இந்தியாவில் தோன்றி, இந்திய மக்களுக்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் போராடி இன்று ஒரு உலக நாயகராக வெளிப்போந்திருப்பவர் மகாத்மா காந்தி. காந்தியைப் பற்றி நாம் எந்த ஆய்வைச் செய்தாலும் காந்தி குறித்து இன்று உருவாகியுள்ள புரிதல்களின் அடிப்படையில்தான் அவரை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
1.தென் ஆப்ரிக்காவில் அவர் கொஞ்ச நஞ்ச ஆண்டுகளைக் கழிக்கவில்லை. 21 ஆண்டுகள் வாழ்ந்தார். தனது 24 ம் வயதில் (1893) சென்று 45 ம் வயதில் (1914) திரும்புகிறார். இந்த 21 ஆண்டுகளும் தன்னளவில், முக்கியமானவை; தனித்துவமானவை; நிகழ்ச்சிகள் நிறைந்தவை. ஒரு வேளை அவர் இந்தியாவுக்குத் திரும்பி வராமலே போயிருந்தாலும் அந்த வாழ்வும் போராட்டங்களுமே இன்று மிக முக்கியமானதும் சுவையானதுமான வரலாற்றுப் பெட்டகங்களாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் இன்னும் அதிக நிகழ்ச்சிகள் நிறைந்த இன்னொரு 35 ஆண்டுகளை மீண்டும் அவர் இந்தியாவில் கழித்துள்ளதன் விளைவாக இன்று அவரது அடையாளம் இதனூடாகவே கட்டமைக்கப்படுகிறது.
இன்று காந்தியின் தனித்துவங்களாகவும் அடையாளக் கூறுகளாகவும் நாம் எதை எதையெல்லாம் காண்கிறோம்? சுருக்கமாகச் சொல்வதானால், 1) அஹிம்சை/ ஒத்துழையாமை/ சத்தியாக்கிரகம் என்பவற்றால் அடையாளப்படுத்தப்படும் அவரது போராட்ட முறை; 2) பல்வேறு மத, இன, மொழி, சாதி களுக்கிடையேயான ஒற்றுமை, எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கமான பிரதிநிதியாகத் தன்னை நிறுத்திக் கொள்ளாமை, குறிப்பாக இந்து, முஸ்லிம், தலித் மக்களின் இணைவு; 3) மேற்கத்திய நவீனத்துவம், எந்திரங்கள், மருத்துவம் ஆகியவற்றின் மீதான கடும் வெறுப்பு; 4) பிரம்மச்சரியம் என்கிற பெயரில் வெறுக்கத் தக்க அளவிலான உடல் சார்ந்த ஆசைகளின் துறப்பு: 5) சாத்தியமும், தேவையும் இல்லாத அளவிற்கு எளிமை - ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கூடவே இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் இந்த அவரது கொள்கைகளையும் அவற்றிலிருந்து பிரிக்கவே இயலாத அவரது நடைமுறைகளையும் அவரைச் சார்ந்தவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கும் எதேச்சதிகாரப் போக்கு தான் அது.
இப்போது நான் பட்டியலிட்ட இத்தனை அம்சங்களையும் அவர் உருவாக்கி, வடிவமைத்து செயல்படுத்தியது அனைத்தும் தென் ஆப்ரிக்காவில்தான். காந்தி இன்றும் ஒரு புதிர்தான். அவரை மகாத்மாவாகக் காண்பது எத்தனை எளிதோ அத்தனை எளிது அவரை ஒரு வில்லனாகக் கட்டமைப்பதும். சொல்லப்போனால் இரண்டாவது இன்னும் எளிது. காந்தி எனும் புதிரை அவரது தென்னாப்பிரிக்க அனுபவங்களிலிருந்து அவிழ்க்க இயலுமா என முயற்சிப்போம்.
