தோல்வியைத் தொழுபவர்கள்

தோல்வியைத் தொழுபவர்கள்
Published on

தமிழ் சினிமாவின் முகம் 2000ஆவது ஆண்டுக்குப் பிற்பாடு பல விதங்களில் மாறிற்று.தொழில்நுட்ப வளர்ச்சியும் புதியன தேடலும் லொக்கேஷன்கள் தொட்டு திரைப்படுத்துதல் வரைக்கும் எல்லாமும் மாறியது.  வில்லன்களும் மாறவேண்டிய சூழல் அது. அதுவரைக்கும் மிஸ்டர் கிளீன் நாயகர்களுக்கு எதிராட சாதாரண வில்லன்கள் போதுமாயிருந்தனர். நாயகனின் குணாம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவரைக்குமான ஒழுக்க நெறியாடல்களும் வரைமுறை விழுமியங்களும் தகர்க்கப் பட்டன. பல வில்லன்கள் வீட்டுக்கனுப்பப் பட்டனர். நாசர் பிரகாஷ்ராஜ் ராதாரவி உள்பட சிற்சிலர் மிகக் கவுரவமாக பல பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் குணச்சித்திர மற்றும் வில்ல நடிகர்களாகப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்கள். இன்னொருபுறம் புத்தம் புதிய வில்லன்கள் வரத்தொடங்கினர்.

இந்தக் கட்டுரையை ப்ருத்விராஜிடம் இருந்து துவங்கலாம். அவர் மலையாள தேசத்தில் குறிப்பிடத் தகுந்த நாயகன் என்றபோதும் கே.வி.ஆனந்த் திரைப்படுத்திய எழுத்தாளர்கள் சுபாவின் கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்த கனா கண்டேன் படத்தில் மிஸ்டர் கிளீன் வில்லனாக அறிமுகமானார் ப்ருத்விராஜ். உடன் படித்த தோழியின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் தயங்காதவர். பணவெறி பிடித்த வட்டிக்காரனாக அந்தப் படத்தில் பின்னியெடுத்தார் பிருத்விராஜ். 

பின் தினங்களில் மணிரத்னத்தின் ராவணன் படத்தில் கெட்ட போலீஸ்காரனாக நடிப்பது அவருக்கொன்றும் சிரமமே அல்ல என்று சொல்லத் தக்க அளவில் இருந்தது பிருத்வியின் பங்கேற்பு. மலையாளத்தில் கூட மும்பை போலீஸ் போன்ற பிற நடிகர்கள் ஒதுக்கிவிடக் கூடிய எதிர் நாயகன் பாத்திரங்களை ஏற்பதற்கு உண்டான முன்முயல்வாக இப்படங்கள் இருந்திருக்கக் கூடும்.      உளவியல் ஒரு முக்கியக் கூறுபாடாக இடம்பெறத் தொடங்கியதை இரண்டாயிரத்துக்குப் பின்னதான படங்களின் வில்லன்களை வைத்து நன்கு அவதானிக்க முடிகிறது.

பிதா மகன் படத்தில் வரும் இரண்டு நாயக பாத்திரங்களான சூர்யாவும் விக்ரமும் அப்படி ஒன்றும் குறிப்பிடத் தக்க வாழ்வுகொண்ட இரு மனிதர்களல்ல.சூர்யா கட்டை உருட்டி பணம் பறிக்கும் எத்தன்.விக்ரமோ சுடுகாட்டுச்சித்தன்.இந்த இரண்டு பேரின் வாழ்க்கையிலும் வில்லனாக வரும் மகாதேவன் அந்தப் படத்தில் மொத்தமாய்ப் பேசும் வசனங்கள் மிகவும் சொற்பமே. பொதுவாகவே பாலாவின் படங்களில் ஒவ்வாத பாத்திரங்கள் இணைவதும் முரண்படுவதும் தொடர்ச்சியாக காணக் கூடிய அம்சமே.அந்த வகையில் மகாதேவனுக்கு நேர்மாறான வில்லனாக நான் கடவுள் படத்தின் ராஜேந்திரன் அறிமுகமானார்.எண்பதுகளின் மத்தியில் எடுக்கப்பட்ட படங்களில் ஒரே ஒரு வசனம் பேசக் கூட அனுமதிக்கப் படாத முகங்களில் ஒன்றாக ராஜேந்திரனை நம்மால் எளிதில் உணர முடியும்.

