசளித்துப் பழகியவன் நான்’ என்று வரும் பதில் மிரட்டல். தியேட்டரில் விசில் காதைப் பிளக்கும்.

ஆயிரத்தில் ஒருவனில் (1965) எஸ்.வி.ராமதாஸும், ஜெயலலிதாவும் பேசிக் கொள்ளும் உரையாடல் இன்றைக்கும், அரசியல் மீம்ஸ்களில் மிகப் பிரபலம். “பூங்கொடி, சீக்கிரத்தில் இந்தத் தீவே சொர்க்கபுரியாகி விடும் போலிருக்கிறது. எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால்தானே..” “சந்தேகமென்ன... நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்... ஆனால் வாய்தான் காதுவரை இருக்கிறது.”  ரிக்‌ஷாக்காரனுக்கும் ஷண்முகம்தான் வசனம். ராமதாஸும் எம்.ஜி.ஆரும் போடும் சண்டைக் காட்சிக்கு முன்னால் பேசிக் கொள்ளும் வசனம்: ராமதாஸ், “புடிச்சா கசங்கற பச்சிலை நீ” “நான் பச்சிலைதான் ஆனா உன்னைப் போல எச்சி இலை இல்லை..” நல்ல வேளை அப்போது ரெட்டை இலை இல்லை. உதய சூரியனில் ஒன்றாக இருந்தார் தலைவர். இல்லையென்றால் அதையும் வசனத்தில் சேர்த்து ‘பஞ்ச்’ பண்ணியிருப்பார்கள். திருடாதே படத்தில் எம்.ஜி.ஆரைக் குறித்து எம்.என்.ராஜத்திடம் நம்பியார் பேசும் வசனம், “ யாரு பாலுவா, அவன் கழுவுன மீன்ல நழுவின மீன்ல்லா”. இதையும் மக்கள் தங்கள் தினசரிப் புழக்கத்தில் உபயோகித்தனர்.

பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், ஓரிரண்டு வார்த்தைகள் மனதில் தைத்துவிடும். மக்களும் தங்கள் பேச்சுக்கிடையே அதைப் பயன் படுத்திக் கொள்வார்கள். கட்டபொம்மன் வசனத்திற்காகவே எடுக்கப் பட்ட படம். சக்தி. டி.கே. கிருஷ்ணசாமி வசனம். சக்தி நாடக சபா வைத்து கட்டபொம்மன் நாடகமெல்லாம் நடத்தியவர். பாரதிதாசனின் தாசன். அதில் பல வசனங்கள் பலருக்கும் மனப்பாடம்.  வெள்ளையரும் எட்டப்பனும் என்ன சதி செய்கிறார்கள் என்று வெள்ளை அரண்மணையில் வேவு பார்க்க சரியான ஆளைத் தேடும் போது ஜெமினிகணேசன் நான் போகிறேன் என்று சொல்ல நீ வேகமானவன் காரியம் கெட்டு விடும் என்பார் கட்டபொம்மன். காமெடியன் கருணாநிதி நான் போகிறேன் என்றதும், “பொடியன் பொருத்தமானவன்... போய் வா” என அனுப்புவார். அந்தக் காலத்தில் வகுப்பில் சார்வாள் கூட எதற்காவது யாரையாவது (வேற எதுக்கு காபி, டீ வாங்கத்தான்... சிகரெட் வாங்க பெரிய பையனுங்க)  அனுப்பும் போது பொடியன் பொருத்தமானவன் போய் வா என்று அனுப்புவார்கள்.

ஒரு படத்தில் சொல்லப்படும் காமெடி வசனங்களும் அதிகப் பிரபலமாகி விடும். அடுத்த வீட்டுப் பெண் படத்தில் “எது எது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அது அது  அப்ப அப்ப அப்படி அப்படி நடக்கும்...” என்று எம்.ஆர்.சந்தானம் ( இயக்குநர் சந்தான பாரதியின் அப்பா) சொல்லுவது ரொம்ப பிரபலம். எங்க வீட்டு மகாலட்சுமி படத்தில் தங்க வேலு, எதற்கெடுத்தாலும் “அட, உன்னைத் தூக்கி வெயிலில போட” என்பார். இது எற்கெனவே என்.எஸ்.கே இன்னொரு படத்தில் சொல்லிய வசனம். எ.வீ. மகாலட்சுமிக்கு வசனம் ஸ்ரீதர். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் “தெய்ர் யூ ஆர்..( There you are)” என்று அடிக்கடி நாகேஷ்  சொல்லுவார். நம் நாடு படத்தில் தங்கவேலு அடிக்கடி “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” என்று வெவ்வேறு மாடுலேஷனில் சொல்லுவார். படம் வெற்றி பெற்று இரண்டாம் வார விளம்பரங்களில் எல்லாம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்று போட்டுத்தான் கொண்டாடி இருப்பார்கள்.தெய்வப் பிறவி படத்தில், ராமாராவ் அடிக்கடி “ஐயா தெரியாதையா நீ இப்படிக் கேப்பீருன்னுட்டு” என்று அடிக்கடி சொல்லி அப்பளாச்சாரி ராமாராவ் ஆக இருந்தவர் ஐயா தெரியாதய்யா ராமாராவ் ஆனார். அதேபோல ‘நான்’ படத்திலிருந்து கன்னையா ‘என்னத்தெ கன்னையா’ ஆனார். அதிலிருந்து யார் எப்போது சலித்துக் கொண்டாலும் என்னெத்தெ சொல்லி என்னத்தெ கிழிச்சு என்று ஆரம்பிப்பார்கள்.