2. காந்தி தென்னாப்ரிக்காவுக்கு வரும்போது அவர் ஒரு குடும்பஸ்தர்; குழந்தைகள் இருந்தனர். 18 வயதில் அவருக்கு முதல் குழந்தை பிறந்து விடுகிறது. வக்கீல் தொழிலில் தோல்வி, வெளிநாட்டில் சென்று படித்ததால் விளைந்த குடும்பக் கடன்களை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்தப் பின்னணியில் தென் ஆப்ரிக்காவில் இருந்த தாதா அப்துல்லா எனும் ஒரு குஜராத் முஸ்லிம் வணிகரின் குடும்ப வழக்குகளை நடத்தும் பொறுப்பை ஏற்று வரும்போது அவர் ஒரு சதாரண குஜராத்தி பனியாவாகத்தான் இருந்தார். ஆடம்பரமான உடை, அழகான ஆங்கிலப் பிரயோகம், உள்நாட்டு ஆப்பிரிக்கர்களை சக இந்தியர்களைப் போலவே இழிவான ‘காஃபிர்’களாகவே பார்ப்பது, பொதுப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தும்போது கூட முதல் வகுப்பிலேயே பயணம் செய்வது என்பதாகத்தான் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம் சந்திர காந்தி தென் ஆப்ரிக்காவில் நுழைகிறார்.
ஆனால் அங்கு அவருக்கு வாய்த்த அனுபவங்கள் வேறு. அவரிடம் முதல் வகுப்புக்கான டிக்கட் இருந்தபோதும் பீய்டர்மாரிஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஒரு வெள்ளை நடத்துனரால் அவர் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப் படுகிறார். இத்தகைய அப்பட்டமான நிறவெறியை அவர் இங்கிலாந்தில் கூட அனுபவித்ததில்லை. 1897ல் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அவர் இரண்டாம் முறையாகத் தென் ஆப்ரிக்கா வரும்போது, முன்னதாகவே இந்த இந்தியக் கலகக்காரரின் வருகை பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்தியரின் குடியுரிமைகளுக்காகப் போராடும் இந்த நபர் 3000 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இங்கு குடியமர்த்த வருகிறார் என்பதுதான் அந்த வதந்தி. வந்து இறங்கியவுடன் தென்னாப்ரிக்க ’ஆப்ரிக்கனீயர்கள்’ (வெள்ளை டட்ச் குடியேறிகள்) அவரைத் தாக்குகின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியின் மனைவி, ‘ஏன் இவரைத் தாக்குகிறீர்கள். இவர் ஒரு வழக்குரைஞர் அல்லவா?’ என அவர்களைத் தடுக்கிறாள். சற்று நேரத்தில் அங்கு வந்த அவளது கணவரான அந்த வெள்ளை போலீஸ் அதிகாரி அவரை வன்முறைக் கும்பலிடமிருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்.
இந்தச் சம்பவம் காந்தியிடம் அவரது ஒரு மிக முக்கியமான பண்பைக் கிளர்த்துகிறது. ‘எதிரியையும் எதிரியின் செயல்களையும் பிரித்துப் பார்ப்பது’ என்பதுதான் அது. எதிரியின் செயல்களைத்தான் நாம் இம்மியும் விட்டுக் கொடுக்காமல் எதிர்க்க வேண்டும். எதிரியை அல்ல. அதெப்படி எதிரியை எதிர்க்காமல் எதிரியின் செயல்பாடுகளை எதிர்ப்பது. அது அப்படித்தான். காந்தியின் வாழ்க்கைதான் அதற்குப் பதில்.