பிச்சை எடுப்பதற்கான உருப்படிகளாக பிறழ் உயிரிகளாக மனிதர்களை உற்பத்தி செய்து பிழைக்கக் கூடிய தாண்டவன் கதாபாத்திரத்தை தன் ஏழாம் உலகம் நாவலில் கூட இத்தனை குரூரமாக சித்தரிக்கவில்லை ஜெயமோகன். ராஜேந்திரனின் கரிய உருவமும் மொட்டைத் தலையும் கொடூரச்சிரிப்பும் எம்ஜி.ஆர் காலத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பண்ணப் பட்ட வில்லனின் தொடர்பிம்பமாக வெகு கச்சிதமாக இருந்தது. நான் கடவுள் படத்தை விட ராஜேந்திரன் அடைந்த வெற்றி கண்கூடு.     

வெற்றிவிழா படத்தில் ஜிந்தாவாக கமலைக் கசக்கிப் பிழிந்த சலீம்கௌஸ் அதன் பின்னர் திருடா திருடா , சின்ன ஜமீன், சின்னக் கவுண்டர் எனப் பல சின்னப்பெயர் தாங்கிய படங்களில் நடித்து காணாமற் போயிருந்தார். அவரை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்திற்காக அழைத்து வந்தார்கள். பழைய சிங்கம் பரிமளித்தாலும் அதன் கண்களில் இருந்த உக்கிரம் உடல்மொழியில் இல்லாமற்போனது.

பெரிய மனுஷ வேஷத்தில் தொண்ணூறுகளில் அசத் திய பலரில் ஒருவர் திலகன். அவருக்கு அப்புறமாய் வெகு நாட்களாக அந்த இடத்தில் அவ்வப்போது சிலர் வந்து போய்க்கொண்டிருந்தாலும் நம்ப முடியாத ஒரு வில்லனாக நடித்தவர் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். ஆடுகளம் படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் கிட்டத்தட்ட புராணகாலத்து துரோணரை நினைவுபடுத்தியது. இந்தமுறை குருவானவர் சீடனிடம் கட்டைவிரலைக் கேளாமல் உயிரையே கேட்டது முன்னேற்றமே..அந்தப் படத்தில் அவருக்குப் பின் குரல் தந்தவர் ராதாரவி. கண்களை மூடிப் பார்த்தால் பல இடங்களில் அவரும் நினைவுக்கு வரத்தான் செய்தார்.எனினும் அதை மீறிய பரிமளம் ஜெயபாலன் தந்தது.

உருட்டுக் கட்டை உடம்புகளுடனான வில்லன்களின் கடைசி வரத்தாகவே ரியாஸ்கானை சொல்லலாம். கமல்ஹாசன் தாயம் எனும் பெயரில் தொடர்கதையாக ஒரு வார இதழில் எழுதிப் பின் அவரே திரைக்கதை அமைத்து சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய ஆளவந்தான் படத்தில் ஒரு உபவில்ல பாத்திரத்தில் தன்னை முன் நிறுத்திக் கொண்ட ரியாஸ்கான் மிகப் பலமானதொரு பாத்திரத்தில் முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தில் நடித்தார். உடன் நடித்த இன்னொரு பழைய சிங்கம் விஜயன். எண்பதுகளின் மனம் கவர் நாயகன்.

நாயகர்கள் வில்லன்களாக மாறுவது வாஸ்துக் கோளாறோ அல்லது வாழ்வாட்டமோ அல்ல. ஒரு சாலையிலிருந்து இன்னொன்றுக்கு வளைந்து திரும்புவதைப் போல இயல்பானது தான். எத்தனையோ படங்களில் மக்களால் ஆராதிக்கப்பட்ட நாயகனான சுமன் ரஜனிகாந்தின் சூப்பர்வில்லனாக நடித்த சிவாஜி படம் அவற்றுள் ஒன்று. சத்யராஜ் நடிக்க மறுத்த பின் சுமன் அந்தப் பாத்திரத்தை ஏற்றது திரைமறைவுச்சம்பவம். சத்யராஜ் நிச்சயம் வருத்தம் கொள்ளும் அளவுக்கு சுமனின் மறுவுரு அமைந்தது.

நாயகன் படத்தின் வேலு நாயக்கரை கலைத்துப் போட்டுப் பண்ணப் பட்ட பல படங்களில் ஒன்றான தீனாவில் மலையாள சுரேஷ்கோபி பெரியதாதாவாக ஆதிகேசவனாக வந்து படமெங்கும் உறுமினார். எடுபட்டது. பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பலரை அடிக்கவும் அடிவாங்கவும் செய்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் தன் இறுதிகாலத்தில் தலைநகரம் படத்தில் கொடூர வில்லனாக வந்தார். அவர் மட்டும் கொஞ்சம் முன்னாலேயே கிளம்பி இருந்தால் பெருங்காலத்துக்குப் பேசப்பட்டிருப்பார். அப்படியொரு அற்புதமான பரிமாணத்தை அதில் நல்கினார் ரத்தினம். தனித்த சிரிப்புடன் முகத்தின் ஒவ்வொரு மைக்ரோ செல்லும் நடிக்கும் ஒரு புதிய வில்லனாக கோட்டா ஸ்ரீனிவாசராவ் பிரபுசாலமனின் கொக்கி படத்தில் அறிமுகமானார்.