பணமா பாசமா படத்தில் விஜய நிர்மலா, “அலேக்” என்று சொல்லிச் சொல்லி அது தமிழ்நாட்டையே பிடித்துக் கொண்டது. அவரும் அலேக் நிர்மலா ஆகி விட்டார். பதினாறு வயதினிலே படத்தில் ரஜினி, “ இது எப்படி இருக்கு...” என்று சொன்னதுதான் அவருக்கான பஞ்ச் டயலாக்கிற்கான முதல் ஆரம்பம். பராசக்தியில் கலைஞரின் ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ இன்றைக்கும் சூப்பர் ஹிட்டான பஞ்ச் டயலாக்.  சீரியஸான இந்த வசனத்தை பூம்புகார் படத்தில், நகைச்சுவைக் காட்சியில் ஓடினாள் ஓடினாள் வீட்டின் ஓரத்திற்கே ஓடினாள் என்று அவரே நகைச்சுவையாகப் பயன் படுத்தி இருப்பார். இருவர் உள்ளம் படத்தில், வக்கீல் எம்.ஆர். ராதா  சொல்லும் ‘லாஜிக்கா மேஜிக்கா’ வார்த்தைகள் பிரபலம். கலைஞரின் ஹுயூமர் சென்ஸுக்கு இது உதாரணம்.

தமிழ் சினிமா, வசனத்திலேயே வளர்ந்து நிலைத்த ஒன்று. ஸ்ரீதருக்குப் பின்னால் வந்த பாலசந்தர் கூட வசனத்தையே நம்பி இருந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் எஸ்.வி. சுப்பையா பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வெட்டி ஆபீஸர். அவர் பேசினாலே வில்லங்கம்தான். பெண் பார்க்கும் படலம் ஒன்றில் அவரை எதுவும் பேசக் கூடாது என்று சொல்லியே சபையில் உட்கார வைத்திருப்பார்கள். வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டார் ஏதோ கேட்க, நான் மூனே மூனு வார்த்தை பேசிக்கிடலாமா என்று கெஞ்சுவார். சரி என்று  சொன்னதும், “வெளியே போங்கடா முண்டங்களா” என்பார். தியேட்டரே சிரிக்கும். இதே காட்சி மறுபடி வேறு விதமாக அரங்கேறும். அப்போதும் ரெண்டே ரெண்டு வார்த்தை பேசிக்கிடுதேம்மா என்று குட்டிப் பெண்ணான ஜெயசித்ராவிடம் கெஞ்சுவார். சரி பேசுங்க என்றதும், ‘பொண்ணாப் பிறக்கக் கூடாதும்மா... பொண்ணாப் பொறக்கவே கூடாது’ என்பார். அந்த நச்சென்ற வார்த்தையில் தியேட்டரே நிசப்தமாகி விடும். இது பாலச்சந்தரின் பஞ்ச்.

அந்தக் காலத்து பாதாள பைரவி படத்தில் என்.டி.ராமாராவ் அடிக்கடி சொல்லும் டயலாக்,“உள்ளதைச் சொல்லவா, உண்மையை இல்லையென்று சொல்லவா”- பாக்தாத் திருடன் படத்தில், டி.எஸ் பாலையா தன் தளபதி அசோகனைப் பார்த்துச் சொல்லுவார், “உன்னைத் திட்டித் திட்டி என் நாக்கில் பாதியைக் காணும்”. அவரே காதலிக்க நேரமில்லை படத்தில், “அசோகரு உங்கரு மகரா..” என்பார். அதெல்லாம் அப்போதைய ‘நச்ச்’ வார்த்தைகள் இப்போதைய  பஞ்ச்களாக, ‘ஒரு தரம் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்பது போல  பின் நவீனத்துவ காலகட்டத்தின் வெளிப்பாடாக வருகின்றன. அதில் தர்க்கம் எல்லாம் பார்க்கக் கூடாது. இதெல்லாம் லாஜிக் இல்லை, மேஜிக்.

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com