எதிரியை வெறுக்காமல் எதிர்ப்பது என்பதுதான் அவரது போராட்ட அறம். 1909ல் அவர் லண்டன் செல்கிறார். அங்குதான் அவர் சாவர்கரைச் முதல்முறையாகவும் இறுதி முறையாகவும் சந்திக்கிறார். பின்னாளில் காந்தியைக் கொல்ல பிஸ்டல் ஒன்றைக் கொடுத்து கோட்சேயை அனுப்பி வைத்தவர்தான் சாவர்கர். அது பகவத் கீதையைக் கையில் ஏந்திக் கொண்டு இளைஞர்கள் வெள்ளை அதிகாரிகளைக் கொன்று கொண்டிருந்த காலம். திலகர், அரவிந்த கோஷ் முதலானோரின் வழிகாட்டலில் சுதேசிய இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். அவர் லண்டன் செல்வதற்குச் சில நாட்கள் முன்தான் இந்தியர்களின் நிகழ்வொன்றிற்கு வந்த வெள்ளை அதிகாரி கர்ஸான் வைலியை மதன்லால் திங்ரா எனும் இளைஞன் சுட்டுக் கொல்கிறான். அவனை உடன் பிரிட்டிஷ் அரசு தூக்கிலேற்றுகிறது. திங்ரா ஒரு மாபெரும் வீரத் தியாகியாகப் போற்றப்பட்டுக் கொண்டிருந்த பின்னணியில் தான் லண்டனில் அந்த விருந்தும் இந்திய சுதந்திரத்திற்கான வழிமுறை குறித்து சாவர்கருக்கும் காந்திக்குமான விவாதமும் நடக்கிறது.
லண்டனிலிருந்து கப்பலில் தென்னாப்ரிக்கா திரும்பும்போது கேள்வி பதில் வடிவத்தில் எழுதப்பட்டதுதான் காந்தியின் மிக முக்கிய நூலாகக் கருதப்படும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’. மேற்கத்திய நவீனத்துவமே எல்லா இழிவுகளுக்கும் காரணம். நாம் இந்த நவீன எந்திரங்களின் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும். சுயராஜ்யம் என்பதை நம்முடைய நாட்டை நாமே ஆண்டு கொள்வது என்கிற அளவில் மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. அது நம்முடைய சுயத்தையும் நாம் ஆள்வது; நம்முடைய சுயத்தையும் நாம் கட்டுக்குள் வைப்பது என்றெல்லாம் அவரது சிந்தனை விரிகிறது. அவர் சுழற்றிய இராட்டை இதற்கொரு குறியீடாகவும் அவரது பிரம்மச்சரியம், அஹிம்சை முதலியன இதன் வெளிப்பாடுகளாகவும் அமைந்தன.
3. காந்தி காலத்திய தென் ஆப்ரிக்கா பற்றி ஒரு சொல். மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த ஆப்ரிக்கக் குடி மக்கள் தென் ஆப்ரிக்கா முழுவதும் சிதறுண்டு கிடந்தனர். அவர்கள் விவசாயிகள், கால்நடை மேய்ப்பர்கள். கிராமவாசிகள். அவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டெரியாத காலம் அது. தென் ஆப்ரிக்காவில் இருந்த இந்தியர்கள் பலதரப்பட்டவர். கப்பல்கள் ஓட்டி வணிகம் செய்யும் அளவிற்கு வசதி படைத்த குஜராத்தி வணிகர்கள் ஒரு புறம். இன்னொரு புறம் கொத்தடிமைகளாகக் கொண்டு வந்து பணியமர்த்தப்பட்ட ஏழை எளிய இந்தியர்கள். இவர்களில் தமிழர்கள், குறிப்பாகத் தலித்கள் அதிகம். மதம் மாறிய கிறிஸ்தவர்கள், சிறு கடைகள் வைத்திருந்த முஸ்லிம்கள், பார்சிகள், இந்தி பேசியோர், தமிழ் பேசியோர்.... இப்படி.
இந்தியா என்பது ஒரு மதத்தினர், ஓரினத்தினர், ஓர் மொழியினர், ஓர் சாதியினரின் நாடல்ல என்பதை உள்வாங்கும் வாய்ப்பை காந்தி இதன் மூலம் பெற்றார். காந்தியின் கண்ணோட்டத்தில் பெரும்பான்மையின் அதிகாரம், ஆளுகை என்கிற கருத்து உருவானதே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தை அவர் பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகக் காணும் பேறு பெற்றார். அந்தப் பார்வையையும் பயிற்சியையும் தென் ஆப்ரிக்கா அவருக்குப் பிச்சையிட்டது.
