தோல்விகளிலும் வெற்றிகளைத் தந்தவர்!

தோல்விகளிலும் வெற்றிகளைத் தந்தவர்!
Published on

த மிழில் முதல் புலனாய்வு பத்திரிகை எது என்பதும், யார் முதல் புலனாய்வு பத்திரிகையாளர் என்பதும் இன்னும் விடை காண முடியாத கேள்விகளாகவே உள்ளன!

ஆனால்,புலனாய்வு முன்னோடிகள் என்று சிலரை திட்டவட்டமாக சொல்லலாம்! அந்த வகையில் சேலம் சுதேசாபிமானி ஆசிரியர் சே பா நரசிம்மலு 1877 களில் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் லஞ்சம் பெற்று நீதி வழங்குவதாக துணிந்து எழுதியதை இன்று நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது...!

சுதந்திரத்திற்கு பிறகான தமிழ் இதழியலில் 1960 களின் இறுதியில் தான் அரசியல் மற்றும் அரசுத் துறைகளின் மீதான விமர்சனப் பார்வை வெளிப்படத் தொடங்கியது. அந்த வகையில் 'நாத்திகம்' என்ற பெயரில் ராமசாமி என்பவரால் கொண்டு வரப்பட்ட வார இதழ் அன்றைய தி மு க அரசின் ஊழல்களை எழுதியது. அதன் பிறகு வெளியான ‘அலை ஒசை' நாளிதழ் அதன் புலனாய்வு செய்திகளுக்கென்றே பரபரப்பாக விற்பனையானது. ஆனால்,இவ்விரண்டு பத்திரிகைகளுமே திராவிட இயக்கப் பார்வை சார்ந்த பத்திரிகைகள்!

1960 களுக்கு முன்பு வரையில் வந்த தினசரிகள் அனைத்துமே பெரும்பாலும் ஆளும் அதிகார மையத்திற்கு அனுசரணையாகவே இருந்தன. அதிகபட்சம் எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளிவரும். அவ்வளவு தான்.

வார இதழ்களோ சிறுகதைகள், நாவல்கள், துணுக்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டவையாகத் திகழ்ந்தன! இந்த நிலையில் தேசிய அளவில் ‘சங்கர்ஸ் வீக்லி' என்ற அரசியல் விமர்சன புலனாய்வு பத்திரிகை கவனம் பெற்றதாயிருந்தது! அன்றைய இளைஞரான ஆனந்தகிருஷ்ணன் என்ற அனந்துவுக்கு அதில் ஒரு பெரிய ஈர்ப்பே ஏற்படுவிட்டது. இப்படி ஒரு பத்திரிகை தமிழில் தமிழக அரசியலை விமர்சித்து, நையாண்டி செய்து வெளிவந்தால், அதற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கக்கூடும் என்று அவர் திடமாக நம்பினார்.அனந்து சிறுவனாயிருந்த போதே மத்தாப்பு என்ற  சிறுவர்களுக்கான இதழை கொண்டு வந்திருந்தார். பிறகு கல்லூரி காலத்தில் 'சொல்லருவி' என்ற இலக்கிய இதழை கொண்டு வந்திருந்தார். கவிதை, சிறுகதை, நாவல் என்ற படைப்பாற்றலும் வெளிப்பட்டது!.

அன்றைய தினம் இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்கமும்,தேசிய இயக்கமும்,பொது உடமை சித்தாந்தமும் பெரும் ஆதிக்கம் செலுத்தின. அது அனந்துவையும் விட்டு வைக்கவில்லை. கல்லூரி காலத்திலேயே அவருக்கு கண்ணதாசனிடம் ஒரு ஆதர்ச நட்பு ஏற்பட்டிருந்தது. இதனால் கண்ணதாசனின் ‘தென்றல்' இதழில் அனந்துவின் பங்களிப்பும் அவ்வப்போது இருந்து வந்தது.

இந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் ஒரு புதிய முயற்சியாக ஒரு அரசியல் விமர்சன பத்திரிகை கொண்டுவரும் எண்ணம் வலுப்பெற்றது.தன் எண்ணத்திற்கு செயல் வடிவம் தர தானே முதலீடு செய்து ‘கிண்டல்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைக் கொண்டுவந்தார்.

சிறிய முதலீட்டில் அச்சகம் ஒன்றை தொடங்கினார்.

