தேரோடும் வீதிகள்

Published on

புத்தகம், இலக்கியம் என்று காசை வீணாக்குகிறாயே இதனால் பத்து பைசாவிற்கு பிரயோஜனம் உண்டா? நீ வைத்திருக்கிற புத்தகத்தை பழைய பேப்பர் கடைக்காரன் கூட விரும்பமாட்டான். இதைவிட தினசரி பத்திரிகை தான் பொட்டலம் போட வசதியானது என்கிறான், என்கிற விமர்சனம் தன்மீது வீசப்பட்டதாக நண்பர் ஒருவர் விசனப்பட்டார். புத்தகங்கள் இலக்கியங்களால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பிரபலமாகவில்லை. 2009இல் யுனிவர்சிட்டி ஆஃப் சஸக்ஸ்  நடத்திய விரிவான ஆய்வில் ஆழ்ந்த வாசிப்பு ஒருவரின்  மன அழுத்தத்தை  அறுபத்தெட்டு சதவீதம் குறைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனம் கவர்ந்த புத்தகத்தில் உங்களை முழுமையாய் இழக்கும்போது புற உலகின் பிரச்னைகள்,அழுத்தத்தில் இருந்து தாற்காலிகமாக விடுபட்டு சிறிது நேரம் அந்த ஆசிரியர்கள் உலகில் அவரின் கற்பனைகளில் உலவி விட்டு வரலாம் என்று  Cognitive Neuropsychologist டேவிட் லெவிஸ் கூறுகிறார்.

 சக மனிதனை அவன் சூழ்நிலைகளை, வாழாத வாழ்வை, வேறுபாட்டின் நியாயங்களையும் அதன் அழகையும் பல்வேறு இனங்கள் மற்றும் நிலப்பரப்புகள் பற்றிய புரிதல்களையும், இலக்கியங்கள் வாசிப்பவர்களுக்கு வழங்கும். மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ளவும், நம்மை நாம் அறிந்து கொள்ளவும் இலக்கியம் உதவும்.

 ஆதி மொழியில் ஒன்றாகி இன்றும் சீரிளமையுடன் திகழும் மொழியாக தமிழ் சிறப்புற்றிருக்கிறது.

 தமிழ் சிறப்புற்றிருப்பதற்கு படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்கு இருந்தாலும் அதற்கு இணையான சிறப்பிடத்தை தமிழையும், தமிழ் படைப்பாளிகளையும் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும்  தர வேண்டும்.

 மளிகைக் கடை வைத்திருக்கிறார்  நண்பர் ஒருவர். இலக்கிய புத்தகங்களை வாசிப்பது அவருக்குப் பிடித்தமான விஷயம்.  நாவல் ஒன்று அவருக்குப் பிடித்துப் போய்விடுகிறது. நூறு பிரதிகளை வாங்கி தெரிந்தவர்களுக்கு கொடுத்துப் படிக்கச் சொல்கிறார். அவர்கள் படித்தபின் விமர்சனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். முக்கியமான விஷயம், எழுத்தாளருக்கும், நூறு பிரதிகள் வாங்கி கொடுத்தவருக்கும் அறிமுகம் ஏதும் கிடையாது. இப்படித்தான் இங்கு இலக்கியம் வளர்ந்திருக்கிறது.

 தமிழன்னை எழுத்தாளர்கள் இலக்கியங்கள் புடைசூழ தேரில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். அன்னையின் அழகு தேரை வீதியில் இழுத்து தேர்த்திருவிழா  நடத்துபவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற அந்திமழையின் விருப்பம் தான் இந்தச் சிறப்பிதழ்.

 ஓர் இதழுக்குள் இலக்கிய அமைப்புகளின் மொத்த செயல்பாட்டையும் பதிவு செய்வதென்பது கடலை கலயத்திற்குள் நிரப்பும் முயற்சி போன்றது.

 தமிழ் சங்கங்கள், இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளை அந்திமழைக்கு தெரியப்படுத்துங்கள்.

தமிழன்னையின்  தேரோடும் வீதிகளை ஆவணப்படுத்துவோம்!

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்.

ஜனவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com