பசி கொடுக்கும் அடி ஏழைகளை மண்டியிட வைக்கிறது. உயிர் வாழ்வதற்காக, அவர்கள் தானாக முன்வந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் ‘சொத்து என்கிற விலங்கிடம்' தங்களை விற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது- ஜோஹான் மோஸ்ட்
பணம், பதவி, செல்வாக்கு உள்ள அனேகரின் மனதில் ‘என் வாழ்வு என் கையில்' என்ற எண்ணம் குடியிருப்பது அவர்களது வார்த்தைகள் மூலம் வெளிப்படும் தருணங்களில் லேசான புன்னகையுடன் கருத்து கூறுவதை தவிர்த்து விடுவேன்.
வீடு, நாடு மட்டுமல்ல, உலகமே ஸ்தம்பித்து போகாமல் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு சின்னஞ்சிறு வேலைகள் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தும் பலதரப்பட்ட எளிய மனிதர்கள் தான் காரணம். கொரோனா பயமும் தளர்வில்லா ஊரடங்கு நிரம்பிய இக்காலத்தில் இந்தியாவில் பல தொழில் அதிபர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது அலுவல் சார்ந்த முக்கிய நிர்வாகிகளை தங்களது பங்களாவில் தங்க சொல்லவில்லை. மாறாக சமையல், பராமரிப்பு, வாகனம் ஓட்டுனர் போன்ற எளிய வேலைகள் செய்பவர்களைத்தான் பங்களாவில் தங்கச் சொன்னார்கள்.
பிரபலமோ சாதாரணமானவர்களோ, யாராக இருந்தாலும் அவரது வாழ்வில் எதிர்பாராத சின்னஞ்சிறு செய்கையால் நெகிழ வைத்து விட்டு போகும் எளிய மனிதர்களை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. அந்த செய்கை செய்யப்பட்ட தருணத்தில் அதன் முக்கியத்தை உணராமல் கூட இருந்திருப்போம். அவரது பெயரைக்கூட கேட்காமல் விட்டிருப்போம்.
எனது வாழ்க்கைப் பயணத்தை திரும்பிப் பார்த்தால் கைமாறு எதிர்பாராமல் நன்மை செய்த எண்ணற்ற எளியவர்களின் முகங்கள் வந்து போகின்றன. துரதிருஷ்டவசமாக அனேக எளியவர்கள் ஏழ்மையிலேயே உழலுகிறார்கள்.
உலகெங்கும் நிகழும் ஏற்ற தாழ்வுகள் இந்த எளியவர்களின் வாழ்வை சிக்கலாக்குகின்றன. இத்தாலியில் பிறந்த கொராடோ கினி என்பவர் உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை விரிவாக ஆராய்ந்து Gini coefficient என்ற முறையை கண்டுபிடித்தார். ஐ.நா. சபையினர் இந்த முறையை பயன்படுத்தி நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்கின்றனர். இந்த கினி குறியீட்டு எண் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் நிலவரம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
பிரிட்டிஷ் காலத்தில் பணக்காரர்களாக இருந்த 1% பேர்களிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 20.7% இருந்தது, இந்த கணக்கீடு செய்யப்பட்ட ஆண்டு 1939 - 40.
சமீபத்திய நிலவரம் மிக மோசம். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட இந்திய சமூக ஆய்வறிக்கை(2017)இன் படி பார்த்தால் இந்தியாவின் மேல்தட்டில் உள்ள 1% செல்வந்தர்களிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 58.4% உள்ளது. முதல் 10% பணக்காரர்களிடம் 80.7% செல்வம் தங்கி உள்ளது. 2000க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் செல்வ ஏற்றத்தாழ்வு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
எளியவர்களின் வாழ்வை அதிகப்படியான சிரமங்கள் தின்னத் தொடங்குகின்றன. பிரபஞ்ச வீதிகளில் உலகென்ற தேரை வடம் பிடித்து தினமும் இழுத்து செல்லும் இந்த எளியவர்களின் வாழ்வை அரசாங்கங்கள் மட்டுமல்ல நாமும் மாற்றலாம். எப்படி மாற்றலாம் என்பதற்கான விடை மூவரின் கூற்றின் வழி பார்க்கலாம்.
மக்களுக்கு பணத்தைக் கொடுப்பதன்மூலம் வறுமையை ஒழிக்கமுடியாது- பி ஜே ஓ ரூர்கி
மக்களிடம் பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காண்பித்தால் அவர்களை மீட்கமுடியும் என்று நம்புகிறேன்- பில்கேட்ஸ்
ஒற்றைப் பைசாகூட இல்லாதவன் ஏழை அல்ல. கனவுகளே இல்லாதவன்தான் ஏழை - ஹென்றி போர்ட்
நம்மை சுற்றியிருக்கும் எளியவர்களிடம் ஒரு கனவை விதைக்கலாம். அவர்களது சிக்கலை அவிழ்க்கும் தீர்வை முன்னவைக்கலாம், அவர்கள் சந்ததியினருக்கு வழி காட்டலாம், இப்படி எத்தனையோ செய்யலாம். நாம் எல்லோருமே எப்போது முடியுமோ அப்போதெல்லாம் ஒரு எளியவரின் வாழ்வில் விளக்கேற்றினால் உலகத் தேர் பிரகாசமான பாதையில் உருண்டோடும்.
- அந்திமழை இளங்கோவன்.
ஆகஸ்ட், 2020 அந்திமழை