ஆண்ட வெள்ளையர்களைப் பொருத்த மட்டில் முக்கியமாக ஒடுக்கப்பட வேண்டியவர்களாக அவர்களுக்கு இந்தியர்கள்தான் இருந்தனர். அவர்களது சொத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, இடம் பெயரும் உரிமை இப்படி எல்லாமும் சட்டங்களின் மூலம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டபோது, வெற்றிகரமான ஒரு வழக்குரைஞராக மட்டுமின்றி ‘டயஸ்போரா’ இந்தியர்களின் ஒரு சமுதாயத் தலைவராகவும் மலர்ந்திருந்த காந்தி வெறுமனே ‘எங்களுக்கு இந்த உரிமைகள் வேண்டும்’ என மனுப்போட்டுக் காத்திருத்தல் அல்லது ‘வெள்ளை ஆட்சியாளர்கள் மீது வெடிகுண்டு வீசி தூக்குமரம் ஏறுதல்’ என்கிற இரண்டிற்கும் அப்பால் சத்தியாக்கிரகம் என்கிற மூன்றாவது பாதையைத் தேர்வு செய்தார் (1906).
வலுவான இராணுவம், எண்ணிக்கையில் குறைந்த எளிமையான மக்கள் ஆகியோருக்கான சரியான பாதையாக அவர் தேர்வு செய்த இதை passive resistance எனச் சிலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர். உண்மையில் காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ரொம்பவும் active resistances ஆகத்தான் இருந்தன. வன்முறையை வழி முறையாக ஏற்கும் பாதை ஒரு பக்கம் இன்றுவரை நடைமுறையில் இருந்த போதிலும் வன்முறையற்ற வழிமுறையாக காந்தியின் போராட்ட முறைகள் இன்று உலகளவில் இணையாக உருப்பெற்றிருப்பதை யார் மறுத்துவிட இயலும்? இந்தப் பாதையால் என்ன சாதித்துவிட இயலும் என்பவர்களுக்கு அட, வன்முறைப் பாதையால்தான் என்ன சாதித்து விட்டோம், ஏராளமான உயிரழிவுகளைத் தவிர என்பதுதான் பதிலாக இருக்க இயலும்.
4. லியோ டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின், தோரோ முதலானோரின் அணுகல்களும் தத்துவங்களும் காந்திக்கு வழிகாட்டிகளாக இருந்தன. ஃபோனிக்ஸ் பண்ணை என அவர் உருவாக்கிய கூட்டு வாழ்க்கை முறையில் கொத்தடிமைக் கூலிகள் முதல், ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் பவுண்டுகள் சம்பாதித்த பாரிஸ்டர் காந்தி வரை, தலித்கள் முதல் பனியாக்கள், பார்சிகள், இஸ்லாமியர் வரை தங்களின் வருமானங்களை அப்படியே அளித்துவிட்டு எல்லோரும் சமமென்பதை உறுதியாக்கி வாழ்ந்தனர். காந்தி தென் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறும்போது 100 ஏக்கர் நிலம், இரு பெறும் சொத்துக்கள், ஏராளமாக அவருக்கு வந்திருந்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் பண்ணைக்கு உரிமையாக்கித்தான் வந்தார்.
அது மட்டுமல்ல, பின்னாளில் இந்திய விவசாயி களின் உடையென ‘அரை நிர்வாணப் பக்கிரி’க் கோலம் தரித்தாரே அதற்கும் இங்குதான் கால்கோள் இடப்பட்டது. கோட் சூட்டுடன் வந்திறங்கிய காந்தி அவற்றைத் துறந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் உடையை உடுத்தத் தொடங்கினார். வெள்ளை முடிதிருத்துவோர் கருப்பரான இவருக்கு முடி திருத்த மறுத்தபோது அவர் தனக்குத் தானேயும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் முடிவெட்டி விட்டார். ஒரு பக்கம் அவரை விட்டு அகலாத சுயமரியாதை உணர்வு, இன்னொரு பக்கம் தொழிலில் இழிவு என ஏதும் இல்லை எனும் மன நிறைவு இரண்டும் அவருக்கு உறுதியானது.