சாமி படத்தில் ஜாதிவெறி வில்லனாக எல்லோரையும் கவர்ந்தார். பல டப்பிங் படங்களில் தன் குரல் மூலம் அறிமுகமான சாய்குமார், ஆதி மற்றும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும், நகைச்சுவை நாயகன் ஆர்.பாண்டியராஜன் அஞ்சாதே படத்திலும் சத்யராஜின் இளவல் சிபிராஜ் நாணயம் படத்திலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்த நந்தா, ஈரம் படத்திலும் அப்போதைய பெப்சி சங்கத் தலைவர் விஜயன் வில்லன் படத்திலும் ஹிந்திஸ்தலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரதீப் ராவத் கஜினி உள்ளிட்ட படங்களிலும், பில்லா2 மற்றும் துப்பாக்கி படங்களில் அசத்திய வித்யுத் ஜமால் ஆகியோர் தங்களால் இயன்ற அளவு வித்யாசம் காட்ட விழைந்தனர். யாராலும் மிஸ்டர் வில்லனாக நிரந்தரிக்க முடியாமற்போனது சோகமே.

சிட்டி ஆஃப் காட் படத்தின் உலகளாவிய பல தழுவல்களில் ஒன்றான ரேணிகுண்டாவில் அறிமுகமான ஜானி மற்றும் உடன் வந்த தீப்பெட்டி கணேசன் இன்னபிறர் அழுத்தமான கதாபாத்திரமாக்கலினால் மனந்தொட்டனர். அதே காலகட்டத்தில் வெளியான பருத்திவீரன் கார்த்தியின் அடுத்த படமான நான் மகான் அல்ல படத்திலும், ரேணி குண்டாவின் அதே சிறார் வில்லன்கள் போன்ற இளையவர்கள் வில்லன்களாக வந்து கடைசிவரை போரிட்டு செத்தழிந்தார்கள். இந்த இரண்டு படங்களுமே பெரும் வில்லன் பாத்திரம் ஏதும் இல்லாமல் வெற்றி பெற்ற படங்கள் என்றாலும் கூட பெரிய வில்லன்களே தேவலாம் என்று மூச்சுவாங்க நாயகநல்லவர்களைப் புரட்டி எடுத்த படங்களும் கூட.

நாயகனாக அறிமுகமான யுனிவர்ஸிட்டி பெரிதாக விரும்பப் படவில்லை எனினும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் மறு அறிமுகமான ஜீவன் அதுவரைக்குமான வில்லன்கள் யாரையும் நினைவுபடுத்தாத சுயதோன்றியாக பேருரு எடுத்தார். மும்பையில் இருந்து சென்னைக்குத் தப்பி வந்து அண்ணன் கோஷ்டியில் ஐக்கியமாகும் பாண்டியா என்னும் பிறவி கிரிமினலாக நடித்த ஜீவன் அந்தப் படத்தில் தான் தோன்றும் ஒவ்வொரு ஃப்ரேமையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் எனலாம்.

‘எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரை நாம ஆளனும்.அந்த ஊரைக் கலக்கணும். அந்த ஊருக்கு நாம யார்னு காட்டணும்ணே..‘என்று பாண்டியா முழங்கும் போது திரை அரங்கங்கள் ஆர்ப்பரித்தன. ஹாலிவுட் நடிகர் ஆண்டோனியோ பெண்டாரஸ் போலத் தமிழில் ஒரு புதிய நடிகர் உருவானதாய் அப்போதைய சினிமா ரசிகர்கள் ஆராதித்தனர். கடைசி சீனில் வில்லன் ஜீவன் கொல்லப்பட்டதற்காக சூர்யாவை வெறுத்த சிலரில் நானும் ஒருவனாயிருந்தேன்.

ஜீவன் அதன் பின் நாயகனானது விபத்தே.

நீடித்திருந்தால் இந்திய அளவில் இன்னுமொரு மகா நடிகராக அவர் ஆகியிருக்க வேண்டியவர். இன்னமும் காலம் இருக்கிறது. ஜீவனின் திருட்டுப் பயலே படத்தில் அவர் தான் நாயகன். லஞ்சம் வாங்கும் தகப்பனின் மகன் கெட்டழியும் கதையில் அவருக்கு நடித்து மிளிர எல்லா வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன. அதே படத்தில் கடைசிவரை தோற்று மேடைக்கே வராத பாத்திரத்தில் கடைசி ஒரு காட்சியில் அத்தனை க்ரூரத்தை அத்தனை வெறியை நிகழ்த்திக் காட்டிய மனோஜ்.கே.ஜெயன் மலையாள வரவு. முக்கியமாய்ச் சொல்லப் பட வேண்டியவரும் கூட.