சக்தி என்ற கார்டூனிஸ்ட்டை துணைக்கழைத்துக் கொண்டார். தானே எழுதி தானே அச்சிட்டு, அதை தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணனுடன் சேர்ந்து கடைகடையாக வினியோகித்தார். வெளியூர்களுக்கு பார்சலில் அனுப்பி வைத்தார்.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வெளிவந்த புதிய முயற்சியான அரசியல் பத்திரிகை சுமார் எட்டாயிரம் பிரதிகளை எட்டியது ஒருசாதனையாகத் தான் பார்க்கப்பட வேண்டும்! ஆனால், ஆள் பலம், பொருளாதார பலமின்மையால் கிண்டல் தடுமாறியது. அப்போது தான் ஆனந்தவிகடன் நிறுவனத்திலிருந்து பிரபல நாடக ஆசிரியர் மற்றும் திரைப்பட நடிகரான சோ அவர்களைக் கொண்டு துக்ளக் இதழ் வெளியானது. அது கிண்டல் இதழை பிரதிபலிப்பது போல அனந்துவுக்குத் தோன்றியது. ஆகையால், தனது கடைசி இதழில் அனந்து இவ்வாறு எழுதினார் - ‘‘பொருளாதாரக் காரணங்களால் கிண்டல் இதழை தொடர முடியவில்லை. ஆனால் கிண்டலின் பாதிப்புடன் மற்றொரு இதழ் வெளிவருவதை கிண்டலுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.''

இந்தச் சூழலில் துக்ளக் ஆசிரியர் சோ விடமிருந்தே அனந்துவுக்கு அழைப்பு வந்தது. அவர் துக்ளக்கில் இணைந்து தன் புலனாய்வு இதழியல் பணிகளை முன்னெடுத்தார். துக்ளக்கில் ‘விசிட்டர்' என்ற பெயரில் அவர் எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள் அன்று பெரிதும் பேசப்பட்டன. அரசுத் துறைகளுக்கு நேரிடையாக ‘விசிட்' அடித்து அங்கு நிலவும் சூழல்கள். அணுகுமுறைகள், செயல்பாடுகளைத் தோலுரித்துக் காட்டினார். மாநராட்சிகள், பொதுப் பணித்துறை அலுவலங்கள்... இப்படியான அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கினார். அந்த காலகட்டத்தில் இம்மாதிரியான எழுத்துகள் புதுமையாக பார்க்கப்பட்டது.சென்னை மாநகராட்சியில் நடந்த 'மஸ்டர்ரோல்' ஊழல் இவ்விதம் வெளியானது. அனந்துவின் கட்டுரைகளுக்கு அரசு அதிகாரிகள்,

அமைச்சர்கள்,முதல்வர் போன்றோர் அவ்வப்போது எதிர்வினையாற்றினர்.

 துக்ளக்கிற்குப் பிறகு 1980 ல் விசிட்டர் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை அனந்து கொண்டு வந்தார். அந்த பத்திரிகை தான் முதன்முதலில் கிராமங்களுக்கு சென்று மக்கள் பிரச்சினையை எழுதியது. புதுக் கவிதை கவனம் பெறத் தொடங்கிய காலம் என்பதால், வைரமுத்து, மு மேத்தா, வண்ணதாசன், நா காமராஜன், அப்துல்ரகுமான் ஆகியோருக்கு வெளிச்சம் பாய்ச்சியது. தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகளின் விரிவான நேர்காணல்களை வெளியிட்டது. அத்துடன் நிற்காமல் மாவட்டம் தோறும் வாசகர் கூட்டங்களை நடத்தி அந்த பகுதி மக்களின்பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளைத் தேடினார்.

விசிட்டரில் மாலன், ஞாநி போன்ற அன்றைய இளம் பத்திரிகையாளர்கள் எழுதும் வாய்ப்பு பெற்றனர்.ஆனால்,நிர்வாகப் பிரச்சினை காரணமாக அப் பத்திரிகை நின்று போனது. இதன் பாதிப்புகளைப் பெற்று பிறகு வெளியான பத்திரிகை தான் ஜூனியர் விகடன்!

பிறகு மீண்டும் 1986 ல் உங்கள் விசிட்டர் என்ற பத்திரிகையை கொண்டு வந்தார். அப் பத்திரிகையின் நிர்வாகத்தின் தவறான போக்குகளால் அதிலிருந்து அனந்து வெளியேறினார். 1988 ல் தமிழின் முதல் விஷுவல் பத்திரிகையான 'வானவில்' அனந்துவின் சிந்தையில் உதிர்த்ததே! அதன் பிறகு தான் கலாநிதி மாறன் 'பூமாலை' என்ற வீடியோ இதழைக் கொண்டு வந்தார். அது தான் பிற்காலத்தில் சன் தொலைகாட்சி என்ற தமிழின் முதல் தனியார் தொலைகாட்சிக்கு வித்திட்டது!ஒரு வகையில் தமிழில்  காட்சி ஊடகத்திற்கும் அனந்து அவர்கள் ஆரம்பப்புள்ளியாக அமைந்துவிட்டார்! தொடந்து தன்னளவில் தோல்விகளையே சந்தித்தவர் என்றாலும் பல துவக்கங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்ற வகையில், ‘விசிட்டர்' அனந்து பல வெற்றியாளர்கள் உருவாகக் காரணமானவர் !

டிசம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com