அவரது இந்த வழிமுறைகள் இப்படி நடைமுறை (pragmatic) சார்ந்ததாக இருந்த போதிலும் அதற்கு அப்பால் அவரது ஆன்மீக உள்ளொளியுடன் பிசிறின்றி இணந்ததாகவே அவை அமைந்தன. அவர் ‘ஹே ராம்’ என்ற போதும், தன்னை இந்து எனப் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டபோதும் எந்நாளும் தன் மதநம்பிக்கையைச் சடங்குகளோடு இணைத்ததில்லை. வாழ்நாள் முழுக்க அவர் பங்கு பெற்றதும், கொல்லப்பட்ட தினம் அன்று அவர் பங்குபெற விரைந்ததும் கூட்டு வழிபாடுகள்தான். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் இணைந்த சர்வ சமய ஒன்று கலத்தல்கள்தான் அவை. அவர் எந்நாளும் கோவிலுக்குப் போனதோ சாமியார்களைத் தரிசித்ததோ இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லா மதங்களிலும் நல்ல அம்சங்கள் உள்ளன. அவற்றை உட்கொண்டால்தான் தான் ஒரு நல்ல இந்துவாக மலர முடியும் என்கிற பார்வையையும் அவர் தென் ஆப்ரிக்காவில்தான் பெற்றார்.
5. காந்தி பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டதும் தென் ஆப்ரிக்காவில்தான். அப்போது அவருக்கு வயது 35. தன் மனைவியிடம் கலந்தாலோசித்துச் செய்ய வேண்டிய முடிவு இது என அவருக்கு உறைக்கவில்லை. அவர் தனது குடும்ப வாழ்வையும், ஆன்மீக வாழ்வையும், அரசியல் வாழ்வையும் பிரித்துப் பார்க்கவில்லை. அதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது குடும்பத்தினரே. உயிருக்குப் போராடியபோதும் முரட்டுத்தனமாக இயற்கை வைத்தியத்தை மனைவி மக்கள் மீது திணிப்பது, போராட்டங்களில் குடும்பத்தோடு பங்கேற்பது எல்லாமும் தென் ஆப்ரிகாவில் தொடங்கியதுதான். அங்கிருந்தபோது நான்கு முறை காந்தி சிறை சென்றார். மகன் ஹரிலால் எட்டுமுறை. கஸ்தூரிபாவும் பிற பெண்களோடு சிறை சென்றார்.
மகனின் வெளிநாடு சென்று படிக்கும் ஆசைக்குத் தடை விதித்தார். அவனது காதலை முறித்தார். மனைவியை கம்யூனில் இருந்த பிறரைப் போலவே சாதி வித்தியாசம் பாராமல் பிறரது மலக்கழிவுகளைச் சுமக்கச் செய்தார்.
தலித் விடுதலை குறித்த அவரது பார்வைகளை அம்பேத்கர் உள்ளிட்ட பல தலித் தலைவர்கள் ஏற்கவில்லை ஆயினும் காந்தி அவரது தத்துவார்த்தச் சட்டகங்களுக்குள்ளிருந்து அவருக்கே உரித்தான வழிமுறைகளை உருவாக்கினார். செயல்படுத்தியும் காட்டினார். அதற்காகவே அவர் இந்துமதத் தலைவர்களால் தூற்றவும்பட்டார். தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது ஒரு தலித் சிறுவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இந்தியாவுக்கு வந்தபோது மாயூரத்தில் (மயிலாடுதுறை) அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் தீண்டாமையைக் கண்டித்துக் கடுமையாக உரையாற்றினார்.