இதே கதை தான் ப்ரசன்னாவினுடையது. மணிரத்னத்தின் கம்பெனி அறிமுகமான பிரசன்னா ஒரு சாக்லேட் பாய் என்று தான் எல்லோரும் நினைத்தோம்.மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் அவர் ஏற்ற பெண்மோகி கதாபாத்திரத்தை அத்தனை நேர்த்தியாக நளினப் படுத்தியிருப்பார் பிரசன்னா. சில இடங்களில் சின்ன வயது கமல்ஹாசனை நினைவுபடுத்தியது அவருக்கு ப்ளஸ் தான்..கடைசியாய்க் கொல்லப் படும் வரை பார்வையாளர்களை அதிர்ச்சியிலேயே வைத்திருந்தது ப்ரசன்னாவின் நாயக முன் வரலாற்றைத் தாண்டிய வெற்றிகரமே.

கமல்ஹாசனின் விருமாண்டி தரணியின் தூள் ஆகிய படங்களில் நடித்த பசுபதி தன் கண்களாலேயே பெரும்பான்மை நடித்து விடுபவர்.தன் மொத்த உடல்மொழியையும் கட்டுக்குள் கொண்டு வந்து நடிக்கும் ஆற்றல் எல்லோர்க்கும் கைவருவதில்லை.அந்த வகையில் பசுபதியின் பாத்திரமேற்பு எப்போதுமே ஒரு நடனக்கலைஞரின் மேடையாட்சி போலவே தோன்றும்.அத்தனை கச்சிதமாய் அவரது கண்களும் உடலும் நடித்துக் கொடுக்கும்.

இன்னுமொரு குறிப்பிடத் தகுந்தவர் டேனியல்பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் ஏற்றது ஒரு மருத்துவ மேற்படிப்பு மாணவர் வேடம். அதாவது படித்த வெர்சஸ் படித்த என்னும் வகைமையில் போலீஸூக்கு வில்லனாக டாக்டர் என்று கற்பனை செய்த கௌதம் வாசுதேவ்மேனனின் எதிர்நோக்கல் கொஞ்சமும் ஏமாற்றம் அடையவில்லை எனலாம்.தம்பிராமையா துணைத் தலைமை ஆசிரியராக நடித்த சாட்டை படத்தை தவிர்க்க இயலாது. பார்வையாளன் கண்களில் ஒரு பள்ளிக்கூடத்தையும் ஒரு முட்டுக்கட்டை ஆசிரியரையும் அத்தனை நேர்த்தியாகக் கொண்டு வந்து நிறுத்திய தம்பி ராமையாவின் பெரும்பலம் அவரது வசனப் பிரவாகம்.எந்த வசனத்தையும் தன் தனித்த குரலாலும் முகமொழியாலும் தனதாக்கிக் கொள்ளும் சமர்த்தர் ராமையா. கவரவே செய்தார்.

ரௌத்ரம் படத்தில் விஸ்வரூபமெடுத்த சென்றாயன் மௌனத்திலேயே பெரும் பரிமாணத்தை நிகழ்த்திக் காட்டினார். அவரது பாத்திரத்தை அந்த அளவுக்கு வேறு யாராலும் செய்துவிட முடியாது என்ற அளவில் அத்தனை வெறுப்பை உமிழ்ந்து காட்டிய அதே சென்றாயன் மூடர்கூடம் படத்தில் ஒரு நகைச்சுவை வில்லனாக வந்தது ஆறுதலுடன் கூடிய மாறுதல். வரும் காலங்களில் இன்னும் கனமான பாத்திரங்களில் சென்றாயனால் மிளிர முடியும் என்பதற்கான சாட்சியங்களும் இப்படங்களே.

அதுல் குல்கர்னி மற்றும் கிஷோர். ரகுவரனின் தொடர்ச்சியாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு வில்லமுகங்களாக இவர்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.ஹேராம் படத்தில் அறிமுகமான அதுல் அதன் பின் ரன் படத்தில் பற்களைக் கடித்தபடி பேசும் மென்மையான கொடூரத்தைப் படமெங்கும் படரவிட்டார்.இன்னொருவராக கிஷோர் அறிமுகமானது பொல்லாதவன் படத்தில்.சென்னை மொழியை நுட்பமாகப் பேசி நடித்த கிஷோர் தமிழுக்குக் கிட்டிய புதுவரவு நடிகர்களில் மிக மென்மையான தன் முகத்துடிப்புக்களாலேயே எத்தனை கனமான பாத்திரங்களையும் அனாயாசமாக காட்டுகிற இன்னொருவர்.

ஜூன், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com