6. இறுதியாக இரண்டு விடயங்கள்;. காந்தியின் முக்கியமான ஆளுகைக் கூறுகளில் ஒன்று அவர் ஏராளமாக எழுதியவர். பெரிய தத்துவ நூல்கள் எதையும் அவர் எழுதவில்லையாயினும் மிகப் பெரிய மக்கள் தொடர்பாளராகவும் (communicator) இதழாளராகவும் இருந்தவர் அவர். அவரது எழுத்துக்கள் 99 தொகுதிகளாக இன்று கிடைக்கின்றன. இந்தப் பயிற்சிக்கும் தென் ஆப்ரிக்காதான் அவருக்குக் களமாக இருந்தது. ‘இந்தியன் ஒபினியன்’ எனும் பெயரில் அவர் தொடங்கிய இதழ் (1903) ஒரே நேரத்தில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் எனும் நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது.இந்தியா வந்து காங்கிரஸ் அவர் வசப்பட்டவுடன் செய்த முதற் சீர்திருத்தம் மொழி வாரியாகக் காங்கிரஸ் கட்சி அமைப்புகளை உருவாக்கியதே. பின்னாளில் அதுவே மொழிவாரி மாநிலங்கள் என்கிற கருத்தாக்கமாகவும் மலர்ந்தது.
7. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தென் ஆப்ரிக்காவில் காந்தி இந்தியர்களுக்காகத்தான் போராடினார். அடிமைத் தளையில் இருந்த தென் ஆப்ரிக்கர்களுக்காக அவர் போராடியதில்லை. பின்னாளில் அவர் , ‘சத்தியாக்கிரகம் என்பதுதான் இங்குள்ள தென் ஆப்ரிக்கர்களுக்குமான போராட்ட வழிமுறையாக இருக்க முடியும். ஆனால் அவர்களுக்கான பாதையை அவர்களே வடிவமைக்க முடியும். நான் ஒரு இந்தியன். இந்தியர்களைத்தான் நான் பிரதிநிதித்துவம் செய்ய இயலும்‘ என்றார்.
தென் ஆப்ரிக்கர்களை காந்தி வழி நடத்தாவிட்டாலும் ஒரு சிறிய இடைவெளி தவிர ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் காந்தியின் வழிமுறையிலேயே சென்றது. மன்டேலா, லுடுபு உட்பட தென் ஆப்ரிக்க விடுதலைத் தலைவர்கள் பலரும் காந்தியை ஏற்றவர்களாகவே இருந்தனர். இன்றும் காந்தி அங்கு மதிக்கப்படக் கூடிய ஒரு தலைவர்தான்.
8. 1914 ஜூலையில் காந்தி, கஸ்தூரிபாய், காந்தியின் நண்பர் ஹெர்மன் காலன்பாச் எல்லோரும் கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது தென் ஆப்ரிக்கப் போராட்டக் களம் அளித்த தன்னம்பிக்கை காந்திக்குப் பெருந்துணையாக இருந்தது. ஒரு விரிந்த பரப்பில் களமாடும் உந்துதலுடன் புறப்பட்ட அவர் தன்னுடைய ஆசானும் வகுப்பு உணர்வுகளுக்கும், வன்முறை வழிகளுக்கும் அப்பாற்பட்டவருமான கோகலே ஐரோப்பாவில் இருந்ததை அறிந்து ஐரோப்பா வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்தார்.
‘இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. ஒரு இரண்டாண்டு காலம் அதை முழுவதும் சுற்றிப்பார். அதன்பின் உன் அரசியலைத் துவங்கு’ என்பதுதான் அந்த ஆசான் காந்திக்குச் சொன்ன அறிவுரை.
அதைச் சிரமேற்கொண்டு இந்தியா முழுமையையும் சுற்றி, தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்கள் பலவற்றிலும் நேரடி அனுபவம் பெற்ற பின் இந்திய அரசியற் களத்தில் அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை கிலாஃபத் இயக்கம். காலனியத்திற்கு எதிரான போராட்டம் முஸ்லிம்களோடு இணைந்து நடத்தப்படவேண்டிய ஒன்று என்கிற செய்தியை அவர் இதன் மூலம் இந்திய மக்களுக்குச் சொன்னபோது பலரது விழிகளும் வியப்பால் விரிந்தன.
ஆகஸ்ட், 2015.